எழுத்தாளர் சோலை சொன்ன எம்ஜியார்-ஜெயலலிதா ரகசியம்! – சீமதுரை

Share

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா 2016 டிச.05—ஆம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்த இருபத்து நான்கே நாட்களில், அதாவது 2016 டிச.29—ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். அதாவது ஜெயலலிதா வகித்த அதிமுகவின் பொ.செ.ஆனவுடனேயே மெல்ல மெல்ல ஜெயலலிதாவாகவே மாற ஆரம்பித்தார் சசிகலா.

ஜெயலலிதாவைப் போலவே நடை, உடை, பாவனை. அவரைப் போலவே அதிமுகவில் தலைமையகத்தின் பால்கனியிலிருந்து தொண்டர்களைப் பார்த்து கை ஆட்டுவது, ஜெயலலிதாவின் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு கையெழுத்துப் போடுவது என தன்னை ஜெயலலிதாவாக மாற்றிக் கொண்டார் சசிகலா.

அதற்கடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் சட்டமன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தான் சசிகலாவுக்கு எதிரான அரசியல் ஆட்டம் ஆரம்பமானது. அதாவது சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனை உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. கூவத்தூர் கேம்பில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுத்து ஆசி வழங்கி, நேராக ஜெயலலிதா சமாதிக்குச் சென்று ஆவேசமாக ஓங்கி அடித்து சத்தியம் செய்துவிட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்குப் போனார் சசிகலா.

இதெல்லாமே நாடறிந்த சங்கதி தான்.

நான்கு ஆண்டு ஜெயில் தண்டனை முடிந்து 2021 ஜன.27—ஆம் தேதி சசிகலா ரிலீஸ் ஆகப்போகிறார் என்றதுமே முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சரவை சகாக்கள் அத்தனை பேரும் அலற ஆரம்பித்தனர். கொரோனா அட்டாக்கால் ஒருவாரம் கழித்து பிப்.08—ஆம் தேதி தமிழகத்திற்குள் வருகிறார் என்றதும் மேலும் அலறினார்கள் அமைச்சர்கள்.

பெங்களூர் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே வந்த போது சசியின் காரில் அதிமுக கொடியைப் பார்த்ததும் தமிழக டிஜிபியிடம் புகார் கொடுத்தார்கள். ஜெ. சமாதிக்குப் பூட்டுப் போட்டார்கள், அதிமுக தலைமையகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போட்டார்கள்.

ஆனால் இதையெல்லாம்விட பெருங்கொடுமை என்னன்னா, சசிகலா தமிழகத்திற்குள் நுழையும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு, மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இருக்காது” என அமைச்சர்கள் மூன்று பேர் மீண்டும் டிஜிபியிடம் புகார் கொடுத்தது தான்.

’பயப்படாத…ம்ம்..பயப்படாத….என்ற ரேஞ்சில் தான் சசிகலாவுக்கு எதிராக அமைச்சர்கள் ஆவேசமானார்கள். இடையிடையே மானே தேனே போட்டுக் கொள்வது போல, திமுகவுக்கும் சசிகலாவுக்கும் இடையே ரகசிய டீலிங் இருக்கு, இங்க ஏதோ இருக்கு” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

பிப்.08—ஆம் தேதியும் விடிந்தது. பெங்களூரிலிருந்து அதிமுக கொடி கட்டிய, தனது காரில் தான் புறப்பட்டார் சசிகலா. தமிழக எல்லைக்குள் அதிமுக கொடியுடன் வந்தால் ஆக்ஷன் எடுப்போம் என்றது போலீஸ்.

‘பயப்படாத….ம்ம்ம்…பயப்படாத’ என்ற ரேஞ்சில் தான் சசிகலாவும் இருந்திருப்பார் போல. அதிமுக மெம்பரா இல்லாத என்னோட கார்ல தான் கட்சிக் கொடிய கட்டக்கூடாது. அதிமுக மெம்பர் கார்ல வந்தா என்ன செய்வீங்க என கிருஷ்ணகிரி தட்சணாமூர்த்தி, சம்பங்கி இவர்கள் ஏற்பாடு செய்த காரில் அதிமுக கொடியுடன் வந்தார்.

ஓசூர் முத்துமாரியம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்த சசிகலா அங்கிருந்த மீடியாக்களிடம் பேசியதுதான் செம மேட்டர்.

“என்னோட அக்கா (ஜெயலலிதா ) ஆசி இருக்கும் வரை என்னை எதுவும் செய்ய முடியாது. நமது பொது எதிரியை வீழ்த்த ( பழனிசாமிய சொன்னாரா, பன்னீரைச் சொன்னாரான்னு தெரியல) ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என சொல்லிக் கொண்டே வந்தவர், “அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமைன்னு புரட்சித் தலைவர் சொல்லிருக்காரு. அதுபோலத்தான் நானும்” என போட்டாரே ஒரு போடு. அதிமுகவினர் அத்தனை பேருக்கும் சித்தம் கலங்கிப் போயிருக்கும்.

ஏன்னா எடப்பாடி பழனிசாமியே எம்.ஜி.ஆரைப் பார்த்திருப்பாராங்கிற சந்தேகம் இருக்கும் போது எம்ஜிஆரின் கொள்கை பற்றி சசிகலா பேசினால் சித்தம் கலங்காமல் என்ன செய்யும்?

இந்த இடத்தில் ஜெயலலிதா—சசிகலா பற்றிய ஃப்ளாஷ்பேக் சங்கதிகளைச் சொன்னால் சரியா இருக்கும்.
எம்.ஜி.ஆர்.திமுகவில் இருந்த போதே அவருக்கு அறிமுகமானவர் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான சோலை. அதிமுகவை எம்ஜிஆர். ஆர்ம்பித்த பின், அவருக்கு உதவியாளராக, மேடைப் பேச்சு எழுதித் தருபவராக என 25 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆருடனேயே பயணித்தவர்.

அவர், இன்னொரு பத்திரிகையாளரிடம் ஜெயலலிதா குறித்து எம்ஜியார் சொன்ன சில முக்கியமான ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா எந்தளவுக்கு விசுவாசமாக இருந்தார்? என்று அந்த பத்திரிகையாளர் கேட்டதற்கு,

“100% துரோக சிந்தனையுடன் தான் இருந்தார்” என்றார் சோலை. அதற்கு ஒரு சம்பவத்தையும் உதாரணம் காட்டினார்.

“எப்படியாவது எம்.ஜி.ஆர்.கையால் தாலி கட்டி, அவரின் அதிகாரப்பூர்வ மனைவியாகிவிட வேண்டும் என்பது ஜெயலலிதாவுக்கு வெறியாகவே இருந்தது. இதற்காக பல தடவை எம்.ஜி.ஆரை மனம் நோகடித்திருக்கிறார் ஜெயலலிதா. ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா கோபத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம், சரி நாளைக்கு காலைல கர்நாடகவில் இருக்கும் மூகாம்பிகை கோவிலில் தாலி கட்டுறேன் எனச் சொல்லி அங்கே கூட்டிப் போவார் தலைவர் எம்.ஜி.ஆர். இரவு தங்கிவிட்டு, மறுநாள் விடிவதற்கு முன்பாகவே ரிசார்ட் மேனேஜரிடம் சில விபரங்களைக் கூறிவிட்டு மெட்ராஸ் வந்துருவார். விடிந்ததும் கார் பிடித்து ஜெயலலிதாவும் வந்துருவார்.

எம்.ஜி.ஆருக்கு கோபத்தை வரவழைக்க வேண்டும் என்ற திட்டத்துடன்தான் சோபன்பாபுவுடனான லிவிங் டுகெதர் வாழ்க்கையை பத்திரிகைகளில் வரவைத்தார் ஜெயலலிதா. இதனால்தான் கட்சியில் அவரை சேர்க்கும் நிலைக்குப் போனார் எம்.ஜி.ஆர். அதன் பின் ஜெயலலிதாவுக்கு மேடைப் பேச்சு எழுதித் தரவும் அவருடன் சுற்றுப் பயணங்களில் கூடவே செல்லவும் என்னை நியமித்தார் எம்.ஜி.ஆர்.

ஒருமுறை என்னிடம் பேசிய ஜெயலலிதா, கேரளாவுக்குப் போய் மாந்திரீகர்களைப் பார்த்து எம்.ஜி.ஆருக்கு எதிரா செய்வினை வைக்கப் போறேன், நீங்களும் என்னுடன் வாங்க” என அழைத்தார். ஆத்தாடி இந்தவிளையாட்டுக்கு நான் வரல என மறுத்ததுடன் தலைவரிடமும் இந்த விஷயத்தைச் சொன்னேன். ஆனால் ஜெ.வோ அப்போது வேதா இல்லத்தின் வேலைக்காரப் பெண்மணி ராஜம்மாளுடன் கேரளாவுக்கு போய்வந்தார்.

இப்படியெல்லாம் நிலைமை போய்க் கொண்டிருந்த போதுதான் ஜெயலலிதாவின் நிழச்சிகளை வீடியோ கவரேஜ் பண்ண என்ன அணுகினார் எம்.நடராஜன். அப்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறை தலைமை இன்ஜினியராக இருந்த (சுப்பிரமணியன் என நினைவு)வர் மூலமும் அணுகினார் நடராஜன்.

அந்தப் பழக்கத்தில் தான், அப்போது வீடியோ கடை நடத்தி வந்த நடராஜனின் மனைவி சசிகலாவை, எம்ஜி.ஆரின் உத்தரவுப்படி ஜெ.வுக்கு உதவியாளராக நியமித்தேன். அம்முவுக்கு உதவியாளரா இருந்தாலும் நமக்கு விசுவாசமா இருக்கணும் சோலை என அடிக்கடி சொல்வார் எம்.ஜி.ஆர். ஒருமுறைகூட எம்ஜிஆரை சசிகலா பார்த்தது கிடையாது.

ஆனால் சசிகலாவின் எண்ட்ரிக்குப் பின் ஜெ.வின் நடவடிக்கைகள் முற்றிலும் மாற ஆரம்பித்தது. உடல்நலன் குன்றி சென்னை அப்பல்லோவில் அட்மிட் ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, வில்லங்க வீடியோ விற்பனை செய்ததாக மாம்பலம் போலீசார் சசிகலாவை அரெஸ்ட் பண்ணி எஃப்.ஐ.ஆரும் போட்டார்கள். இது தெரிந்து பதறியடித்து என்னிடம் ஓடிவந்தார் நடராஜன். பின்னர் தலைவரிடம் பேசி, சசிகலாவை ரிமாண்ட் பண்ணாமல் காப்பாற்றினோம். எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த போது கூட அங்கேயே போய் தாலி கட்டிக்கிறேன், நீங்க வந்தே ஆகணும் என ஜெயலலிதா அடம்பிடித்த போது, பாஸ்போர்ட் இருந்தும் இல்லை என மறுத்துவிட்டேன்.

எம்.ஜி.ஆர்.அமெரிக்காவில் இருந்த போது இங்கே என்னென்னமோ நடந்துவிட்டது. நானும் வேதா நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டேன்.

அமெரிக்காவிலிருந்து தலைவர் வந்ததும் தினமும் ராமாவரம் தோட்டத்திற்குப் போய் சந்திப்பேன். ஜெயலலிதா குறித்து சைகை மூலமும் எழுத்து மூலமும் பல விஷயங்களைச் சொல்லி கண்கலங்குவார், இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

அவர் இறப்பதற்கு ஒருவாரம் முன்பு என்னை அழைத்து, அம்முவை கட்சியைவிட்டு நீக்காவிட்டால் நான் வளர்த்த கட்சி நாசமாப் போயிரும். அதனால் உடனே அவ(ள)ரை நீக்கி கையெழுத்துப் போடுறேன். நாளைக்கு காலைல கட்சிப்பத்திரிகையான ‘அண்ணா’வில் கட்டம் கட்டிருங்க சோலை” என்றார்.

நானும் தலைவரின் கடிதத்தை வாங்கிக் கொண்டு சி.ஐ.டி.காலனியிலிருந்த எனது வீட்டுக்கு வந்துட்டேன். அந்தக் கடித விபரத்தை எப்படியோ மோப்பம் பிடித்த நடராஜன், எனது வீட்டிற்கே வந்து அதை இப்போ பிரசுரிக்காதீங்க, இன்னும் நாலஞ்சு நாள்ல தலைவரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைக்குறோம் என கெஞ்சினார். நானோ ஆத்திரத்தில் தலைவரோட லெட்டரையே போட வேணாம்னு சொல்ற அளவுக்கு தைரியம் வந்துருச்சான்னு கன்னாபின்னான்னு பேசினேன்.

ஆனாலும் விடாத நடராஜன் அதிகாலைலயே என் வீட்டு வாசல்ல படுத்துக்கிடக்க ஆரம்பிச்சார். சரி, ரெண்டு மூனு நாள் பார்ப்போம்னு நினைச்சுக்கிட்டிருக்கும் போதுதான் தலைவரின் மரணச் செய்தி நிலைகுலைய வைத்தது. அந்தக் கடிதத்தை மட்டும் அண்ணா பத்திரிகையில போட்டிருந்தேன்னா அத்தனை பேரின் ஆட்டமும் அன்றைக்கே க்ளோஸ் ஆகியிருக்கும். நான் செய்த மாபாதகம் அது” – இது அத்தனையும் ஐயா சோலை சொன்ன உண்மைகள்.

(எம்ஜிஆர் குறித்து மிககடுமையான வார்த்தைகளால் ஜெயலலிதாவே கைப்பட எழுதிய கடிதம் தன்னிடம் இருப்பதாக சொன்ன சோலை, கடைசி வரை அக்கடிதத்தை நம்மிடம் காட்ட விரும்பவில்லை )

இப்போது ரிலீசாகியிருக்கும் சசிகலாவின் ஆட்டம் அடங்குமா? தொடருமா? என்பது அப்போது எம்ஜிஆரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்ற இரு சீனியர்களிடம் நாம் பேசிய போது, “பிப்.14 பிரதமர் மோடி இங்கே வர்றார், 24—ஆம் தேதி டெல்லிக்குப் போறார் எடப்பாடி. அதன் பின் படிப்படியாக சசிகலாவின் ஆட்டம் அடங்கிவிடும். அதே போல் சமுதாய ரீதியாக தென்மாவட்டங்களில் அதுவும் ஒன்றிரண்டில் மட்டும் வேண்டுமானால் சின்ன சலசலப்பு கிளம்பலாம். திருச்சிக்கு அந்தப்பக்கம் ஒன்றுமே நடக்காது.

என்ன ஒண்ணு சசிகலா இவ்வளவு பேசுனதுக்கப்புறமும் ஜெயலலிதா எப்படி செத்தார்னு சசிகலாவிடம் கேட்கும் தெம்பும் திராணியும் எடப்பாடி உட்பட எந்த அமைச்சருக்கும் இல்லையேங்கிறதுதான் பெருங்கொடுமை” என்றனர்.

Leave A Reply