நில உரிமைப் போராட்டத்தில் கலைஞருக்கு துணை நின்றவர்!

Share
முன்னாள் முதல்வர் கலைஞர் , முதன்முதலில் குளித்தலை தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற காரணமாக இருந்தவர் கவுண்டம்பட்டி முத்து (96). இவர் தனது வயதுமூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
“கலைஞரின் நட்பை மட்டும்தான் கடைசிவரை விரும்பினார். பதவிக்கு ஆசைப்படவில்லை!” என்று அவர் குறித்த நினைவுகளை அவருடைய உறவினர்கள் உருக்கமாக தெரிவித்தார்கள்.
1957-ல் குளித்தலை தொகுதியில் கலைஞர் தன் முதல் தேர்தலைச் சந்திக்கவும், அங்கே அவர் 8 ஆயிரத்து 296 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவும் இந்த கவுண்டம்பட்டி முத்துதான் காரணமாக இருந்தார். அந்த அளவுக்கு கலைஞரோடு அவருக்கு நெருக்கம் இருந்தது.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த நங்கவரம் பண்ணை பிரச்சனையை விடாப்பிடியாக அங்கேயே விவசாயிகளுடன் தங்கி தீர்த்து வைத்தவர் கலைஞர். அந்த பிரச்சனை குறித்து முதலில் தெரிந்துகொள்வோம்.
மேல நங்கவரம், சூரியனூர், காவகாரப்பட்டின்னு 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மூணு வேளைச் சோறு சாப்பிடுறாங்கன்னா, அதுக்குக் காரணம் இந்த கவுண்டம்பட்டி முத்துவும், கலைஞரும்தான். நங்கவரம் பண்ணையை எதிர்த்து அவர்கள் நடத்திய மாபெரும் போராட்டம்தான் காரணம்.
1956-ம் ஆண்டு இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நங்கவரம் பகுதியைச் சேர்ந்த என்.ஆர்.ராமநாதய்யர், என்.ஆர்.ரெங்கநாதய்யர் ஆகிய இரண்டு பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினாங்க. அதாவது, அந்தப் பண்ணையார்களுக்குச் சொந்தமான 33 ஆயிரத்து 412 ஏக்கர் நிலத்தை இந்தப் பகுதி விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டிருந்தாங்க.
பல வருடங்களாக விவசாயிகள் பயன்பாட்டில் அந்த நிலங்கள் இருந்தன. அப்போது, காமராஜர் ’60-க்கு 40-னு’ ஒரு சட்டம் போட்டார். அதாவது, நிலங்களின் உரிமையாளர்களுக்கு 60 சதவிகிதமும், உழுத விவசாயிகளுக்கு 40 சதவிகித நிலங்களையும் பிரிச்சுத் தரணும்ன்னு சொன்ன சட்டம் அது.
ஆனால், ராமநாதய்யர் அப்படிச் செய்யாமல், விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த அத்தனை நிலங்களையும் பிடுங்க முயன்றார். இதனால், விவசாயிகள் நங்கவரம் பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். 1953-லிருந்து நடந்துவந்த அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது கவுண்டம்பட்டி முத்துதான்.
1956-ல் இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது, தி.மு.க-வின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த அன்பிலாரைக் கூப்பிட்ட அண்ணா, ‘கலைஞரை அழைத்துப் போய், நங்கவரம் விவசாயிகள் போராட்டத்தைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துவைக்க ஏற்பாடு செய்’ என்றார்.
கலைஞர் களத்துக்கு வந்தார். நேராக வயல்களுக்கு 10 ஆயிரம் விவசாயிகளைத் திரட்டிட்டு போய், தானே ஏரைப் பூட்டி ஓட்டியதோடு, ‘உழுதவனுக்கே நிலம் சொந்தம்’, ‘நாடு பாதி நங்கவரம் பாதி’ என்று கோஷம் போட்டார். தொடர்ந்து, ஆறு நாள்கள் வயல்களிலேயே இருந்து கடுமையான போராட்டம் நடத்தினார். அதன் காரணமாக, மாவட்ட நிர்வாகமும், ராமநாதய்யரும் கவுண்டம்பட்டி முத்துவையும், கலைஞரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அங்கே விவசாயிகள் சார்பாக இவர்கள்வைத்த கோரிக்கையை பண்ணையார் ஏத்துக்கிட்டார்.
இதனால், மூணு வருஷ விவசாயிகளின் உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்தது. எத்தனையோ பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களின் போராட்ட வியூகங்களால் சாதிக்க முடியாத விஷயத்தைத் தங்கள் வீரியமான போராட்டத்தால் கலைஞரும், கவுண்டம்பட்டி முத்துவும் சாதித்து காட்டினார்கள்.
அதனால், 1957-ல் குளித்தலைத் தொகுதியில் நின்ற கலைஞரை இங்குள்ள மக்கள் வெற்றிபெற வைத்தனர். ‘உன்னால்தான் இந்த வெற்றி’னு அறிஞர் அண்ணாவும் கலைஞரும் சொன்னாங்க. எவ்வளவோ பதவி கொடுத்தும் கவுண்டம்பட்டி முத்து, ‘உங்க நட்பு ஒன்றே போதும் தலைவரே’னு மறுத்துவிட்டார்.
இருந்தாலும், கவுண்டம்பட்டி முத்துவின் இரண்டாவது மகனுக்கு, பி.ஆர்.ஓ பதவி கொடுத்து, தன் நன்றியை கலைஞர் வெளிப்படுத்தினார். அதேநேரம், கடைசி காலம் வரை கலைஞருக்கு உண்மையான நண்பராகவும், கட்சியில் தொண்டராகவும் மட்டும் இருந்து மறைந்திருக்கிறார், கவுண்டம்பட்டி முத்து” என்றார்கள்.

Leave A Reply