பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் மிகப்பெரிய முறைகேடு – உளவாளி

Share

திமுக அரசு வெளிப்படைத் தன்மையுள்ள அரசு என்று பறைசாட்டினார்கள். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் முறைகேடுகள் நடப்பது அவ்வப்போது அம்பலமாகிறது.

கடந்த முறை நூலகங்களுக்கு இதழ்கள் தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடந்து, அது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேர்மை, நீதி, நியாயம் என்று அடிக்கடி முதல்வர் பேசுகிறார். எந்தத் தவறு நடந்தாலும் தனது கவனத்துக்கு கொண்டுவரும்படி கூறுகிறார்.

ஆனால், நூலகங்களுக்கு இதழ்கள் தேர்வு செய்ததில் விகடன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிகளை மீறு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதோ இப்போது பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு புத்தகம் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் நூல்கள் வரை வாங்கப்படும் மிகப்பெரிய ஆர்டர் இது. ஆனால், இதுகுறித்து எந்த விளம்பரமும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.

கமுக்கமாக எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது. தேர்வுக்குழு நியமிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அதில் யாரெல்லாம் இடம்பெற்றிருந்தார்கள் என்பது தெரியவில்லை. அறிவிக்கப்படவில்லை. புத்தகங்கள் பரிசீலிக்கப்பட்டனவா? பரிசீலனைக்கு புத்தகங்கள் அனுப்பும்படி பதிப்பகங்களுக்கு தெரிவிக்கப்பட்டதா?

சுமார் 140 பதிப்பகங்களின் நூல் விவரப் பட்டியல் மட்டும் பெறப்பட்டு, தலைப்புகளை தேர்வு செய்ததாக கூறுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம். தலைப்பை பார்த்தால் உள்ளடக்கம் தெரிந்துவிடுமா?

இதுதான் தரமான தேர்வுக்கு அர்த்தமா? அதிமுக ஆட்சியில்தான் கமிஷன் என்றால், திமுக ஆட்சியிலும் 30 சதவீதம் வரை கமிஷன் வாங்கப்படுவதாக பேசிக் கொள்கிறார்கள்.

முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என்று எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள். ஆனால், உதயச்சந்திரன் ஐஏஎஸ்சும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாவும் இந்த நூல்கள் தேர்வில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், தங்கள் விருப்பப்படியே, தங்களுக்கு பிடித்த பதிப்பகங்களுக்கு நூல்களை வாங்க ஆர்டர் கொடுத்திருப்பதாக பதிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.

புலம்பல்கள் அதிகரிப்பது ஆட்சிக்கு நல்லதல்ல.

-உளவாளி

Leave A Reply