மோடி அரசின் சாதனைகள் என ராகுல் காந்தி கிண்டல்

Share

கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகள் என்று நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். கொரோனா காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவ்வப்போது ராகுல் காந்தி ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் நடப்பாண்டில் மோடி அரசின் சாதனைகளை ஹிந்தி மொழியில் கேலித்தொனியில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். மேலும் இந்தச் சாதனைகளால் கொரோனா பெருந்தொற்றில் இந்தியா ‘தற்சார்பு’ எய்தியுள்ளது என்று கடும் கிண்டலை வீசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
‘கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் அரசின் சாதனைகள்:
பிப்ரவரியில் நமஸ்தே ட்ரம்ப்,
மார்ச்சில் ம.பி. அரசைக் கவிழ்த்தது,
ஏப்ரலில் மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல்,
மே மாதத்தில் பாஜக அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம்,
ஜூன் மாதத்தில் பிஹார் மெய்நிகர் பேரணி (பாஜக வீடியோ வழி தேர்தல் பிரச்சாரம்),
ஜூலை ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போராட்டத்தில் தற்சார்பு எய்தியது,’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply