இங்கிலாந்தின் நீண்டகால இராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் தனது 96-வது வயதில் பால்மோரலில் இன்று, வியாழக்கிழமை, 8 செப்டம்பர் காலமானார்.
நேற்று இவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து இவரது குடும்பத்தினர் இவரது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கூடினர்.
1952-ல் அரியணைக்கு வந்து மகத்தான பல சமூக மாற்றத்தைக் கண்டவர் எலிசபெத் மகாராணி.
அவரது மரணத்தை தொடர்ந்து அவரது மூத்த மகன் முன்னாள் வேல்ஸ் இளவரசர் சார்லஸ், புதிய அரசராகவும், 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராகவும் நாட்டை இந்த துயரமான நேரத்தில் வழிநடத்துவார்.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி நிம்மதியாக காலமானார்” என்று அறிவித்துள்ளது.
“புதிய ராஜாவும் ராணியும் இன்று மாலை பால்மோரலில் தங்குவார்கள், நாளை லண்டனுக்குத் திரும்புவார்கள்” என்று அறிக்கை தெரிவிக்கிறது.
டாக்டர்கள் ராணியை மருத்துவக் கண்காணிப்பில் வைத்த பிறகு, ராணியின் குழந்தைகள் அனைவரும் அபெர்டீனுக்கு அருகிலுள்ள பால்மோரலுக்கு விரைந்தனர்.அவரது பேரன், இளவரசர் வில்லியம், அவரது சகோதரர் இளவரசர் ஹாரியுடன் அங்கு செல்கிறார்.
அவரது ஆட்சி 1874-ல் பிறந்த வின்ஸ்டன் சர்ச்சிலை பிரதமராக நியமித்தது தொடங்கி, 15 பிரதம மந்திரிகளை நியமித்து, இறுதியில் சர்ச்சிலுக்கும் 101 ஆண்டுகளுக்குப் பிறகு 1975-ல் பிறந்த லிஸ் ட்ரஸை பிரதமராக நியமித்ததுவரை தொடர்ந்திருக்கிற்து.
அவர் தனது ஆட்சிக்காலம் முழுவதும் தனது பிரதமர்களுடன் வாராந்திர சந்திப்பை நடத்தி வந்தார்.
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள் அவரது மரணத்தைக் கேள்விப்பட்டதும் அழத் தொடங்கினர். அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி 18:30 GMT மணிக்கு அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டது.
ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர், லண்டனில் உள்ள மேஃபேரில் 21 ஏப்ரல் 1926-ல் பிறந்தார்.
இவர் அரசியாக வருவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. டிசம்பர் 1936-ல் இவரது மாமா எட்வர்ட் VIII, இரண்டு முறை விவாகரத்து பெற்ற அமெரிக்கரான வாலிஸ் சிம்ப்சனை திருமணம் செய்யவேண்டி அரியணையை துறந்தார்.
எலிசபெத்தின் தந்தை கிங் ஜார்ஜ் VI அதனால் மன்னராக முடிசூட, தனது 10 வயதில், லிலிபெட் குடும்பத்தில் மரபுப்படி அரியணைக்கு வாரிசானார் எலிசபெத்.
மூன்று ஆண்டுகளுக்குள் பிரிட்டன் நாஜி ஜெர்மனியுடன் போரில் ஈடுபட்டது. எலிசபெத் மற்றும் அவரது தங்கை இளவரசி மார்கரெட், கனடாவுக்கு வெளியேற பரிந்துரைக்கப்பட்டது. அதை மறுத்த அரச குடும்பத்தினர் வின்ட்சர் கோட்டையில் போர்க்காலத்தின் பெரும்பகுதியைக் கழித்தனர்.
18 வயதிற்குப் பிறகு, எலிசபெத் துணை பிராந்திய சேவையில் ஐந்து மாதங்கள் செலவழித்து அடிப்படை மோட்டார் மெக்கானிக் மற்றும் ஓட்டுநர் திறன்களை கற்றுக்கொண்டார். “துன்பங்களை எதிர்கொண்டு வளரும் கலையை அப்போதுதான் நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்,” என்று பின்னர் அதை நினைவு கூர்ந்தார்.
போர் காலத்தில் ராயல் கடற்படையில் பணியாற்றிய தனது உறவினரான கிரீஸ் இளவரசர் பிலிப்புடன் கடிதங்களை பரிமாறிக்கொண்டார், அப்படித்தான் இவர்களின் காதல் மலர்ந்தது. இருவரும் 20 நவம்பர் 1947 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் திருமணம் செய்து கொண்டனர், இளவரசர் எடின்பர்க் டியூக் என்று பட்டம் சூட்டப்பட்டார்.
2021-ல், 99 வயதில் அவர் இறந்தபின், 74 வருட திருமண வாழ்வில் அவர் “எனது பலம் மற்றும் உந்துசக்தி” என்று பிலிப்பை விவரித்தார் இராணி.
நவம்பர் 20, 2007 அன்று அவர்களின் வைர திருமண ஆண்டு விழாவைக் குறிக்க, ராணியும் இளவரசர் பிலிப்பும் 60 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 1947 இல் தங்கள் திருமண இரவைக் கழித்த பிராட்லேண்ட்ஸுக்கு மீண்டும் சென்றனர்.
எடின்பர்க் டியூக் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ராணியின் பக்கதுணையாக இருந்தார், அதன்மூலம் 2009-ல் பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய துணையராக ஆனார்.
இவர்களின் முதல் மகன், சார்லஸ், 1948-ல் பிறந்தார், அதைத் தொடர்ந்து இளவரசி அன்னே, 1950-ல், இளவரசர் ஆண்ட்ரூ, 1960-ல், மற்றும் இளவரசர் எட்வர்ட் 1964-ல் பிறந்தனர்.
இவர்களுக்கிடையே, இவர்கள் தங்கள் பெற்றோருக்கு எட்டு பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகளைக் கொடுத்தனர்.
எலிசபெத் 2 ஜூன் 1953 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 27 வயதில், 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முன்னிலையில் முடிசூட்டப்பட்டார்.
மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட எலிசபெத் மகராணியின் மரணம் பிரிட்டிஷ் மக்களால் பலநாட்கள் துக்கமாக அனுஷ்டிக்கப்படும். இவரின் இறுதி ஊர்வலமும் வரலாறுகாளாத மக்கள் திறளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– Fazil Freeman Ali