இணையதளத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துங்கள் – திமுக ஐ.டி. விங் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்

Share

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி, செப்டம்பர் – திராவிட மாதத்தையொட்டி ஒருங்கிணைத்த ட்விட்டர் ஸ்பேசஸில் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை 30-09-22 ஆம் தேதி ‘திராவிட அரசு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அதன் விவரம் பின்வருமாறு,

செப்டம்பர் மாதத்தை திராவிடர் மாதம் என்று தலைப்பிட்டு, இணைய வழி கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருக்கிற, தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களையும், தகவல் தொழில்நுட்ப அணியின் பல்வேறு பொறுப்பாளர்களையும் முதலில் வாழ்த்துகிறேன்.

தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! என் பாசமிகு தமிழ்நாட்டு மக்களே! உங்கள் அனைவருடனும் ட்விட்டர் ஸ்பேசஸ் மூலமாக உரையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, அரசியல் இயக்கம் மட்டுமல்ல – அறிவியக்கம்!

தந்தை பெரியார் பிறந்தநாள் –

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் –

கழகம் தோன்றிய நாள் – ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடுகிற வழக்கத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தார். நாமும் அதனை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

தலைமைக் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 15 அன்று கொண்டாடினாலும் – மற்ற நாட்களில், மாவட்டக் கழகங்கள் சார்பிலும் – கழகத்தின் துணை அமைப்புகள் சார்பிலும் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம்.

அமைச்சர்கள் மா.சு, சேகர்பாபு போன்றவர்கள், மாதம் முழுவதும் விழாக்களை நடத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில், IT wing சார்பில், திராவிட இயக்கம் சார்ந்த அறிவார்ந்த உரையாடல்களை இந்த செப்டம்பர் மாசம் முழுவதும் ட்விட்டர் ஸ்பேசஸில் நடத்தியிருக்கிறார் தம்பி டி.ஆர்.பி.ராஜா.

ஒருகாலத்தில் நம்முடைய கொள்கைகளை பரப்புவதற்கு பேச்சு மேடைகளையும், நாடக மேடைகளையும், திரையுலகத்தையும், எழுத்துலகத்தையும் பயன்படுத்தினோம். கவிதையாக, கதையாக, நாவலாக பரப்பினோம்.

அதேபோல, இன்றைக்கு டெக்னாலஜி எவ்வாறு டெவலப் ஆகிருக்கிறதோ, அதற்கேற்ற மாதிரி, நாமும் adopt ஆகியிருக்கிறோம். எந்தெந்த மீடியத்தில் எல்லாம் மக்களுடன் பேச முடியுமோ, அது அனைத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

* பேஸ்புக்

* யூடியூப்

* வாட்ஸ் அப்

* ட்விட்டர்

* இன்ஸ்டாகிராம்

* ஷேர் சாட்

* டெலகிராம்

– இப்படி அத்தனை வசதியையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கழகத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான தளமாக, சோஷியல் மீடியாவை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுக்கென்று வரலாறு இல்லாதவர்கள், கொள்கை இல்லாதவர்கள், பொய்களை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள், இந்த மண்ணில் பிற்போக்குத்தனங்களை நிலைபெற செய்வது மூலமாக – தங்களுடைய ஆதிக்கத்தை நிறுவலாம் என்று நினைப்பவர்கள் என்று பலரும், பல ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக பல அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

அவ்வாறு பரப்பும் அத்தனை அவதூறுகளுக்கும், தலைவர் கலைஞரே பல நேரங்களில் தன்னுடைய கடிதங்கள் மூலமாகவும், அறிக்கைகள் மூலமாகவும் பதில் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அந்த அவதூறுகளை பரப்புவதற்குக் காரணம், புதிதாக வரக்கூடிய இளைஞர்கள், புதிதாக வெளி உலகை பார்க்க இருக்கிறவர்களுக்கு முதலிலேயே இந்தப் பொய்களை அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்றுதான். அப்படிப்பட்ட அவதூறுகளை, பொய்ச்செய்திகளை நம்முடைய IT Wing நன்றாகவே Counter செய்கிறார்கள். அதற்காக பாராட்டுகிற அதே நேரத்தில், இன்னும் வேகமாகவும் efficient-ஆகவும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு செய்தி பரவுகிறது என்றால், அதனுடைய உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ள இன்னொரு செய்தி வர வேண்டும் என்ற ஒரு அவல நிலை இன்றைக்கு வந்துவிட்டது. அந்தளவிற்கு பொய்களை பரப்புகிறார்கள். அதனால், உங்களுக்கு ஒரு செய்தி வருகிறது என்றால் உடனே React செய்யாதீர்கள்.

அதேபோல, கடந்த காலங்களில் சில பிரிவுகள் நேரும்போது உணர்ச்சி வசத்தில் பேசப்பட்ட வார்த்தைகளை வைத்துக் கொண்டு, விளையாடி பார்க்கலாம் என்று சிலர் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். அவ்வாறு பேசுகிற பேச்சின் Context என்ன என்று பார்க்காமல், Content-ஐ மட்டும் பார்க்காதீர்கள்.

உங்களை ஒருவர் அசிங்கப்படுத்திவிட்டார் என்று யாராவது சொன்னால், அந்த விஷயத்தை எடுத்து சொன்னவர் மேலேயே அதை திருப்பி போட்டு Game ஆடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி, அவர்கள் போடுகிற தப்புக் கணக்குக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். இது காலத்தின் தேவை என்று சொல்வதைவிட, இதுதான் உங்களுடைய கடமை!

செப்டம்பர்-1 அன்று, மாநில திட்டக் குழுத் துணைத்தலைவர் மதிப்பிற்குரிய முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில் பேசி, இந்த series-ஐ தொடங்கி வைத்தார்.

‘திராவிடத்தால் கற்றோம்’ என்ற தலைப்பில் அமைச்சர் பொன்முடி அவர்களும்,

‘திராவிடப் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்களும்,

‘திராவிட வெளிச்சம்’ என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களும்,

‘திராவிட இதழியல்’ குறித்து மதிப்பிற்குரிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும்,

‘திராவிடக் கனல்’ என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., அவர்களும்,

‘திராவிட இந்தியா’ என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய பீட்டர் அல்போன்ஸ் அவர்களும்,

‘திராவிடப் புரட்சி’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களும்,

‘திராவிட வாழ்வியல்’ என்ற தலைப்பில் தங்கை கனிமொழி எம்.பி., அவர்களும் செம்மையான கருத்துகள் நிறைந்த தங்களுடைய உரைகளை இங்கு நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அமைச்சர் பெருமக்கள் ஆறு பேரும் –

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேரும் –

சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரும் மற்றும் பலர் உட்பட – மொத்தம் 29 பேர் உரையாற்றி, இப்போது முப்பதாவது ஆளாக நான் பேசிக்கொண்டு இருக்கிறேன்.

Daily நடந்த Spaces-ல் 3 இலட்சம் பேருக்கும் மேல் கேட்டிருக்கிறார்கள். IT Wing-னுடைய இந்தச் சிறப்பான முயற்சிக்கு கிடைத்திருக்கிற முதல் வெற்றி இது!

‘திராவிட மாடல்’ மீது ஒட்டுமொத்த இந்தியாவே கவனம் செலுத்துகிற காலம் இது. அப்படிப்பட்ட காலத்தில், ஒரு மாதம் முழுவதும் திராவிட மாடலை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததை சாதனை என்றே சொல்லலாம். இன்றைக்கு Social Media reach ஆகாத மக்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு Social Media, Impact create செய்கிறது. 73 விழுக்காடு பேர் Phone-ல்தான் News பார்க்கிறார்கள். சராசரியாக ஒவ்வொருவரும் 3 முதல் 4 மணி நேரத்தை Social Media-ல் செலவு செய்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. ரிங்டோன் வரவில்லை என்றால்கூட பல பேர் வாட்ஸ்அப் எடுத்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்த இணைய வளர்ச்சியை நாம் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றோடு இந்த மாதிரியான Twitter Spaces-ஐ நிறுத்திக் கொள்ளாமல், Continue-ஆக நடத்த வேண்டும். அறிவுப்பூர்வமான கருத்துக்களையும் – ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் Discuss செய்து, productive-ஆக செயல்பட வேண்டும். முக்கியமான நிகழ்வுகளுக்கு முன்பும் – பின்பும் இதுமாதிரி Spaces நடத்தலாம்.

திராவிட இயக்க வரலாற்றை – கொள்கைகளை – போராட்டங்களை – சாதனைகளை – அதனால் மக்கள் அடைந்த பயன்களை நாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நான் முன்பு சொன்னது மாதிரியே, நம் மீதான அவதூறுகளுக்கு ஏற்கனவே பதில்கள் இருக்கிற மாதிரி, நம்முடைய சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், திராவிட இயக்க வரலாறும் கொள்கைகளும் ஆவணப்படுத்தப்பட்டு புத்தகங்களாக வெளிவந்த அளவுக்கு, வெகு சில இயக்கங்களுக்கு மட்டுமே புத்தகங்கள் வந்திருக்கிறது. இளைய தலைமுறையினரை கல்வி கற்க வேண்டும் என்று நான் எப்படி ஊக்கப்படுத்துகிறனோ, அதே மாதிரிதான் சமூகத்தைப் படிக்க வேண்டும் என்று நினைக்குறவங்களை அறிவார்ந்த புத்தகங்களை படியுங்கள் என்று சொல்கிறேன். அதற்கு அடையாளமாத்தான் கழகத்தினர் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களை பரிமாறிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். அதை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்கிறேன்.

இந்த ஸ்பேசஸில் இன்னும் சேர்த்து சொல்கிறேன். எழுத்தாற்றல் உள்ள கழகத்தினர் பொதுவெளியிலும் – புத்தகங்களையும் நிறைய எழுதுங்கள். உங்களுக்கு இப்போது நிறைய opportunity இருக்கிறது. அமேசான் Pen to publish, மாதிரியான options எல்லாம்கூட இன்றைக்கு இருக்கிறது. உங்கள் எழுத்துக்களை நீங்களே e-books-ஆக போடலாம். இவ்வாறு எந்தளவிற்கு நம்முடைய கருத்துகளை – கொள்கைகளை – சாதனைகளை நீங்கள் பொதுவெளியில் பரப்புகிறீர்களோ – அந்தளவிற்கு நன்மைகள் விளையும். எனவே எதனைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களது பரப்புரைகளைத் தொடருங்கள்.

‘திராவிட அரசு’ என்ற தலைப்பை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். திராவிட மாதத்தை தொடங்கி வைக்கும் செப்டம்பர் 1-ஆம் நாள் என்னை அழைத்து திராவிட அரசு என்று பேசச் சொல்லி இருந்தால், detail-ஆக நிறைய விஷயம் பேசியிருக்கலாம். நமது திராவிட அரசு எதை எல்லாம் செய்திருக்கிறதோ, அதையெல்லாம் 29 நாட்களாக எல்லோரையும் பேச வைத்துவிட்டு – இப்போது என்னை கடைசியாக பேச வைத்திருக்கிறார் தம்பி டி.ஆர்.பி.ராஜா. Dhoni-யை எனக்குப் பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு, என்னை Finisher Innings ஆட சொல்லியிருக்கிறார் போல.

திராவிடம் – தமிழர்களுக்கு கற்பித்தது.

திராவிடம் – தமிழர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது.

திராவிடம் – சமூகநீதியை நிலைநாட்டியது.

திராவிடம் – பெண்களுக்கு சம உரிமையை பெற்றுத் தந்தது.

திராவிடம் – தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.

திராவிடம் – தமிழ் மறுமலர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

திராவிடம் – இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலைநிமிர வைத்தது.

திராவிடம் – தேய்ந்து கிடந்த தெற்கை வளப்படுத்தியது.

இதுதான் திராவிட அரசின் இலக்கணம்! அத்தகைய திராவிட அரசைத்தான் நாம் நடத்திகொண்டு வருகிறோம்.

* அனைவரும் படிக்க அருகருகே பள்ளிகளை உருவாக்கினோம்.

* படிக்க வரும் பிள்ளைகளுக்கு உணவு தந்தோம், உடை தந்தோம், பாடப்புத்தகங்கள் தந்தோம்.

* உயர்கல்வியை அடைய கல்லூரிக் கல்வியை இலவசம் ஆக்கினோம். நம்முடைய இளைஞர்களை திறன்மிக்கவர்களாக வளப்படுத்த ‘நான் முதல்வன்’ திட்டத்தைத் தந்துள்ளோம்.

* ஏழை, எளிய பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கி கல்வி நிலையங்களுக்குள் அழைத்து வந்தோம்.

*சமூகநீதிக் கருத்தியலின் மூலமாக, பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற்றார்கள்.

* இன்றைக்கு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்க ஐம்பதாண்டு காலத்துக்கு முன்பு, பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் காரணம்!

கல்வி எனும் நீரோடை ஏழை, பணக்காரர் – உயர்ந்த சாதி – தாழ்த்தப்பட்ட சாதி – கிராமம், நகரம் – என்ற வேறுபாடும் மாறுபாடும் இல்லாமல் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகத்தான் திராவிட இயக்கம் உருவானது. உயர்சாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும். அதுவும் ஆண்கள் மட்டும்தான் படிக்க முடியும் என்று இருந்தது. அத்தகைய காலத்தில் இடஒதுக்கீட்டை உருவாக்கி – பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சி.

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் படிக்கலாம் என்ற நிலையை மட்டுமல்ல, பெண்களை ஆசிரியர்களாகவும் உருவாக்கியது திராவிட இயக்கம். அந்த சமூகநீதியை அரசியல்ரீதியாகக் காப்பாற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். ஆட்சிரீதியாகக் காத்தவர்கள், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்!

அந்த வரிசையில் கல்வி – சமூகநீதி – பெண்ணுரிமைத் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறோம்.

உயர்கல்வியிலும் – பள்ளிக் கல்வியிலும் – சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையிலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமைத் திட்டங்களின் மூலமாக தமிழ்ச் சமுதாயத்தின் மேம்பாடு என்பதில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறோம். நம்முடைய வளர்ச்சியை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுக் காட்டுவது சரியல்ல என்றாலும்- ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வடமாநிலம் எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? இதை எண்ணிப் பார்த்தாலே ‘திராவிட அரசு’ என்றால் என்ன என்று தெரியும்!

ஆட்சியைப் பற்றி குறை சொல்வதற்கு காரணம் கண்டுபிடிக்க முடியாதவர்கள், ‘திராவிடம்’ என்ற சொல்லை விமர்சிக்கிறார்கள். இதற்கு பல முறை நானும் விளக்கம் அளித்துவிட்டேன். ஒரு காலத்தில் இடத்தின் பெயராக – இனத்தின் பெயராக – மொழியின் பெயராக இருந்த திராவிடம் என்ற சொல், இன்று அரசியல் கருத்தியலாக இருக்கிறது என்பதுதான் நம்முடைய பதில். பேரறிஞர் அண்ணா அவர்கள்தான் சொன்னார்கள், “ஆரியம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அதைப் போலவே திராவிடம் என்றாலும் ஒருவகையான வாழ்க்கை முறை’‘ என்றார்.

திராவிட மாடல் அரசு தீட்டும் ஒவ்வொரு திட்டங்களிலும் இதனை நீங்கள் அறியலாம். என்னென்ன திட்டங்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். திராவிடம் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்ற வாழ்க்கை முறை! இதனை அறிய திருவள்ளுவர் – வள்ளலார் – தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் ஆகியோரை முழுமையாகப் படித்தால் புரிந்து கொள்ளலாம். எதையும் படிக்காமல் வாட்ஸ்அப் செய்திகளை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது. இணையத் தளத்தில் இயங்கும் நீங்கள் உங்களது காலத்தை ஆக்கபூர்வமாக செலவு செய்யுங்கள். நமது சாதனைகளைச் சொல்லுங்கள். நமது கொள்கையைச் சொல்லுங்கள். தவறான தகவலாக இருந்தால், அதற்கு உண்மையான தகவலைச் சொல்லுங்கள்.

அதேபோல் கழகத்தின் கொள்கைகள் – செயல்பாடுகளைத் தாண்டிச் சென்று கருத்துக்களைக் கூற முனையாதீர்கள். இடம், பொருள் இல்லாமல் கருத்துகளைச் சொல்ல வேண்டாம். கொச்சையாகச் சொல்ல வேண்டாம். அவதூறாக, ஆபாசமாக பதில்களைக் கூற வேண்டாம்.

ஆனால் நமது எதிரிகள் – மதவாத சாதியவாத சக்திகள் அவதூறாக பேசுவார்கள். கொச்சையாக பேசுவார்கள். கோபப்படுத்தப் பேசுவார்கள். பெண்களாக இருந்தால், அவர்களை கொச்சைப்படுத்தியே பேசுவார்கள். இவை அனைத்தையும் புறம்தள்ளி விட்டு – ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம். அதே நேரத்தில் நாமே புதுப் பிரச்சினைகளையும் உருவாக்கக் கூடாது.

தொழில் நுட்பத்தை கழகத்தின் வளர்ச்சிக்கு – அதன் மூலமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த அனைவரும் செயலாற்ற வேண்டும். திராவிட மாதம் குறித்த கலந்துரையாடலில் பங்கெடுத்தவர்களுக்கும் – இதனை சிறப்பாக நடத்திய தகவல் தொழில் நுட்ப அணிக்கும் – கருத்துக்களைப் பெற்றவர்களுக்கும் – இதனை தொடர்ந்து பரப்ப இருக்கும் அனைவர்க்கும் எனது வாழ்த்துகள். திராவிட மாதம் என்பது திராவிட ஆண்டாக – திராவிட நூற்றாண்டாக மலரட்டும்.

நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave A Reply