காம்ப்ளான் பாய் மாதிரி அண்ணாமலை வளர்கிறாரா? – அரசியல் கூத்தன்

Share

அண்ணாமலையின் அரசியல் எதில் சேர்த்தியோ இல்லையோ, இந்தக்கால கார்பரேட் அரசியலுக்கு பொருத்தமாகவே இருக்கிறது. அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். உளறுகிறார். பொய்களை மட்டுமே பேசுகிறார் என்றெல்லாம் திமுகவினர் சொன்னாலும், சமீப காலத்தில் ஏதோ ஒரு வகையில் ஊடக வெளிச்சத்தில் தொடர்ந்து பளிச்சிடும் ஆளாக அண்ணாமலை உருவாகியிருக்கிறார்.

அரசியல்வாதி என்றால் நல்லபடியாகவோ கெட்டபடியாகவோ செய்திகளில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். எம்ஜியாரும், ஜெயலலிதாவும் கலைஞரை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும் என்றே நினைப்பார்கள். ஆனால், கலைஞர் அவர்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார்.

ஏதேனும் ஒரு அறிக்கையை வெளியிட்டுக் கொண்டே இருப்பார். மாலைப் பத்திரிகை என்றால் 12 மணி வரை அவருடைய அறிக்கைக்காக காத்திருப்பார்கள். காலை பத்திரிகை என்றால் 8 மணிக்கெல்லாம் கலைஞரின் அறிக்கை வந்துவிடும்.

கலைஞரின் அறிக்கைதான் தமிழ்நாட்டின் அன்றைய அரசியலின் மையமாக இருக்கும். அந்த அளவுக்கு இல்லையென்றாலும், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக பதுங்கு குழிக்குள் கிடக்கிற நிலையில், ஊடகங்களுக்கு பரபரப்பான செய்திகளை அண்ணாமலைதான் கொடுக்கிறார்.

பொய்யோ, புரட்டோ ஏதோ ஒருவகையில் இதுவரை இருந்த பாஜக தலைவர்களைக் காட்டிலும் பாஜகவின் தோற்றத்தை பெரிதாக்கிக் காட்டுவதில் அண்ணாமலை வெற்றி பெற்றிருக்கிறார். திமுகவினர் அண்ணாமலையை கிண்டல் செய்துகொண்டே இருக்கலாம். ஆனால், அவர் தவிர்க்க முடியாத ஆளாக மாறிவருகிறார்.

சுனிலையும், பிரசாந்த் கிஷோரையும் வைத்து நமக்குநாமே போன்ற பிரச்சார திட்டங்களை ஸ்டாலினுக்காக திமுக வகுத்தது. அதைப்போன்றே அண்ணாமலையின் கூட்டங்களும் திட்டமிடப்படுகிறது. இந்தக் கூட்டங்களுக்கு எல்லாக் கட்சிகளையும் போல பாஜகவுக்கும் காசு கொடுத்தே ஆட்களை அழைத்து வருகிறார்கள். ஆனால், இந்தக் கூட்டத்துக்கு வரும் ஆட்களில் கணிசமானவர்கள், பாஜகவை பெரிய கட்சியாக நினைக்கத் தொடங்குவார்கள். வெளியே போயும் பேசுவார்கள்..

அண்ணாமலை போன்ற தரக்குறைவான அரசியல்வாதிகள் வளர்வது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

அரசியல் கூத்தன்

Leave A Reply