ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மம்தா!

Share

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் 292 சட்டமன்றத் தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (02/05/2021) காலை 08.00 மணிக்கு தொடங்கியது. இதில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 211 சட்டமன்றத் தொகுதிகளில் அபார வெற்றிபெற்றது.

மேலும், 2 சட்டமன்றத் தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இந்த மாநிலத்தில் பாஜக 77 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. மற்ற 2 சட்டமன்றத் தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர், மற்ற கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஆகியோர் தலா ஒரு தொகுதியைக் கைப்பற்றினர். 

இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைக் கைப்பற்றிய முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. 

இந்த நிலையில், இன்றே தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆட்சிமன்றக் குழு தலைவராக மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்படுகிறார் என்றும், அதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவுக்கு விரையும் மம்தா பானர்ஜி, ராஜ் பவனுக்குச் சென்று அம்மாநில ஆளுநரை நேரில் சந்திக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, ஆளுநரிடம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் கடிதத்தை அளிக்கும் மம்தா பானர்ஜி, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த கடிதத்தைப் பரிசீலிக்கும் ஆளுநர், மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுப்பார். அதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா சிறிய அளவில் நடைபெற உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply