எமை கருவறைக்குள் கூட்டிச் சென்ற உன் கையெழுத்து! – இரா.இராஜாராம்

Share

நீ
காவிரி கரையில்
உதித்த
இளஞ்சூரியன்,
ஈரோட்டு
பெருநெருப்பின்
அறிவுச் சூரியன்,
காஞ்சித்
தலைவனின்
ஞானசூரியன்.

நீ உன்
தனித் தமிழால்
தமிழுக்கு
அணி செய்தாய்,
தரணி வாழ்
தமிழர்கள் வாழ
புதியதோர்
விதி செய்தாய்.

செழுமையான
நம் மொழிக்கு
செம்மொழி
நிலை தந்தாய்.
பழமையான
விழுமியம் காக்க
சிரமேற் கொண்டாய்.

முப்பால் தந்தவனுக்கு
கடல் மும்முனையில்
சிலை செய்தாய்,
எப்பால் என்றே
குழம்பியோர்க்கு
மூன்றாம் பாலென்று
பெயர் தந்தாய்.

கடற்கோள் கொண்ட
பூம்புகாரைப்
புதுப்பித்தாய்,
வடக்கே வருமொழி
வேண்டாமென்று
களம் நின்றாய்.

நீ நட்டுவைத்த
அடிக்கல்லினால்தான்
நவீன தமிழ்நாடு
வளர்ந்தது,
நீ எட்டுவைத்த
நடையினில்தான்
தமிழ் வீறுகொண்டு
எழுந்தது.

மநுவின் எழுத்து
எங்களை
கோவில் வாசலிலேயே
நிறுத்தியது, – எம்
மனம் புரிந்த
உன் கையெழுத்துதானே
எங்களைக்
கோவில் கருவறைக்குள்
கூட்டிச் சென்றது.

சொல்லிட ஆகுமோ
உன் புகழை
ஓர் கவியில்,
எண்ணிட ஆகுமோ
வானில் உள்ள
நட்சத்திரத்தை.

எண்ணிலடங்க
புகழ் கொண்ட உனக்கு
உன் பிறந்த நாளில்
என்தன்
புகழ் வணக்கம்.

இரா.இராஜாராம்,
கல்பாக்கம்.

Leave A Reply