அண்ணா எனும் பேரசான்! – விஜய ராகவன்

Share
என் அப்பா, தாத்தா தலைமுயினருக்கு அண்ணாவை ஏன் அவ்வளவு பிடித்திருக்கிறது? இவர் அப்படி என்ன செய்திருக்கிறார் என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்தது…
அண்ணா குறித்தும் ,நீதிக்கட்சி தொடர்ந்து திமுக வளர்ந்த ஆரம்ப காலங்களிலிருந்தும் ,தேர்தலில் வென்று முதலமைச்சராக பதவியேற்பது வரையிலும் என்னென்ன பேசியிருக்கிறார் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை அவரைப் படித்துத் தெளிந்து கொண்ட பிறகு அண்ணா ஒரு மாஸ் பிம்பத்தை எனக்குள் ஏற்படுத்தி இருக்கிறார்..
தன்னுடைய பேச்சுகளிலும் எழுத்துக்களிலும் எளிய சொற்களால் பாமரனும் புரிந்து கொள்ளும் படி சமூக எதார்த்தங்களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் குறித்து 1949ல் திராவிட நாடு இதழில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றை அதற்கு ஆதாரமாக இங்கு குறிப்பிடலாம்..
அண்ணாவின் கட்டுரைச் சுருக்கம்..
”கல்விப் பரப்பில் தமிழரின் வாழ்வு தற்குறித்தனம் நிரம்பிய தரிசு நிலம் போல் இருக்கிறது. கல்வி எனும் நீரோடையின் நிலை பற்றியோ, அதனைக் கைப்பற்றியுள்ளவர்கள் குறித்தோ, எப்படி அதை அவர்கள் கைப்பற்றினார்கள் என்பது பற்றியோ தமிழர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
பஞ்சாபிகேச ஐயரின் நிலம், மண்போட்டு பொன் எடுக்கும் இடம் என்று பேசுவது போலவே, சின்னச்சாமி ஐயர் மகன் சீமைக்குச் சென்று படித்துவிட்டு வந்தார், சரசுவதி கடாக்ஷம் அது என்று பேசுவார்கள்.  அவ்வளவுக்கு மேலே சிந்தனை ஏறாது.
”படிப்பெல்லாம் ஐயமார் வீட்டுப் பசங்களுக்குத்தான் தகும். அந்த மூளையே மூளை, தனிரகம், ஜாதி அப்படிப்பட்டது, ஞானம் தானாக உதிக்கிறது. நம்ம பசங்கள் சுத்த மக்கு. மண்டையில் ஏறுவதே கிடையாது. அதனால் தானே அடுத்த தெரு ஐயர், “டே உன் மகன் வாயிலே தர்ப்பையைப் போட்டுக் கொளுத்தினால் கூட படிப்பு வராது” என்று சொல்கிறார். அது கொடுத்துவைத்த அளவுதானே கிடைக்கும். படிப்புகூடத்தான்.”
இவையெல்லாம் நம்மவரிடையே உலவும் சர்வ சாதாரணமான மொழிகள்.\
இவ்விதமான மொழிகளைக் கேட்டு நம் இனச் சிறுவர்களே கூட தங்களுக்குப் படிப்பு வராது என்று எண்ணம் கொண்டு விடுகின்றனர்.
விளையாத கழனி – படிப்பு வராத இனம்! ஏன் விளையவில்லை. நீர்ப்பாசனம் இல்லை. ஏன் நீர்ப் பாசனம் இல்லை? நீரோடை நம்மிடையே இல்லை. அது வேறு நிலத்தானின் ஆதிக்கத்தில் இருக்கிறது. படிப்பு வரவில்லை என்றால் நிலத்தில் நீர்ப்பாய்ச்சல் இல்லை என்று அர்த்தம். ஏன் இதெல்லாம்?
கல்வியின் ஆதிக்கம் வேறு இடத்திலே இருக்கிறது. உண்மைதான், இனி நாம் பேசவேண்டியதில்லை. புள்ளிவிபரங்கள் பேசும்..
கடைசியாக வெளிவந்துள்ள 1943-44 சென்னை மாகாணக் கல்வியதிகாரியின் அறிக்கையின்படி, அந்த ஆண்டில் 7கோடி 23 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்நிலைப் பள்ளிகளுக்கு 3.14 கோடியும், இடைநிலைப் பள்ளிகளுக்கு 17 லட்சமும், உயர்தரப் பள்ளிகளுக்கு 1 கோடியே 26லட்சமும் பகுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர வேறு துறைகளில் சிறப்புக் கல்வி அளிக்கும் பள்ளிக்கூடங்களான, ஆர்ட் ஸ்கூல், மெடிக்கல் ஸ்கூல், டிரெய்னிங் ஸ்கூல், எஞ்சினியரிங் ஸ்கூல் ஆகியவற்றிற்காக 43 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளில் பார்ப்பன மாணவர்கள், பார்ப்பனர் அல்லாத மாணவர்களைக் கணக்கில் எடுத்ததில்,
ஆர்ட்ஸ்கூல் = 71-193
மெடிக்கல் ஸ்கூல் = 211-240
டிரெயினிங் ஸ்கூல் = 1633-5653
பார்வை, செவித்திறன் பள்ளி = 494- 3527
எஞ்சினியரிங் ஸ்கூல் = 162 -76
கமர்சியல் ஸ்கூல் = 3604 -3104
மற்ற பள்ளிகள் = 2205 -1824 என்கிற எண்ணிக்கையில் கல்வி பயில்கிறார்கள்.
இக்கல்வி நிலையங்களை, அந்தந்த துறைகளில் சிறந்துவிளங்கும் கல்லூரிகளில் ஒன்றாகக் கருதிக்கொள்ள வேண்டாம். உதாரணமாக, டிரெய்னிங் ஸ்கூலில் படிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால், எல்,டி பட்டம் பெற பி.ஏ.பட்டதாரியாக இருக்கவேண்டும்.
மேற்குறிப்பிட்ட பார்ப்பன- திராவிட மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்தது 32 விழுக்காடு அதிகம் இருக்கிறார்களா இல்லையா எனக் கணக்கிட்டுப் பார்க்கவும். எஞ்சினியரிங் பள்ளி, கமர்ஷியல் பள்ளிகளின் நிலைமை 50 % மேல் பார்ப்பனப் பிள்ளைகளே அரசு ஒதுக்கும் நிதியில் கல்வி பயில்கிறார்கள்.
100க்கு 97 விழுக்காடு உள்ள இனத்தினரை விட, 3 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள பார்ப்பனர்கள் 50 சதவிகித இடங்களைப் பெற்று வருகிறார்கள். ஆனால், இந்த விகிதாசாரத்தில் திராவிடப் பிள்ளைகள் அதிகமாகவே உள்ள பள்ளிக்கூடமும் ஒன்று உண்டு.
தான் பிறந்த சமூக அடையாளங்களால் சிறிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு, அவர்களை இளம் குற்றவாளிகளாகக் கருதி, அவர்கள் திருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாஸ்டல் அல்லது சர்டிபைட் (சீர்திருத்தப் பள்ளிகள்) பள்ளிக்கூடங்கள் சென்னை மாகாணத்தில் 5 உள்ளன. அங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1838. இந்த இருண்ட பள்ளிக்கூடம் ஒன்றில்தான் திராவிட எண்ணிக்கை பார்ப்பனரல்லாதவரைவிட அதிகம் பயில்கிறார்கள்.
இச்சமூக இழிவு, சமூக அடிப்படைகளிலிருந்து கிளம்புகிறது, அதனால்தான் சமூக அடிப்படையின் மீது கட்டப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளிலும் அது வெளிப்படுகிறது. சமூகத்தில் உழைப்பவன் ஆனால் தாழ்ந்தவன், படிப்பு வராத இனம் குற்றப்பரம்பரை என்ற அடையாளங்கள்.
இதே கதையைத் தான் அரசியலிலும் செய்தார்கள். “காமராஜ் உழைப்பாளி ஆனால் படிப்பு வராத இனம்.” சமூகத்தில் சமன்செய்யப்படாத ஏற்றத்தாழ்வு, சமூகத்தின் சிறு பகுதிகளான அரசியல் துவங்கி அறிவுத்துறை வரை வெளிப்படுகிறது.
சென்னை மாகாணத்தில் மட்டும் மூன்று பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் மொத்தம் 67 கல்லூரிகள் உண்டு. இவற்றிற்கு 1943-44ல் செலவிட்ட தொகை 58 லட்சம். அவ்வளவும் பொது மக்கள் பணம். பொதுமக்கள் என்று கூறும்போது 100க்கு 97 சதம் யார் நிரம்பியிருக்கிறார்கள் என்பதையும் மறக்காமல் நினைவில் கொள்ளவேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்கில் இப் பல்கலைக் கழகங்களில் கல்வி பயில்கிற மாணவர்கள் தொகை பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதவர் என இனவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இண்டர் மீட்டியட் 1வது வகுப்பு = 3199 -3601
இண்டர் மீட்டியட் 2வது வகுப்பு = 2621 -2537
பி.ஏ ஹானர்ஸ் 3வது வகுப்பு = 1789 -1348
பி.ஏ ஹானர்ஸ் 4வது வகுப்பு = 1515 -1268
பி.ஏ ஹானர்ஸ் 5வது வகுப்பு = 241 -117
போஸ்ட் கிராஜுவேட்= 103 – 62
மொத்தம் = 9468 -8928
கல்லூரிகள் என்பவை கல்வித்துறையில் தலைசிறந்த இடமாகும். கல்லூரிகளில் தான் எதையும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு புகட்டப்படுகிறது. பல்கலைகளும், விஞ்ஞானமும், உயர்ந்த நிலையில் தழைக்கும் இடமும் அதுவே. கல்வியின் கரும்பை வளர்க்கும் இடமாகப் பள்ளிக்கூடங்களும், அதன் சாற்றைப் பிழிந்தெடுக்கும் இடங்களாகக் கல்லூரிகளும் இருக்கின்றன.
அதில், ஓர் சிறுபான்மைக் கூட்டம் மாத்திரம் ஆதிக்கம் செலுத்துவதை ஒழித்து அனைவருக்கும் பயன்படும் அறிவின் ஆய்வுக்கூடமாக அதை ஆக்கவேண்டும்.
அதுமட்டுமல்ல, இக்கல்லூரிகளுக்குச் செலவிடப்படும் வரிப்பணம் 58 லட்சத்தில், 56 லட்சம் திராவிடர்களால் செலுத்தப்படும் வரிப்பணம். ஆனால், அதை உண்டு வாழ்வது யாரென்று பார்த்தால், 100க்கு 3 சதம் உள்ள இனம் மீதமுள்ள 97 சதவிகித இனத்தினரைப் பின்னுக்குத்தள்ளி, ஒருவனின் வயலுக்குள் மற்றவன் நுழைந்துவிடாத வண்ணம், இச்சிறுபான்மையினர் மாகாணக் கல்லூரிகளைத் தங்கள் சொந்த வீடுகள் போல ஆட்சி புரிகின்றனர்.
முன்னாளில் அரசர்கள் சதுர்வேதி மங்கலங்களை அவர்களுக்குத் தாபம் செய்தனர். இப்போது அரசியலார் சர்வகலாசாலைகளை அவர்களது உரிமையிடங்களாக முத்திரை பொறித்துவிட்டனர். (நிலங்களை மிராசுகளாகவும், கல்வியை கங்கா புத்திரர்களாகவும், கல்வியின் காரணமாக அரசியல் மேடைகளையும், பத்திரிகைகளையும் ஆக்கிரமித்து, தன் இனத்திற்கு வேண்டிய அதிகார பலம் அடைந்தனர்.)
இதிலும், 100க்கு 16 எனும் விகிதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் கல்வி பயில்வோர் எண்ணிக்கையைக் கணக்கிலெடுத்தால் நெஞ்சு விம்முகிறது. 81 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களில் கல்லூரிகளில் கல்வி கற்பவர்கள் 326 பேர். அவர்களிலும் பி.ஏ வரை செல்பவர்கள் 83பேர். லட்சத்தில் ஒருவர். இன்னும் டெக்னிகல் கல்லூரி, வெட்னரி கல்லூரி ஆகிய இடங்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் எட்டிப்பார்க்கவே இல்லை. (1947 நிலவரப்படி)
இப்புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போதே இங்கு இனவாரியான விகிதாசாரம் சரியாக அமையவில்லை என்பது நன்கு புலப்படும். கல்விக்காக ஒதுக்கப்படும் தொகை ஆறு கோடி, ஏழு கோடி என்று போகிறது.
ஆனால், திராவிட மாணவர்களுக்குக் கல்வி கண்ணுக்கு எட்டாத் தொலைவில் இருக்கிறது. இதை நாம் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. சர்க்காரின் அறிக்கைகள் கூறிவதுதான். கெடுதலைப் பயப்பது என்று தெரிந்தும் அதையே தொடர்ந்து நடத்துவது பெருங்குற்றமாகும்.
கல்வி நீரோடை அனைவருக்கும் பொதுவானது. குளம் வெட்டுபவனுக்கு குளத்து நீரை உபயோகிக்க முடியாதபடி இருப்பதுபோல கல்வியோ குளமோ இருக்கக்கூடாது. பார்ப்பனரில், 100க்கு 53பேர் கல்வியறிவு பெற்றிருக்க திராவிடர் மட்டும் 100க்கு எட்டுபேருக்கும் குறைவாக கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள் என்றால் நீரோடை அங்கு பாயவில்லை என்பது அர்த்தம். நீரைப் பாய்ச்சலில் விட்டு நிலத்தைச் செழிப்பாக இங்கு கல்வியில் இட ஒதுக்கீடு முக்கியமென்றானது.
ஆசிரியர் அரங்கசாமி ஐயர், வக்கீல் வரதாச்சாரி, டாக்டர் ரங்காசாரி, கலெக்டர் கலியான ராமையர், ஆடிட்டர் அனந்தாச்சாரி, தாசில்தார் சுந்தரராஜ அய்யங்கார் என்று உத்தியோக மண்டலங்கள் முழுக்க ஒரு வகுப்பாரின் பாத்தியதையாக இருந்து வருவதும், சகல துறைகளிலும், வாழ்வில் மேன்மையும், பயனும் தரத்தக்க சகல முனைகளிலும் அவ்வகுப்பாரே ஏகபோக செலுத்துவதும் வேறு எவ்வகையில் மாறும்?
இந்த நிலைமையைப் புரிந்துகொள்ளவே தெளிவு தேவைப்பட்டது.
மேல்குலம் ஆளப்பிறந்த குலம், ஆண்டவனாலேயே அவ்விதம் படைக்கப்பட்ட குலம் என்ற மூட நம்பிக்கை முறியவே பலகாலம் தேவைப்பட்டது. இம்முறியடிப்பு வேலைகளுக்காகதான் நாத்தீகர் என்ற நிந்தனையும், மதத் துவேஷி என்ற பழியையும் ஏற்க நேரிட்டது. தயங்கவில்லை. வெற்றி கிட்டாமலுமில்லை.
ஒரு வகுப்பை பிறப்பாலேயே மேலானது, ஆளப் பிறந்தது, முகத்தில் தோன்றியது, என்று எண்ணுவது மடமை, எண்ணச் செய்வது கொடுமை… என்ற உண்மையை மக்கள் உணர்ந்தனர். உணர்ந்தபிறகு கேட்டனர்.
உரிமைக் கனல் உமிழும் கண்களுடன் ஒரு சிறுவகுப்பு நம் உழைப்பின் பெரும்பலனை அனுபவிப்பதா என்று கேள்வி கேட்டனர், முதலில் மிகச் சிலர் கேட்டனர், பிறகு நாட்டின் பெரும்பான்மையினர் கேட்கலாயினர்.
“ரங்காசாரி போல் திறமையான டாக்டர் கிடையாது என்று அல்லாடி ஐயர் சொல்வதை, அரியக்குடி ஐயங்கார், கஸ்தூரி ஐயர் பத்திரிகையில் கட்டுரை எழுத, அதைப் படித்துவிட்டு ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர் பூரித்தார்” என்பது மாதிரியான சேதிகளே இன்று பத்திரிகைகலில் வெளி வந்துகொண்டிருப்பவை.
இதனால், அவர்களே அறிவிஜீவிகள் என்று ஓர் அசையாத எண்ணம் அவர்களுக்கு.
“உன் நாக்கிலே தர்ப்பையைப் போட்டுக் கொளுத்த வேணுமடா, மண்டு! உனக்கேன்டா படிப்பும் பட்டமும், உன் தோப்பன் வேலையை நீயும் செய் அதுதான் முறை” என்று பேசும் ஆசிரியர்கள் ஒருபக்கம்.
”இரண்டெழுத்து படித்தால் ஒரு கடைகன்னிக்குச் சென்று நாலோ எட்டோ சம்பாதிக்கலாம்” என்று ஈனக்குரலில் பேசும் பெற்றோர் மறுபக்கம். இந்தச் சூழ்நிலைகளுக்கு மத்தியில் உழன்றதால் மேலும் ஓர் புதிய உண்மை புலனாயிற்று.
நாட்டிலே நல்ல நிலையும், உத்தியோக மண்டலங்களில் உரிய பங்கும் கிடைக்க வேண்டுமானால், கல்வித்துறையிலே வகுப்பு நீதி கிடைக்கவேண்டும். அந்த அடிப்படை நியாயத்தை வலியுறுத்தி வெற்றி கண்டது ஜஸ்டிஸ் (நீதிக்) கட்சி, அதன் திட்டம் தான் ”கம்யூனல் ஜி.ஓ.”
சமூக நீதிக்காக, வகுப்பு எதேச்சாதிகாரம் ஏற்படாதிருக்க, ஏகபோக மிராசு முறையை ஒழிக்க, சிறுபான்மையோர் ஆதிக்கம் அழிந்துபட, பெரும்பான்மையோர் புதுவாழ்வு பெற ஏற்படுத்தப்பட்ட திட்டமே வகுப்புவாரி பிரதிநிதித்துவம்.
இதன்படி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவதும், உத்தியோடங்களில் இடம் தரப்படுவதும், வகுப்புவாரி முறைப்படி நடைபெற்றது. இதனால், நாட்டில் பார்ப்பனரல்லாதோர் மக்கள் அறிவுக்கண் திறக்கப்பட்டு, உரிமை உணர்ச்சி ஏற்பட்டு, உத்யோக மண்டலத்தில் புக வழி ஏற்பட்டு ஓரளவு முன்னேற்றம் அடைய முடிந்தது.
பி.ஏ என்றும், எம்.ஏ என்றும் மாஜிஸ்ட்ரேட், தாசில்தார், இன்ஸ்பெக்டர், ரிஜிஸ்தார்ம் டாக்டர், எஞ்சினியர், புரபசர், ஆபிசர் என்று பெயர் சொல்லிக் கொள்ளக்கூடிய நிலை ஒரு சிலருக்காவது பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் ஏற்பட்டது. பாலைவனம் ஆக்கப்பட்டிருந்த சமூகம் கல்வியால் சோலைவனமாகும் அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. பெரும்பான்மை வகுப்பிலே உலகம் கண்டு வியக்கத்தக்க மேதைகள் தோன்றினர்.
எந்தத் துறையிலும் வெற்றி கிடைப்பது சந்தர்ப்பம் கிடைக்கப் பெறுவதால்தான். வகுப்பு தாழ்வுற்றுக் கிடந்தோமே அன்றி, அறிவு வளமும், ஆற்றலும் அறவே அற்றுப் போனதல்ல நமக்கு. “சர்வம் பார்ப்பன மயம்ம ஜகத்” என்ற நிலை மாறத் துவங்கியது. ஆனால், சும்மா விடுவார்களா சுகம்கண்டவர்கள். வகுப்புவாரி பிரதிநித்துவம் துவக்கப்பட்ட நாள் முதல் பல வழிகளாலும் போரிட்டபடியே இருந்தனர். இருக்கின்றனர்…”
இப்படி நீள்கிறது அண்ணாவின் கட்டுரை.. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அல்லது இட ஒதுக்கீடு என்பது சலுகையோ, சமரசமோ, விட்டுக்கொடுக்கச் சொல்லும் மடத்தனமோ அல்ல.. அது இம்மண்ணில் பிறந்தவர்க்கான அடிப்படை உரிமை என்பதை அண்ணா தெளிவுகளோடு முன்வைக்கிறார்.
எங்கே நம் கூடப் பழக்கத்தில் இருக்கும் நண்பர்கள், நபர்கள் மனம் புண்படுமோ என்று இந்த உண்மையை நாம் பேசுவதில் தயங்குகிறோம். தயக்கத்தை உடைப்பதென்பது உண்மையைப் பேசுவதற்கு முன் உண்டாகும் மௌனத்தை உடைப்பது. அந்த மௌனத்தின் மீதுத் தீப்பற்றச் செய்தவர் அறிஞர் அண்ணா…

Leave A Reply