பெரியாரை நினைவு கூர்ந்த தமிழகம்

Share

தந்தை பெரியாரின் 47ஆவது ஆண்டு நினைவு நாளான நேற்று(டிசம்பர் 24),தமிழகம் முழுதும் களத்திலும் சமூக தளத்திலும் பெரியார் உற்சாகமாக நினைவுகூரப்பட்டார்.

கடந்த 75 ஆண்டு கால தமிழகத்தில் பெரியாரின் ஏதாவது ஒரு கொள்கையால் அல்லது சீர்திருத்தத்தால் பயன்பெறாதவர் இல்லை என்ற நிலையே இன்றும் நிலவி வருகிறது. 

தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர், சுயமரியாதையையும் பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர்.

தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்வுக்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவனை அவர்தம் நினைவு நாளில் நினைவுகூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று காலை சென்னை அண்ணாசாலை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு, சிந்தாதரிப்பேட்டை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை வழியே பெரியார் திடலை அடைந்தது.

பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா காணொலியிலும் நேரிலும் நடைபெற்றது.

விழாவில் பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் காணொலிமூலம் வரவேற்புரை ஆற்றினார்.

2020ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு வழங்கப்பட்டது.

டாக்டர் இலக்குவன் தமிழ் காணொலி மூலம் விருதினை வழங்கினார். மருத்துவர் மீனாம்பாள் விருதினை நேரில் வழங்கினார்.

தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்’’ நூலை வெளியிட்டும், பெரியார் விருதினைப் பெற்றுக் கொண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஏற்புரையாற்றினார்.

பெரியார் நினைவு நாளில் செய்தியாளர்களை சந்தித்த திக தலைவர் கி.வீரமணி, பகுத்தறிவு பகலவன் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 47 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று – இது ஒரு வரலாற்றுக் குறிப்பே தவிர, மற்றபடி தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு சிந்தனையிலும், எதிர்க்கட்சிகள் உள்பட பலருடைய தாக்கத்திலும், பெரியாருடைய தாக்கம் என்பது எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

பெரியாரை யாரும் மறந்தவர்கள் இல்லை. என்றாலும், இந்த வரலாற்றுக் குறிப்பு நாளில், திராவிடர் கழகத்தினர் மட்டுமல்ல, தமிழர்கள், திராவிடர்கள், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் ஒரு உறுதியை ஏற்கக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த மண்ணை கவ்வி இருக்கக்கூடிய காவி புகை மண்டலத்தை விரட்டவேண்டும் என்பது தான் அந்த உறுதி என்று கூறினார். 

Leave A Reply