புலிகளுக்கு கலைஞர் மீது ஏனிந்த கடுங்கோபம்? – ராதாமனோகர்

Share

புலிகளுக்கு கலைஞர் மீதும் ரணில் விக்கிரமசிங்க மீதும் இருக்கும் அசாத்திய கோபம் ஒரு சாதாரண விடயம் அல்ல.

புலிகளின் கூட்டு அறிவியல் என்பது ஒரு விசித்திரமான வளர்ச்சியை கொண்டிருந்தது.

சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல அவர்களின் கூட்டு மனோநிலை ஒருபோதும் இருக்கவில்லை.

அதற்கு பல காரணிகளை நாம் ஆய்வு செய்யவேண்டி இருக்கிறது.

மதங்களின் அதீத கட்டுப்பாட்டு கோட்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தி இருக்கக்கூடும் .

அப்படியாயின் இலங்கை நிலப்பரப்பில் தோன்றிய எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத ஒரு வித்தியாசமான சிந்தனை போக்கு புலிகளிடம் மட்டுமே எப்படி உருவானது?

இதை ஆய்வு செய்யப்புகின் தவிர்க்கவே முடியாதவாறு புலிகள் இயக்கம் காலூன்றிய   நிலப்பிரதேசம் பற்றி செய்திகள் கொஞ்சம் கவனத்திற்கு உரியதாகும்.

அந்த இயக்கம் காலூன்றியது வடஇலங்கையில் வல்வெட்டி துறையாகும்.

வரலாற்று ரீதியாக இலங்கைக்கும் இந்தியா வுக்கும் நடைபெற்று வந்த வணிக  கடல் போக்கு வரத்தில் ஒரு முக்கிய இடமாக வல்வெட்டி துறை விளங்கிற்று.

1950ல் இருந்து  1960களில் இலங்கை போலீசும் கடற்படையும் இந்திய இலங்கை கடலில் பண்டங்களை அங்கும் இங்குமாக ஏற்றி இறக்கி செல்லும் கட்டுமரங்களை கண்காணிக்க தொடங்கியது.

வட இலங்கையின்  கரையோர பகுதிகளில் பரவலாக இது நடந்து கொண்டிருந்தாலும் வல்வெட்டி துறையில் மட்டும்தான் மிக அதிகமாக நடந்தது.

சர்வ சாதரண வணிகமாக நடந்து கொண்டிருந்த கட்டுமர போக்குவரத்து மெதுவாக சட்டவிரோத கடத்தல் என்ற நிகழ்வாக மாறியது.

மெதுவாக அவர்களின் வாழ்க்கை சக்கரம்  அரசுக்கு சவால் விட்டு ஓடத்தொடங்கியது.

காலப்போக்கில் அந்த பகுதி ஒரு வித்தியாசமான ராஜ்ஜியம் போல மாறி விட்டிருந்தது.

சட்டத்தை மீறுவது ஒரு சாகசமாக மாறி இருந்தது. இந்த  சட்ட  விரோத சாகச கலாசாரம் இலங்கை முழுவதும் ஓரளவு உண்டு. ஆனாலும் இதில் தலைமை வகித்தது வல்வெட்டி துறைதான்.

இந்த பின்புலத்தில்தான் புலிகள் அமைப்பு உருவானது.

சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறை எல்லை மீறி போனபோது பல ஊர்களிலும் பரவலான அடிப்படையில் சுமார் நான்கு இயக்கங்கள் உருவானது.

அவர்கள் எல்லோரும் கல்லூரி மாணவர்கள். அவர்கள் அரசியல் கருத்து பரிமாற்றம் அரசியல் விவாதம் என்று போய்கொண்டிருந்தார்கள்.

இந்த  சட்ட மறுப்பு அல்லது சட்ட விரோத இயக்கங்களின் வளர்ச்சியானது  வல்வெட்டி துறையை பின்புலமாக கொண்ட சில இளைஞர் களையும்  கவர்ந்ததில் வியப்பில்லை.

ஏனைய இயக்கங்களில் இல்லாத சில வசதி வாய்ப்புக்கள் வல்வெட்டிதுறை பின்புலத்தில் இருந்து வந்த புலிகளுக்கு இருந்தது.

இயல்பாகவே அரசின் சட்டங்களை எதிர்த்து தொழில் செய்து வாழ்ந்த பாரம்பரியம் அவர்களுக்கு இருந்தது.

அடுத்தது அவர்களிடம் பணம் இருந்தது.

இந்த பின்புலத்தில் இருந்து வந்த  பிரபாகரன் இறுதிவரை இதைத் தாண்டி சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை என்றே கருதுகிறேன்.

ஏனெனில் அவரின் அரசியல் நிகழ்ச்சிநிரல் முழுவதிலும் எல்லோரையும் கொல்வது என்பதுதான் பெரிதாக இடம்பெற்று உள்ளது.

அதன் மூலமே எல்லாம் சாதித்து விடமுடியும் என்று அவர் முழுவதுமாக கருதினார்.

எதிரிகளை எல்லாம் கொல்வது என்றே முடிவெடுத்தார்.

எதிரிகள் கிடைக்காதபோது கொஞ்சம் சந்தேக வளையத்தில் உள்ளவர்களை எல்லாம் விதம்விதமாக கொல்வது. ஏதாவது ஒரு விடயத்தில் கவனத்தை திசைதிருப்ப வேண்டுமென்றாலும் சம்பந்தமே இல்லாமல் யாரையாவது கொல்வது என்றே அவரது அரசியல் நடந்து முடிந்தது.

பிரபாகரன் மிக தீவிரமாக கொல்வது என்று முடிவெடுத்து அதிலிருந்து தப்பியவர்கள்மீது அவர் எல்லையில்லாத கோபத்தில் இருந்தார்.

அந்த லிஸ்டில் பலர் உள்ளனர்.

உள்ளூர் அளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்தார்.

பெரிய அளவில் உள்ளவர்கள்  முதல்வர்  கலைஞரும்   இலங்கை முன்னாள்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் ஆகும்.

ஈழத்தில் தனது அத்தனை கொலை முயற்சி களிலும் இருந்து டக்ளஸ் தேவானந்தா தப்பி கொண்டே இருந்தார். அது மட்டுமல்ல மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவராக ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று கொண்டே இருந்தார்.இது ஒரு போதும் பிரபாவால் சகிக்க முடியாமல் இருந்தது.

ரணில் விக்கிரமசிங்காவை மிகவும் சாதாரணமாக எடை போட்டு  2002 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டார்.

அதில்  நம்பவே முடியாத அளவு புலிகளுக்கு சலுகைகள் கிடைத்தது. உண்மையில்  இலங்கை அரசுக்கு அது ஒரு தோல்வி என்றே பலரும் கருதினார்கள்.

புலிகள் நினைத்தது எல்லாமே நடந்தது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கடல் ஆதிக்கம் இலங்கை அரசுக்கே இருப்பதை ஏற்று கொண்டது. அதில்தான் புலிகள் கோட்டை விட்டனர். கடலில் புலிகளை கலங்கடித்தது இலங்கை கடல்படை.

இதைவிட முக்கியமான விடயம். புலிகளின் முதலாம், இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர் களுக்கு பைவ் ஸ்டார் வசதிகளை இலங்கை அரசும் வெளிநாட்டு அரசுகளும் எஞ்சியோர்களும் பாய்ந்து பாய்ந்து அள்ளி வழங்கினார்கள்.

இளவரசர் காதல் நாடகத்தில் இறங்கி விட்டார் அல்லவா?  அதனால் சண்டையில் மனம் செல்ல வில்லை என்று ராஜராஜ சோழன் படத்தில் நம்பியார் கூறுவது போல் பலரும் கொஞ்சம் வாழ்க்கை வசதிகளை வெளி உலகத்தை எல்லாம் பார்க்கும் வாய்ப்பை பெற்றார்கள்.

அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த நோர்வே தூதுவரிடம் பிரபாகரன் பெரிய எல்சிடி தொலைக்காட்சி பெட்டியை கோரி இருந்தார்.

அதை அவர் கொழும்புக்கு தன்னோடு கொண்டு வந்தார்.

கட்டுநாயகா விமான நிலயத்தில் இருந்து வன்னிக்கு ஹெலிகாப்டரில் கொண்டு போய் சேர்க்கவேண்டும் .

அது மிகவும் பெரிய அளவாக இருந்ததால் ஹெலிகாப்டரில் ஏற்ற முடியவில்லை.

பின்பு இராணுவத்தினரே அதை வன்னி வரைக்கும் தரை மார்க்கமாக கொண்டுவந்து தருவதாக ர்வே பிரதிநிதிக்கு வாக்குறுதி அளித்தனர்.

அதன்படி வன்னிக்கு ஹெலிகாப்டரில் சென்ற நோர்வே பிரதிநிதி எரிக் சொல்ஹேயம் ராணுவ முகாமுக்கு சென்று அந்த டி.வி.யை பெற்று கொண்டுபோய் நேரில் பிரபாகரனுக்கு பரிசளித்தார்.

அடுத்த ஒரு சம்பவம் ஆண்டன் பாலசிங்கமே லண்டன் கூட்டத்தில் குறிப்பிட்டது.

“நாங்கள் தாய்லாந்தில் ஹோட்டலில் தங்கி இருந்தபோது  மாலை வேளைகளில் எல்லோரும் (சர்வதேச பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த புலிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்)  எங்கேயோ போய் விடுவார்கள்.

இரண்டு மூன்று நாட்களுக்கு பின்புதான எனக்கு தெரிந்தது இவங்களெல்லாம் இரவு முழுக்க நைட் கிளப்புகளில போய் விடிய விடிய இருந்து விட்டு வாறாங்கள் என்று…

இந்த இரண்டு சம்பவங்களும் அன்றைய காலக்கட்டத்தை பற்றிய ஒரு புரிதலுக்காகவே எழுதியுள்ளேன்.

பிரபாகரனும் புலிகளும் ரணிலின் ஒப்பந்த காலத்தில் எல்லாம் சரியாக போனதாக கருதியது எவ்வளவு தவறு என்று அவர்களுக்கு கொஞ்சம் தாமதமாகவே புரிந்தது.

இயக்கத்தலைவர்கள் ஒருவித  உயர்வசதி வாய்ப்புக்களை அனுபவிக்க தொடங்கி இருந்தனர்.  சத்தம் போடாமல் அமைப்பு கொஞ்சம் கலகலத்து  போயிருந்தது.

பிரபாகரனின் அன்லிமிடெட் வடமாகாண தலைமையின்  போரால் வெறுத்து போன கருணா தலைமையில்  கிழக்குமாகாண போராளிகள் பிரிந்து போனார்கள்.

இதுதான் புலிகளின் முடிவுக்கு ஆரம்பம்.

களத்தில் பெரிதும் நின்று போராடிய கிழக்கு மண்ணின் மைந்தர்கள் வடக்கு புலிகளின் ஆணைக்கு இனி கட்டுப்பட மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

இவை எல்லாம் ரணிலின் ஒப்பந்ததால் வந்த வினை என்று பிரபாகரன் கருதினார்.

கலைஞர் மீது ஏன் புலிகளுக்கு கோபம்?

புலிகள் வைகோ மூலம் திமுகவை கைபற்றி தமிழகத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிரந்தரமாக வைத்திருக்கலம் என்று கனவு கண்டார்கள்.

நெடுமாறன், மணியரசன், நடராசன், வைகோ மட்டுமல்ல, சில சில்லறை கம்யூனிஸ்டுகள் உட்பட பலரும் இதற்கு தெரிந்தோ தெரியாமலோ தூபம் போட்டாரகள்.

அவர்களின் எல்லா கணக்கும் சரியாகவே சென்று கொண்டிருந்தது.

திமுக எம்பியாக இருந்த வைகோவுக்கு புலிகளின் விளம்பரம் அளவு கணக்கில்லாமல் கிடைத்து கொண்டே இருந்தது.

ஈழத்துக்கு பிரபா தமிழகத்துக்கு வைகோ என்ற ரேஞ்சில் அது இருந்தது.

முழு தமிழக ஊடகங்கள் மட்டுமல்ல இந்திய ஊடங்களும் வைகோவுக்கு அப்போது கொடுத்த விளம்பரம் பிரமிக்கதக்கது.

இந்த நிலையில்.. 1991ல்  பத்மநாபாவும் 14 இதர ணிறிஸிலிதி தலைவர்களும் சென்னையிலேயே பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதில் குற்றவாளிகளை கலைஞர் தப்ப விட்டு விட்டார் என்று கலைஞர் மீது ஒரு பாரிய குற்றச்சாட்டு உண்டு.

அதன் காரணமாகவே திமுக ஆட்சி கலைக்க பட்டது.

இதுவரை இந்த சம்பவத்தின் ஆழம் பெரிதாக ஆராயப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

இது ஒரு வெறும் குற்றவியல் கொலைகள் அல்ல.

புலிகள் தங்களது போரை தமிழகம் நோக்கி நகர்த்தி விட்ட செய்தி இது.

இதன் சரியான தன்மையை பலரும் இன்று வரை உணரவில்லை.

குற்றவாளிகளை தமிழக போலீசாரால் கைது செய்திருக்க முடியும் என்றே பலரும் கருதினார்கள்!

அப்படியாயின் ஏன் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை?

கலைஞர்  அதில்  போதிய கவனம் செலுத்தவில்லையா? கண்டும் காணதது போல விட்டுவிட்டாரா? அப்படியாயின் ஏன்? என்பது போன்ற ஏராளமான கேள்விகள் எழுகிறது.

தமிழகம் ஒரு போர்  வளையத்துக்குள் சிக்கி விட்டது என்பது கலைஞருக்கு நிச்சயம் தெரிந்திருக்கிறது.

இந்த இடத்தில கலைஞருக்கு இருந்த ஷீஜீtவீஷீஸீs வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

ஒரு புறத்தில் மத்தியில் சந்திரசேகர் அரசு சாதகமாக இல்லை.

இந்திய மத்திய அரசுக்கு ஒருபோதும் இலங்கை தமிழர் விடயத்தில் ஒரு தெளிவான நோக்கம் இருந்தது கிடையாது.

மத்திய அரசின் ஒவ்வொரு அதிகார மையமும் ஒவ்வொரு விதமாக சிந்தித்து ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு இருந்தன..

புலிகளால் அதிக ஆபத்தா மத்திய அரசால் அதிக ஆபத்தா என்பதே பிரித்து கூற முடியாத அளவு குழப்பம் நிறைந்த ஒரு இக்கட்டான காலமது.

திமுகவை எப்படியாவது அரசியல் அரங்கில் இருந்து ஒழித்து கட்டிவிட அந்த ஆரிய அரசும் ஆதிக்க வர்க்கமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்கள் நச்சு பற்களை நீட்ட மறந்ததே இல்லை.

திமுகவை காப்பாற்ற வேண்டும் என்பதே கலைஞரின் உயிர்மூச்சு என்பதை அவரின் எதிரிகளே கூட மறுக்க மாட்டார்கள்.

புலிகளின் தமிழக விஸ்தரிப்பு போரை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ கலைஞர் சரியாக கணித்திருந்தார்.

மூர்க்கர்களான புலிகளை எதிர்த்தால் அதன் பின் விளைவுகள் திமுகவுக்கு மட்டுமல்ல புலிகளுக்கும் தமிழகத்தில் தங்கி இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இன்னும் சரியாக கூறப்போனால் மொத்த தமிழகத்துக்கும் பாரிய சிக்கலை ஏற்படுத்தி விட்டிருக்கும்.

புலிகளை பெரிதாக ஆதரிக்காமல அதே சமயம் எதிர்க்காமல் புலிகளின் ஆபத்து பற்றி ஊடங்களோ பிற அரசியல் கட்சிகளோ கூறுவதை காதில் போட்டு கொள்ளாமல் இருப்பது போல கலைஞர் நடந்து கொண்டார்.

கலைஞர் ஒரு soft target என்ற அளவில் மட்டுமே புலிகள் கருதும் வண்ணம் ஒரு நீக்கு போக்காக நடந்து கொண்டார் என்றெண்ணுகிறேன்.

தமிழகத்தில் இருந்த புலிகளின் ஆதரவு  வலையமைப்பு இந்திய அமைதிப்படை காலத்தில் கொஞ்சம் வலு இழந்தும் இருந்தது.

இந்த நிலையில் திமுகவை சீண்டி மேலும் சிக்கல் வேண்டாம்.

ஏற்கனவே கலைஞர் புலிகளுக்கு ஆதரவாகத் தானே இருக்கிறார் ஏன் அவசரப்படவேண்டும் என்று புலிகள் காத்திருந்தனர் என்று கருத இடமுண்டு.

இந்த நிலையில் புலிகள் தங்களது வைகோ என்ற துருப்பு சீட்டை பயன்படுத்தியே திமுகவை கைப்பற்றலாம் என்று களத்தில் குதித்தனர்.

அன்றைய நிலையில் கலைஞரின் உயிருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்தால் திமுக இலகுவாக வைகோவின் கைகளில் வீழ்ந்து விடும்..

அந்த  ஆபத்து அருகே நின்றது!

வைகோவோடு சேர்த்து திமுகவின் ஒன்பது மாவட்ட செயலாளர்களை பிரித்து எடுப்பதில் புலிகள் வெற்றி பெற்றார்கள்!

எப்படியும் வைகோ திமுகவை கைப்பற்றிவிடுவார் என்று புலிகள் நிச்சயமாக நம்பினார்கள். அப்போது புலிகளின் உலக ஊடகங்கள் வைகோவுக்கு கொடுத்த விளம்பரத்தை கொஞ்சம் அவதானித்தால் அந்த உண்மை தெரியும்.

திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும்  தேர்தல் ஆணையம் போன்ற பல காரணிகளால் வைகோவின் (புலிகளின்)   திட்டம் தோல்வி அடைந்து விட்டது.

அதன் பின்பு வைகோவின் மதிமுக பெருவெற்றி பெறும் என்று புலிகள் நம்பி இருந்தனர். (இப்போது சீமானின் சக்தியை நம்புவது போல என்று வைத்து கொள்ளலாம்)

தேர்தல்களில் வைகோ அடைந்த தோல்வியை புலிகள் தங்களின் தோல்வியாகவே கருதியிருந்தனர்.

அன்றில் இருந்து ஆரம்பித்தது கலைஞர் மீதான புலிகளின் கடும் வெறுப்பு பிரசாரம்.

தங்களின் சகல ராஜ தந்திரங்களும்  நரித் தந்திரங்களும்  ஒரே அடியாக கலைஞரிடம் தோல்வி அடைந்ததால் அவர்களுக்கு கலைஞர் மீது  உண்டான  கோபம் அளவிட முடியாதது.

புலிகளின் வரலாற்றை உற்று நோக்கினால்தான் இதை புரிந்து கொள்ள முடியும்.

கலைஞர் மீது மக்கள் மத்தியில் எவ்வளவு மோசமான பிம்பத்தை உண்டாக்க முடியுமோ அவ்வளவு மோசமான பிம்பத்தை இன்றுவரை உண்டாக்கி கொண்டே இருக்கிறார்கள்.

புலிகள் அமைப்பில் ஒரு விடயம் உற்று நோக்க வேண்டியுள்ளது.

புலிகள் தங்கள் தகவல்களை தங்கள் ஆதரவாளர்களுக்கோ மக்களுக்கோ பெரிதாக கூறுவதில்லை.

ஆனால் புலிகளின் குறிப்பை உணர்ந்து அதன் படி பிரசாரங்களை முழு மூச்சுடன் முன்னெடுக்க புலி ரசிகர்கள் பழக்கபடுத்தபட்டு உள்ளார்கள்.

புலிகள் இல்லாவிடினும் இந்த ரோபோடிக் புலி ரசிகர்கள்  புலியின் சிந்தனை வழியே பரப்புரைகளை தொடர்ந்து  செய்வார்கள்.

உளவியல் ரீதியில் இவர்கள் நோய் வாய்ப்பட்டவர்கள். .

என்ன செய்வது இவர்களுக்கு இன்னும் கூட பொழுது விடியவில்லையே?                                 •

Leave A Reply