ஈரான் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் திருப்புமுனை – பள்ளி மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர் – Rishvin Ismath

Share

ஈரானிய இஸ்லாமிய அரசுக்கு எதிராக சாதாரண மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கடந்த வாரம் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாடசாலை மாணவ, மாணவிகளும் இணைந்து கொண்டார்கள்.

ஈரானின் பல பகுதிகளிலும் இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாடசாலை மாணவிகள் பங்கெடுத்துள்ளனர், அவற்றில் சில ஆர்ப்பாட்டங்களின் காணொளிகளின் தொகுப்பு இங்கே இணைக்கப் பட்டுள்ளது. ஈரானின் கரஜ் நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் மாணவிகள் தமது ஹிஜாபை கழட்டியதுடன் அங்கே வருகை தந்திருந்த ஈரான் இஸ்லாமிய அரசின் கல்வி அதிகாரி மீது தண்ணீர்ப் போத்தல் தாக்குதல் நடத்தியும், அவரைச் சுற்றி வளைத்து அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியும் பாடசாலையை விட்டும் விரட்டியடித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பதைக் காணலாம். மாணவிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத அரச அதிகாரி பாடசாலையை விட்டும் தப்பிச் செல்வதை காணொளியில் காணலாம்.

“காமேனியே தொலைந்து போ”, “காமேனி ஒழிக”, “சர்வாதிகாரி ஒழிக”, “செய்யத் அலி (காமேனி) யைத் தூக்கி எறிவோம்” போன்ற கோஷங்களுடன் பாடசாலை மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
மாணவிகள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் பொழுது வாகனத்தில் செல்பவர்கள் தமது வாகனத்தில் சமிக்ஞை ஒலியெழுப்பி தமது ஆதரவைத் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவிகளில் பெருமளவானவர்கள் ஹிஜாபைக் கழட்டி எறிந்து விட்டாலும், ஹிஜாபுடன் போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகளையும் காணலாம். ஹிஜாபுடன் போராடும் மாணவிகள், ஹிஜாப் அணிய விரும்பாத தமது சக மாணவிகளின் உரிமைக்கு ஆதரவளிக்குமுகமாகவும், மதம் என்பது தனிப்பட்ட விடயம் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். மதத்தைப் பின்பற்ற விரும்புகின்றவர்கள் கூட மதவாத ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத நிலை உருவாகியுள்ளது.

ஈரானில் ஏன் இஸ்லாமிய பெண்கள் போராடுகிறார்கள்?

ஈரானின் இஸ்லாமிய மதவாத அரசுக்கு எதிராக போராடுகின்றவர்கள் வெறுமனே முன்னாள் முஸ்லிம்களும், நாத்தீகர்களும் அல்ல, பெருமளவான முஸ்லிம்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் ‘மதம் எங்கள் தனிப்பட்ட விடயம், அதனை நீ எம்மீது திணிக்காதே’ என்று அரசுக்கு எதிராகவும், மதத் திணிப்பு, ஹிஜாப் திணிப்பு ஆகியவற்றுக்கு எதிராகவும் போராடுகின்றார்கள் என்ற உண்மையை நேற்றைய பதிவொன்றில் சுட்டிக் கட்டி இருந்தேன். தற்பொழுது அதனை உறுதி செய்யும் படியாக ஆச்சரியமான காணொளி ஒன்று கிடைத்துள்ளது.

கடந்தவாரம், வெள்ளிக்கிழமை செப்டம்பர் 30 ஆம் தேதி ஜும்மா தொழுகை முடிந்து பள்ளிவாசலில் இருந்து வெளியேறும் ஈரானிய ஆண்கள் “அல்லாஹு அக்பர்” கோஷத்துடன் ஈரானின் மதவாத அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆச்சரியமான காணொளியே தற்பொழுது கிடைத்துள்ளது. இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

ஜும்மாத் தொழுகைக்குச் செல்லும், அல்லாஹ்வை இறைவனாக நம்பும், இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம் ஆண்கள் கூட மதத் திணிப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். மதத்தைப் பின்பற்றுவதும், பின்பற்றாமல் இருப்பதும், தாடியை வளர்ப்பதும், முழுமையாக ஓட்டச் சவரம் செய்வதும், தலையை மூடுவதும், தலையைத் திறந்து முடியை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு ஆடிப்பாடி நடைபோடுவதும், ஹபாயா அணிவதும், ஜீன்ஸ், ஷோர்ட்ஸ் அணிவதும் எங்கள் சுதந்திரத் தெரிவு, அதில் தலையிட அரசுக்கோ, மதத்திற்கோ, ஏன் ஆண்டவனுக்குக் கூட உரிமையில்லை என்பதை அடித்துச் சொல்கின்றார்கள் ஈரானிய மக்கள்.

மதம் என்பது தனிப்பட்ட விடயம் என்பதில் மக்கள் தெளிவாகிக் கொண்டு வருகின்றார்கள். ஆகவே பொதுவெளியில் மதப் பிரச்சாரம் செய்வதானது, நடுச் சந்தியில் நின்று கொண்டு ஆணுறுப்பை வெளியில் காட்டி “என்னோடு படுக்க வாறாயா” என்று வருவோர் போவோரிடம் கேட்பதற்குச் சமனான கேவலமான செயலாக எதிர்காலத்தில் பார்க்கப்படும். முல்லாக்கள் சர்வ சாதரணமாக முஸ்லிம் பெண்களிடமே செருப்படி வாங்கும் காலம் விரைவில் உருவாகும்.

Leave A Reply