தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகளின் தேசிய இனம் எது? – C.N.Annadurai

Share

எவனோ மொழி விஷயமாக நாலு புத்தகம் படித்தவனை, எல்லா விஷயங்களையும்பற்றி எல்லா ஏடுகளையும் படித்தறிந்து அவைகளை உலகுக்குக் கூறியாகவேண்டுமே என்று துடியாய்த் துடித்துக்கிடக்கும் நான், எப்படி என்னைவிட மேலானவன் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறுவரேல், அவர்கட்குக் கூறுவேன், தம்பி! ஆறடி உயரமுள்ள நோயாளியானாலும் மருத்துவனை நாடும்போது, குறைந்தது ஆறேகால் அடி உயரமாவது இருக்கவேண்டும் என்று தேடமாட்டான் – நாலரை அடி உயரமாக மருத்துவர் இருப்பினும் கவலைப்படமாட்டான். அதுபோலாகிலும் மொழிப்புலமை பெற்றோரின் முடிவுகளை ஏற்கட்டுமே; சின்ன மனிதர்கள் சொல்லும் பெரிய விஷயங்கள் என்ற பெயரிட்டாகிலும்.

நாலு மொழிகளும், முற்றிலும் வேறு வேறு அல்ல; மூலம் ஒன்றேதான் என்பதை விளக்குவது எளிது.

இதோ அந்த விளக்கம்:

தமிழ்               தெலுங்கு         கன்னடம்        மலையாளம்

தாய்                    தல்லி                தாய்                    தள்ளே
தகப்பன்             தன்றி                தந்தை               அச்சன்
அண்ணன்         அன்ன              அண்ண             சேட்டான்
தம்பி                   தம்புடு               தம்ம                  அனுசன்
கணவன்            மொகுடு          கெண்ட            பர்த்தா
மகன்                   குமாரடு            மகனு             ஆண்குட்டி
பாட்டன்              தாத                  தாத                   மூப்பன்
உடல்                  ஒள்ளு              மய்யி               தேகம்
மனைவி            பெண்ட்லாழு எண்டத்தி      பாரியா
மகள்                    குமாரத்தி        மகளு               பெண்குட்டி
அக்காள்             அக்க                  அக்க                   சேட்டச்சி
மாமன்               மாம                   மாவ                   அம்மாவன்
மருமகன்         அல்லுடு           அளிய                மருமான்
பாட்டி                 அவ்வ                தாத்தி                முத்தி
எது                       எதி                     எது                        எது
அது                     அதி                    அது                       அது
இது                     இதி                    இது                        இது
இங்கே               இக்கட              இல்லி                 இவடே
அங்கே              அக்கட               அல்லி                அவடே
எங்கே               எக்கட               எல்லி                  எவடே
இப்போது        இப்புடு               ஈவாக               இப்போள்
அப்போது       அப்புடு               ஆவாக             அப்போள்
எப்போது          எப்புடு              ஏவாக                எப்போள்
சிறிய                சின்ன                சிக்க                   சிறிய
பெரிய               பெத்த               தொட்ட               வலிய
நெருப்பு             நிப்பு                 பெங்கி                    தீ
மழை               வான                 மளெ                    மழ
கொடு                ஈய்                  கொடு                  கொடு
இரவு                ராத்தி               ராத்திரி                ராத்திரி
பகல்                 பகலு                  அகலு               பகல்
யார்                  எவுரு                யாரு                   யாரானு
ஊர்                   ஊரு                    ஊரு                    ஊரி
ஊருக்கு          ஊரிக்கி              ஊரிகே                ஊரிலே
சோறு              அன்ன               ஊண்ட                ஊணு
சேலை            சீரா                      சேலை               முண்டு
நீர்                   நீள்ளு                  நிறு                          வெள்ளம்
கண்ணு         கன்னு                கண்ணு                கண்ணு
மூக்கு             முக்கு                 மூங்கி                  மூக்கு
காது                 செவ்வு                 கிரி                    செவி
வாய்              நோரு                 பாயி                        வாயி
தலை             தல                      தலெ                      தலை
வா                   ரா                        பா                            வரி
பசு                 ஆவு                    அசுவு                      பசு
எருது            எத்து                எத்து                           காள
சொல்லு      செப்பு                 ஹேளு                  பர

இனி, நான்கு மக்களும் தனித்தனி மொழிக்காரர்கள் – மூலம் மூலமாகக்கூட ஒட்டு இல்லை, உறவு இல்லை என்றே வைத்துக்கொள்வோம் – வாதத்துக்காக; இதைக்கொண்டே இவர்கள் வெவ்வேறு தேசிய இனம் ஆகிவிடுகிறார்களா?

“ஒரு தேசிய இனம் என்பதற்கு மொழி ஒற்றுமையைக் காட்டிலும், கலாசார ஒற்றுமை, வாழ்க்கை ஒற்றுமை ஆகியவை அதிக அவசியம்.’’ இனிப் பெரியார் அவர்கள், “தமிழ்நாடு போதும், திராவிட நாடு வெங்காய நாடு’ என்று பேசி வருவதை, தாம் கொள்கை மாறுவதற்கு ஆதாரமாக்கிக் காட்டுவது வேண்டுமானால் ஒட்டும் உறவும் இருக்கிறது என்பதற்கு, சான்று ஆகலாமேயொழிய, வாதத்துக்கு வலிவு ஊட்டாது. ஏனெனில் தமிழ்நாடு பிரிவினை கேட்பது, திராவிட நாடு இலட்சியம் கொண்டிருப்பதற்குக் கேடாகும்படி செய்துவிடமாட்டேன் என்றும் பெரியார் பேசியிருக்கிறார். இலட்சியம், திட்டம் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூடச் சொல்லியிருக்கிறார்.

“திராவிட நாடு திராவிடருக்கே என்பதுதான் நம் இறுதி இலட்சியம். ஆனால் அதுவரையில் பொறுத்திராதபடி அவசரமாகத் தனித் தமிழ்நாட்டை டில்லி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்பதுதான் நம் திட்டம். இலட்சியத்துக்கும் திட்டத்துக்கும் வேற்றுமை உண்டு. பார்க்கர் பவுண்டன் பேனா வாங்குவது ஒரு எழுத்தாளனின் இலட்சியமாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அதுவரையில் மூர்மார்க்கெட்டில் விற்கப்படும் ஒரு ரூபாய்ப் பேனாவை வாங்கி எழுதிக் கொண்டிருப்பதுதானே விவேகம்?’’

என்று கேட்கிறார், நியாயம்! ஆனால் நம்மிலிருந்து விலகியவர்கள், இலட்சியமே மாற்றிக்கொண்டார்கள்; திட்டத்தை இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்; பொருள் வேறுபாடு உணராமலோ அல்லது மற்றவர்கள் கவனிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் கொண்டோ.

Leave A Reply