இலங்கை தமிழர் முகாம்களிடையே விழிப்புணர்வு ஒன்றுகூடல்

Share

இந்தியாவின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாநில அளவில், மறுவாழ்வு முகாம் மாணவர்கள், இளைஞர்கள் பங்குபெறும் விதமாக கலை இலக்கிய போட்டிகளை நடத்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாம்களின் விழிப்புணர்வு குழு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கையில் கூறப்பட்டு இருப்பது…

தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களான கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு சார்ந்த தனித்திறன்கள் ஆகியவற்றிலும் மறுவாழ்வு முகாம் மக்களுக்கு ஊக்கமளித்து வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதும் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இன்று, மறுவாழ்வு முகாம்களில் வாழும் படித்த இளம் தலைமுறையினர் ஒவ்வொருவரும் பல்வேறு திறன்களுடன் அனைத்துவிதமான திறமைகளையும் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், அவற்றை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் உயரவும், சாதனை புரியவும் வேண்டும் என்ற மன உறுதியில் அவர்கள் ஒவ்வொருவரும் வாய்ப்புகளுக்காக ஏங்கிக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, குடியரசு தின விழாவை முன்னிட்டு நாம் நடத்திய மறுவாழ்வு முகாம்களுக்கு இடையேயான மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் இதற்கு நல்ல சான்றாகும். கொரோனா பொதுமுடக்க காலத்திலும் தாங்கள் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு எமது இளம் தலைமுறையினரின் படைப்புகளை கேட்டுப் பாராட்டியதையும், பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் உள்ள தங்கள் இல்லத்திற்கு அழைத்து அறுசுவை உணவளித்து, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டியதையும் மறக்க முடியாத நிகழ்வாக ஒவ்வொருவரும் கருதுகின்றோம்.

கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும், இந்தியாவின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாநில அளவில், மறுவாழ்வு முகாம் மாணவர்கள், இளைஞர்கள் பங்குபெறும் விதமாக கலை இலக்கிய போட்டிகளை நடத்த தீர்மானித்துள்ளோம்.

இப்போட்டிகளை சிறப்புடன் நடத்துவதற்கு தங்களின் நல்லாசிகளை வேண்டி நிற்கின்றோம். கடந்த வருடத்தைப் போல், இந்த வருடமும், தங்களது பேராதரவை தந்து, போட்டிகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவிலும் தாங்கள் கலந்துகொண்டு, தங்களின் பொற்கரங்களால் சான்றிதழ்களை வழங்கி உதவிட வேண்டும் என்று அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். இந்நிகழ்வானது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இளம் தலைமுறையினரின் பன்முக திறமைகளை அவர்கள் வளர்த்துக்கொள்ளவும், வெளிக்கொண்டுவரவும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Leave A Reply