புள் வாழ்க்கை – ஆதனூர் சோழன் கவிதைகள்

Share

மேற்குவானின் சூரியன்
இறங்குமுன்னே முகிற்கூட்டம்
இறுக்கிய செயற்கை யிருட்டு!

உயர்ந்த அப்புளியமரக்
கிளையமர்ந்த காக்கைக்கூட்டம்
உறவுக்கிளைதனிலே முளைவிட்ட
குஞ்சுகளைக் குசலம்கேட்க!

மின்னலுடன் ஓரிடி
வெடித்துச் சிதறி விரைந்துபரவ
துடித்துச் சிறகுகள் விரித்த காக்கைகள்
விடைபெற்றுப் பறந்தன.

அதனதன் கூடடைய
அதுதான் கடைசிச் சைகையோ!

ஊரோரக் குன்றின்மேல்
மழைக்கூரைக் கூடாரம்
புளியமரக் கிளைதனிலே
குஞ்சின்தாய் கூடோரம்

பொன்குஞ்சுக் கருப்பலகில்
பசிக்குணவு புகட்டினபடி
நெருங்கிவரும் நீர்க்குடையை
வெகுண்டபடி பார்த்திருக்கும்.

எப்புறமும் சூழ்ந்த மழையை
குப்புறப்படுத்து தான்மறித்து
குஞ்சுகளைப் பொத்திய தாயின்
கண்வானில் ஏனோ மழை.

கீழடிவானில் விடியல் சூரியன்
விழித்தபோது கரைந்து
இரைபொறுக்கப் போனதுணை
உறவெதிர்கொள்ள மறந்ததுவா?

கவனெரியுங் கூட்டம் அதைச்
சவமாக்கிச் சாதித்ததுவோ
வெளிப்போனால் பொழுதிறங்க
வழிமீளும்வரைக்கும் உயிருக்குப் போராட்டம்!

வதம்புரியும் உயிர்களிடை
நிதமொரு கண்டமாக வாழப்போராடும்
வாழ்க்கைதான் எதற்கிறைவா?

மேக அழுக்குக் கரைந்தவுடன்
பளீரிட்ட செங்கதிரோன்,
இறக்கைகளின் நீர் உதறி
சோகம் கப்பி சோம்பிய காகம்.

குஞ்சுகளின்வாயில் தன்வாய்பதித்து
எம்பிப்பறந்தது தன்துணைதேடி!

Leave A Reply