அரிய‌வ‌கை ஏழைக‌ள் – Fazil Freeman Ali

Share

ஐந்து நீதிப‌திக‌ள் கொண்ட‌ உச்ச‌நீதிம‌ன்ற‌ அம‌ர்வு வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ தீர்ப்பொன்றை வ‌ழ‌ங்கியிருக்கிற‌து. ஆம், உய‌ர்சாதியிலுள்ள‌ ஏழைக‌ளுக்கு 10% இட ஒதுக்கீடு வ‌ழ‌ங்குவ‌து செல்லும் என்று தீர்ப்ப‌ளித்திருக்கிற‌து நீதிம‌ன்ற‌ம்.

வ‌ர்க்க‌ம்-சாதி ப‌ற்றிய‌ விவாத‌ம் இந்தியாவிற்கு ம‌ட்டுமே உரித்தான‌ ஒன்று. கார‌ண‌ம் Class என்ற‌ வர்க்க பாகுபாடு உல‌க‌ம் முழுக்க‌ உள்ள‌ ஒன்று என்றாலும் அது ஒருபோதும் பிற‌ப்போடு நிர‌ந்த‌ர‌மாக‌ முடிச்சிட‌ப்ப‌டுவ‌தில்லை.

அர‌சிய‌லில் எதிரெதிர் துருவ‌ங்க‌ளில் நிற்கும் அமெரிக்காவிலும் முன்னாள் சோவிய‌த் யூனிய‌னிலும் ஒரு செருப்பு தைப்ப‌வ‌ரின் ம‌க‌ன் க‌ல்வியிலும் ஆற்ற‌லிலும் ப‌டிப்ப‌டியாக‌ உய‌ர்ந்து அந்த‌ நாட்டின் அதிப‌ராக‌ உய‌ர்ந்து அதிகார‌த்தின் உச்ச‌த்தில் அம‌ர‌ முடிந்த‌து. ப‌த‌வியும் பொருதார‌த்திலும் உய‌ர்ந்த‌பின் பிற‌ப்பால் அவ‌ர்க‌ள்மீது ஒட்டியிருந்த‌ ஏழ்மை மாறிய‌தோடு அவ‌ர்க‌ளின் வ‌ர்க்க‌மும் மாறிப்போன‌து.

சாதி விச‌ய‌த்தில் இது சாத்திய‌மா..?

ஏழ்மையில் உழ‌லும் கீழ்சாதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ஒன்றில் பிற‌ந்த‌ ஒரு குழ‌ந்தை ப‌டித்து, உழைத்து ஆசிரிய‌ராக‌வோ, ம‌ருத்துவராக‌வோ, தொழில‌திப‌ராக‌வோ மாறி பொருளாதார‌த்திலும் செல்வாக்கிலும் உய‌ர்ந்து த‌ன் வ‌ர்க்க‌நிலையை மாற்றிய‌மைத்தால் அவ‌ரின் சாதியும் மாறிவிடுமா..?

க‌ல்வியையும் பொருளாதார‌த்தையும் விடுங்க‌ள், அர‌சிய‌லிலும் அதிகார‌த்திலும் உய‌ர்ந்து நாட்டின் அமைச்ச‌ராக‌வோ, ஜ‌னாதிப‌தியாக‌வோ உய‌ர்ந்தாலாவ‌து அவ‌ரின் சாதிய இழிவு அக‌லுமா..?

மாறாது என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் தெரியும். கார‌ண‌ம் பிற‌ப்பிலிருந்து தொட‌ரும் இந்த‌ அவ‌மான‌ அடையாள‌ம் இற‌ப்புவ‌ரை, இல்லையில்லை இற‌ப்பிற்கு பின்னும் தொட‌ரும் ஒன்று, இல்லையா..?

ஆக‌, பொருளாதார‌ உய‌ர்வும் தாழ்வும், அதாவ‌து வ‌ர்க்க‌மாற்ற‌ம் ஒரே த‌லைமுறையில்கூட‌ ந‌ட‌க்க சாத்திய‌மான‌ ஒன்று. ஆனால் சாதியோ எத்த‌னை த‌லைமுறை ஆனாலும் மாறாது.

நீதிப‌தி யு யு ல‌லித் முக்கிய‌மான‌ ஒரு வாக்கிய‌த்தை இந்த‌ தீர்ப்பில் சொல்லியிருக்கிறார். “ச‌ம‌ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ச‌ம‌மாக‌ பார்ப்ப‌து ச‌ரிய‌ல்ல‌” என்று. இதைத்தான் நாமும் சொல்கிறோம் ஆனால் அப்ப‌டிச் சொல்லிக்கொண்டே உய‌ர்சாதியில் உள்ள‌ ஏழை(?)க‌ளுக்கு ம‌ட்டும் த‌னிச்ச‌லுகை என்ப‌து எந்த‌ வித‌த்தில் ச‌ரியான‌து என்ப‌து புரிய‌வில்லை.

இதும‌ட்டும‌ல்ல‌, இந்த‌ அரிய‌வ‌கை ஏழைக‌ளுக்கு அளிக்க‌ப்ப‌ட்டிருக்கும் வ‌ரைய‌றையும் கேலிக்கூத்தான‌து. ஆண்டுக்கு வ‌ருமான‌மாக‌ 8 ல‌ட்ச‌ம்வ‌ரை ச‌ம்பாதிப்ப‌வ‌ர்க‌ள் ஏழைக‌ளாம். இதே அள‌வு வருமான‌ம் ஈட்டும் ஒரு தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ பிற்ப‌டுத்த‌ ம‌னித‌ர் பொருளாதார‌த்தில் மிக‌ உய‌ர்ந்த‌வ‌ராம். இதில் என்ன‌ த‌ர்க்க‌ரீதியிலான‌, அறிவுசார்ந்த‌, நேர்மையான‌ அணுகுமுறை இருக்கிற‌து என்று தெரிய‌வில்லை. ஆண்டுக்கு 8 ல‌ட்ச‌த்திற்கும் குறைவாக‌ ச‌ம்பாதிக்கும் அனைவ‌ருக்குமான‌து இந்த‌ 10% இட‌ஒதுக்கீடு என்று சொல்லியிருந்தாலாவ‌து அதில் குறைந்த‌ப‌ட்ச‌ நியாய‌ம் இருந்திருக்கும்.

மூன்று ச‌த‌விக‌த்திற்கும் குறைவாக‌ இருக்கும் ஒரு ச‌முதாய‌த்திலிருக்கும் ஏழைக‌ளுக்கு ம‌ட்டும் ப‌த்து ச‌த‌வித‌ம் இட‌ஒதுக்கீடு என்ப‌து உள்ள‌ப‌டியே கேலிக்கூத்தான‌து ம‌ட்டும‌ல்ல‌, அயோக்கிய‌த்த‌ன‌மான‌து, ச‌மூக‌நீதிக்கு எதிரான‌து. அதுவும் எந்த‌ க‌ண‌க்கெடுப்பும் நிக‌ழ்த்த‌ப்ப‌டாம‌ல் இப்ப‌டியொரு அர‌சிய‌ல் சாச‌ன‌ திருத்த‌ம் செய்ய‌ப்ப‌டுவ‌தும் அதை நீதிம‌ன்ற‌ம் உறுதிப்ப‌டுவ‌தும் அதிர்ச்சிய‌ளிக்கிற‌து.

வி பி சிங் ம‌ண்ட‌ல் க‌மிஷ‌னை அமுல்ப‌டுத்திய‌ கால‌க‌ட்ட‌தில் “ம‌ண்ட‌லா க‌ம‌ண்ட‌லா” என்ற‌ விவாத‌ம் தேசிய‌ அள‌வில் ந‌டைபெற்ற‌து.

நேற்று, தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌ ஒருவ‌ர்கூட‌ இட‌ம்பெறாத‌ ஐவ‌ர்கொண்ட‌ உச்ச‌நீதிம‌ன்ற‌ அம‌ர்வில் மூன்றுபேர் இந்த‌ ச‌ட்ட‌ம் செல்லும் என்று தீர்ப்ப‌ளித்திருப்ப‌து தேச‌ம் சென்றுகொண்டிருக்கும் திசையை தெளிவாக‌ காட்டுகிற‌து.

சென்ற‌ 2000 ஆண்டுகால‌ இந்திய‌த்துணைக்க‌ண்ட‌ வ‌ர‌லாற்றில் “ஒருவ‌ர் ஏழை என்ப‌தால் க‌ல்வி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தா அல்ல‌து சாதி காரான‌மாக‌ ஒருவ‌ருக்கு க‌ல்வி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தா” என்று கொஞ்ச‌ம் நேர்மையாக‌ சிந்தித்தால் இட‌ஒதுக்கீட்டின் அடிப்ப‌டை உங்க‌ளுக்கு புரியும்.

அனைவ‌ரையும் ச‌ம‌மாக‌ பார்ப்ப‌தும் ச‌மூநீதியை செய‌ல்ப‌டுத்துவ‌தும் ஒன்ற‌ல்ல‌.

Leave A Reply