திராவிட இயக்கத் தலைவர்களின் தளபதி ஸ்டாலின்!

Share

பேரறிஞர் அண்ணாவை தந்தை பெரியாரின் தளபதி என்றார்கள். தலைவர் கலைஞரை அண்ணாவின் தளபதி என்றோம். கலைஞரின் தளபதியாக நாம் கற்பித்து முழங்கிய மு.க.ஸ்டாலின் இன்றைக்கு திராவிட இயக்கத்தின் தளபதியாக மிளிர்கிறார்.

என்னைப்போன்றோர் பலமுறை திசைமாறிச் சிந்தித்திருக்கிறோம். கலைஞரை விட்டே பிரிந்திருக்கிறோம். பதின்ம வயதுகளில் ஒருமுறையும், 1990களில் ஒருமுறையும் இது நடந்திருக்கிறது.

ஒருமுறை பயந்தாங்கொள்ளி நடிகரை நம்பியும், இன்னொருமுறை வெத்துவீராப்பு வசனகர்த்தாவை நம்பியும் போயிருக்கிறோம்.

ஆனால், இந்த இயக்கம் ஊட்டிய அறிவு காரணமாக வெகு விரைவிலேயே இருவரின் உண்மை உருவத்தை பகுத்தாய்ந்து உணரும் பக்குவம் இருந்தது. ஆம், ஒரு இயக்கத்தை அதுவும் அறிவார்ந்த இயக்கத்தை சீரழிப்பதற்கான ஆயுதங்களை பொருத்துவதற்கான கருங்காலிகள் அவர்கள் என்பதை எளிதில் உணர்த்தினார்கள்.

பாவம் அவர்களுடைய அறிவு அவ்வளவுதான். இன்றைக்கு தளபதி ஸ்டாலின், அந்த கருங்காலிகளை ஏற்றிப் போற்றலாம். ஆனால், அவர்கள் இருவரும் என்னைப் போன்றோருக்கு கற்றுக்கொடுத்த பாடம், அவர்களை என்றென்றும் வெறுக்கும் அளவுக்கு தள்ளியது.

அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை நேரடியாக நாசப்படுத்தினார். இன்னொருவரோ, தமிழ்நாடு நாசமாவதற்கு காரணமாக இருந்தார்.

முதலாமவரோ, சாகும்போது எப்படி செத்தோம் என்று தெரியாமலே செத்துப்போனார். இதோ, இரண்டாமவரோ, காலத்தின் கோலத்துக்கு சாட்சியமாக இருக்கிறார்.

நல்லவேளை, தனது கடைசிக் காலத்திலாவது, தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டிருக்கிறார்.

யாரை எதிர்த்து ஒரு மாபெரும் இயக்கத்தை உடைத்து சீரழிக்க திட்டமிட்டாரோ, அதே ஆளை ஆதரித்து, தனது இருப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவரை காலம் தள்ளிவிட்டது.

எந்த வாரிசுக்கு எதிராக என்று பொய்க்காரணம் கூறி ஒரு இயக்கத்தை பிளந்தாரோ, அதே வாரிசிடம், தனது வாரிசை ஒப்படைக்கும் அவலத்தையும் பார்த்துவிட்டோம்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றாலும், இன்னொரு முறை இதுபோன்ற அரசியல் நிகழ்வு ஏற்படாமல் இருக்க இவர்கள் இருவரும் நல்ல பாடமாக இருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் தலைவர்களுக்கு உரிய அத்தனை குணங்களும் ஒருங்கே பெற்ற தளபதி ஸ்டாலின் எதிரிகளை அரவணைக்கும் உள்ளம் கொண்டவராக இருக்கிறார். பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் என அவருடைய வழித்தோன்றல்களின் வழி நடப்பவராக இருக்கிறார்.

Leave A Reply