பச்சை நிறமாக மாறிய கடல் நீர்: எங்கே எப்படி தெரியுமா?

Share

மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேல் கடல் நீரின் நிறம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் பெரியபட்டிணம் வரையிலான பகுதியில் பச்சை நிறப் பூங்கோரை பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வந்து கரை ஒதுங்க துவங்கி உள்ளன.

இதனால் பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடம் முதல் பெரியபட்டிணம் வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசுவதுடன் கடல் நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது.

ராமநாதபுரம் அடுத்த முத்துப்பேட்டை, இந்திரா நகர், பெரியபட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சிறிய ரக மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.

இதனையடுத்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மண்டபம் மற்றும் பாம்பன் கடற்கரை பகுதிகளில் கடல் நீரை சேகரித்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்தனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும்.

இதை மீனவர்கள் ‘பூங்கோரை’ என்றழைப்பார்கள். இந்த பாசிகள் கடலில் படரும் போது கடல் நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிப்பதாகவும் இதுவரை பாம்பன், மண்டபம், மரைக்காயர்பட்டிணம், வேதாளை கடற்கரை பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கவில்லை.

கடல் நிறம் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது. இதனால் மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை என மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2008 மற்றும் 2009 இரண்டு ஆண்டுகள் மன்னார் வளைகுடாவில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியது. அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வருடத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடல் நீர் பச்சை நிறமாக மாறுகிறது. இதற்கு ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ என்ற கடற்பாசி காரணம்.

இந்த பாசியில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் என இரண்டு வகைகள் உள்ளன. அதில் தற்போது பச்சை நிறத்திலான பாசிகள் அதிக அளவு வந்துள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் கடலில் கலக்கும் போது அதிலிருந்து கிடைக்கும் சத்துக்களை சாப்பிட்டு இந்த பாசிகள் வளரக்கூடியது.

கடல் நீரோட்டம் காரணமாக ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ வகை பாசிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வந்து சேர்கிறது. கடந்த ஆண்டு இதே போல் கடல் பாசிகள் அதிகம் வந்து கடல் நீர் பச்சை நிறமாக மாறிய போது அதிகமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது.

இந்த வகையான கடல் பாசியில் இருந்து அம்மோனியா என்கிற நச்சுத்தன்மை வெளி வருவதுடன், இந்த பாசிகள் வளரக்கூடிய பகுதிகளில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகிறது.

இந்த ஆண்டு மீன்கள் அதிகளவு இறந்து கரை ஒதுங்கவில்லை.ஆனால் ராமநாதபுரம் அடுத்துள்ள முத்துப்பேட்டை, இந்திரா நகர், பெரியபட்டினம் போன்ற பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ பாசிகள் அரபிக்கடல் பகுதியில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உற்பத்தியாகிறது. அரபிக்கடலில் இருந்து நீரோட்டம் காரணமாக இந்த பாசிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வருவது ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலில் இறந்து அதிக நாட்களாக கரை ஒதுங்கிய மீன்களை மக்கள் சாப்பிட வேண்டாம். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வேதாளை, மண்டபம், பாம்பன் பகுதிகளில் கடல் நீரின் நிறம் சற்று இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

இந்த பாசி அக்டோபர் மாதம் இறுதிவரை அதிகம் வரும் என்பதால் இனி வரும் நாட்களில் அதிகமான அளவு பரவி மீண்டும் கடல் நீர் பச்சை நிறமாக மாற வாய்ப்புள்ளது” என விஞ்ஞானி சரவணன் தெரிவித்தார்.

Leave A Reply