ஆதீனங்களிடம் தோற்றாரா முதல்வர் ஸ்டாலின்? – ஆதனூர் சோழன்

Share

ஆதீனங்களிடம் மண்டியிட்டது திமுக அரசு என்று குதூகலிக்கிறார்கள் சிலர். உண்மையில், ஆதீனங்களை அவர்கள் தங்கள் கைப்பாவைகளாக பயன்படுத்தும் முயற்சியை மழுங்கடித்திருக்கிறது திமுக அரசு என்கிறார்கள் திமுகவினர்.

இந்தக் குளறுபடிகளுக்கு என்ன காரணம்?

அதிகாரிகளா? அரசியல்வாதிகளா? என்று ஆராய்ந்தால், அடிப்படைக் காரணம் அதிகாரிகள்தான். அவர்களை தூண்டியது திராவிடர் கழகம்தான்.

திராவிடர் கழகம் எப்போதுமே, திமுக ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் அதீதமாக உரிமை எடுத்துக்கொண்டு, தங்களுடைய ஆட்சியைப் போலவே செயல்படத் தொடங்கிவிடும்.

சாதாரணமாக கடந்து போயிருக்க வேண்டிய ஒரு நிகழ்வை, அல்லது, ஆதீனத்துடன் தனிப்பட்ட வகையில் தொடர்பு கொண்டு, இத்தனை ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்த பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சியை இப்போது ஏன் தொடர்கிறீர்கள்… இதனால் வீண் சர்ச்சை உருவாகுமே என்று அமைச்சரோ, முதல்வரோ பேசியிருந்தால் நிச்சயம் இந்தச் சிக்கல் நிகழ்ந்திருக்காது.

இதைவைத்து பாஜக சிலநாட்கள் ஆட்டம் போட்டிருக்கவும் செய்யாது. திமுக அரசுக்கு எதிராக எதையெல்லாம் செய்து நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று தினம் ஒரு பொய்யை தூக்கிக் கொண்டு அலைகிறது பாஜக.

குறிப்பாக இந்துமத விரோதி திமுக என்ற தோற்றத்தை உருவாக்க திட்டமிட்டு முயற்சியை தொடர்கிறது பாஜக. இதை கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கும், அதன் அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

தருமபுரம் ஆதீனம் பட்டிணப்பிரவேசம் செய்ய திட்டமிட்டவுடன் திராவிடர் கழகம் கோட்டாட்சியரிடம் புகார் கொடுக்கிறது. இதற்கு தடை விதிக்க சட்டபூர்வமான உரிமை அதிகாரியிடம் இருக்கிறது. ஆனால், இந்த தடையை பிறப்பித்தால் எதிர்வினை எப்படி இருக்கும் என்று அதிகாரி யோசித்திருக்க வேண்டும். ஆதீனத்திடம் பேசினாரா? பேசியிருக்க வேண்டும். அப்படி பேசியிருந்தால் அவர் சொல்லும் பதிலை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் ஆதினத்திடம் பேசியிருக்கலாம். அவரிடம் ஆதீனம் என்ன பதில் சொல்கிறார் என்று பார்த்து முதல்வரிடம் பேசியிருக்கலாம்.

இதெல்லாம் காதும்காதும் வைத்ததுபோல நடந்திருக்கும். இப்போதைய சர்ச்சை உருவாகியிருக்காது. சில நாட்கள் திமுக அரசுக்கு எதிரான இந்துமத விரோதி என்ற பிரச்சாரத்துக்கு இடமிருந்திருக்காது.

கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன. அதைக் கவனிப்பதில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் சமூகவலைத்தளங்களைப் பார்த்து செயல்படும் நிலை இருக்கிறது.

வாக்கரசியலில் திமுக சில சமரசங்களை செய்தே ஆக வேண்டும். அதனால்தான், ஆதீனங்களிடம் போய் வாக்குக் கேட்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆதீனங்கள் சாதிகளின் தலைமைப் பீடமாக செயல்படுகின்றன. சாதிகளின் வாக்குகள் தேர்தல் வெற்றிக்கு அவசியமாகிறது.

சாதிகளின் வாக்குகளை கணக்கிட்டு வேட்பாளர்களை நிறுத்தும் நிலையில் இருக்கிற கட்சி, ஊழல் செய்திருந்தாலும், ஆதாரங்கள் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கத்தை ஏற்படுத்தும் சாதிப்பின்னணி எல்லாவற்றையும் நாம் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

சர்ச்சை உருவானவுடனே, முதல்வர் சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாக பேசியிருந்தால் பாஜகவினரின் பொய்ப் பிரச்சாரத்துக்கும், வெத்து சவடால்களுக்கும் இடமில்லாமல் தவிர்த்திருக்கலாம் என்பதே கட்சிக்காரர்களின் கருத்து.

20 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மனதை படிக்கும் முயற்சியில் அரசு அக்கறை காட்ட வேண்டும். அவர்கள்தான் சாதி மதம் தமிழ்தேசியம் என்ற போலியான மாயத் தோற்றங்களில் எளிதில் மயங்கிக் கிடக்கிறார்கள். வெற்று பொய் செய்திகளை நம்பி ஏமாறுகிறார்கள்.

இனியாவது அதிகாரிகளை மட்டும் நம்பாமல், கட்சிக்காரர்களை நம்பி காரியமாற்றுவாரா முதல்வர் என்று பார்க்கலாம்…

Leave A Reply