நூலக ஆணைக்குழு தலைவர் பதில் சொல்வாரா?

Share

நூலகத்துறைக்காக இதழ் தேர்வு குழு தேர்ந்தெடுத்த இதழ்களில் முறைகேடுகளை சுட்டிக் காட்டினால், நூலக ஆணக்குழு தலைவர் பதில் சொல்வதுதான் முறையாகும்.

இதழ்தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர், ஏதோ அவர்தான் முழு தேர்வுக்கும் பொறுப்பானவர் போல பதில் சொல்லியிருக்கிறார். இதுவும் சர்ச்சையாகி இருக்கிறது.

இதழ் தேர்வுக்குழுவில் இலக்கிய இதழ்களை தேர்வு செய்ய பத்திரிகையாளர் சமஸ் மற்றும் அறிவியல், பொது, பொழுதுபோக்கு, குழந்தைகள், ஆங்கில இதழ்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் பத்திகையாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 500 இதழ்கள் வாங்கப்பட்டிருந்த நிலையில் இந்த குழு 200 இதழ்களை மட்டும் தேர்வு செய்துள்ளது. அதாவது 300க்கு மேற்பட்ட இதழ்களை தவிர்த்துள்ளது. இவை அனைத்தும் குப்பைகள் என்று சமஸ் கூறியிருக்கிறார். இவர் நடத்தும் அருஞ்சொல் இணைய இதழைக்கூட ஒரு குழுவினர் குப்பையென்று சொல்கிறார்கள்.

ஒரு இதழை குப்பை என்று இவர் எப்படி மதிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. சரி, அவர் தன்னை ஒரு மேதாவியாக பில்டப் செய்துகொள்கிறவர் என்று பத்திரிகை நண்பர்களுக்கே தெரியும்.

ஆனால், தமிழ் இந்துவில் எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களிடம் கட்டுரை வாங்கிப்போட மட்டுமே முடிந்த இவரே ஒரு குப்பையாகத்தான் அங்கே இருந்தார். மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து வந்த அந்த பத்திரிகையை குப்பையாக்கியதில் இவருடைய பங்கு முக்கியமானது என்று இப்போதும் புலம்புகிறார்கள்.

இதழ் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று பத்திரிகையாளரும் அறம் இணையஇதழ் ஆசிரியருமான சாவித்திரி கண்ணன் ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார். இதுவரை அதற்கு பதில் சொல்ல திராணி இல்லை.

எத்தனை இதழ்கள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றில் எத்தனை இதழ்கள் நிராகரிக்கப்பட்டன. எதற்காக நிராகரிக்கப்பட்டன. எந்த அடிப்படையில் இதழ்களுக்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டன என்பதை நூலக ஆணைக்குழு தெளிவுபடுத்தினால் புரிந்துகொள்ளப் போகிறார்கள்.

நிராகரிக்கப்பட்ட இதழ்களிலும், அனுமதிக்கப்பட்ட இதழ்களிலும் அரசு அனுமதி பெற்றவை எத்தனை, அனுமதி பெறாதவை எத்தனை என்று விளக்கம் அளிக்க வேண்டியது நியாயம்தானே.

சாதிச்சங்க இதழ்கள், மதம் சார்ந்த இதழ்கள் இவற்றையெல்லாம் காலங்காலமாக வாங்கிக் கொண்டிருந்தார்கள். முந்தைய திமுக அரசாங்கத்திலும் இது நடந்தது. அதை மாற்ற வேண்டியது நல்ல முடிவுதான். ஆனால், எத்தனை சிறு பத்திரிகைகளுக்கு இடம் கொடுத்தார்கள். பெரு நிறுவனங்களைச் சேர்ந்த இதழ்கள் எத்தனை தேர்வு பெற்றன என்று அறிய வேண்டியது அவசியம் அல்லவா?

விகடன் குழுமத்தை சேர்ந்த நான்கு இதழ்கள் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது அந்த இதழ்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டது எப்படி? அவற்றுக்கு அனுமதி கொடுத்தது யார்? ஆங்கில இதழ்களை பட்டியலிட்டு கொடுத்தது யார்? இதற்கெல்லாம் பதில் சொல்வாரா நூலக ஆணைக்குழு தலைவர்?

புதிய இதழ்கள் எத்தனை வந்தன? அவை நிராகரிக்கப்பட்ட காரணம் என்ன என்று சொன்னால்தானே அதை சரிசெய்ய முடியும். அனுப்பச் சொல்வார்களாம். காரணம் சொல்ல மாட்டார்களாம் என்றால் இது எதில் சேர்த்தி?

சமஸ் கிட்டத்தட்ட தன்னை அரசாங்க ஆலோசகர் ரேஞ்ச்சுக்கு பில்டப் செய்து, பிம்பம் கட்டமைக்க முயல்வது நல்லதல்ல. ஏதோ நமக்கு தெரிந்ததை சொல்லிவிட்டோம்.

Leave A Reply