என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?

Share

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது யாரும் மிரட்டல் அரசியல் செய்ய முடிந்ததில்லை.

மிரட்டப்படுவோருக்கு பாதுகாப்பு தரவேண்டியது ஒரு அரசின் கடமை. அந்த வகையில் நடிகர் சூரியாவை ஆளாளுக்கு மிரட்டுகிறார்கள். ஒரு கட்சியின் முக்கிய தலைவரே மிரட்டுகிறார்.

அவருடைய படத்தை திரையிட திரையரங்குகள் பயப்படுகின்றன. 5 கோடி ரூபாய் கேட்டு ஒரு சாதிச்சங்கம் மிரட்டிக் கெடு விதிக்கிறது.

இதெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் சாத்தியமே இல்லை. திமுக அரசாங்கம் அமைந்தால்தான் இத்தகைய மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் அதிகமாகின்றன.

ராமதாஸ் ஒரு மண்ணும் இல்லை என்று ஜெயலலிதா நிரூபித்துக் காட்டினார். அவருடைய ஆட்சியில் ராமதாஸ் எந்த வகையிலும் மிரட்டல் அரசியலை செய்ய முடியவில்லை.

ஆனால், கலைஞர் துணை நகரம் அமைக்க முடிவு செய்தபோது அந்த திட்டத்தையே தடுத்து நிறுத்தினார் ராமதாஸ்.

அதுபோலத்தான், தளபதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து, அவருடைய ஆட்சிக்கு எதிராக கற்பனையான பொய்களை தினமும் பரப்புகிறார்கள். அண்ணாமலைகூட அரசாங்கத்தை மிரட்டுகிறார். எச்.ராஜா தனது கேவலமான பொய்களை நிறுத்தவே இல்லை.

சீமான் பாணியே தனிதான். நான்தான் திமுக அரசையே வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்று எதற்கெடுத்தாலும் பேட்டி கொடுக்கிறான். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தினமும் பயணம் செய்துகொண்டிருக்கிறார் தளபதி.

இது நல்லதல்ல என்றே பெரும்பான்மையோர் கருதுகிறார்கள். ஆட்சி நிர்வாகத்தில் அதிமுக ஆட்சியில் திணிக்கப்பட்ட அதிகாரிகளே இப்போதும் இருக்கிறார்கள். அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த அவர்கள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள்.

ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் எப்படி அதிலிருந்து மீள்வார்கள். அதிகாரிகளை கொண்டு ஆட்சி நடத்த நினைக்கும் தளபதி, கட்சி நிர்வாகிகளை அவர்கள் இஷ்டத்துக்கு ஆட விட்டிருக்கிறார். அவர்கள் உண்மையான கட்சித் தொண்டர்களை கவனிப்பதே இல்லை.

ஆட்சியின் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் பலனடையாத திமுக தொண்டர்களுக்கு கிடைக்க தளபதி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஒரு பேரூராட்சி தலைவர் பதவிக்கு 50 லட்சம், ஒரு கோடி, ஒன்றரைக் கோடி என்று ஏலம் விடும் நிலையே மாவட்டச் செயலாளர்களிடம் இருக்கிறது.

கட்சிக்காக உழைத்தவர்கள், மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்று பார்க்காமல், பணம் வைத்திருப்பவர்களுக்கு சீட் எனும் போக்கு இப்போதே தொடங்கிவிட்டது. ஆட்சிக்கு வரும்வரை உழைப்பையும் பணத்தையும் உறிஞ்சிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் புதிய பணக்காரர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளும் பழக்கம் தொண்டர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

தளபதி கலைஞர் மாதிரி இருக்க மாட்டார். உண்மையான கட்சித் தொண்டர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்ற நம்பிக்கையை மாவட்டச் செயலாளர்களில் பலர் சிதைத்துவிட்டார்கள். சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தளபதி மக்கள் செல்வாக்கு மிக்கவராக தன்னை உயர்த்திக் கொள்ள படுகிற கஷ்டங்களை, சொந்த கட்சியினரே விமர்சிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. எப்போ பார்த்தாலும் வரவேற்புக் கொடுக்க ஆட்களை திரட்டுவதே வேலையாக இருக்கிறது என்கிறார்கள்.

உட்கார்ந்த இடத்திலிருந்து உத்தரவுகளை பிறப்பித்து அமைச்சர்களையும், அதிகாரிகளை ஆட்டுவிக்கும் ஆற்றல் இல்லையோ என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

மிரட்டுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று விமர்சனம் செய்தால், யாரும் புகார் கொடுக்கவில்லை என்று முட்டுக்கொடுப்பவர்களை பார்க்க முடிகிறது. ஜெயலலிதா என்றால், யாரையாவது புகார் கொடுக்க வைத்து நடவடிக்கை எடுப்பார்.

யாரும் புகார் கொடுக்காவிட்டாலும், பகிரங்கமாக அறிக்கை மூலம் மிரட்டும் ஆட்கள் மீது காவல்துறையே புகார் பதிவு செய்ய முடியும்.

முதல்வன் படத்தில் கலவரத்தை அடக்காமல் அப்படியே விட்டுவிடும்படி முதல்வரே சொல்லும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

Leave A Reply