பிரிவினை தடைச்சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் அண்ணாவின் முழக்கம் – 1

Share

(1962 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து 32 லட்சம் வாக்குகளையும், 50 சட்டமன்ற உறுப்பினர்களையும், 7 மக்களவை உறுப்பினர்களையும் திமுக பெற்றது. இது மத்திய அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சீனாவுடன் யுத்தத்தை காரணம் காட்டி பிரிவினைத் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா மீது, 25-1-63இல் இராச்சிய சபையில் விவாதம் நடைபெற்றபோது, அதன் அவசியமற்ற தன்மையை விளக்கி அண்ணா ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இங்குத் தரப்படுகிறது. தமிழாக்கம் அண்ணா என்பது குறிப்பிடத் தக்கது. தனது பெயரை சி.என்.ஏ. என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா.)

சி. என். ஏ. : சமரசம் பேசுவதற்காகச் சீன ஆக்கிரமிப்பாளருடன் மேஜைமுன் அமர நமது விருப்பத்தையும் சம்மதத்தையும் தெரிவித்தான உடனே, எதிரியை அல்ல, ஒரு இலட்சியத்துக்காகப் பணியாற்றுபவனை அழிக்க, சர்க்காருக்கு ஒரு புதிய சட்ட ஆயுதத்தைத் தருவதற்காக, அரசியல் சட்டத்துக்கும் கொண்டு வரப்படும் ஒரு திருத்தம்பற்றி நாம் இன்று விவாதித்துக்கொண் டிருப்பது வேதனையுள்ள விசித்திரம்போலும்! மன்றத்தின் இரண்டு தரப்புகளிலிருந்தும் கூறப்பட்ட பல கருத்துரைகளை நான் மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சட்டத்தைத் துணைகொண்டு அடக்கிவிட நீங்கள் முயலும் அந்த இலட்சிய எண்ணத்தைப் புகுத்தியவன் என்ற முறையில், என் நோக்கத்தை மீண்டும் விளக்க அல்ல, ஆனால் எமது கோரிக்கைக் குறித்து ஏற்பட்டுள்ள சில தப்பர்த்தங்களைப் போக்க, அந்த இலட்சியம்பற்றிய விளக்கத்தையும் வரலாற்றையும் எடுத்துக்கூற விரும்புகிறேன். கனம் உறுப்பினர் ஒருவர் பிசோ கேட்டதைக் கண்டு அல்லது அதைத் தொடர்ந்து திராவிடஸ்தான் கேட்கப்படுகிறது என்று கூறினார். ஆனால், உண்மை, அதற்கு வெகு தூரத்தில் இருக்கிறது.

சுதந்திரம் வந்தபிறகு இப்படிப்பட்ட பிரிவினை உணர்ச்சிகள் கிளம்பின என்று மற்றோர் உறுப்பினர் கூறினார். இது உண்மைக்கு நெருங்கி வருவதாகும்; ஆனால், உண்மை இது அல்ல. தி. மு. கழகம் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த அமைப்பு. திராவிடர் கழகம், சுதந்திரத்துக்கு மிக நீண்ட காலத்துக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது. எதிர்கால அரசியல் முறை அமைப்புப் பற்றிச் சர்ச்சைகள், பிரச்சினைகள், கொள்கைகள் எழுந்தபோது, திராவிடர் கழகம் – அந்த அமைப்பின் பொதுச்செயலாளனாக நான் இருந்திருக்கிறேன் – தென்னகத்துக்கு, ஒரு அரசியல் ஏற்பாடுபற்றித் திட்டம் அறிவித்தது.

அதனுடைய தொடர்பாகத்தான், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் அந்த இலட்சியத்தை எடுத்து விளக்கிக் கொண்டு வருகிறது. எனவே, இது ஆளுங்கட்சியின் செயல்கள் அல்லது செயலாற்றாத தன்மை ஆகியவைகளைப் பொறுத்ததாக அமையவில்லை. நாட்டின் வேறு இடங்களிலே இதுபோன்ற அல்லது இதைவிடப் பயங்கரமான எந்தப் பிரச்சினைகளுக்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. பிரச்சினையின்மீது பாய்வதற்கு முன்பு, கனம் உறுப்பினர்கள், பிரச்சினையை அலசியாவது பார்க்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

இரண்டாவதாக, ஒரு ஆக்கிரமிப்பாளனைச் சந்தித்துச் சமரசம் பேசச் சம்மதத்தைத் தெரிவித்த சீக்கிரத்தில், பெருமைமிக்க நாட்டு மக்கள் என்ற முறையில், எங்கள் பிரசாரத்தைத் தடைபோட்டு நிறுத்துவதற்கு முன்பு, எங்களைப் புரிந்துகொள்ளவாவது முயலக்கூடாதா, என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

நாங்கள் என்ன அவ்வளவு தாழ்ந்து போய்விட்டவர்களா, அரசியல் அரங்கத்திலே எங்களைத் தீண்டப்படாதவர்கள்போல நடத்துவதற்கு! எங்கள் கோரிக்கை மிக முக்கியமானதல்லவா – நீங்கள் எங்கள் மனத்தைத் திருப்திப்படுத்தவும், மக்கள் ஒத்துக் கொள்ளக்கூடிய முறையை மேற்கொள்ளவும் முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டாமா? காரணகாரிய விளக்கங்களைக் கேட்க ஒருப்படாதவர்களா நாங்கள்? அந்த முயற்சி செய்து பார்த்தீர்களா? இந்த மன்றத்தில் இதுதான் என் முறையீடு.

கட்சித் தொடர்புகள்பற்றிய கவலையின்றி, இந்த மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த அம்சம்பற்றித் தங்கள் சீரிய கவனத்தைச் செலுத்தவேண்டுகிறேன் – எங்களைக் கலந்து பேசிக் கருத்தறிந்தார்களா? – பிரச்சினையை அலசிப் பார்க்க, ஆளுங்கட்சி சிரமம் எடுத்துக்கொண்டதா? நான் ஆளுங்கட்சி என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எதிர்க்கட்சிகள் பலவும் பிரச்சினையை அலசிப்பார்க்க முயற்சி எடுத்துக்கொண்டன. அதனால், இன்று காலையில், ஒரு உறுப்பினர், இந்தப் பிரச்சினையில் கம்யூனிஸ்டு கட்சி எங்களுடன் நேசத் தொடர்பு கொண்டிருந்தது என்று சொன்னார். எங்கள் கொள்கையை ஒப்புக்கொள்ளவேண்டுமென்று, நாங்கள் கேட்டபோது, முடியாது என்று கம்யூனிஸ்டு கட்சி கூறியது – பெருமைப்படத் தக்க விதத்தில் துணிவுடன் கூறிற்று.
இலட்சியங்களுக்கும், தேர்தல் தொடர்புகள், உடன்பாடுகள் ஆகியவற்றுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே, நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியையோ, வேறு கட்சிகளையோ கொள்கை அடிப்படை வைத்து அல்ல, அரசியல் நேசத் தொடர்புகள் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அணுகி இருந்திருக்கின்றோம். இப்போது கூட, இன்றுகூட, சென்னை மேயர் தேர்தல் சம்பந்தமாக, சென்னைக் காங்கிரஸ் கட்சியும் தி. மு. கழகமும் ஒரு ஏற்பாட்டில் இணைந்து உள்ளன. இந்த மன்றம் இதை அறிய அக்கறை காட்டும் என்று எண்ணுகிறேன். எனவே, அரசியல் நேசத் தொடர்பு என்பது ஒரு விஷயம், தேர்தல் நேசத் தொடர்பு என்பது மற்றொன்று; இலட்சியம், முற்றிலும் வேறான விஷயமாகும்.

கோபார்கடே (மகாராஸ்டிரா): அப்படியானால், காங்கிரசே, பிளந்து போவதை ஆதரிக்கிறது!

சி. என். ஏ. : அதனால்தான் சொல்லுகிறேன், தேர்தல் நேசத் தொடர்பு என்றால் இலட்சியத்தை இழந்துவிட்டதாகப் பொருள் இல்லை, என்று. தன் இலட்சியத்தைக் காத்திடும் வலிவு சென்னைக் காங்கிரசுக்கு இருக்கிறது. காங்கிரஸ் இலட்சியத்திலே சென்னை முதலமைச்சருக்கு வலிவான நம்பிக்கை இருக்கிறது. நமது விவாதங்களில் சென்னைக் காங்கிரஸ்பற்றியோ, முதலமைச்சர் பற்றியோ தப்பான வியாக்கியானங்கள் கொள்வதை நான் விரும்பவில்லை. தம்முடைய இலட்சியங்களை விட்டுக்கொடுக்காமலேயே, தேர்தல் நேசத்தொடர்புகள் கொள்ளமுடியும் என்பதைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறேன். ஆனால், நான் இலட்சியத்தை உணரவேண்டும், அலசிப் பார்க்கவேண்டும், ஆய்ந்து பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது இந்த மசோதா, இந்தியாவுடைய அரசுரிமையையும் பிரதேச ஒற்றுமையையும் பாதுகாக்க, நிலைநிறுத்தக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த அரசுரிமைக்கு என்ன ஆபத்து வந்திருக்கிறது – எனக்குத் தெரியாது – எனக்குத் தெரிவிக்கவும் இல்லை. ஒருசமயம் சட்ட மந்திரி – புதிய சட்டம் ஏதாவது தயாரித்துக் கொண்டிருப்பார் போலிருக்கிறது, அதனால்தான் சபையில் இல்லை – அவர் இங்கு இருந்திருப்பாரானால், திரும்பிப்பார்த்துச் சொல்லுவார்; நாட்டிலே பிளவுச் சக்திகள் உள்ளனவே, அறியாயா? இந்தக் காரியத்துக்காகவே தேசிய ஒருமைப்பாடு கமிட்டி அமைத்தோமே, அறியாயா? தேசிய ஒருமைப்பாடு கமிட்டி கூறிய யோசனைகளை ஒட்டியே நடவடிக்கை எடுத்திருக்கிறோம், தெரியாதா என்றெல்லாம் கேட்டிருப்பார்.

துணைத்தலைவர் அவர்களே! தேசிய ஒருமைப்பாட்டுக் கமிட்டி திறமைமிக்க டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் தலைமையில் அமைக்கப்பட்டதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். – இந்தியாவின் வல்லமையுடையது அல்லது அரசுரிமை, பிரதேச ஒற்றுமை என்பனவற்றில் திடமான நம்பிக்கையுடன் பரிந்து போரிடத்தக்க வீரர்! எந்த அளவு நம்பிக்கைகொண்ட வீரர் என்றால், திருவிதாங்கூர் திவான் என்ற முறையில், திருவாங்கூர் தனி சுதந்திர நாடு ஆகிவிட்டதாகப் பிரகடனம் செய்தவர்! பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக அறிவித்தவர்! இன்று காங்கிரசின் அதிர்ஷ்டம், அவர் கூட்டுச்சேராக் கொள்கையினர்! எனவே, அவரை நீங்கள், கமிட்டித்தலைவர் ஆக்கிக்கொண்டீர்கள்.

இந்தக் கமிட்டி எவ்விதம் பணியாற்றிற்று என்பதை அலசிப் பார்க்கும்படி, இந்த மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டினை எப்படி ஏற்படுத்துவது என்பதற்கான வழி கூறும்படி, இந்தக் கமிட்டி பணிக்கப்பட்டது – பிரிவினைப் பிரசாரத்தை ஒடுக்கிவிடமட்டும் அல்ல. தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தச் சிறந்த வழி என்ன என்பதனைக் கண்டறியும் வேலை அதற்குத் தரப்பட்டது; ஆக்க வேலைக்காக அது தந்த யோசனைகள் யாவை? ஆக்க வேலைக்கான திட்டங்கள் யாவை? தேசிய ஒருமைப்பாடு கமிட்டியுடைய யோசனைகளிலிருந்து பிறந்துள்ள, தடைச்சட்டம் தவிர.

துணைத் தலைவர் அவர்களே! தேசிய ஒருமைப்பாடு கமிட்டி, இந்தியா முழுவதும் உலா வந்தது – எங்கள் மாநிலத்துக்கும் வரவேண்டுமென்ற மரியாதை காட்டிற்று. பல்வேறு அரசியல் கருத்தினர்களைக் கண்டு கருத்தறிந்தது; ஆனால் தி. மு. கழகத்தினரைப் பார்க்க இயலவில்லை. ஏனெனில் அதற்கிடையில், எங்களுக்கு எங்கள் மாநில அரசு, வேலூர் மத்திய சிறையிலே அறைகள் கொடுத்துவிட்டது!

எங்களைச் சந்திக்காததற்கு, கமிட்டி கூறிய காரணம் இதுதான். ஆனால், அப்போது தேசிய ஒருமைப்பாட்டுக் கமிட்டி, எங்கள் நோக்கத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்கொண்டிருந்தால், தொடர்புகொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், எங்கள் அமைப்பு செயலாளர் என். வி. நடராசன் ஜெயிலுக்கு வெளியேதான் இருந்தார்; மனோகரன் எம். பி., வெளியில்தான் இருந்தார்; இராசாராம் எம். பி., வெளியில் இருந்தார்; இவர்களில் யாராவது ஒருவரைக் கண்டிருக்க முடியும்.

டாக்டர் இராமசாமி ஐயர் ஜெயிலுக்கு வந்து எங்களைப் பார்த்திருக்கவேண்டும் என்று நான் கூறமாட்டேன் – மற்றவர்களை ஜெயிலுக்கு அனுப்பி அனுபவம் பெற்றவர் அவர்; ஜெயிலுக்கு அவர் போனதில்லை! – ஆகவே, அவர் நெடுந்தொலைவு கடந்து ஜெயிலுக்கு வந்து எங்களைப் பார்க்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சாமானியர்கள். அப்படிப்பட்ட பெரியவர்களைக்கொண்ட கமிட்டி அத்தகைய தாராளத்தனம் காட்டியிருக்கவேண்டும் என விரும்பவில்லை, ஆனால், வெளியே இருந்த சிலருடன் தொடர்புகொள்ளச் சிரமம் எடுத்துக் கொண்டிருக்கலாம்!

மன்றத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் – ஒரு கணம் எங்கள் கோரிக்கையின் பயங்கரத்தன்மை -அதன் ஆபத்தான விளைவுகள் – ஆகியவைபற்றி மறந்துவிடுங்கள். தயவுசெய்து இதற்குப் பதில் கூறுங்கள். எனக்கு வார்த்தைகள்கூட வேண்டாம் – இலேசான புன்னகை – மகிழ்ச்சியுடன் கண் சிமிட்டல் – நேசப் பான்மையுடன் தலையை அசைத்தல், இவைபோதும் – சாதாரண மரியாதைக்காக, மக்களாட்சி முறையின் நாகரிகத் தன்மைக்காகவாவது எங்கள் கட்சியினருடன், இந்தக் கமிட்டி தொடர்பு கொண்டிருக்க வேண்டாவா!

இல்லை! அவர்கள் அதைச் செய்யவில்லை! ஆனால், அவர்கள் ஒரு அறிக்கை தந்தனர். இந்த மசோதாவின் விளக்கத்திலும் நோக்கத்திலும், தேசிய ஒருமைப்பாட்டுக் கமிட்டியின் யோசனையை முற்றிலும் ஒட்டியே மசோதா வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, மசோதாவின் பிறப்பே, முற்றிலும் மக்களாட்சி முறைக்கு மாறானது. இந்தக் கருத்தை உங்கள் முன் வைக்கவே, உமது பொறுமையைப் பாதிக்கும் தொல்லையைத் தர நேரிட்டது.

நான், மற்றொரு விஷயத்துக்கு வருகிறேன் திராவிடஸ்தான் கோரிக்கை ஆபத்தானது என்கிறார்கள் – தவறாக! ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் பலர். சில மாதங்களுக்கு முன்புகூட, சில வாரங்களுக்கு முன்புவரைகூட, நாங்கள் என்ன கேட்கிறோம் என்பது தங்களுக்குப் புரியவே இல்லை என்று கூறிக்கொண்டு வந்துள்ளனர். அவர்கள் புரிந்துகொள்ளவில்லை! ஆனால், இது ஆபத்துத் தரத்தக்கது என்று மட்டும் புரிந்திருக்கிறது! இது எப்படிப் பகுத்தறிவாகும்? தத்துவ சாஸ்திர அறிவாகும்? அரசியலாகும்? எனக்குப் புரியவில்லை!

இந்த மன்றத்திலேயோ, அந்த மன்றத்திலேயோ – எனக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லை, உள்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார், கட்டுக்கு அடங்காது போனால், குறிப்பிட்ட எல்லையை மீறிப்போனால், பிரிவினை சம்பந்தமான எல்லாப் பிரசாரமும் ஒடுக்கப்படும் என்று. ஒருவரும் அதற்கு விளக்கம் அளிக்கும்படி கேட்கவில்லை – ஏனெனில், சட்டத்தை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, வன்முறைச் செயலில் ஈடுபட்டாலோ, பிரிவினைப் பிரசாரம் தடுக்கப்பட்டுவிடும் என்று எண்ணிக் கொண்டார்கள்.

இது சில மாதங்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் பேசியது. இந்த இடைக் காலத்திலே என்ன நேரிட்டுவிட்டது? நாங்கள் என்ன மண்டை ஓடுகளையும் தலைகளையும் வேட்டையாடிப் பெறுபவர்கள் ஆகிவிட்டோமா? ஏதாவது சட்டத்தை மீறிய நடவடிக்கைகளிலே ஈடுபட்டுவிட்டோமா? இல்லை! மாறாக, சீன ஆக்கிரமிப்பு ஏற்பட்ட உடன் தங்கு தடையற்ற, உள் உணர்ச்சியுடன் கூடிய ஒத்துழைப்பைத் தந்தோம், போர் ஆதரவு முயற்சிக்கு. சட்ட மந்திரி இப்போது இங்கு இல்லாததுபற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்…

ஒரு உறுப்பினர்: அவருடைய துணை மந்திரி இங்கு இருக்கிறார்.

சி. என். ஏ. : ஏனெனில், எங்கள் கட்சியின் தலைவர், அந்த மன்றத்தில் இதே கருத்தைப்பற்றிக் கூறியபோது, சட்ட மந்திரி எழுந்து நின்றார் – புன்னகையுடன் அல்ல – கடுமையான பார்வையுடன் – கரங்களைக் கெம்பீரமாக அசைத்தபடி சொன்னார், அதெல்லாம் இந்திய பாதுகாப்புச் சட்டத்தினால் ஏற்பட்ட நிலைமை! என்று. சட்டமந்திரி என்ற நிலையில், சட்டத்துக்குக் கர்த்தா என்ற முறையில், சட்டத்துக்கு உள்ள வீரியம்பற்றித் தூக்கி பேசும் உரிமை பெற்றவர் அவர்; ஆனால், சட்டத்தின் சக்தியைப் பெரிதாக்கிப் பேசும் ஆர்வத்தில், அவர் தமது மனத்திலிருந்து, சாதாரண மரியாதை காட்டும் உணர்ச்சியைத் துரத்தி அடித்துவிட்டார்!

தி. மு. கழகத்துக்கு, சட்ட மந்திரி, நல்வார்த்தை கூறிச் சிபாரிசு செய்யவேண்டும் என்று நான் விரும்பவில்லை. மக்களுடைய நல்லாதரவு நிரம்ப நாங்கள் பெற்றிருக்கிறோம், சட்ட மந்திரியின் நல்லுணர்வு சிபார்சு ஒன்றும் அதனை மேலும் வலுவுள்ளதாக்கிவிட முடியாது!

மற்றும் ஒன்று கூறுகிறேன். சட்டத்தின் சக்தியை உயர்த்திக் காட்டவேண்டும் என்ற ஆர்வத்தில், அவர் மற்றோரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டார். இன்று காணப்படும் ஒருமித்த நோக்கம், தேசிய ஆர்வம் எல்லாம், இந்திய முதல் அமைச்சருடைய திறமையாலும், அவர் கொண்டுள்ள மேலான எண்ணங்களாலும், ஏற்பட்டவை. சட்டங்களைவிட வலிவுமிக்கது, அது. சட்டங்கள், தடுக்க, திருத்த, உள்ளவை. இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே! என்று கூறுகிறது சட்டம்.

கட்சித் தொடர்புகளைக் கடந்து, பல இலட்சக்கணக்கான மக்களின் மனத்தைத் தன் வயப்படுத்தும் முதலமைச்சரின் திறமைக்கு உள்ளதுபோன்ற வலிவு சட்டத்துக்குக் கிடையாது. சட்டத்தின் வலிவை வலியுறுத்திக் காட்டும் ஆர்வத்தில், சட்டமந்திரி, எதற்காகப் பிரதம மந்திரியின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட்டு விட்டார் என்று எனக்குப் புரியவில்லை! இன்று காணப்படும் கூடிப் பணியாற்றும் ஆர்வம் பண்டித ஜவஹர்லால் நேருவின், வசீகரிக்கும் தன்மையாலும், ஜனநாயகப் பண்பாட்டு உணர்ச்சியாலும் விளைந்திருக்கிறது என்பதையாவது அவர் சொல்லியிருக்கலாம்.

மந்திரி சபைக்குள்ளே என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. வெளியார் எவராவது, சட்ட மந்திரியின் உரையைப் படித்தால், என்ன எண்ணம் ஏற்படும்? நாட்டிலே அமைதி இருக்கிறது! எதனால்? இந்திய பாதுகாப்புச் சட்டத்தினால்! இல்லையானால், அனைவரும், தேச விரோதிகளாவர், தேசபக்தி அற்றவர்களாவர், தொல்லை கிளம்பியிருக்கும்! இப்படி எண்ணுவர். அடித்துப் பேச முற்படும்போது, அளவு பொருத்தம் பார்த்துப் பேசும்படி சட்ட மந்திரியை வேண்டிக் கொள்கிறேன்.

அது நிற்க, இந்திய பாதுகாப்புச் சட்டம், ஒரு நாட்டு மக்களுடைய இதயங்களுக்குப் பாதுகாவலனாக இருக்க முடியாது. ஒரு நாட்டு மக்களுக்குச் சிறைக்காவலனாக மட்டுமே இருக்க முடியும் எனவே, போர் ஆதரவு முயற்சிக்கு, தங்கு தடையற்ற உதவி தர தி. மு. க. முன்வந்தது என்றால், நான் அதற்காகச் சர்க்காரிடமிருந்து நன்னடத்தைச் சீட்டுப் பெற எதிர்பார்க்கவில்லை. பதிலுக்கு நல்லெண்ணம் அளிக்கப்பட வேண்டும் என்றுகூட விரும்பவில்லை. ஆனால், எதற்காக இதை எடுத்துக் கூறுகிறேன் என்றால், இதிலிருந்து ஒரு இயற்கையான எண்ணம், தானாக எழுந்துள்ள ஒரு உள் உணர்ச்சி, உங்களுக்குப் புலப்படவில்லையா?

அந்த உணர்ச்சி காலத்தால் இயற்கையாக வளரச்செய்திட வேண்டாமா? இந்த மசோதா, அதற்கான உரமா? இது அந்த உணர்ச்சியை அழிக்கக்கூடியது, எரிச்சலூட்டுவது. ஏன் இந்த உள் உணர்ச்சி, இயற்கையான முழு வளர்ச்சி பெற்று, பூத்திடச் செய்யக்கூடாது? இந்த மசோதாவுக்கு என்ன அவசரம் வந்தது? ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? அதுதான் நான் குறிப்பாகக் கேட்பது. இதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான், போர் ஆதரவு முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளித்ததைக் குறிப்பிட்டேன்.

நான் முன்பு சொன்னபடி, நாங்கள் சாமான்யர்கள், ஆனால், 34 இலட்சம் வாக்காளர்களின் பிரதிநிதிகள்! எந்த 50 இலட்சம் வாக்காளர்கள் எங்கள் இராஜ்யத்தில் காங்கிரசை ஆளும் கட்சி ஆக்கியிருக்கிறார்களோ, அங்கு, ஐம்பது இலட்சத்துக்கும் முப்பது இலட்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறித்து நான் அதிகம் வாதாடத் தேவையில்லை என்று நம்புகிறேன். இந்த மன்றத்தின் முன் உறுதி கூறுகிறேன் – எங்கள் முன்னேற்றத்துக்கு அழிவு தேடாதிருந்தால், சட்டத் துணையுடன் அடக்கி அழிக்கும் முறைகளைக் கொண்டுவராதிருந்தால், நாங்கள்தான் சென்னையில், அடுத்து வரப்போகும் ஆளுங்கட்சி – உறுதி அளிக்கிறேன்.

மத்திய அமைச்சரவையினராம், கனம் சி. சுப்பிரமணியம், தமது கோவைப் பேச்சிலே, அன்பழைப்பை விடுத்திருக்கிறார் – “பிரிவினையை விட்டுவிடுங்கள்; நீங்கள் மந்திரிசபை அமைப்பதை நான் வரவேற்கிறேன்’’ என்று. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்குத்தான், நீங்கள் சாதாரண மரியாதை உணர்ச்சி காட்ட ஜனநாயக நாகரிக உணர்ச்சிகாட்ட மறுத்திருக்கிறீர்கள் – தேசிய ஒருமைப் பாட்டுக் கமிட்டி முன்பு எங்கள் நோக்கத்தை எடுத்துரைக்கும் வாய்ப்பு அளிக்கவுமில்லை, எங்களை உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக்கிக் கொள்ளவுமில்லை.

கம்யூனிஸ்டு கட்சித் தலைவர், என் மதிப்புமிக்க நண்பர், புபேஷ் குப்தா ஒரு யோசனை கூறினார் – அவர்களை (தி. மு. க. வை) எதிர்த்துப் பிரசாரம் செய்ய ஏன், எல்லா ஜனநாயக சக்திகளும், தேசிய சக்திகளும் ஒன்றுபடக்கூடாது என்று கேட்டார். நான் அதை வரவேற்கிறேன். மக்கள் என் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா, உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதைக் கண்டறிய விரும்புகிறேன். ஏன் அப்படிப்பட்ட தீரமிக்க போட்டியிலிருந்து ஓடிவிடுகிறீர்கள்? புபேஷ் குப்தாவை, இதையும் கவனிக்கும்படி கேட்டுக் கொள்வேன், எங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்கு முன்பு, எங்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்த முயற்சி எடுத்துக்கொள்வது நல்ல அரசியல் முறை அல்லவா?

புபேஷ் குப்தா: அதுதான் நான் சொன்னது. நான் முயல்கிறேன்.

சி. என். ஏ. : புபேஷ் குப்தாவுக்கு என் நன்றி ஆனால், எங்கள் மனத்தை மாற்ற அவர் மேற்கொண்டுள்ள முறை பலனளிக்கவில்லையோ, அல்லது அவர் விரும்புகிற அளவு, அது செய்யப்படவில்லையோ, என்னவோ தெரியவில்லை – பலன் காணோம். ஆனால், இந்த மன்றத்தைக் கேட்டுக்கொள்வேன் – எல்லாக் கட்சி உறுப்பினர்களையும் கொண்ட கலந்தாலோசிக்கும் கமிட்டி அமைத்து எம்முடன் விவாதிக்கவேண்டும் என்று சர்க்காருக்கு யோசனை கூறுங்கள். தவறு எம்மிடம் என்றால் திருத்துங்கள். உங்களிடம் தக்க காரணம் காட்ட இருந்தால் எங்கள் மனத்தை மாற்றுங்கள். அதை விட்டுவிட்டு, எங்களை வற்புறுத்துகிறீர்கள்!

சட்ட விற்பன்னர்கள் நிரம்பியுள்ள இந்த மன்றத்தில் நான் விளக்கத் தேவையில்லை, சட்டத்தைக்கொண்டு வற்புறுத்துவது, கடை கெட்ட வாதிடும் முறையாகும்! பொதுமக்களின் கருத்து எனும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன என்றால், அதிலே ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்பலமாக சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால் கருத்துப்போர் நடத்துவதிலிருந்து நழுவி விடுகிறீர்கள் என்றுதான் பொருள்படும்.

திருச்செங்கோடு இடைத்தேர்தல் காலம் வரையில், எங்கள் இராஜ்ய காங்கிரசார், வெளியிட்டுக் கொண்டிருந்த கருத்து என்ன? அவர்கள் சொன்னார்கள் – இந்த மன்றத்தில்கூட அது திரும்பவும் கூறப்பட்டது – என் நண்பர் புபேஷ் குப்தா சொன்னார் – நான் தன்னந்தனியன், ஒரே ஒருவன் என்றார்! பசி நிறைந்த பார்வை, எனக்கு என்றார்! என் பசி போக்கும் உணவு அளிக்கவில்லை, இவர்கள்!! நான் தனியன் என்று அவர் சொன்னார். மற்றொரு உறுப்பினர், எங்களுக்கு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவைகளில் பிடிப்பு இல்லை என்று பேசினார். அந்த உடன் பிறப்பாளர் இராஜ்யங்களில் உள்ளவர்களின் மனத்தை மாற்றிவிட்டதாகவோ, மகிழ்ச்சி தரத்தக்க அளவுள்ள ஆதரவைப் பெற்றுவிட்டதாகவோ, நான் எப்போதும் பாத்யதை கொண்டாடியது இல்லை.

நான் குறிப்பிடுவது, நான் இந்த விஷயத்தைக் குறிப்பிடும்போது, அந்த மொழிவாரி இராஜ்யங்களிலும், அதே உணர்ச்சி ஏற்படும் என்பதுதான். நான் என்ன எண்ணுகிறேனோ அதனை அப்படியே, வால்டேரில், ஹைதராபாத்தில், மைசூரில் அல்லது திருவனந்தபுரத்தில் எண்ணுகிறார்கள் என்று நான் உரிமை கொண்டாடியதில்லை. நான் இந்த இடங்களுக்கெல்லாம் செல்லவுமில்லை. ஹைதராபாத்தில் நான் ஒரு கூட்டத்திலும் பேசியதுமில்லை. பேச, மைசூருக்கு நான் சென்றதில்லை. அங்கெல்லாம் என்னைப் போக ஏன் அனுமதிக்கக்கூடாது – என்னோடு நீங்களும் ஏன் வரக்கூடாது.

நான், போட்டிப் பந்தய உணர்ச்சியுடன் ஒரு யோசனைகூடக் கூறுகிறேன். எல்லாக் கட்சியினரும்கொண்ட, கலந்தாலோசிக்கும் கமிட்டி அமைப்போம் – எல்லோருமாக நாடு சுற்றி வருவோம் – நாட்டுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிவோமாக! மனம் மாறும்படி செய்யுங்கள். பிறகு, நான் கேட்பது, நினைத்துக்கூடப் பார்க்கத் தகாதது என்று சொல்லுங்கள். ஆனால், இந்த மசோதாவைக் கொண்டுவராதீர்கள் – கொண்டுவந்து வைத்துக்கொண்டு, இந்த மசோதாபற்றி என்ன செய்யப்போகிறாய் என்று கேட்காதீர்கள். என் நண்பர் புபேஷ் குப்தா சொன்னார், நாங்கள் தலைமறைவாகி விடுவோம் என்று. நாங்கள் எப்போதும், வெளியில் உலவுபவர்கள்! தலைமறைவாகிவிட உபதேசம் இல்லை. ஆனால், மனம் வெதும்பிய அதிருப்தி மறைவிடம் செல்லும்.

புபேஷ் குப்தா : அதுதான் நான் சொன்னது.

சி. என். ஏ. : மனம் வெதும்பிய அதிருப்தி நிலை, மறைவிடம் செல்லும்; அதனை எந்தச் சட்ட முயற்சியும் ஒன்றும் செய்துவிட முடியாது. பல இலட்சக்கணக்கான மக்களின் மனத்திலே கிடக்கும் அதிருப்தியைத் தாக்கி ஒழிக்கும் முறையை, அரசியல் தத்துவ முறை இன்னும் கண்டுபிடித்ததில்லை. எனவே, இந்தச் சட்ட முயற்சியினால், உண்மையான, மனம் வெதும்பும், அதிருப்தியை நீங்கள் மறைவிடத்துக்குத் துரத்துகிறீர்கள்.

நான் குறிப்பிட விரும்பும் மற்றோர் விஷயம் இருக்கிறது. எங்கள் கோரிக்கை, வல்லமையுடைமைக்கு, அரசுரிமைக்கு ஆபத்து விளைவிக்கிறது என்று எதனால் கருதுகிறீர்கள்? எப்படி? இதற்குப் பதில் அளிக்குமுன்பு அரசுரிமை என்றால் என்ன என்பதுபற்றி நாம் தெளிவுகொள்ளவேண்டும். அரசுரிமை என்று கூறுகிறோமே, என்ன எண்ணிக்கொண்டு அதுபோலக் கூறுகிறோம்? அரசியல் சட்டத்தின் பாயிரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, அரசியல் அரசுரிமை மக்களிடம் இருக்கிறது என்று. சட்டபடி உள்ள வல்லமையுடைமை அல்லது அரசுரிமை கூட்டாட்சியின் மத்திய அமைப்பிலும், கூட்டாட்சியில் அமையும் இராஜ்ய அரசு அமைப்பிலும், பிரித்துத் தரப்பட்டிருக்கிறது.

ஏன், எங்கள் திட்டத்தை, அரசுரிமைபெற்ற இராஜ்ய அமைப்புகள், மேலும் பலன் தரத்தக்க அரசுரிமை பெறுவதற்கான முயற்சி என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது! அந்த முறையிலே கருதினால் என்ன! திராவிடஸ்தான் கேட்ட உடனே அரசுரிமையின் வேர் வெட்டப்படுகிறது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? அரசுரிமை முழுவதும் ஒரு குறிப்பிட்ட அமைப்பிலே மட்டும் இல்லையே. கூட்டாட்சி முறையல்லவா கொண்டிருக்கிறோம். பல அரசியல் தத்துவவாதிகள் சுட்டிக் காட்டியுள்ளபடி, இந்தியா மிகப்பெரிய அளவுள்ளது; சொல்லப் போனால், அதனை ஒரு துணைக்கண்டம் என்றே வர்ணித்திருக்கிறார்கள். பல்வேறு விதமான மனப்பான்மைகள், பல்வேறான பாரம்பரிய உணர்ச்சிகள் – வரலாறு வெவ்வேறு வகையினதாக- இருப்பதனால்தான் இங்கு இருப்புக்கூடுபோன்ற ஓரரசு முறை இருக்க முடியாது என்பதால், அரசியல் சட்ட திட்டம் வகுத்தவர்கள் ஓரரசு முறை அமைக்காமல், கூட்டாட்சி முறை அமைத்தனர்.

எனக்குள்ள குறை என்னவென்றால் – அதற்கு ஆதரவாக, பிரஜா சோஷலிஸ்டு உறுப்பினர் குருபாத சுவாமியும் மற்றவர்களும் கூறியுள்ளனர் – இந்தப் பதின்மூன்று ஆண்டுகளாகக் கூட்டாட்சி முறையை நடத்திவந்த விதம், இராஜ்யங்களின் மனம் முறியும்படியாக அமைந்துவிட்டது என்பதாக அவர்கள் உணருகிறார்கள் – அவர்கள் என் பக்கம் துணை நிற்காமல் இருக்கலாம் – வேக வேகமாக இராஜ்யங்கள் மானியம்பெறுகிற மன்றங்களாக ஆகிக்கொண்டு வருகின்றன என்று உணருகிறார்கள். தாம், பின்னணிக்குத் தள்ளப்பட்டுப் போனதாக அவர்களுக்கு ஒரு உணர்வு இருக்கிறது; எனவே, அதிகாரம் அதிகம் பெறவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக எழுகிறது. இத்துடன், பிரதேச வளர்ச்சியிலே வேற்றுமையும் இணைகிறது; மொழிப் பிரச்சினைபற்றிய சிக்கலும் சேருகிறது; அந்நிலையில், என்போன்றவர்களுக்கு, ஏமாற்றம் ஏற்படுவதும், பிரிவினைபற்றி எண்ணுவதும், இயற்கைக்கு மாறானதென்று கருதுகிறீர்களா? எங்களைச் சந்திக்க, பாதி வழி வாருங்கள், வந்து சொல்லுங்கள்,

இதுவரையில்தான் செல்லலாம், இதற்குமேல் போகக்கூடாது என்று கூறுங்கள். ஆனால், பாதி வழி வந்து எம்மிடம் அதுபோலக் கூறும்போது, எங்களால் அல்ல, இராஜ்யங்களுக்குக் குந்தகம் விளையும்படியான முறையில், அரசியல் சட்டதிட்டத்தை நடத்திச்சென்றதால் உண்டாகி விட்டிருக்கிற, சிக்கல்களுக்குத் தகுந்த சமாதானம் சொல்ல வேண்டும். நிலக்கரிச் சுரங்க சம்பந்தமாக, மேற்குவங்காள சர்க்காரும் மத்திய சர்க்காரும், சுப்ரீம் கோர்ட்டுக்குப் போக வேண்டி ஏற்படவில்லையா?

சட்ட மந்திரி, மேற்கு வங்காளத்திலிருந்து வந்திருக்கிறார். வங்காளிகள் முழுத் திருப்தி அடைந்துள்ளனரா? அவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்ற முறையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். என் நண்பர் புபேஷ் குப்தா, கம்யூனிஸ்டு கொள்கையினராக இல்லாதிருந்திருப்பின், மேற்கு வங்க உரிமைக்காக வாதாடுவதில் முதல்வராக இருந்திருப்பார். வங்காளிகளிடம் உள்ள தேசிய உணர்ச்சிக்கு நான் தலை வணங்குகிறேன்.

புபேஷ் குப்தா: இங்கு நான் உரிமைக்காகப் போராடினேன். டாக்டர் பி. சி. ராய் அவர்கள் அதை அறிந்திருக்கிறார்.

சி. என். ஏ. : ஆனால், போரிலே தோல்வி ஏற்பட்டுவிட்டது. வருந்துகிறேன். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இராஜ்யங்கள் மேலும்மேலும் மனம் உடைந்த நிலைக்குச் செல்கின்றன; அரசியல் சட்டதிட்டத்தைத் திரும்ப ஆராய வேண்டும், அரசியல் சட்டதிட்டம்பற்றிய புதிய மதிப்பீடு பெறவேண்டும் என்று மத்திய சர்க்கார் நினைக்கவேண்டும் என்ற கோரிக்கையை (இராஜ்யங்கள்) வலியுறுத்துகின்றன. இதிலே, என் கருத்துக்கு நினைத்தபொழுது மந்திரிசபையிலிருந்து வெளியேறவும், மீண்டும் நுழையவும் சக்திபெற்ற ஒரு பிரமுகரின் ஆதரவு இருக்கிறது – பொருளாதார – பாதுகாப்புத்துறை இணைப்பு மந்திரி, கனம் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரைக் குறிப்பிடுகிறேன்.

மறைந்த பெரியவர், பெரோஸ்காந்தியின் பெயரால் புதுடில்லியில் அமைந்துள்ள ஒரு மன்றத்தில், 1962, செப்டம்பர் 8-ல் பேசும்போது, அவர், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் சட்டதிட்டத்தைப்பற்றிப் பரிசீலனை நடத்த வேண்டும் என்ற விதியைப் புகுத்தத் தவறிவிட்டது குறித்துப் பேசினார் – அரசியல் சட்டதிட்டம் தீட்டியவர்களில் ஒருவர் என்ற முறையில். அதுமட்டுமல்ல, இதற்காகப் பொதுமக்களின் கருத்துத் திரண்டெழவேண்டும் என்றும் குறிப்பிட்டார். பொது மக்களின் கருத்துகளைப் பாதுகாப்பவர்களில் ஒருவன் என்று என்னைக் கருதி என்னோடு வாருங்கள், இராஜ்யங்களின் மனப் பான்மை என்ன என்பதைக் கண்டறியலாம்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினருக்கும், தொல்லையை வருவிக்க நான் விரும்பவில்லை, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சொல்லுகிறேன், சென்னையில் ஆளுங்கட்சியில் உள்ளவர்களிலே பலர், இந்தியா ஒன்று, பிரிக்கப்பட முடியாதது என்று ஆணையிட்டுச் சொல்லக்கூடும். இந்தியாவின் அரசுரிமைமீதும் பிரதேச ஒற்றுமையின்மீதும் ஆணையிடக்கூடும். ஆனால், அவர்களின் ஏற்பாடுகளில் ஒன்று உதாசீனப்படுத்தப்பட்டால், அவர்கள் குறிப்பிடும் திட்டங்களிலே ஏதாவதொன்று எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால் அவர்களுக்குத் தேவையான தொகை அவர்களுக்கென ஒதுக்கப்படவில்லை என்றால், அப்போதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றிய நினைவு பெறுகிறார்கள்! இதனால்தான் அண்ணாதுரை பிரிவினை கேட்கிறான் – என்கிறார்கள்.

சேலத்துக்கு எஃகு ஆலை இல்லை என்று மறுத்துவிடுங்கள்; அங்கு நான் கிளம்புகிறேன்! தூத்துக்குடி அபிவிருத்தி கிடையாது என்று மறுத்துப்பாருங்கள்; தி. மு. க. அங்கு தோன்றுகிறது! எனவே, கூட்டாட்சி முறையை ஓரரசு முறையாக்கும் முயற்சிக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பின் ஈட்டிமுனை, தி. மு. க. என்று கொள்ளவேண்டும். பாராளுமன்றத்தின் பெரியவர்கள் நீங்கள்! ஏன் இந்தப் பிரச்சினையைக் காட்டுக்கு அழைத்துச் செல்கிறீர்கள்? அரசியல் அரங்கிலே மேலான இடத்துக்கு, பிரச்சினையை உயர்த்துங்கள்; கூட்டாட்சியை உண்மையான கூட்டாட்சி ஆக்குங்கள்.

சில உறுப்பினர்கள் திரும்பி என்னைக் கேட்பார்கள், ஆனால், நீ, பிரிவினைபற்றி அல்லவா பேசிவருகிறாய் என்று நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது அது என்றார் புபேஷ் குப்தா. மற்றவர்கள் அறிந்திராவிட்டாலுங்கூட சோவியத் அரசியல் சட்டதிட்டம் புபேஷ் குப்தாவுக்குத் தெரிந்திருக்கவேண்டும். பிரிந்துபோகும் உரிமையை அது அளிக்கிறது; ஆனால், அதனால் அரசுரிமைக்கு ஆபத்து வந்துவிட்டது என்று குய்யோ முறையோ என்று கூச்சலிட்டுக்கொண்டில்லை. புபேஷ் குப்தா, சோவியத் யூனியனிலிருந்து கெட்டவைகளைத்தான் கொள்கிறார் போலும், நல்லவைகள் அல்ல. பிரிவினை கேட்டதுமே அரசுரிமைக்கு ஆபத்து வரும் என்பது இல்லை என்று அவருக்கு நான் கூற விரும்புகிறேன்.

அது மட்டும் அல்ல. எங்கள் பிரிவினைப் பிரசாரம், அரசுரிமைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று வைத்துக் கொண்டே பார்த்தால், சர்க்காரை நடத்திச் செல்லும் ஒரு ஜனநாயகக் கட்சி என்ன செய்ய முயலவேண்டும்? அது மக்களிடம் சென்றிருக்கவேண்டாமா? அரசுரிமை மக்களிடம் இருக்கிறது என்று கூறவில்லையா? மக்கள்தான் அரசியல் சட்ட திட்டத்தை ஏற்படுத்தினார்கள். அரசியல் உரிமைகளின் பிறப்பிட மான, மக்களிடம்தான், நீங்கள் சென்று முறையிடவேண்டும். நான் நம்பிக்கையுடன் மக்களை அணுகிச் செல்கிறேன். பொது மக்களுக்கு விஷய விளக்கம் அளித்து என்னை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் திறமை, ஆற்றல் எமக்கு உண்டு என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவர்களின் சர்க்காருக்குக் கூறக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் உரிமையை ஏன் விட்டுக்கொடுத்து விடுகிறீர்கள்? ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலும், பொதுத்தொண்டாற்றும் பொறுப்புமிக்கவர் என்று முறையிலும், நீங்கள் சர்க்காருக்கு “எங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையிலே, குறுக்கே நிற்கவேண்டாம். அண்ணாதுரை பிரிவினைக்கான பிரசாரம் நடத்துகிறான் என்றால், அதன் ஆபத்தான தன்மையை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறோம். நாங்கள் மக்களைச் சந்தித்து, அந்தப் பிரசாரத்தின் விஷம் நிறைந்த தன்மையை, மக்கள் உணரும்படி செய்வோம்” என்று யோசனை கூறவேண்டும். ஜனநாயகவாதி என்ற முறையில் சாமான்யர்களுக்கு ஓரளவு மதிப்பளிக்கவேண்டும் என்று இந்த மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிடமுடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்பப் படித்தவனாக இல்லாதிருக்கலாம் – சிறப்பாகச் சட்ட அறிவு பெறாதவனாக இருக்கலாம் – ஆனால், வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான், வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது என்ற வித்தியாசம் கண்டறிய அவனுக்குத் தெரியும். நீங்கள் இந்த மசோதாவைக் கொண்டுவருகிறீர்கள் என்றால், நாட்டு மக்கள் அவ்வளவு பேர்களுடைய பொது அறிவுத் திறனிலும் நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள் என்று ஆகும்! பிரச்சினையை ஏன் பொதுமக்களுக்கு விட்டுவிடக்கூடாது? நானும் விரல்விட்டு எண்ணக்கூடிய என் கட்சியினர் சிலரும் சேர்ந்துகொண்டு பொதுமக்களை ஏய்த்துவிட முடியும், தவறான வழியில் அழைத்துச் செல்ல முடியும் என்று கருதாதீர்கள். சட்ட மந்திரி, மற்றோர் மன்றத்தில், பள்ளிச் சிறார்களை மட்டும் மகிழ வைக்கும் ஒரு காரணம் காட்டினார்….

கனம். ராமி ரெட்டி: தவறான முறை செல்லும் தத்துவ வாதம்.

சி. என். ஏ. : என்னுடையதா?

கனம். ராமி ரெட்டி: உம்முடைய தத்துவ வாதம் தவறான வழி அழைத்துச் செல்லக் கூடியது…

கனம். அக்பர் அலிகான்: இந்தியாவின் வரலாற்றில் வகுப்புவாத உணர்ச்சிகள் எந்த முறையிலே வேலை செய்தன, வகுப்புவாத உணர்ச்சியாலும் வகுப்புவாதத்தின் பேரால் வெளியிடப்பட்ட முறையீடுகளாலும் மக்கள் எப்படி வசப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப் பட்டார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும் என்று நான் அண்ணாதுரையைக் கேட்டுக்கொள்கிறேன்.

கனம். சந்தோஷ்குமார் பாசு: இந்த விஷயத்தை நேர்த்தியான முறையிலே எடுத்துப் பேசிக்கொண்டு வருகிற அண்ணாதுரையை நான் மற்றும் ஓர் கேள்வி கேட்க விரும்புகிறேன். மத்திய சர்க்காருக்கு அளவு கடந்த அதிகாரம் இருக்கிறது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற கூச்சல் கிளம்பிய பிறகுதான், பாகிஸ்தானுக்கான கூச்சல் கிளப்பப்பட்டது என்பது உண்மையல்லவா?

(மீதி நாளை வரும்)

பிரிவினை தடைச்சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் அண்ணாவின் முழக்கம் – 2

Leave A Reply