அண்ணாவிடம் இருந்தது என்ன பொடி? கலைஞர் சொன்ன ரகசியம்!

Share

1964-ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டை யிலுள்ள தியாகராயர் கல்லூரியில் தமிழ்ப் பேரவை ஒன்று துவக்கப்பட்டது. துவக்க விழாவிற்குப் பேரறிஞர் அண்ணாவை அழைக்கத் தீர்மானித்தனர்.

இதைக் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தபோது, அவர்கள் ஏற்கவில்லை. அப்போது மாணவர்கள் அறப்போராட்டத்தில் இறங்கியதால் கல்லூரி மூடப்பட்டது.

சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி போன்ற கல்லூரிகளுக்கும் இது “காட்டுத் தீ’யாய் பரவியது. போராட்டத்தின் தீவிரம் கண்டு நிர்வாகம் அண்ணாவை அழைக்க இசைவளித்தது.

விழா நாளும் வந்தது. அண்ணாவுடன் கலைஞரும் பங்கேற்றார். மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமானதால், கல்லூரி வளாகத்தில் கூட்டம் அலைமோதியது.

விழாவில் வரவேற்றுப் பேசிய தாளாளர் “என் வாழ்நாளில் மாணவர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய எழுச்சியை நான் கண்டதேயில்லை. ஒரு தனி மனிதனுக்கா இவ்வளவு பெரிய போராட்டம் என அதிர்ந்து போனேன். என்னதான் அண்ணாதுரையிடம் அப்படியொரு சொக்குப் பொடி உள்ளது?” என்றார்.

அவரைத் தொடர்ந்து விழாவில் பேசிய கலைஞர், இங்கு முதல்வர் பேசும்போது, “மாணவர்களை மயக்கும் அளவுக்கு அண்ணாவிடம் அப்படியென்ன சொக்குப் பொடி உள்ளது எனக் கேட்டார். நான் இங்கே ஒரு ரகசியத்தைச் சொல்ல பிரியப்படுகிறேன். அண்ணாவிடம் எந்தச் சொக்குப் பொடியும் இல்லை. ஒரு டப்பா மூக்குப் பொடிதான் உள்ளது” எனச் சொல்லும் போதே மாணவர்களின் கரவொலி அதிர்ந்தது.

Leave A Reply