தொண்டனை தூரத் தூக்கிப்போட்டால், இனி திமுக தேறுவது ரொம்ப கஷ்டம் – LR Jagadheesan

Share
சரி. மற்றவர்கள் கேட்கமாட்டார்கள். வழக்கம்போல நாமே கேட்போம். கெட்டவனாவோம்.
இந்த அமைச்சர்களை பொதுமக்கள் தொடர்புகொள்ள அவர்களது தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டது சிறப்பான முயற்சி. அமைச்சர்களின் இந்த தொலைபேசி எண்கள் அடுத்த ஐந்தாண்டுகாலம் பொதுமக்களுக்கு “தொடர்பு எல்லைக்குள்ளேயே” இருக்கவும் அதில் வரும் புகார்களும் கோரிக்கைகளும் உடனடியாக தீர்க்கப்படவும் வாழ்த்துகள்.
அமைச்சர்களாக இவர்களை பொதுமக்கள் தொடர்புகொள்ள இத்தகைய ஏற்பாடுகளை செய்யும் முதல்வர், திமுக என்கிற ஆளும்கட்சியின் தலைவரும் கூட. அந்த திமுக தலைவருக்கும் திமுக கட்சிக்காரர்களுக்கும் பின்வரும் இந்த கேள்வி.
இந்த அமைச்சர்களில் எத்தனை பேருக்கு ஒரு கோசி மணியைப்போலவோ வீரபாண்டி ஆறுமுகம் போலவோ தன் மாவட்ட கட்சிக்காரனையோ குறைந்தபட்சம் தன் சொந்த தொகுதியைச்சேர்ந்த கட்சிக்காரனையும் உண்மையிலேயே அடையாளம் தெரியும்? உண்மையான திமுக கட்சிக்காரன் தன்னிடம் உதவிகேட்டு வந்தால் கைநீட்டாமல் காசுவாங்காமல் அவனை பெயர் சொல்லி உரிமையோடு கூப்பிட்டு உட்காரவைத்து உதவக்கூடிய திமுக கட்சிக்காரனை மதிக்கும் அமைச்சர்கள் எத்தனைபேர்?
பிகு:
1. இந்த பதிவில் திமுகவில் உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் கருத்து சொல்லாதீர்கள். இது திமுக கட்சிக்காரர்களுக்கு மட்டுமேயான பதிவு.
2. கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி நீடித்ததற்கும் ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் அந்த கட்சி இத்தனைநாள் நீடித்து நிலைப்பதற்கும் இத்தனை பெரிய தோல்வியிலும் அந்த கட்சியின் வாக்கு வங்கி நிலைகுலையாமல் இருப்பதற்கும் அதிமுக ஆட்சிக்காலத்தில் அந்த கட்சியின் தொண்டனுக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் இருந்த “உண்மையிலேயே உதவக்கூடிய கட்சிக்காரனின் வாழ்வில் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிகாட்டக்கூடிய” அமைச்சர்களின் எண்ணிக்கை திமுகவை விட அதிமுகவில் அதிகம் என்பதும் ஒரு காரணம். அந்த அளவுகோளைக்கொண்டு இந்த திமுக அமைச்சரவையை அளந்தால் இந்த அமைச்சர்களில் எத்தனை பேர் உண்மையில் தேறுவார்கள்?
3. கட்சிக்காரனை ஆட்சிக்கு தொலைவில் வை என்கிற அரசியல் மண்ணாந்தைகள் அந்த elite அட்வைஸ் மழையை இங்கே பொழியவேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். உண்மையான கட்சிக்காரன்கள் தான் எந்த கட்சியையும் ஆட்சியில் கொண்டுவந்து உட்காரவைப்பான்.
நபும்சகத்தையெல்லாம் நட்டநடுவுநிலை என்று பசப்பும் நகர்ப்புற மேல்தட்டு படித்த eliteகள் அல்ல. அவர்கள் எந்த ஆட்சியிலும் கூசாமல் போய் easyகாக ஒட்டிக்கொண்டு ரத்தம் உறிஞ்சிக்கொழுக்கும் அட்டைகள்.
அவர்களுக்காகத்தான் கமல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் தலைமையில் போய் கட்சிக்காரனை ஆட்சிக்கு தொலைவில் வைக்கும் அரசியலை செய்யுங்கள்.
நான் பேசுவது தன் கட்சிக்காக தன் சொந்த நேரத்தையும் காசையும் உழைப்பையும் கொட்டி அழும் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் போன்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர் அட்டை பெற்ற உண்மையான கட்சிக்காரர்களைப்பற்றி.
அடுத்து நடக்கப்போகும் உள்ளாட்சித்தேர்தல் முதல் சட்டமன்ற நாடாளுமன்றத்தேர்தல்வரை அவர்களின் உழைப்புதான் அந்தந்த கட்சிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும். எனவே அவர்களின் இருப்பும் ஆரோக்கியமுமே அந்தந்த கட்சிகளின் இருப்பையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கும்.
ஆட்சி போன நிலையிலும் அதிமுக கட்சிக்காரனின் இருப்பும் ஆரோக்கியமும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தயார் நிலையில்தான் இருக்கின்றன. திமுக கட்சி உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் கட்சிக்காரர்களை அந்த நிலையில் வைக்க இந்த அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் உதவுவார்கள் என்பதே இந்த பதிவின் முதன்மைக்கேள்வி.

Leave A Reply