பிரிவினை தடைச்சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் அண்ணாவின் முழக்கம் – 2

Share
(1962 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து 32 லட்சம் வாக்குகளையும், 50 சட்டமன்ற உறுப்பினர்களையும், 7 மக்களவை உறுப்பினர்களையும் திமுக பெற்றது. இது மத்திய அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சீனாவுடன் யுத்தத்தை காரணம் காட்டி பிரிவினைத் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா மீது, 25-1-63இல் இராச்சிய சபையில் விவாதம் நடைபெற்றபோது, அதன் அவசியமற்ற தன்மையை விளக்கி அண்ணா ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இங்குத் தரப்படுகிறது. தமிழாக்கம் அண்ணா என்பது குறிப்பிடத் தக்கது. தனது பெயரை சி.என்.ஏ. என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா. இது அவருடைய உரையின் இறுதிப்பகுதி… முதல் பகுதி லிங்க் தரப்பட்டிருக்கிறது..)

சி. என். ஏ. : துணைத்தலைவர் அவர்களே! நான் சொல்ல வேண்டியவைகளை விளக்கியான பிறகு, தாங்கள் அருள் கூர்ந்து, எனக்கு மேலும் பேசச் சிறிது நேரம் தந்தால் இதற்கு பதில் அளிக்க முயல்கிறேன்.
துணைத்தலைவர்: இன்னும் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
சி. என். ஏ. : அரசுரிமை மக்களிடம் இருக்கிற வரையில், எந்தப் பிரச்சினைக்கும் தீர்ப்பளிக்கவேண்டிய தகுதிமிக்க அதிகாரம் படைத்தவர்கள் மக்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தபடி, கூட்டாட்சி அமைப்பு முறை ஒரு குறிப்பிட்ட அளவு கெடுக்கப்பட்டுப் போயிருக்கிற காரணத்தினால், ஓரரசு முறைக்குச் சென்றுகொண்டிருப்பதனால், பிரிவினைக்கான கோரிக்கையை, மற்ற இராஜ்ஜியங்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியுடன் சேர்த்துப் பார்த்துக் கவனிக்கவேண்டும் என்று கூறுகிறேன்.

எங்கள் பிரசாரம் ஆபத்தானது என்று வைத்துக் கொண்டு பார்ப்பதானாலும்கூட, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எங்களை எதிர்ப்பிரசாரத்தால் சமாளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிக்கொண்டிருந்தேன். அவர்கள் இந்தத் தமது உரிமை விட்டுக்கொடுப்பதாக இருந்தாலும், இந்த உரிமையையும் சர்க்காருக்கு, நிர்வாகத் துறையினருக்கு விட்டுவிடுவதாக இருந்தாலும், எங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்து சமாளிக்க, அடிப்படை உரிமைகளைக் குறைக்கவேண்டியது அவசியந்தானா என்பதுபற்றி யோசித்துப் பார்க்கும்படி, இந்த மன்றத்து உறுப்பினர்களை வேண்டிக் கேட்டுக்கொள்வேன். இந்த மன்றம் அதுபற்றி யோசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அடிப்படை உரிமைகள் கட்டுக்கடங்கக் கூடாதவை அல்ல என்பதை நான் தெரிந்திருக்கிறேன், நன்றாக அறிந்திருக்கிறேன் – கட்டு திட்டங்கள் உள்ளன…..

கனம். அக்பல் அலிகான்: மிக உண்மை.

சி. என். ஏ. : பார்லிமெண்டுக்கு, அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்த எல்லாவித அதிகாரமும் உண்டு. இவை எளிதாக உணர்ந்து கொள்ளத்தக்க விஷயங்கள். இவைகளைப் புரிந்துகொள்ள அதிகச் சிரமப்படவேண்டியதில்லை. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்தவை கட்டுதிட்டங்கள் அல்ல, உரிமைகள்தாம் என்பதைப் புரிந்துகொள்ளச் சிறிதளவு சிரமம் எடுத்துக் கொள்ளவேண்டும்! ஆகவேதான், நமது அரசியல் சட்டதிட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள், உரிமைகளுக்கு விதிக்கப்படும் கட்டுதிட்டங்கள், தக்க காரணங்களுக்காக இருக்கவேண்டும் என்று.

இந்தக் கட்டுதிட்டத்துக்குத் தக்க காரணம் இல்லை என்பது என் பணிவான முறையீடாகும் – தக்க காரணம் இல்லை என்றால், முதலாவதாக, நீங்கள் பிரச்சினையை அலசிப் பார்க்கவில்லை, இரண்டாவதாக, எங்களைப் புரிந்துகொள்ள முயலவில்லை, மூன்றாவதாக நீங்கள் எமக்கு மாற்றுத் திட்டங்களைத் தரவில்லை, நாலாவதாக மக்களை நீங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகக் கொள்ளவில்லை! சட்டத்துறை முறைப்படி இல்லாதிருக்கக் கூடும், ஆனால், அரசியல்துறை முறைப்படி, நீங்கள் புகுத்தும் கட்டுத்திட்டத்துக்குப் போதுமான காரணம் இல்லை.

அடிப்படை உரிமைகளைப்பற்றிப் பேசும்போது, சட்ட மந்திரி அந்த மன்றத்தில் வேடிக்கையான ஒரு வாதம் செய்தார் என்பதுபற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அடிப்படை உரிமைகளை முழுவதும் அப்படியே பயன்படுத்துவதாக இருந்தால், அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தியே சிலர், சீனர்களையே வரவேற்றிருப்பார்கள் என்று கூறினார். ஆளுங்கட்சியினர், குறிப்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளக்கூடிய சில உணர்ச்சிகளையும் அவர் சேர்த்துக்கொண்டு பேசினார். நான் அதுபற்றிக் கவலைகொள்ளத் தேவை இல்லை. ஆனால், சட்ட மந்திரியாகட்டும், வேறெந்த மந்திரிதானாகட்டும், பொருள்களை அறிந்து தீர்ப்பளிக்கும் திறமை பொதுமக்களுக்கு உண்டு என்பதை ஏன் குறைத்து மதிப்பிடவேண்டும்? – இதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேடைமீதேறி எவராவது, “நாங்கள் சீனர்களை வரவேற்கிறோம்” என்று பேசினால், மக்கள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்? இல்லை! நமது மக்கள், அரசியல் சட்டதிட்டத்தின் பகுதிகளும் விதிகளும் கற்றறியாது இருக்கலாம். ஆனால், நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளும் திறம் இருக்கிறது. அதனால்தான், விடுதலைப் போராட்டத்துக்கான அழைப்பு வந்ததும், வலிவுமிக்க ஏகாதிபத்தியம் புகுத்திய அடிமைத்தனம் அவ்வளவு இருந்தபோதிலும், மக்கள் முன்னணியில் வந்து நிற்கத் தயாராக இருந்தனர்! பொது மக்களிடம் உள்ள நம்பிக்கையைக் குறைத்துக்கொள்ளாதீர்கள்.

அடிப்படை உரிமைகளைப் பொறுத்தவரையில், அந்த மன்றத்தில், சட்ட மந்திரி பேசியது, உண்மைக்கு வெகுதூரம் அப்பாற்பட்டது மட்டுமல்ல, ஆழ்ந்த யோசனை கொண்டதுமல்ல. ஆனால், நான் சொல்லிக்கொண்டு வந்ததுபோல, கட்டு திட்டங்களைப் புகுத்தலாம். பார்லிமெண்டுக்கு, கட்டுத்திட்டம் புகுத்தும் அதிகாரம் இருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுதிட்டங்கள் எல்லாம், கட்டுதிட்டங்கள் போட்டே ஆகவேண்டும் என்று வலியுறுத்திக் காட்டத்தக்க அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்தே போடப்படவேண்டும்.

மோதிலால் நேரு கமிட்டியில் என்று நினைக்கிறேன், 1928இல் பண்டித ஜவஹர்லால் நேரு சொன்னார், மிகத் தெளிவாக; நாம் நமது அடிப்படை உரிமைகளைப் பெறவேண்டும் என்பது மட்டுமல்ல, அந்த அடிப்படை உரிமைகளை எந்த நிலைமை காரண மாகவும் நீக்கிவிடமாட்டோம் என்று நமது மக்களுக்கு உறுதி அளிக்கவேண்டும் என்று கூறினார். என் வார்த்தைகளை நன்கு கவனியுங்கள், துணைத்தலைவர் அவர்களே! தங்கள் மூலமாக, மன்றத்து உறுப்பினர்களையும் இந்த வார்த்தைகளை நன்கு கவனித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன் – எந்த நிலைமை காரணமாகவும்! அதற்குப் பிறகு நாம் வலிவற்றவர்கள் ஆகி விட்டிருக்கக்கூடும், அதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்தக் கட்டுதிட்டம் விதிக்கவேண்டிய அளவுக்கு ஏதேனும் அசாதாரண நிலைமையாவது எழும்பி இருக்கிறதா? இல்லை.

இப்போது தி. மு. க. சட்ட எல்லைகளை மீறாமல் இருந்திருக்கலாம், ஆனால், விஷமம் செய்யும் தன்மை, ஆபத்து விளைவிக்கும் தன்மை இருக்கிறது, அந்தத் தன்மையை இரும்புக் கரம்கொண்டு ஒழித்துக் கட்டியாகவேண்டும் என்று வாதங்கள் எடுத்துக் கூறப்பட்டன. இந்தத் தன்மை என்ற வார்த்தைபற்றிச் சட்ட விற்பன்னர்கள் தரும் இடம் என்ன, கொள்ளும் பொருள் என்ன என்பதுபற்றி எல்லாம் பேச எனக்கு நேரம் இல்லை என்று கருதுகிறேன்.

ஆனால், இதனைக் கூறுவேன் – மிகச்சிறந்த சட்ட விற்பன்னர்களில் ஒருவர், ஜஸ்டிஸ் பதஞ்சலி சாஸ்திரி, கூறியிருக்கிறார்: சில விஷக் கிளைகள் தழைத்து வளரக்கூட விட்டு வைக்கலாம், அவைகளை எடுத்துப்போடும் முயற்சியில் தருவையே வெட்டி வீழ்த்தி, உயிர்புச் சக்தியையே நாசமாக்குவதைவிட! – என்று அடிப்படை உரிமைகள்பற்றியும், அதற்குப் போடப்படும் கட்டுதிட்டம்பற்றியும் எடுத்துக் கூறப்பட்ட நீதிமானின் கருத்துகளிலே அது ஒன்றாகும்.

அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் பலப்பல இருக்கின்றன. நாம் அவைகளுக்குக் கட்டுப் பட வேண்டியதில்லை, ஆனால் ஜனநாயக நாடுகளில், கருத்து முற்போக்கு, தாராளத் தன்மை எவ்விதம் உள்ளது என்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு காலத்தில், நியூயார்க்கில் என்று கருதுகிறேன், ஆசிரியர்களாக விரும்புபவர்கள், அரசியல் சட்டதிட்டத்துக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் “பக்தி விசுவாசம்” காட்டும் ஆணை எடுத்துக் கொண்டாக வேண்டும் என்று ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டபோது, நியூயார்க் கவர்னர் அத்தகைய முறையில் அடிப்படை உரிமையைக் கட்டுப்படுத்திக் குறைப்பது தேவையற்றது என்று கூறி, சட்டத்தைத் தடுத்துவிட்டார்.

ஆசிரியர் கடமை, பாடம் போதிப்பது, அவருடைய நம்பிக்கைகளை, உணர்ச்சிகளை எடுத்துக்காட்டுவது அல்ல என்று அவர் வாதிட்டார். மற்ற ஜனநாயக நாடுகளிலே, வளர்க்கப்பட்டுள்ள, முற்போக்கான தாரளத் தன்மையுள்ள பாரம்பரியத்தைப் பின்பற்றவேண்டும், அதற்கு ஏற்பவாவது நமது சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

அதற்குப் பதிலாக, “எங்களுக்கு அழித்துவிடும் வலிவு இருக்கிறது, எந்த எதிர்க்கட்சியையும் அழிக்கும் வலிவு! இன்று, தி. மு. க.; நாளைக்கு கம்யூனிஸ்டு கட்சி; மறுநாள் ஜனசங்கம் – என்று கூறுவதானால், நான் கூறுகிறேன், உங்களிடம் அதிகாரம் இருக்கிறது, செய்து கொள்ளுங்கள்! ஆனால், சட்டத்தின்மூலம் அடக்குமுறை நடத்தி, வலிவும் ஆதிக்கமும் தேடிக்கொண்ட எந்த சர்க்காரும் எங்குச் சென்றன, விளைவு என்ன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான் கவனப்படுத்தத் தேவையில்லை. இன்றுகூடப் பார்த்தோம், மன்றத்தின் இந்தப் பகுதியிலே, புபேஷ் குப்தா, தி. மு. கழகத்தை மட்டுமல்ல, ஜனசங்கத்தையும் எதிர்த்துச் சமாளிக்கவேண்டும், அது வகுப்புவாத அமைப்பு என்று அவர் கருதுவதால், – என்றார். பிரஜா சோஷலிஸ்டுகள், தி. மு. கழகத்தைவிட அதிக ஆபத்தானது கம்யூனிஸ்டு கட்சி என்று கூறினர். எனவே, நாம் வசதியாகக் கிடைத்துவிடுகிறோம் – எதிர்க்கட்சிகளாக உள்ள நாம் –
கனம். யாஜி: இந்தியாவில் பிரிவினை வேண்டும் என்று வாதிடுகிற எந்தக் கட்சிக்கும் பொருந்தக்கூடியது அது – அது கம்யூனிஸ்டு கட்சியாக இருந்தாலும் சரி, தி. மு. கழகமானாலும் சரி.
புபேஷ் குப்தா: அவர்தான், திரு. யாஜி! துணைத்தலைவர் அவர்களே நாம் எல்லோரும் சேர்ந்து யாரையாவது எதிர்த்துச் சமாளிக்க வேண்டும் என்றால், அது திரு. யாஜியைத்தான்.
கனம். எ. கே. சென் (சட்ட மந்திரி): துணைத்தலைவர் அவர்களே! நான் இந்த அமைதி இந்திய பாதுகாப்புச் சட்டவிதிகளால் ஏற்பட்டது என்று சொன்னதாகச் சொல்லப்பட்டது, நான் அப்படிச் சொல்லவில்லை. ஓரளவுக்கு, அப்படி, என்று தான் சொன்னேன். தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்காகத்தான், அந்த விதிகள் ஏற்பட்டுள்ளன. நான் தி. மு. கழகத்துக்காக என்றோ மற்ற யாருக்காகவேனும் என்றோ சொல்லவில்லை. ஓரளவுக்கு, இந்தியப் பாதுகாப்புச் சட்டம் இந்த அமைதிக்குக் காரணம் என்று சொன்னேன் இதில் என்ன தவறு?
சி. என். ஏ. : நான் எதைக் குறை கூறினேன் என்றால், அவ்விதமான கருத்துரை, பரிவு காட்டும் உணர்ச்சியல்ல என்பதுபற்றித்தான் நான் குறை கூறினேன்.
எ. கே. சென்: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விரும்புபவர்கள் இருக்கிறார்கள்; தவறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள்; நாம் அதனைக் காணாமல் கண்களை மூடிக் கொள்ள முடியுமா? ஆனால், கனம் உறுப்பினர் அதனைத் தமது தலைக்குப் பொருந்தும் குல்லாய் என்று கொள்ளத் தேவையில்லை. நான் அவரையோ, அவருடைய கட்சியையோ குறிப்பிட வில்லை.
துணைத்தலைவர்: அண்ணாதுரை! நீங்கள் மேலாகப் பேசுங்கள். இப்போது விளக்கம் ஏற்பட்டுவிட்டது என்று நம்புகிறேன்.
சி. என். ஏ. : ஆளுங்கட்சி பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் போக்கிலே சுவை கொள்ளும்படி செய்துவிட்டால், இன்று அது தி. மு. கழகத்தைக் குறியாகக்கொண்டிருக்கலாம், ஆனால், நாளை மற்றக் கட்சிகளின்மீதும் குறி பார்க்கப்படும் என்பதை மறுக்க உத்தரவாதம் என்ன இருக்கிறது? அதற்காக ஆளுங்கட்சி வாதாடத் தேவையில்லை; நாமே அதற்கான விதமாக வாதாடிக் கொள்கிறோம்; கம்யூனிஸ்டுகளை ஒடுக்கவேண்டுமென பிரஜா சோஷலிஸ்டு வாதாடுகிறது, ஜனசங்கத்தை ஒடுக்கவேண்டுமென கம்யூனிஸ்டு கட்சி வாதிடுகிறது! இது அதிகப்பட அதிகப்பட ஆளுங்கட்சிக்குக் கொண்டாட்டந்தான்;

எனவே, மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன் – அடிப்படை உரிமைகளைக் குறைக்கும் பிரச்சினை என்ற முறையில் இதனைக் கவனித்துப் பார்க்கவேண்டும். ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எங்கள் பிரசாரத்தைத் திடமாக எதிர்த்துப் பிரசாரம் செய்யத் தங்களால் முடியும் என்பதையாவது எடுத்துச்சொல்லட்டும். எங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்து சமாளிக்க முன்வரட்டும், எங்களுக்கு மன மாற்றம் ஏற்படுத்த முயற்சி எடுத்துக்கொள்ள முன்வரட்டும் – அந்தக் காரணத்துக்காக, இந்த மசோதாவை, முழுவதும் அவர்கள் எதிர்க்கவேண்டும். ஏனெனில், என் இந்த மசோதாவை ஒத்துக்கொள்வதாக, மற்றோர் நண்பர் குருபாதசாமி இதன் மொத்த நோக்கத்தை ஒத்துக்கொள்வதாகச் சொன்னார்…

புபேஷ் குப்தா: மொத்தமான அரசியல் நோக்கம்…

சி. என். ஏ. : அதன் பொருள் என்னவென்றால், இவர்கள் உரிமைக்குப் போடப்படும் கட்டுதிட்டங்களின் விளைவுகள்பற்றி உணருகிறார்கள் என்பதுதான். எனவே இப்படிப்பட்ட சட்டத்தின் விளைவுகள்பற்றி – அது எந்தக் கட்சியின்மீது ஏவப்படுகிறதோ அதுபற்றி அல்ல – கருதிப்பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன்.

தங்களிடத்திலேயும் மக்களிடத்திலேயும், ஆளுங்கட்சியினருக்கு நம்பிக்கை இருக்குமானால், ஜனநாயக சமூகத்தில், எண்ணவும், எடுத்துரைக்கவும் இருக்கும் உரிமை குறைக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது.

“மிக முக்கியமான விஷயங்களில், உண்மையைக் கண்டறிவதும், அதனை எடுத்துரைப்பதும், சமூகத்துக்கும் சர்க்காருக்கும் உள்ள மிக முக்கியமான நோக்கமாகும். தங்கு தடையற்ற விதமாக விவாதித்துப் பேசும் முறை மூலமாகவே, இது சாத்தியமாகும். பாகியாட் கூறுகிறபடி, ஏதாவதொரு பக்கத்தில் வன்முறை துணையாக்கப் படுகிறதோ அப்போது, அது உண்மையின் பக்கம் துணை நிற்கிறதா, பொய்யின் பக்கம் துணை நிற்கிறதா என்பது அறுதியிட்டுக் கூற முடியாதது ஆகிவிடுகிறது. கருத்துப் போரில், உண்மை இயற்கையாகப் பெறவேண்டிய சாதகங்களை எல்லாம் இழந்துவிடுகிறது.’’

வன்முறை மூலம் அமைதியை ஏற்படுத்தாதீர்கள், இதய மொழி பேசி நட்புறவு எழச் செய்யுங்கள் என்று சர்க்காரைக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, அடிப்படை உரிமைகளின் சார்பில் நிற்கும்படி ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன் – பொதுமக்களுக்குக் கருத்து விளக்கம் அளிக்க உங்களுக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள் – கருத்து வேற்றுமைகளை எடுத்துரைக்கும் உரிமை, எண்ணும் உரிமை இல்லாது செய்திடச் சட்டத்தின் துணையைத் தேடுவதற்குப் பதிலாக!

கடைசியாக, எனக்குத் தவறான வழியில் செல்லும் தத்துவ சாஸ்திர முறை இருப்பதாக, ராமி ரெட்டி அவர்கள் சொன்னார்களே…..

ராமி ரெட்டி: தவறான வழிக்கு அழைத்துச் செல்லும் வாதமுறை.

சி. என். ஏ. : எந்த உறுப்பினரும், தவறான வழி அழைத்துச் செல்வதற்கு இணங்கிவிடக்கூடாது! யாரையும் தவறான வழியில் அழைத்துச் செல்லும் திறமை எனக்கு இல்லை. ஒருவேளை, என்னுடைய தத்துவ சாஸ்திர முறையே தவறானது என்று சொல்லுகிறாரோ என்று நினைத்தேன் – ஏனெனில், அந்த முறை அப்பழுக்கற்றதாக, எனக்கு இருக்கவேண்டும் என்பதிலே நான் மெத்தக் கவலை கொள்பவன். நான் மற்றவர்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்பவன் என்று கூறப்பட்ட புகாருக்கு, நான் சொல்ல விரும்புவது, மக்களைத் தவறான வழியில் இழுத்துச் செல்லும் வலிவுமிக்கவன் அல்ல நான்!

சாரோகி: துணைத்தலைவர் அவர்களே! கனம் அங்கத்தினர், அவருடைய இராஜ்ய மக்களைத் தவறான வழியில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது.

ஒருவர்: மக்களைத் தவறான வழியில் கொண்டுசெல்வீர்கள் – என்பதுதான், உள்ள பயம்.

அக்பர் அலிகான்: வகுப்புவாத காரணங்கள் பற்றி…..
துணைத்தலைவர்: சரி, அண்ணாதுரை, தயவுசெய்து பேச்சை முடித்து விடுங்கள். நீங்கள் இராஜ்ய மக்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்வதாகவும், அதற்காகத்தான் இந்தச் சட்டம் தேவைப்படுகிறது என்றும் சொன்னார்.

சாரோகி: மக்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டுவிடுகிறீர்கள், அவர்கள் அதற்கேற்ப ஆடுகிறார்கள். அதற்காகத்தான் இந்த மசோதா சட்டமாக்கப்படுகிறது.

துணைத்தலைவர்: அவர்களும் ஆடிவிட நேரிடுமோ என்று அவர்கள் அஞ்சு கிறார்கள்.

சி. என். ஏ. : துணைத்தலைவர் அவர்களே! இந்த அறிவிப்பு, சென்னை காங்கிரசாருக்கு உள்ள திறமையை, ஆற்றலைக் குறைத்து மதிப்பிடுவதாகிறது.

சந்தோஷ்குமார் பாசு: என் நண்பர் சொன்னார், வன்முறை வலிவை உபயோகிக்காதீர்கள் என்றார். இந்தச் சட்டம், வன்முறை வலிவைப் புகுத்தும், உங்கள் கொள்கையைத் திணிக்காதபடி செய்ய. ஆனால், தி. மு. க. வன்முறை வலிவை அறவே நீக்கிவிட்டதா? அல்லது அந்தப் போக்கினருடன் தொடர்பற்று இருக்கிறதா? நீங்கள் எப்போதும், வன்முறை வலிவை நீக்கியிருந்திருக் கிறீர்களா?

சி. என். ஏ. : நிச்சயமாக! பலமுறை நாங்கள் அறிவித்திருக்கிறோம், நாங்கள் சட்டதிட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ளும் கட்சியினர் என்று.

பாசு: இரயில்வே ஸ்டேஷன்களையும் – பெயர்ப்பலகைகளையும் கொளுத்தியிருந்தாலும்கூட….

சி. என். ஏ. : ஸ்டேஷன்களை அல்ல, அரசியல் சட்டத்தை! என் மதிப்புமிக்க நண்பர், திராவிடர் கழக நடவடிக்கைகளை, திராவிட முன்னேற்றக் கழக நடவடிக்கைகள் என்று தப்பாகக் கருதிக் கொள்கிறார். தொல்லை இதுதான். மன்றத்துக்கு இதனை நான் கூறுகிறேன், இந்த மசோதாவினால், நீங்கள், தி. மு. கழகத்தைத் தேர்தலில் ஈடுபட ஒட்டாமல் தடுத்துவிடலாம். ஆனால், திராவிடர் கழகம் தேர்தலுக்கு நிற்கும் கட்சி அல்ல; ஆகவே, இந்தச் சட்டம் அவர்களைப் பாதிக்கப்போவதில்லை.

பாசு: எங்களுக்குள்ள கவலை, தி. க. வா, தி. மு. கா. வா என்பதல்ல. சட்டம் பற்றித்தான் நாங்கள் கருதுகிறோம் – அது எல்லோருக்கும் பிரயோகிக்கப்படக் கூடியது.

வாஜ்பாய்: ஆனால், தி. க. காங்கிரசுக்குக் கூட்டாளி என்று நம்புகிறேன்.

சி. என். ஏ. : அதுபற்றி யோசிக்கவேண்டியது, காங்கிரஸ் கட்சி. என் குறிப்பு இதுதான், துணைத்தலைவர் அவர்களே! ஆளுங்கட்சி உறுப்பினர்களை வேண்டுகிறேன், சர்க்காருக்குச் சொல்லுங்கள், இந்த மசோதா தேவையற்றது, ஜனநாயகத்துக்கு விரோதமானது, அடிப்படை உரிமையை வெட்டி வீழ்த்துவது என்பதை, – நான் அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமை பற்றிச் சொல்லவில்லை – காங்கிரசாருக்கு உள்ள அடிப்படை உரிமை பற்றிச் சொல்லுகிறேன்.

இந்தப் பிரச்சினையிலே அவர்கள் பங்குபெற்றவராக இல்லை. அவர்களை விலகி நிற்கும்படி சொல்லப்பட்டுவிடுகிறது. இந்த மசோதா சொல்லுகிறது, “அண்ணாதுரையை எதிர்த்துச் சமாளித்தாக வேண்டும்; நீங்கள் அதிலே தோற்றுப் போய்விட்டீர்கள். எனவே, நான் வருகிறேன் – வரவிடுங்கள்!’’ என்று சொல்லுகிறது!

நான் மெத்த மதிப்பு வைத்திருக்கிறேன் சென்னைக் காங்கிரசாரிடம். ஆனால் இது சென்னைக் காங்கிரசாரின் திறமையிலும் ஆற்றலிலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றுவது போன்ற மசோதா. நான் மதிக்கிறேன். நீங்கள் அவர்களுடைய முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் அதுதான் தொல்லை. எதிர்த்துப் பிரசாரம் செய்து சமாளிக்கும் திறமை அவர்களுக்கு இல்லை என்று நீங்கள் நினைப்பதாகத் தெரிகிறது. வருந்தத்தக்க நிலைமை இதுதான்.

ஆகவேதான் ஆளுங்கட்சி உறுப்பினர்களை வேண்டுகிறேன், சர்க்காருக்குச் சொல்லுங்கள், “நாங்கள் இருக்கிறோம், வீரமிக்க திடகாத்திரர்கள்! பிளவுப் போக்குகளை எதிர்த்துப் போராட! அண்ணாதுரையைக் கவனித்துக் கொள்கிறோம். எங்களை விடுங்கள்! அவன் நோஞ்சான்! ஒரு பார்வை போதும், அழுத்தமான ஒரு வார்த்தை போதும், அந்தப் பயலை பொசுக்கித்தள்ள” – என்று சொல்லுங்கள். உங்கள் கட்சிக்கும், உங்கள் சர்க்காருக்கும் இதுபோலச் சொல்லி, இந்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லை யென்றால், இது சட்டப் புத்தகத்தில் ஏறிவிட்டால், இப்போது மட்டுமல்ல, என்றைக்கும் கருதுவர், இந்தியாவிலே ஒரு நிலைமை ஏற்பட்டது, அப்போது ஒரு சிறு கட்சியினரைச் சமாளிக்க – அல்லது, என் நண்பர் புபேஷ் குப்தாவின் வார்த்தைகளைப் பயன்படுத்துவதானால், ஒரு தன்னந்தனி ஆளைச் சமாளிக்க – இந்திய அரசியல் சட்டத்துக்கே ஒரு திருத்தம் கொண்டு வரவேண்டி நேரிட்டது என்பர்.

புபேஷ் குப்தா: இல்லை, இல்லை, நான் அதைச் சொல்லவில்லை.

அக்பர் அலிகான்: அண்ணாதுரைக்கு நான் உறுதியாகச் சொல்வேன் – ஒரு தனி ஆளுக்காகவோ, ஒரு தனிக் கட்சிக்காகவோ, இது கொண்டு வரப்படுவதல்ல. பிரிவினைத் தன்மைகள் எங்கு இருந்தாலும், பஞ்சாபில், சென்னையில், நாட்டிலே வேறு எந்தப் பகுதியில் இருந்தாலும் அதனை எதிர்த்துத்தான் இந்த மசோதா – அதுவும் கடந்த 30 ஆண்டுகளாக உள்ள வகுப்புவாதத் தன்மைகள், வகுப்புவாத உணர்ச்சிகள் இவைகளையும் கவனத்தில் வைத்துச் செய்யப்படுவது.

புபேஷ் குப்தா: துணைத் தலைவர் அவர்களே! நான் அவரை, தனி ஆள், ஒண்டி ஆள் என்று சொல்லவில்லை.

சி. என். ஏ. : நான் அவருடைய சொற்களை நன்றியுடன் பெற்றுக் கொண்டேன், கண்டித்து அல்ல. கனம் அக்பர் அலிகான் சொன்னதுபற்றிக் கூறுகிறேன் – அவர் தமது வாதத்தைக் கூறும் போது அவருக்கு இருந்த தயக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது – நான் இதைச் சொல்வேன், இந்த மசோதா தி. மு. க. மீது மட்டுமல்ல, மற்றும் சிலர்மீதும் குறி பார்த்துத்தான் வருகிறது. நான் எந்தக் கட்சியில் இருக்கிறேனோ, அது சம்பந்தப்பட்ட மட்டில் நான் கருத்துச் செலுத்துகிறேன். வேறு பிரதிநிதிகள் இருந்தால், அவர்களும் இதுபோலப் பேசியிருப்பார்கள். ஆனால், சுயநலத்துக்காக இத்தகைய இலட்சியத்தை மூழ்கடித்துக் கொண்டவர்கள் இருப்பார்களானால், அவர்கள் பற்றி நான் கருதத் தேவையில்லை.

தி. மு. கழகத்தின் நோக்கத்தை எடுத்துக் காட்டுவதுதான் என் நோக்கம். வேறு பலர்மீதும் குறி பார்க்கக்கூடும். ஆனால், நாளிதழ்கள், கிழமை இதழ்களை நீங்கள் பார்ப்பீர்களானால், அரசியல் மேடைப் பேச்சுகளைக் கேட்கச் சென்றால், அவர்கள் “கேடு கெட்ட தி. மு. க.’’ பற்றித்தான் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆகவே, தி. மு. கழகத்தைச் சுட்டிக்காட்டுவதனால், கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சிலவற்றுக்கு நான் பதிலளித்தேன்.

கடைசியாக, மசோதாவைக் கொண்டுவந்தவரை ஜனநாயகத்தின் பேரால், அரசியல் நாகரிக உணர்ச்சியின் பேரால் கேட்டுக்கொள்கிறேன், தீமையை விலக்கிக் கொள்ளும் திறமை மக்களுக்கு உண்டு என்பதிலே தளராத நம்பிக்கைகொண்டு, இந்த மசோதாவை விட்டுவிடுங்கள். அதற்கு இசைவு தர, இயலவில்லையானால், நெருக்கடி நேரத்தை எண்ணி, இதை ஒத்திப்போடவாவது செய்யும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறேன் – ஏனெனில், கருத்து வேற்றுமைகளுள்ள பிரச்சினைகளைப் பின்னணியில் வைத்திருக்க வேண்டும். அவைபற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பது கூடாது. இந்த மசோதா கொண்டுவருபவர், இந்த வேண்டுகோளையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், துணைத்தலைவர் அவர்களே! ஆளுங்கட்சியுடைய, முறைகள், நடவடிக்கை, மசோதா, இவற்றுக்கு என் கண்டன எதிர்ப்பைப் பதிவு செய்திட அனுமதி கொடுங்கள்.

அண்ணன்,

3-2-1963

பிரிவினை தடைச்சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் அண்ணாவின் முழக்கம் – 1

Leave A Reply