தமிழகத்தின் முதல் அனிமல் பாஸ் ஓவர் பாலம்; மதுரை அருகே அமைகிறது

Share

தமிழகத்திலேயே முதல் முறையாக, மதுரை – திண்டுக்கல் எல்லை அருகே வாடிப்பட்டி வகுத்து மலைப்பகுதியில், வன விலங்குகள் வாகனங்களின் இடையூறின்றி கடந்து செல்வதற்காக ‘அனிமல் பாஸ் ஓவர்’ மேம்பாலம் அமைய உள்ளது.’பாரத்மாலா பரியோஜனா’ எனப்படும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மதுரை வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை, 555 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி, 2018ல் துவங்கி 80 சதவீதம் முடிந்துள்ளது.

இந்த நெடுஞ்சாலை, பாலமேடு அருகே, வகுத்து மலை வனப்பகுதி வழியாக அமைக்கப்படுகிறது. எனவே, அந்த வனப்பகுதியில் வசிக்கும் காட்டு மாடுகள், முயல்கள், குரங்குகள், பாம்புகள் உள்ளிட்ட அரிய வன விலங்குகளை பாதுகாக்க, விலங்குகளுக்கு பாதிப்பில்லாத வகையில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

வனத்தில் விலங்குகள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும் போது, குறுக்கிடும் சாலையால், அவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இரண்டு மலைகளை இணைத்து, 210 மீட்டரில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

அதற்கு தமிழக வனத்துறையும் அனுமதி வழங்கியுள்ளது. மேம்பாலம் கட்டும் பணி விரைவில் துவங்கி, அடுத்த ஆண்டில் முடியும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா கூறியதாவது:

ரோட்டில் வன விலங்குகள் கடந்து சென்றால் விபத்தில் சிக்கி பலியாகும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க இந்த மேம்பாலம் உதவும். பாலத்தில் ஒலி, ஒளி தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். வனத்துறை சார்பில் ஆங்காங்கே விலங்குகளுக்காக நீர் குட்டைகளும் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply