அன்பில் மகேஷுக்கு எதிராக அதிகாரிகளின் சதிவலை – ஆதனூர் சோழன்

Share

அமைச்சரான புதிதில் கல்வித்துறையில் நிறைய மாற்றங்களை செய்யும் ஆர்வத்தில் அன்பில் மகேஷ் செயல்பட்டார். ஆனால், அவருடைய ஆர்வம் நீர்த்துப்போகும் வகையில், அதாவது சொந்தமாக எதையும் யோசிக்காத வகையில் முட்டுக்கட்டை போட்டது முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் என்று தொடக்கத்திலேயே பேசிக் கொண்டார்கள்.

கல்வித்துறை அதிகாரிகளின் இந்த கருத்தை முதன்முதலில் வெளியிட்டது உதயமுகம்தான். கல்வித்துறை அதிகாரிகளை அமைச்சர் நேரடியாக கலந்து ஆலோசிக்கக்கூட அவரால் முடியவில்லை என்பதுதான் உண்மை.

கல்வித்துறை இயக்குனர்கள் அமைச்சரைச் சந்தித்து ஆலோசித்த காலம் மலையேறிவிட்டது. இயக்குனர்களின் அதிகாரத்தை குறைத்து, அதிமுக ஆட்சியில் குப்பைகொட்டிய அதே ஆட்களை கமிஷனராக நியமித்து, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சிதறடிக்கும் வகையில் நடவடிக்கைகள் தொடருகின்றன.

ஆசிரியர்களின் குறைகளை கேட்கக்கூட அமைச்சரால் முடியவில்லை. ஏதேனும் ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முயன்றால், முதலமைச்சரிடம் ஒரு யோசனையை வெளியிட்டால், “உதயச்சந்திரனிடம் கேட்டுக்க” என்று முதலமைச்சர் சொல்வதும் “அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்… நீங்க பாட்டுக்கு இருங்க” என்று உதயச்சந்திரன் சொல்வதும் தொடர்ந்தது.

இப்படி இருந்தால், எப்படி புதிய முயற்சிகளை தொடரமுடியும்?  தனது யோசனைகளுக்கு உதயச்சந்திரன் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதால், அன்பில் மகேஷ் தநது யோசனைகளை தெரிவிப்பதை நிறுத்திக் கொண்டார்.

அமைச்சரிடம் அவருடைய யோசனையைக் கேட்டு, சிறப்பாக இருந்தால் நடவடிக்கை எடுக்க ஒப்புதல் கொடுக்க முதலமைச்சரே முன்வராத நிலையில் அவரும் என்ன செய்வார்?

அதன்பிறகுதான் அவருக்கு ஒன்றும் தெரியாது என்ற, செங்கோட்டையனே பரவாயில்லை என்று பேசும் நிலையை அதிகாரிகளும், உதயச்சந்திரனின் ஊதுகுழல் மீடியாக்கள் திட்டமிட்டு உருவாக்கின.

அவரிடம் ஒரு முடிவை அறிவிக்கச் சொல்வதும், பிறகு அதை திரும்பப் பெறுவதும் அடிக்கடி நடைபெறத் தொடங்கியது.

உதயச்சந்திரன் சூப்பர் முதல்வராக செயல்படத் தொடங்கியதும், எல்லாத் துறை அதிகாரிகளும் அவருடைய உத்தரவுக்கு காத்திர்க்க தொடங்கியதும் நிர்வாகம் முடங்கியது. உதயச்சந்திரனுக்கு எதிரான மனநிலையில் உள்ள அதிகாரிகள் அரசுக்கு எதிராக செயல்படத் தொடங்கினார்கள்.

இதையெல்லாம் தொடக்கத்திலிருந்தே உதயமுகம் துணிச்சலாக வெளிப்படுத்தியது. ஆனாலும், உதயச்சந்திரனுக்கு எதிரான செய்திகள் வெளியாகி பரவும்போதெல்லாம், அவருக்கு ஆதரவாகவும், அவருடைய நடவடிக்கைகளை புகழ்ந்து எழுதுவதை அவர் மூலமாக நூலக ஆர்டர்களைப் பெற்ற பத்திரிகைகளும், விளம்பரங்களைப் பெறும் ஊடகங்களும் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.

இப்படித்தான், சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல ஏற்பாடுகளில் உதயச்சந்திரனின் முறைகேடுகள் வெளிப்படத் தொடங்கின. அவரை மாற்ற ஏற்பாடுகள் நடைபெறுவதாக செய்திகள் வரத் தொடங்கின.

நூலக இயக்குனர் ஒருவரே தனியார் நடத்தும் நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் நிலை உருவானது. அதுவும் கல்வியை தனது சாதியினருக்கு வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட, அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்ட டி.வி.எஸ். நிறுவனத்தின் பள்ளி வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பார்க்க முடிந்தது.

அவர் பங்கேற்கிறார் என்றால் அந்த கேடுகெட்ட வரலாற்று புத்தகத்தை நூலகம் வாங்குவது உறுதி என்ற உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்றுதானே அர்த்தம்?

இதனிடையே, பொது நூலகங்களுக்கும், பள்ளி நூலகங்களுக்கும் நூல்கள் வாங்குவதில்கூட மோசடி நடப்பதாக ஒரு பதிப்பகம் நீதிமன்றத்துக்கு போயிருக்கிறது.

கடந்த ஆண்டு பொதுநூலகங்களுக்கு வினியோகிக்கப்பட்ட நூல்களுக்கு உரிய பணம்கூட பதிப்பகங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அதிலும் குளறுபடி ஏற்படுத்தி, பதிப்பகங்களை கடும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளார்கள்.

எல்லாவற்றுக்கும் உதயச்சந்திரனையே பார்க்க வேண்டியிருக்கிறது. அமைச்சரைச் சந்தித்து தங்கள் குறைகளைக் கூறக்கூட முடியாமல் பதிப்பாளர்கள் தவிக்கிறார்கள்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சுற்றி நடக்கும் சதியை தொடக்கத்திலிருந்தே அம்பலப்படுத்திய உதயமுகம் இப்போதும் தனது கவலையை வெளிப்படுத்துகிறது. இனி அமைச்சர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave A Reply