நகாசு வேலைகள் செய்யப்பட்ட பொன்னணியைப் போல

Share

தன் பிள்ளைகளிடமிருந்தோ கணவனிடமிருந்தோ

அண்டை அயலிடமிருந்தோ 

அவளுக்கு எப்படியும் வாய்த்துவிடுகிறதொரு துயரம்

தன் துயரத்தை நகாசு வேலைகள் செய்யப்பட்ட 

பொன்னணியைப் போல அவள் அணிந்திருக்கிறாள்

தெரிந்தவர்கள் அறிமுகமானவர்கள் அனைவருக்கும் 

அதை காட்டிக் காட்டி நிறைகிறாள் 

சொல்லொன்றைப் பற்றவைத்து, அதன் வெம்மையில்

மீள மீள தட்டியடுக்குகிறாள் துயரங்களின் புதுப் புது ரூபங்களை 

துயரங்களின் அனந்த ரூபங்கள் 

வரிசையில் காத்திருக்கின்றன அவளை தரிசித்து மகிழ.

துயரம் வாய்க்காத நாளொன்றில்

அவளை எதிரிட்டவர்கள்,

ஆபரணங்களை அணிவிக்காதுவிட்ட 

மூளிச்சிலையென அவள் கோலம் உறுத்துவதாய்

முணுமுணுத்துக் கடக்கின்றனர் அவசரமாய்!

Leave A Reply