உதயநிதிக்கு பள்ளிக்கல்வித் துறையா? – கோட்டையில் கசிந்த தகவல்கள்!

Share

கடந்த ஓராண்டில் பள்ளிக்கல்வித் துறையே நாசமாகிவிட்டதாகவும், இதற்கு காரணம் ஐஏஎஸ் அதிகாரிகளின் கூத்துதான் என்றும், உதயசந்திரனின் அதிகாரக் குவிப்பும்தான் என்று பரவலாக பேசப்படுகிறது. செங்கோட்டையனே பரவாயில்லை என்று பேசும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.

கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இல்லம்தேடி கல்வி திட்டத்திலேயே நிறைய பணம் கொள்ளைபோனதாக சொல்லும் நிலையில், அந்தத்திட்டத்தால் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்ற புள்ளிவிவரமும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் அந்தத் திட்டத்தை மேலும் நீடிப்பது தேவையற்றது என்று அனுபவமிக்க ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் நோக்கத்திலேயே கல்வித்துறைய சீரழித்து, ஆசிரியர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடருகின்றன. கட்சிக்காரர்களை நம்பாமல், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அதிகாரிகளின் கையில் அரசு நிர்வாகத்தை முழுமையாக கொடுத்துவிட்டு, வெறும் அறிவிப்பாளராக முதல்வர் மாறிவிட்டார் என்று புலம்புகிறார்கள்.

மக்கள் சந்தோஷமாக இருப்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். உண்மையில் மக்களும், கட்சிக்காரர்களும் கடுப்பில் இருக்கிறார்கள் என்ற உண்மையை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

அமைச்சரவை மாற்றம்

இந்நிலையில்தான், தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்ற தகவல் கசியவிடப்பட்டுள்ளது. உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற குரல் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டது. அவருடைய நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வைத்தே அந்தக் குரல் தொடங்கப்பட்டது.

பிறகு படிப்படியாக அது வலுப்பெற்று, உதயநிதியை அடுத்த முதல்வராக்க வேண்டும் என்ற அளவுக்கு சென்றது. அவரை முதலில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சொன்னார்கள். இப்போது பள்ளிக்கல்வித் துறைக்கு அமைச்சராக நியமிக்க ஏற்பாடு நடப்பதாக கூறுகிறார்கள்.

பள்ளிக்கல்வித் துறை அனுபவம் வாய்ந்தவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அந்தத் துறையை அருமையாக கையாண்டு அனுபவம் உள்ள தங்கம் தென்னரசு அவர்களையே மீண்டும் நியமிப்பதே ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை அளிக்கும். அந்தத்துறை அமைச்சர் ஆசிரியர்களால் அதிகாரிகளால் எளிதில் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

எனவே, இந்தச் செய்தி உண்மையாக இருக்காது என்றே நம்புவோம். இந்தச் செய்தியுடன், ஐ.பெரியசாமியிடமிருந்து கூட்டுறவுத்துறையை எடுத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், செந்தில்பாலாஜியிடமிருந்து ஆயத்தீர்வை, மதுவிலக்கு ஆகியவற்றை எடுத்து ஐ.பெரியசாமிக்கும் கொடுக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

மொத்தத்தில் இவையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களை ஏதேனும் ஒருவகையில் பதற்றத்தில் வைக்கவே உதவும் என்றும், அவர்களிடமிருந்து கூடுதல் வருவாயை எதிர்பார்ப்பதற்காக இருக்கலாம் என்றும்கூட சிலர் விமர்சிக்கிறார்கள்.

-உளவாளி

Leave A Reply