தொண்டருக்கு தொண்டராக… தமிழ்நாட்டின் சிற்பியாக! – ஆதனூர் சோழன்

Share

அவரைப் பற்றி யாரும் எழுதாதை நாம் எழுதலாம் என்று நினைப்போம்…

ஆனால், அவர் எழுதியதைத்தான் அவரைப் பற்றி நாம் எழுத முடியும்.

அவர் தன்னைப் பற்றி எழுதியதையே அவருக்கு எதிராகவும் பயன்படுத்துவார்கள். அவரை புகழவும் பயன்படுத்துவார்கள்.

ஆம். தன்னை திட்டிப் பிழைப்பவர்களுக்கும் அவரே ஸ்கிரிப்ட் எழுதிச் சென்றிருக்கிறார் என்பது பெரிய விஷயம்தான்.

“என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்” என்று அவர் ஸ்கிரிப்ட் எழுதினால்…

அவரை கட்டுமரமாக பயன்படுத்தி கரை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவரைக் கட்டுமரம் என்று திட்டி பயனடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

அவரைப் பற்றி அவர் எழுதாமல் விட்ட விஷயம் என்னவாக இருக்கும்?

அவருடன் பழகியவர்களும், அவரை நேசித்தவர்களும் அவரைப் பற்றி எழுதியவைதான் புதியவையாக இருக்கும்.

என்னளவில் தான் எதிர்கொண்ட சோதனைகளில் இருந்து மீள்வதற்கு கலைஞர் கையாண்ட உத்திகளைப்போல, அந்த உத்திகளை செயல்படுத்த அவர் உழைத்ததைப்போல வேறு யாரும் உழைத்துப் பார்த்ததும் இல்லை. படித்ததும் இல்லை.

எம்ஜியார் திமுகவை உடைக்கும்போது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். அந்த வயதில் கலைஞரின் பெருமை எனக்கு புரிபடவில்லை. ஆனால், பியுசி படிக்கும்போது நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு எனது சித்தப்பா கைது செய்யப் பட்டபோது அரசியலின் தீவிரம் புரிபடுகிறது.

கிட்டத்தட்ட கலைஞர் தனித்து விடப்படுகிறார். ஆம் அவருக்கு முரசொலி நாளிதழும், பேனாவும் மட்டுமே துணையாக இருக்கிறது. அவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு தன்னை தனது தொண்டர்களுடன் இணைக்கும் வழியை கண்டுபிடித்தார்.

பொதுக்கூட்டங்களுக்குப் பதிலாக திருமண வீடுகளையும், புதுமனை புகுவிழாவையும் கட்சிக் கூட்டங்களாக மாற்றினார். கதைகளிலும், கவிதைகளிலும் தொண்டர்களுக்கு அரசியல் செய்திகளை கடத்தினார். அந்தக் காலகட்டத்தில்தான் கலைஞரின் ஆற்றலை முழுமையாக புரிந்துகொண்டேன். கலைஞரை சமாளிக்க முடியாமல் எம்ஜியார் அரங்கேற்றிய இழிவான அரசியலை உணர முடிந்தது.

1993ல் எம்ஜியாரைக் காட்டிலும் மிகப்பெரிய பிளவையும் காணமுடிந்தது. குடும்ப அரசியல் என்று சொல்லி கட்சியை பிளந்து புதுக்கட்சி உருவாக்கிய வைகோ, இதோ தனது மகனிடமே கட்சியைக் கொடுத்திருக்கிற காட்சியையும் பார்க்க முடிகிறது.

காலமே கலைஞருக்கு சாட்சியாக அமைந்தது. ஆம், அவர் காலத்தின் பிள்ளையாக இருந்தார். காலம் அவரைச் செதுக்கியதா, காலத்தை அவர் செதுக்கினாரா என்று திக்குமுக்காடுகிறேன்.
இதோ, காலமாகிவிட்ட கலைஞர் குறித்து அவரை அறிந்தவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்…

அரசியலுக்குள் நுழைந்த 14 வயதிலிருந்து, 80 ஆண்டுகள் வரலாற்றில் 5 முறை முதல்வ ராகவும், 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக சட்ட மன்ற உறுப்பினராகவும், 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தொடர்ச்சியான தலைவராகவும் பணி யாற்றியிருக்கிறார். இந்தியாவின் அனைத்து பிரதமர்களுடனும் அரசியல் நடத்தியிருக்கிறார். அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் அணிகளை உருவாக்கியிருக்கிறார். அணிகளை உடைத்திருக்கிறார். மத்தியில் கூட்டணி ஆட்சி சகாப்தம் உருவானபிறகு மத்தியில் அரசுகள் அமைவதிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

விடலைப் பருவத்தை இழந்த கலைஞர்!

கலைஞர் குழந்தைப் பருவத்திலிருந்து நேரடியாக இளைஞராகிவிட்டார். அதாவது அவரிடம் விடலைப்பருவத்து அனுபவமே இல்லை. இளம் கலைஞரின் படிப்பார்வத்தை கவனித்த தந்தை முத்துவேலரும் தாய் அஞ்சுகமும் பெருமிதம் அடைந்தனர். ஆனால், அவர் முன்னுரிமை கொடுத்து படித்தது அனைத்தும் திராவிட இயக்க வெளியீடுகளும், தமிழ் இலக்கியங்களும்தான். பாடப்புத்தகங்கள் அவருடைய பட்டியலில் கடைசி இடத்திலேயே இருந்தது என்கிறார் ஏ.எஸ்.பன்னீர் செல்வம்.

அம்பேத்கரால் முடியாததை செய்தார்!

அம்பேத்கர் இந்து பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நிறைவேற்ற விரும்பிய சட்டத்தை நேரு அமைச்சரவையில் நிறைவேற்ற முடியாததால் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், கலைஞர் தனது ஆட்சிக் காலங்களில் அம்பேத்கரால் முடியாத அந்த சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றினார் என்கிறார் ஆர்.நல்லகண்ணு.

பணத்தைத் தேடி அலையவில்லை!

எமெர்ஜென்சியை கடுமையாக எதிர்த்ததன் மூலம், ஜனநாயகப் படுகொலையை எம்ஜிஆர் ஆதரித்தவர் என்ற உண்மையை மக்களுக்கு உணர்த் தினார் கலைஞர் என்கிறார் ஆர்.கே.ராதாகிருஷ் ணன். கலைஞரின் அரசியல் நேர்மை அவருடைய அரசாங்கத்தைக் டிஸ்மிஸ் செய்ய காரணமாக இருந்திருக்கிறது. எமெர்ஜென்சி காலத்தில் மத்திய அரசாங்கத்தால் தேடப்பட்ட அரசியல் தலைவர்கள் பலரின் சரணாலயமாக தமிழக்கை வைத்திருந்தார் கலைஞர். தன்னை எதிர்த்த கலைஞரின் அரசியலை முடித்துவிட இந்திரா திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தார். கலைஞரின் வீடுகளில் வருமானவரித் துறையினர் பலமுறை ரெய்டு நடத்தினார்கள். வருமான வரி அலுவலகங்களில் அவருடைய குடும்பத்தார் நாள் முழுவதும் காத்திருக்க வைக்கப்பட்டார்கள். கனிமொழி பள்ளி முடித்து வீடுவரும்போது வீட்டில் யாருமில்லாமல் இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறார். பின்னர் அவர் நுங்கம்பாக்கத்துக்கு காரில் கொண்டுபோய் விடப்படுவார்.

அந்தச் சமயங்களில் எல்லாம் கலைஞர் கட்சி அலுவலகத்தில் அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்ட தனது தோழர்களைப் பற்றிய விவரங்களை அறிவதில் கவனமாக இருப்பார். அந்தச் சமயத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டுகளில் எதுவும் சிக்கவில்லை என்பதே உண்மை. கலைஞரையும் அவருடைய குடும்பத்தையும் அந்த நேர்த்திலேயே சிக்க வைக்க முடியவில்லை. அதன் தொடர்ச்சிதான் இன்றுவரை அவர் பணத்தைத் தேடி அலையும் அரசியல்வாதியாக இருக்கவில்லை. கட்சிக்காரர்கள் கொடுக்கும் நன்கொடைகளைக்கூட அறிவாலயமாகத்தான் சேமித்து வைத்தார் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுவார்கள். அறிவாலயத்தில் எத்தனை செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன என்றுகூட கலைஞருக்கு தெரியும் என்று ஒருமுறை ஆர்க்காடு வீராசாமி கூறியதாக இந்த கட்டுரையாளர் தெரிவித்திருக்கிறார்.

வரலாற்றின் பகுதியாய் கலைஞர்!

அதிகார அரசியல் புயல்களில் திமுக பலமுறை சிக்கியிருக்கிறது. ஆனால், சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை கலைஞர் பெற்றிருந்தார். தேசிய இயங்கங்களின் விரிவாக்கம், தொழிற்சங்க இயக்க ங்கள், கம்யூனிஸ்ட் அரசியல் ஆகியவற்றுடன் கலைஞரின் பரிணாம வளர்ச்சியையும் இணைத்தே வாசிக்காவிட்டால் வரலாறுக்கு மதிப்பளிப்பதாக இருக்காது. கலைஞர் இப்போது அந்த வரலாற்றின் பகுதியாகிவிட்டார். தமிழக அரசியலின் பலத்தை கலைஞரைப் படிக்காமல் ஆய்வுசெய்யவே முடியாது என்று கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருக்கிறார்.
அற்புதமான உடன்பிறப்புகளை பெற்றவர்!

1972 ஆம் ஆண்டு திமுக பிளவுபட்ட காலத்தி லிருந்தே கிராம அளவிலும் பெருநகர அளவிலுமான தொண்டர்கள் அவரை விட்டு எப்போதும் விலகியதில்லை. அதிகாரத்திலிருந்தாலும், சிறையி லிருந்தாலும், குடும்பத்தினர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டபோதும், முதுமை காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபோதும் அவரைவிட்டு யாரும் விலகவில்லை. இதுதான் அவருடைய உடன்பிறப்புகள் அவருக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. எந்தச் சூழ்நிலையிலும் தொண்டர்களை விட்டுக்கொடுக்காதவர் கலைஞர் என்கிறார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

எனக்கும் இங்கேதான் உறங்கனும்!

ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கட்டுரையில் 2010 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை அன்றைய தலைமைச் செயலாளர் ஆர்.ராமசுந்தரத்தின் வழியாக குறிப்பிடுகிறார்.

“2010 ஆம் ஆண்டு இரவு 10 முதல் 11 மணி இருக்கும். புதிய சட்டமன்றக் கட்டிடத்தின் போர்ட்டிகோவில் இருந்தோம். துரைமுருகனும், பொன்முடியும் கிளம்பிப் போயிருந்தார்கள். திடீரென்று “அண்ணா சமாதிக்குப் போகலாம்” என்றார் கலைஞர். அந்த இரவு நேரத்தில் அண்ணா சமாதியில் நானும் அவரும் மட்டும் இருந்தோம். பாதுகாப்பில் இருந்த சில கான்ஸ்டபிள்கள் இரண்டு பிளாஸ்டிக் சேர்களை போட்டார்கள். அதில் அமர்ந்தோம். இரண்டு கிளாஸ்களில் டீ கொண்டு வந்தார்கள்.

மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. “அண்ணா சமாதியில் என்ன எழுதியிருக்கு தெரியுமா செகரட்டரி?” என்றார். “தெரியும் அய்யா, எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” என்று எழுதியிருக்கிறது என்றேன். உடனே அவர், “எனக்கும் இங்கேதான் உறங்கனும்” என்றார். நான் அதிர்ந்தேன். “அதெல்லாம் இப்போ எதுக்கு பேசனும்” என்றேன். கொஞ்சநேரம் மவுனத்தில் கரைந்தது. “சரி கிளம்பலாம். ஏற்கெனவே நேரமாச்சு” என்றார்.” •

Leave A Reply