அயோத்தி ராமனின் மறுபக்கம்.. இதுவரை சொல்லாமல் மறைத்த பல பக்கங்கள்! – ராதா மனோகர்

Share

அயோத்தி ராம ஜென்ம பூமியில் நடைபெறும் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக அந்த ஜெகம் புகழும் உண்மை கதையை இங்கே காட்சிக்கு வைக்கிறோம்…

ராமன் ஒரு பணக்கார வீட்டு விளையாட்டு பிள்ளை. பணக்கார அமைச்சர்களின் மகன்களை போல் ஒரு அடாவடி உதவாக்கரை பையனாக இருந்தான். மது மாது மற்றும் கேளிக்கை விடுதி வில்லங்கங்கள் என ஜாலியாக திரிந்தான். தசரதன் எவ்வளவோ முயற்சி செய்தும் ராமனை ஒரு பொறுப்புள்ள அரச வாரிசாக உருவாக்கவே முடியவில்லை பெரும் பிரயத்தனம் செய்து. தங்கள் அந்தஸ்த்துக்கு சமமான ஜனக மகாராஜாவின் புத்திரியான சீதையை கண்டுபிடித்தனர். அவளை எப்படியாவது ராமனுக்கு திருமணம் செய்து வைத்தால் ராமன் வழிக்கு வந்து விடுவான் என்று பல ஜால்ராக்கள் உபதேசம் செய்யதனர். சீதையின் சுயம் வர செய்தியும் வந்து சேர்ந்தது. இங்குதான் சுயம்வரம் என்ற பெயரில் வில்லங்கம் வந்தது. ராமன் சுயம்வரத்தில் வெல்லகூடிய அளவு பெரும் அழகனோ திறமைசாலியோ இல்லை.

தசரதன் சீதையின் மனதில் ராமனை பற்றி நல்ல விதமாக சொல்லிவைக்க சிலரை ஏற்பாடு செய்தான். இந்த தந்திரம் நன்றாக வேலை செய்தது. அடிமை சமுகத்தில் இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. பணம் வருமென்றால் எதுவும் செய்ய தயாரான கூட்டம் தாராளமாகவே இருந்தது. அப்படி தப்பு தகவல் கொடுக்கப்போன வதந்தி கூட்டம் அந்த சீதைக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதாக அரசல் புரசலாக அறிந்தது. இது தசரதனுக்கு நல்ல செய்தி இல்லையே. எனவே அவர்கள் எல்லோரும் கப் சிப் என்று வாயை முடிக்கொண்டு விட்டனர். போதாக்குறைக்கு சீதை பற்றி இல்லாதது பொல்லாததாக தங்கள் பங்குக்கு போலி புகழுரைகளை வேறு அள்ளி வீசி விட்டனர் .

குள்ள நரியான தசரதன் சுயம் வாரத்திற்கு வேறு உருப்படியான மணமகன்களை வரவிடாமல் வதந்திகளை பரப்பியே ஏற்கனவே உடைந்து போன சுயம்வரமாக ஆக்கி விட்டிருந்தான்.

சீதையின் மனமோ என்ன செய்வது என்றே தெரியாமல் பலமற்றவளாக இருந்தாள். ஒரு சம ஜாதியில் குலகோத்திரத்தில் ஒருத்தனை காதலித்து இருந்தால் பயம் இல்லாமல் ஜனகனிடம் சண்டை பிடித்தாவது ராவணை திருமணம் செய்து இருப்பாள்.

சீதை சரியான பயந்த சுபாவம் கொண்டவள். அவளது பயத்தை மிக நல்ல குணமாக போலியாக புகழ்ந்து அவளை வெறும் நடைப்பிணமாக ஆக்கி விட்டிருந்தனர் சுற்றத்தினர்.

பம்மாத்து சுயம்வரமும் நடந்தது. அதில் ஏற்கனவே உடைந்து போன ஒரு வில்லை தானே உடைப்பது போன்று ஒரு தில்லாலங்கடி விளையாட்டை காட்டினான் ராமன்.

திருமணமும் நடந்தது.

பல லீலைகளிலும் தனது நேரத்தை போக்கியவண்ணம் ராமனின் காலம் கழிந்தது. சீதை மீது ராமனுக்கு எதுவித ஆர்வமும் வரவில்லை. பல கோதைகளை தினமும் பார்க்கும் ராமனுக்கு சீதையை பற்றிய ஞாபகம் கூட அதிகம் வருவதில்லை.

சீதையின் இந்த வெறும் வாழ்க்கை எல்லோரும் அறிந்துதான் இருந்தனர். ஆனாலும் என்ன சீதைக்கு ராஜபோகம் அமைந்து இருக்கிறதே என்று பேசிக்கொண்டனர்.

அவளுக்கென்று உண்மையில் ஏங்கும் இதயம் ராவணனது மட்டும்தான். சீதை தான் செய்த தவறை எண்ணி மனம் வருந்தினாள். காலம் செய்த கோலம் தான் என்ன செய்வது என்று எண்ணி காலத்தை கடத்தி கொண்டிருந்தாள்.

எப்படியோ சீதையின் இந்த அவல நிலை ராவணனுக்கும் தெரியவந்தது. உண்மையான காதலனல்லவா மனம் ஏங்க தொடங்கியது. சீதையின் நிலை இப்படியாயிற்றே என்று கவலையோ அல்லது சந்தோஷமோ அடைந்து சீதையை ரகசியமாக அணுக தலைப்பட்டான்

சிலவருடங்களின் பின்பு ராவணனுக்கும் சீதைக்கும் இடையில் மெல்லிதாக பேச்சுவார்த்தை ஆரம்பமானது . நீண்ட பிரிவுக்கு பின்பான உறவு என்பதாலோ என்னவோ இருவரும் காட்டாறுகள் போல் ஒருவரை ஒருவர் நேசிக்கலாயினர். தவிர்க்கவே முடியாத காதலில் வசப்பட்ட இருவரும் சந்தித்து பேசுவது ராமனுக்கும் சற்றே தெரிந்தே இருந்தது. மேலும் சீதைக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற ஒரு காரணத்தாலும் சீதை தள்ளி வைத்திடலாமா என்று கூட ராமன் நினைத்து உண்டு. எனவே கண்டும் காணாதது போல் இருந்து விட்டான்.

ஒருநாள் சீதையும் ராவணனும் ஓடிவிட்டார்கள். தனது இயலாமைய மறைக்க ராவணன் புஷ்பக வீமானத்தில் வந்தான் குடிசையோடு தூக்கி கொண்டு ஓடிவிட்டான் என்பதாக எல்லாம் கதை அளந்ததனர் அயோத்தி அரண்மனை குடும்பத்தினர். எல்லாம் தெரிந்த ஊர்மக்கள் கொடுப்புக்குள் சிரித்து கொண்டனர்.

ராமனும் ஜாலியாக சனியன் விட்டது போல தனது விருந்து களியாட்டங்கள் என்று திரிந்தான் .

அரண்மனை குடும்பத்தாரால் அப்படி சும்மா விட்டு விட்டு இருக்க முடியவில்லை .தங்களது குடும்ப மானம் நாறுவதை தடுக்க எப்படியாவது சீதையை கண்டுபிடித்து கொண்டுவரவேண்டும் ராவணன் சீதையை கடத்தி கொண்டு போனான் என்று ஜனங்களை நம்ப வைக்க வேண்டும் என்றெல்லாம் சதி திட்டம் தீட்ட தொடங்கிவிட்டனர்.

முதலில் ராவணனை கொல்ல வேண்டும் பின்பு ஜால்ராக்களை வைத்து கொண்டே பித்தலாட்ட கதைகளை மக்களிடம் பரப்பி விடலாம் என்று தீர்மானித்தனர்.

பல நாட்களாக தேடித்தேடி ஒருமாதிரியாக ராவணனை கண்டு பிடித்தனர். ஆனாலும் ஒரு சிக்கல் ராவணன் முன்பு போல் இல்லாமல் சற்று பல சாலியாக வசதியாக இருந்தான்.அவனோடு மோதுவதற்கு பலரை சேர்க்க வேண்டி இருந்தது .

கடும் பிரயத்தனற்கு பின்பு ராவணனை கொன்றார்கள். சீதை சோகம் சொல்லும் தரமன்று . ராவணனை கொன்று விட்டார்கள் ஆனாலும் தன்னால் உடனே சாக முடியவில்லையே. வயிற்றில் இருக்கும் குழந்தை ராவணனின் குழந்தை அல்லாவா? அதை வளர்க்க வேணுடும் அல்லவா? இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது.

மனதில் உறுதி கொண்டாள் . தன் குழந்தையை கொண்டே ராமனுக்கு பாடம் புகட்டுவதே இனி ராவணனுக்கு தான் செய்யும் ஒரு விரதம் என்று எண்ணி கொண்டாள்.

ராவணனின் குழந்தை தன வயிற்றில் இருப்பது தெரிந்தால் நிச்சயம் அந்த குழந்தையை பிறக்குமுன்பே அழித்து விடுவார்கள் எனவே மௌனமாக அவர்கள் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டினாள்.

அந்த காலத்தில் சர்வ சாதாரணமாக செய்யப்படும் தீக்குளிப்பு என்ற நாடகத்திற்கு சம்மதித்தாள்.

அது ஒன்றும் இல்லை வெறும் வைக்கோலால் ஒரு குடிசை கட்டுவது, அதன் ஒருவாயில் ஊடாக குளித்து புனிதமாக சீதை உள்ளே புகுந்து வெளியே வந்தாள்.

தூரத்தே இருந்து பார்பவர்க்கு அது ஒரு அக்கினி கோபுரம் போல் தெரியும். ஆனால் உண்மையில அதன் உள்ளே வெற்றிடம் தான் இருக்கும். அதன் வெம்மை உணரப்படாமலேயே சீதை மட்டுமல்ல யாராலுமே இந்த வித்தையை காட்ட முடியும். எல்லாம் ஜனங்களை ஏமாற்றுவதற்கு கண்டு பிடிக்கப்பட்ட நாடக உத்திகளாகும்.

ராமனுக்கு சீதையை பார்க்கும் போதெல்லாம் பற்றி கொண்டு வந்தது. சீதைக்கோ அவனை கொல்லும் அளவு கோபமும் வஞ்சமும் இருந்தது.

இந்த நிலையில் சீதையின் வயிற்றில் இருந்த சிசு மறைக்க முடியாத அளவு வளர்ந்து விட்டிருந்தது, சீதையின் பார்வையை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் ராமன் ஒழித்து விளையாட்டு காட்டினான். இவளை ஏன்தான் கடத்தி கொண்டு வந்தோம் என்று சிந்திக்கலானான். காலம் கடந்த சிந்தனை,

தற்போது என்ன செய்வது? ராவணன் செத்தும் என்னை தண்டித்து விட்டானே?

இனி எப்படி சீதையை காடு காட்டுவது? மக்களுக்கு துளியேனும் சந்தேகம் வரக்கூடாதே?

நாம் எதோ உத்தம ராஜ்ஜியம் புனித பரிபாலனம் என்று ஜனங்களை நம்ப வைத்து கொண்டிருக்கிறோம்.

நிலைமையோ மகா மோசமாகபோய் கொண்டு இருந்தது இனியும் தாமதிக்க முடியாது என்ற நிலை வந்த போது சீதையே ஒரு முடிவுக்கு வந்தாள்.

தனது அன்புக்கு உரிய தோழியிடம் தான் அரண்மனையை விட்டு வெளியேறும் முடிவை தெரிவித்தாள். அங்கு உள்ள எல்லோருமே ஏறக்குறைய இந்த முடிவு தான் சரியானது என்று எண்ணி இருந்தனர். ராமனோ எதோ தன மீது கெட்ட பெயர் வாராமல் எது நடந்தாலும் சரி என்று வழக்கம் போல தனது குடி கூத்தி என்று காலம் கழிக்கலானான்.

ஒரு அழகான அதிகாலை வேளை சீதை கனத்த மனதோடும் கனத்த வயிறோடும் தன் அன்புக்குரிய ஒரிருவரோடு அரண்மனையை விட்டு வெளியேறினாள்.

அவள் இரு குழந்தைகளை பெற்றதும் அக்குழந்தைகள் வளர்ந்து இளம் பிராயமானதும் ராமனின் அரண்மனைக்கே வந்து அவனை காய்ச்சி எடுத்ததும் உலகம் பின்பு அறிந்து கொண்டது.

Leave A Reply