நேரு மறைவின் போது சிறையில் இருந்த அண்ணாவின் உணர்வுகள்!

Share

நேரு மறைந்தபோது, அண்ணா சிறையில் இருந்தார். அவர் தனது சிறை டைரியில் எழுதிய குறிப்புகளில் நேருவை ஜனநாயக சீமான் மறைந்துவிட்டாரா என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார.

27-5-1964

இன்று பிற்பகல் 3 மணிக்குத் திடுக்கிடத்தக்க செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

இங்கு உள்ள கொடிமரத்தில் கொடி திடீரென பாதிக் கம்பத்துக்கு இறக்கப்பட்டது; விவரம் புரியாமல் கலக்கமடைந்தபடி, காவலாளிகளைக் கேட்டதற்கு, “நேரு காலமாகிவிட்டாராம்‘ என்று கூறினர். – நெஞ்சிலே சம்மட்டி அடி வீழ்ந்ததுபோலாகிவிட்டது. நம்ப முடியவில்லை; நினைக்கவே நடுக்கமெடுத்தது.

காலை இதழிலேதான், நேரு டேராடன்னிலிருந்து உற்சாகத்துடன் டிலலி திரும்பினார்; விரைவில், அயூப்கானைச் சந்திப்பார் என்று மகிழ்ச்சி தரும் செய்திகளைப் பார்த்தோம்; பிற்பகல் 3 மணிக்கு, அவருடைய மறைவுபற்றிக் கேள்விப்பட்டால், எப்படி மனம் நிலைகொள்ளும்? சரியாக விசாரியுங்கள் – அதிகாரியையே கேளுங்கள் என்று கூவினேன். அரக்கோணம் ராமசாமி சிறை அதிகாரியைக் கண்டு கேட்டுவிட்டுத் திரும்பினார்.

அவருடைய நடையிலே காணப்பட்ட தளர்ச்சியும் முகத்திலே கப்பிக்கொண்டிருந்த துக்கத்தையும் கண்டேன் – நடைபெறக் கூடாதது நடந்துவிட்டது – துளியும் எதிர்பாராதது ஏற்பட்டுவிட்டது என்று உணர்ந்தேன் – சில நிமிடங்கள் கல்லாய்ச் சமைந்துபோனேன். எல்லோருமே கண்கலங்கிப் போயினர். நேரு போய்விட்டாரா – ஒளி அணைந்து விட்டதா – உலகமே அதிர்ச்சி அடையத்தக்க இழப்பு ஏற்பட்டு விட்டதா – அய்யய்யோ! – எப்படி இதனை நாடு தாங்கிக் கொள்ளப்போகிறது – என்றெல்லாம் எண்ணி வேதனைப் பட்டேன்.

பண்டித நேரு, ஒரு சகாப்தத்தை நடத்தி வைத்தவர் – வெறும் அரசியல் கட்சித் தலைவராக மட்டும் இருந்து வந்தவர் அல்ல. உலகத் தலைவர்களிடையே அவருக்கு இருந்து வந்த நட்பும் தொடர்பும், இங்கு மட்டுமல்ல, உலகிலேயே ஒரு போரற்ற பூசலற்ற காலத்தை உருவாக்கும் நிலைமையை மலரச் செய்தது. காங்கிரஸ் கட்சியிடமும் ஆட்சி முறையிடமும் கசப்பும், கொதிப்பான கோபமும் கொண்டபோதெல்லாம்கூட, பண்டித நேருவுடைய சிறப்பு இயல்புகள், அறிவாற்றல், தனித்தகுதி, பண்பு ஆகியவைகளை நான் மறந்ததுமில்லை, நமது கூட்டங்களிலே எடுத்துச் சொல்லத் தவறியதுமில்லை.

அவர் சிறந்த ஜனநாயகவாதி என்பதை உள்ளூர உணர்ந்து, உவகையுடன் கழகத் தோழர்களுக்குக் கூறி வந்திருக்கிறேன். இந்தித் திணிப்பு விஷயத்தில்கூட, தென்னக மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு மதிப்பளிக்கத் தவறாதவர் நேரு பண்டிதர்.

நமது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் மூலம் 1965ல், இந்தி பற்றிய புதிய கட்டம் பிறந்திடும்போது, நேருவுடைய மனதிலே, ஒரு நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தி வைக்கலாம் என்று நம்பிக்கை கொண்டேன்; அதனையும் கழகக் கூட்டங்களில் தெரிவித்திருக்கிறேன். அவரிடம் பேசி அறியாதவன் நான். நான் ராஜ்ய சபையில் பேசியதையும் அவர் இருந்து கேட்க வில்லை. ஆனால் நான் பேசியான மறுநாள், பண்டித நேரு பேசுகையில், இரண்டு மூன்று முறை என் பேச்சைக் குறிப்பிட்டுக் காட்டி, சிலவற்றை ஒப்புக்கொள்வதாகக் கூறிப் பேசினார். அந்தப் பேச்சின்போது, அவருடைய பார்வை என்மீது பல முறை வீழ்ந்தது – அந்தக் காட்சி இப்போதும் தெரிவதுபோலிருக்கிறது.

பாராளுமன்றத்திலே, நான் பார்த்திருக்கிறேன் – வியப்படைந்திருக்கிறேன் – காங்கிரஸ் ஆட்சியாளர் அதனைக் கண்டும் பாடம் பெறவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறேன் – நேருவின் பேச்சிலே குறுக்கிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபதாபத்துடன், எரிச்சல் ஏளனத்துடன், காரசாரத்துடன் பலர் பேசுவார்கள் – துளியும் பதறாமல், ஒரு ஐம்பது ஆண்டுக்கால வரலாற்றை உருவாக்கிய அந்தப் பெருந்தலைவர், ஜனநாயகத்திலே இது தவிர்க்க முடியாதது என்று மட்டுமல்ல, இது தேவைப்படுவது, வரவேற்கப்பட வேண்டியது என்ற பண்புணர்ச்சியுடன் பதில் அளிப்பார் – அத்தகைய ஒரு ஜனநாயகச் சீமான் மறைந்து விட்டார்.

விவரம் தெரியவில்லை. ஏன் எப்போது, எங்கே, காலமானார் என்ற தகவல் ஏதும் தெரியவில்லை. வேதனை அதிகமாக வளர்ந்தது.

என்னைக் காண கருணாநிதி வந்திருப்பதாக அழைத்தார்கள் – நடந்து சென்றபோது, எங்கோ காற்றின்மீது நடப்பதுபோல ஒரு உணர்வு. கருணாநிதியும் அரங்கண்ணலும் வந்திருந்தார்கள். சர்க்காரிடம் தனி அனுமதி பெற்று, வேதனை தோய்ந்த என் முகத்தைக் கண்டார்கள் – அவர்களின் கண்கள் கசிவதை நான் பார்த்தேன். விவரம் கேட்டேன் – தெரிவித்தார்கள். அனுதாபச் செய்தி வேண்டும் என்றார்கள் – எழுதும் நிலை இல்லை – மனக் குமுறல் எண்ண ஓட்டத்தையே ஒடித்து விட்டிருந்தது.

மனதிலே கொந்தளித்துக்கொண்டிருந்த எண்ணக் குவியலில், இரண்டொன்றை எழுத்தாக்கிக் கொடுத்தேன். இது, ஒரு கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல – நாட்டுக்கு – ஆகவே, நாட்டவருடன் கழகத்தவர் இந்தத் துக்கத்தில் பங்கேற்றுக் கொள்ள வேண்டும் – கூட்டங்கள், ஊர்வலங்கள் வேண்டாம் என்று கூறி அனுப்பினேன்.

நண்பர்களுடன், நேரு மறைவுபற்றித்தான் பேசிப் பேசி, ஆறுதலைத் தேடிக்கொள்ள முயன்று வருகிறேன்.

28-5-1964
வேதனை நிரம்பிய நிலை நீடித்தபடி இருக்கிறது. வேறு எந்த விஷயத்திலும் மனம் செல்லவில்லை.

பரோல் முடிந்து சிறை திரும்பிய நண்பர் கோவிந்தசாமி, ஊரே துக்கத்தின் பிடியிலே சிக்கிக் கிடப்பதுபற்றி விவரம் கூறினார். எல்லாக் கட்சிகளையும் கொண்ட மவுன ஊர்வலம் நடப்பதாகத் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு – டில்லி நகர் நோக்கி என் எண்ணம் சென்றது. எத்தகைய புகழ்மிக்க ஒரு வரலாறு, தீயிலிடப்படுகிறது! எத்தகைய பொன்னுடலுக்கு எரியூட்டு கிறார்கள்! என்பதை எண்ணி விம்மிக் கிடந்தேன்.

30-5-1964

இன்று அரக்கோணம் தோழர் ராமசாமி எம். எல். ஏ. விடுதலையானார். விடியற்காலை ஐந்து மணிக்கே அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். மற்ற எவருடைய அறையையும் திறக்கவில்லை. ஆகவே, அவர் விடுதலையாகி வெளியே செல்லும்போது நண்பர்கள் அவருடன் அளவளாவி விடை தந்தனுப்பும் வாய்ப்பும் பெறவில்லை. நான் தூங்கிக் கொண்டிருந்தேன். எழுப்ப முயற்சித்து, பிறகு வேண்டாமென்று விட்டுவிட்டார்களாம்; காரணம் எனக்கு நேற்று இரவெல்லாம் அடிவயிற்றிலும் இடுப்பிலும் வலி கண்டு மெத்தத் தொல்லைப் பட்டேன்; மூன்று மணி சுமாருக்குத்தான் தூக்கம் பிடித்தது; ஆகவே என்னை எழுப்பலாகாது என்று இருந்துவிட்டனர்.

நான் எழுந்த பிறகு இதைக் கூறினார்கள். வருத்தப்பட்டேன். நண்பர் ராமசாமியிடம் நேற்று மாலை நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் அமைதியான வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ராமசாமி அறப்போரில் ஈடுபட்டுச் சிறை புகுவார் என்று அவருடைய நெருங்கிய நண்பர்களேகூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர் சிறை புகுந்தது அரக்கோணம் வட்டாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தக்கோலம் எனும் கிராமத்தில், மதிப்புள்ள ஒரு பெரிய விவசாயக் குடும்பத் தலைவர் ராமசாமி.

கழகத்துக்குக் கிராமத்தில் இத்தகையவர்கள் நிரம்பக் கிடைக்க வேண்டும்; கிராமத்திலே குறிப்பிடத்தக்க நிலை பெற்றவர்கள் இதுபோல, பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவதும், கொள்கைக்காகக் கஷ்ட நஷ்டம் ஏற்பதும், அவர்கள் ஈடுபட்டுள்ள இயக்கத்துக்கு மட்டுமல்ல, மக்களாட்சி முறைக்கே வலிவும் பொலிவும் ஏற்படுத்தும் என்பதிலே ஐயமில்லை.

அரசியல் என்பதே, பளபளப்பான பட்டணக் கரைகளில் உள்ள பணக்காரர் படித்தவர்கள் ஆகியோருக்கென்றே அமைந்துள்ள துறை என்ற எண்ணம் மாறி, கிராமத்தில் குறிப்பிடத்தக்க நிலையிலுள்ளவர்கள் ஈடுபட்டு, செம்மைப்படுத்தி, நாட்டுக்கு நல்லாட்சி ஏற்படுத்த முனைய வேண்டிய துறை அரசியல் என்ற எண்ணம் வலுப்பெற வேண்டும்.

திகைப்பு, உள்ளக் குமுறல், அதிர்ச்சி ஆகியவை காரணமாக, இரண்டு நாட்களாக எனக்கு உடல் நலிவு ஏற்பட்டுவிட்டது. குனிய நிமிர முடியாதபடி இடுப்பிலே வலி; தைலம் தடவியும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தும் என் நலிவைப் போக்க, மணி – மிக்க அன்புடன் முயன்று வந்தார். அன்பழகன் இத்தகைய நலிவுகள் போக, மருத்துவ முறைகள் பல அறிந்திருக்கிறார். அவரும் எனக்கு உதவியாக இருக்கிறார்.

நேரு மறைவு, நாட்டிலே எப்படி ஒரு இருளையும் வெறிச்சிட்டுப்போன நிலைமையும் உண்டாக்கிவிட்டதோ அதுபோன்று என் மனதிலேயும் ஒரு வெறிச்சிட்ட நிலையை உண்டாக்கிவிட்டது. வழக்கமாக எழும் அரசியல் பேச்சுகள் இல்லை; படிப்பதற்கும் மனம் இடம் தரவில்லை.

நேருவின் இறுதிபற்றி உலகப் பெருந்தலைவர்கள் அனுப்பிய இரங்கற் செய்திகளையும், டிலலியில் அவர் உடலுக்கு எரியூட்டியதுபற்றிய செய்திகளையும் பத்திரிகைகளில் படிக்கப் படிக்க, வேதனையும் உருக்கமும் வளர்ந்துகொண்டு இருந்தது.

இந்த முறை, நான் சிறை புகுந்தது முதல், என் மனதுக்கு அதிர்ச்சியும் வேதனையும் மூட்டிவிடத்தக்க இழப்புகள் பல நேரிட்டுவிட்டதை எண்ணிக்கொண்டேன். விரைவாக மன வேதனையை நீக்கிக்கொள்ளக்கூடிய இயல்பும் எனக்குக் கிடையாது. சிறையிலே எனக்கு அமைந்துள்ள வாழ்க்கை முறையால் எனக்குத் தொல்லை அதிகம் இல்லை. என் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆகவே சிறையில் இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை என்ற சங்கடமே எழுவதில்லை.

ஆனால், உள்ளத்து நெகிழ்ச்சி மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது. துக்கமோ, திகைப்போ, உருக்கமோ, அதிர்ச்சியோ இதுபோன்ற எந்தவித உணர்ச்சி எழுந்தாலும், அதன் அளவும் மிகுதியாகி விடுகிறது, மிக அதிக நேரமும் அந்த உணர்ச்சியின் பிடியில் சிக்கிக்கொள்ளவேண்டி நேரிட்டுவிடுகிறது.

இந்த நிலை காரணமாக, வழக்கமாகப் படிப்பதிலே தடங்கல் ஏற்பட்டுவிடுகிறது. நேரு மறைவு காரணமாகப் பல்வேறு பிரச்சினைகள் எவ்வெவ்விதமாக வடிவம் கொள்ளும் என்பது பற்றி நண்பர்கள் கேட்கிறார்கள்; விரிவான விளக்கமான பதில் கூற இயலவில்லை; கோடிட்டுக் காட்ட மட்டுமே முடிகிறது.

Leave A Reply