கலைஞர் போட்ட அரசாணையை நிறைவேற்ற மறுக்கிறாரா மா.சுப்பிரமணியன்? – A Sivakumar

Share
1. 2009-ல் அது எப்படி பீகாரை விட நமது அரசு மருத்துவர்கள் குறைவாக சம்பளம் வாங்கலாம் என்று வெளிப்படையாக அன்றைய முதல்வர் கலைஞர் கேட்டாரா இல்லையா?
2. அதன் பின் நடந்த பல்வேறு விவாதங்கள் மற்றும் Committee ஆய்வுகளுக்கு பின்பு தன்னுடைய ஆட்சிக்காலத்திலேயே அரசாணை 354 என்பதை அரசு மருத்துவர்களுக்கு தலைவர் கலைஞர் தந்தாரா இல்லையா?
3. அதன் பின் அந்த அரசாணை 354, முழுமையாக நடைமுறைக்கு வரவேண்டும் என்று கடந்த 13 வருடங்களாக அரசு மருத்துவர்கள் காத்திருக்கிறார்களா இல்லையா?
4. 2011-2016 அதிமுக ஆட்சி முழுமையாக நடந்து முடிந்த பின்பும் அந்த அரசாணை 354 நடைமுறைக்கே வரவில்லை என்பது உண்மையா இல்லையா?
5. கடந்த 2017ம் வருடம் முதல் அதற்காக அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்துகிறார்களா இல்லையா?
6. 2019 போராடிய மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்த அன்றைய எதிர்கட்சி தலைவரும், இன்றைய முதல்வரும், நம்ம தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கழக ஆட்சி அமைந்ததும் அரசாணை 354ஐ நிறைவேற்றி தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார் இல்லையா?
7. அப்படி இருக்கும் போது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காத்திருந்த மருத்துவர்கள் தலையில் இடியை இறக்குவது போல, அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் காலத்தில் தயாரித்த அரசாணை 293 வெளியிடப்பட்டதா இல்லையா?
8. திமுக ஆட்சி அமைந்ததும் தலைவரை நம்பி, மக்களுக்காகவும், மாநிலத்துக்காகவும் கொரோனா இரண்டாம் அலையில் அரசு மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றினார்களா இல்லையா?
9. திமுக ஆட்சி அமைந்ததும், விஜயபாஸ்கரின் அரசாணை 293 வெளிவரும் வரை அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வு குறித்து அரசிடம் பேசவேயில்லை . அப்படியென்றால் யாருடைய தூண்டுதலின் காரணமாக விஜயபாஸ்கரின் அரசாணை 293 வெளியிடபட்டது?
10. அரசு மருத்துவர்களிடமோ, சங்கங்களிடமோ கேட்காமல், கலந்தாலோசிக்காமல் விஜயபாஸ்கரின் அரசாணை திமுக ஆட்சியில் வெளிவர காரணம் என்ன?
11. அந்த அரசாணையை வெளியிட்டு மருத்துவர்களிடம் குழப்பத்தை விளைவித்தது யார் ?
12. முதல்வருக்கும், அமைச்சருக்கும் தெரியாமல், அவர்களிருவரும் தலைநகரில் இல்லாத நாளன்று திருட்டுத்தனமாக அந்த அரசாணையை வெளியிட்டவர்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
13. அரசாணை வெளியானது தவறு என்று அமைச்சரே அதை திரும்பப்பெற்ற பின்னரும், வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்கும் காரணம் என்ன?
14. கொரோனா பிரச்சனை ஓய்ந்ததும் இன்றைய முதல்வர் கொடுத்த 200 கோடி ரூபாய் பணத்தை, ஒட்டுமொத்தமாக பநோயற்றிய 18000 அரசு மருத்துவர்களுக்கும் பயனுள்ள வகையில் கலைஞரின் அரசாணையான 354ன் வழியே பிரித்து தராமல் இன்று வரை இழுத்தடிக்க காரணம் என்ன?
15. அந்த விஜயபாஸ்கரின் அரசாணை அன்று வெளியாக யாரெல்லாம் காரணமோ, அவர்கள் தான் இன்றும் கலைஞரின் அரசாணை 354-ஐ வெளியிட தடையாக இருக்கிறார்களா இல்லையா?
16. தங்களுக்கு இணையாக அரசு மருத்துவர்கள் எந்த காலத்திலும் சம்பளம் பெற்றுவிடக்கூடாது என்றே ஒரே நோக்கத்தில் கலைஞரின் அரசாணை 354ஐ தடுக்கும் ஐஏஸ் அதிகாரிகளின் கேவலமான சூழ்ச்சிக்கு திமுக அமைச்சர் பலியாகலாமா? தான் பலியாவதோடு மட்டுமல்லாமல் திமுக சார்பு அரசு மருத்துவர்களை பலிகொடுக்கலாமா?
17. கலைஞர் வடிவமைத்து தந்த அரசாணை 354ஐ பெறுவதற்கு, கலைஞரின் மகன் முதல்வராக இருக்கும் போது போராட்டம் நடந்தது. அதற்கு அமைச்சரே காரணம் என்பது அவருக்கு தீராத ஆயுட்கால பழி அல்லவா?
18. தன்னுடைய துறையில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது? யாரெல்லாம் தனக்கு உண்மையான களநிலவரத்தை சொல்லக்கூடியவர்கள்? யாரெல்லாம் திமுக சார்பு, திராவிட சிந்தனையுள்ள ஆட்கள்? யாரெல்லாம் விஜயபாஸ்கரின் செல்லபிள்ளைகள்? என்பதை இந்நேரம் அமைச்சர் கண்டறிந்திருக்க வேண்டாமா?
19. அமைச்சர் மலையாக நம்பிகொண்டிருக்கும் அதிகாரிகளின் சொதப்பல்களும், தவறான வழிகாட்டல்களும், அவர் பெயரையும், ஆட்சியின் பெயரையும் மக்கள் மத்தியில் கெடுக்கிறதா இல்லையா? இது அத்தனையும் மாண்புமிகு சுகாதார அமைச்சருக்கு தெரிகிறதா? புரிகிறதா?
20. சென்னை மாநகரத்தின் சிறந்த தந்தைகளில் ஒருவர் என்று பெயரெடுத்த அமைச்சர், மாநிலத்தின் முதுகெலும்பாக விளங்கும் சுகாதாரத்துறையின் சிறந்த அமைச்சர்களில் ஒருவர் என்று பெயரெடுக்க வேண்டுமா? வேண்டாமா?

Leave A Reply