அம்பேத்கர் ஹீரோ, காந்தி வில்லனா? வரலாறு என்ன சொல்கிறது? – ஆதனூர் சோழன்

Share

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது.

அதைத் தொடர்ந்து இந்திய வைஸ்ராய் தனக்கு உதவியாக ஒரு நிர்வாக குழுவை நியமித்தார். அந்தக் குழுவில் அம்பேத்கரையும் இணைத்துக் கொண்டார். அம்பேத்கர் தொழிலாளர் நலத் துறைக்கு பொறுப்பு ஏற்றார்.

இந்தச் சமயத்தில்தான் வேலைவாய்ப்பு நிலையங்களை உருவாக்குவது என்று முடிவு செய்தது.

அப்போது வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. காந்தி கைது செய்யப் பட்டு ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட் டிருந்தார்.

அந்த சூழ்நிலையில் 1943 ஆம் ஆண்டு டில்லியில் தொழிலாளர் முத்தரப்பு மாநாடு நடைபெற்றது.

தொழிலாளிகளுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும், அவர்களுக்கு சமூகப் பாதுகாப்புக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் காந்தியின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே, சிறையிலிருந்து ஆகாகான் மாளிகையிலிருந்த அவர் விடுவிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாக இழுபறி நீடித்துக் கொண்டிருந்தது. இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பேச்சு நடைபெற்றது. முஸ்லிம்களை அமைச்சர்களாக காங்கிரஸ் நியமிக்கக் கூடாது. முஸ்லிம் லீக் மட்டுமே முஸ்லிம்களை அமைச்சர்களாக நியமிக்க உரிமை அளிக்க வேண்டும் என்று ஜின்னா பிடிவாதம் பிடித்தார்.

இந்து முஸ்லிம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதோடு, இந்துக்கள்-தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைக்கும் தீர்வு காண காந்தி முயற்சிக்க வேண்டும் என்று அம்பேத்கர் கடிதம் எழுதினார்.

“தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை என்பது மதத் தன்மை வாய்ந்தது. சமூகத் தன்மை வாய்ந்த பிரச்சினை. இதற்கு இந்துச் சமூகம் என்ற வட்டத்துக்குள் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும்” என்று காந்தி பதில் அளித்துவிட்டார்.

வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்த சமயத்தில், 1942 ஆம் ஆண்டு நாக்பூரில் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடைபெற்றது. 70 ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர்.

வட்டமேஜை மாநாடுகளிலும், கடைசியாக கிரிப்ஸ் தூதுக்குழு வரை தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்த முன்னேற்றம் குறித்து அம்பேத்கர் இந்த மாநாட்டில் விரிவாக பேசினார்.

“எல்லா துறைகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். தாழ்த்தப் பட்ட பெண்களின் முன்னேற்றம் உற்சாகம் ஏற்படுத் துகிறது. இது இந்துக்கள் அளித்த தர்மத்தினால் கிடைத்த முன்னேற்றம் அல்ல. தன்னுடைய சொந்த உழைப்பின் மூலம் பெற்ற சாதனை இது”

“உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். நீங்களும் என்னுடன் இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்”

“உங்களுக்கு நான் கூறும் ஆலோசனை இதுதான். கற்பி, கிளர்ச்சி செய், அணிதிரட்டு என்பதே ஆகும். நீதி நம் பக்கம் இருக்கிறது. பிறகு எப்படி தோல்வி அடைவோம்? போராட்டம் என்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். நமது போராட்டம் என்பது செல்வத்திற்காகவும் அதிகாரத் திற்காகவும் நடத்தப்படும் போராட்டமல்ல. அது சுதந்திரத்திற்கான போராட்டம். இந்து சமூக ஜாதி முறையின் மூலம் சிதறடிக்கப்பட்ட நமது ஆளுமையை மீட்பதற்கான போராட்டம்”

என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் விளக்கமளித்துப் பேசினார். அவருடைய ஆவேசமான பேச்சு மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு உத்வேகம் ஊட்டியது.

இந்த மாநாட்டுக்கு பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக காந்தியுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டுதான் இருந்தார். ஆனால், காந்தி அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் 1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்தியா விடுதலை பெறுவதற்கான உரிமை உண்டு அந்த அறிக்கை ஒப்புக் கொண்டது.

இதையடுத்து கிரிப்ஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு இந்தியாவுக்கு வந்தது. அது காங்கிரஸ் தலைவர்களையும், முஸ்லிம் லீக் தலைவர்களையும், மன்னர்களின் தலை வரான போபால் நவாப்பையும் சந்தித்தது.

சீக்கியர்களின் தலைவர் மாஸ்டர் தாராசிங்கையும், டாக்டர் அம்பேத்கரையும் சந்ததித்து.

நாட்டின் புதிய அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கு வழி செய்ய வேண்டும் என்று அந்தக் குழுவிடம் அம்பேத்கர் ஒரு மனுவை அளித்தார்.

பிறகு அந்தக் குழு தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் அம்பேத்கரின் கோரிக்கை குறித்து எதுவுமே சொல்லப்படவில்லை.

அதைத் தொடர்ந்து வைஸ்ராய் தனது நிர்வாகக் குழுவை கலைத்துவிட்டார். இடைக்கால அரசு அமைப்பதற்கான தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தொடங்கின.

அந்தத் தேர்தலில் அம்பேத்கரும், அவருடைய வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மத்தியில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.

தேர்தல் முடிந்தவுடன் அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.

பம்பாய் மாகாணத்திலிருந்து அம்பேத்கரை தேர்ந்தெடுக்க வழியில்லை.

வங்காளத்தில் முஸ்லிம் லீக் தலைமையில் மாகாண ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெற்றி பெற்றிருந்தனர்.
அவர்கள் அம்பேத்கர் பெயரை முன்மொழிந்து, முஸ்லிம் லீக் ஆதரவோடு அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்வு செய்தனர்.

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபை கூடியது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், முஸ்லிம் லீக் மற்றும் மன்னர்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர்.

சில நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் ஒத்தி வைக் கப்பட்டது.

அம்பேத்கர் பம்பாய் திரும்பினார். அங்கு தனது கல்விப் பணியைக் கவனிக்கத் தொடங்கினார்.

அவர் ஏற்கெனவே, மக்கள் கல்விக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி இருந்தார். அந்த கழகத்தின் மூலம் சித்தார்த்தா கல்லூரி என்ற பெயரில் கல்லூரியைத் தொடங்கி நடத்தி வந்தார். அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் புத்தரின் வழிமு¬றைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார்.

அதனால்தான், அவர் அந்தக் கல்லூரிக்கு புத்தரின் இயற்பெயரான சித்தார்த்தா என்பதை சூட்டினார்.

தேர்தல் சமயத்தில் இருந்தே அம்பேத்கரின் கட்சித் தொண்டர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் வன்முறை தாக்குதலை தொடுத்து வந்தனர். அவர் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வன்முறை அதிகரித்தது.

அம்பேத்கரின் மகன் நடத்திவந்த அச்சகத்தை தீ வைத்து கொளுத்தினர். 1947 ஆம் ஆண்டு ஜனவரியில் பம்பாய் தாழ்த்தப்பட்ட அமைப்பின் தலைவர்களில் ஒருவரை காங்கிரஸார் கொலை செய்தனர்.

அம்பேத்கரின் வீட்டையும் ஒருமுறை முற்றுகையிட்டு அச்சுறுத்தினர். அவர்களுடைய மிரட்டலுக்கு அவர் பணியவில்லை.

1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசியல் நிர்ணய சபையிடம் அம்பேத்கர் ஒரு மனுவை அளித்தார். தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும். மற்ற தொகுதிகளில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கலாம் என்று அம்பேத்கர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்தச் சமயத்தில் பிரிவினை தொடர்பாக பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் வெறியோடு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

நாடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த சமயத்தில், அரசியல் நிர்ணய சபையின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில்தான், தீண்டாமையை முற்றிலும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வல்லபாய் பட்டேல் தீர்மானம் கொண்டு வந்தார். அது ஏகமனதாக நிறைவேறியது.

தீண்டாமை குற்றம் என்று ஆகியது. அம்பேத்கரின் ஒரு கனவு நனவாகியது.

இந்திய தேசிய கொடியின் மத்தியில் அசோகச் சக்க ரத்தை பொறிக்கவும் முடிவாகியது. இதில் அம்பேத்கருக்கு முக்கிய பங்கு இருந்தது. இந்த முடிவு காந்திக்கு வருத் தத்தை அளித்தது. அவர், கைராட்டையை சின்னமாக வைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இப்போதும் அவர் கோபித்துக் கொண்டார்.

“தேசியக் கொடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் இந்தியா இரு பகுதியாக பிரிக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையில் பல உறுப்பினர்கள் பதவி இழந்தனர். அம்பேத்கரும் தனது பதவியை இழந்தார்.

அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது. எனவே, பம்பாய் மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயகர் ராஜினாமா செய்தார். அவருடைய இடத்திற்கு பதிலாக அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டார்.

சுதந்திர இந்தியாவுக்கு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டியிருந்தது. அம்பேத்கரை இந்தியாவின் சட்ட அமைச்சராக நேரு நியமித்தார். காந்தியும் இதற்கு சம்மதித்தார்.

அம்பேத்கர் இதற்கு ஒப்புதல் அளித்து, பதவி ஏற்றுக் கொண்டார். நாடு முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த் துகள் குவிந்தன. முன்பு அவரை இகழ்ந்தவர்களும் இப்போது புகழ்ந்தார்கள்.

அமைச்சர் என்ற பொறுப்பு அவரை ஒரே நாளில் உயர்ந்த மனிதராக மாற்றியது.

இரவு பகல் பாராமல் இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கும் வேலையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.

தனது பிறப்பு காரணமாக எத்தனையோ இன்னல் களையும் அவமானங்களையும் சந்தித்தவர் அம்பேத்கர். தனது மக்களுக்கு தகுந்த சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் கவனமாக இருந்தார்.

தீண்டாமை ஒழிக்கும் 17 ஆவது பிரிவு.

கொத்தடிமையாக நடத்தப்படுவதைத் தடுக்கும் 23 ஆவது பிரிவு.

மத்திய அரசு, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளுக்கும் தேர்வு செய்வதில் ஒதுக்கீடு வழங்கும் 235 ஆவது பிரிவு.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கள் சபையில் பிரதிநிதித்துவம் வழங்க இட ஒதுக்கீடு செய்யும் 330 ஆவது பிரிவு.

இதேபோல் மாநில சட்டமன்றங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 332 ஆவது பிரிவு.

தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும், அவர்களை சமூக அநீதி மற்றும் எல்லா வகையான சுரண்டல்களில் இருந்தும் பாதுகாக்க அறிவுறுத்தும் 46 ஆவது பிரிவு.

இப்படி பல பிரிவுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உத்தரவா தம் ஏற்படுத்தினார் அம்பேத்கர். ஆனாலும் அவர் சொன்ன வார்த்தைகள் மறக்க முடியாதவை…

“உரிமைகள் என்பவை சட்டத்தினால் காப்பாற்றப்படுவதில்லை. சமூகத்தின் சமூக உணர்வு மற்றும் நெறி உணர்வு ஆகியவற்றால்தான் பாதுகாக் கப்படுகின்றன”

Leave A Reply