பைக்கில் சென்ற தாய், மகள் உயிரிழப்பு: மழைநீர் வடிகால்வாயை மூடுமாறு வலியுறுத்தும் ஸ்டாலின்

Share

பைக்கில் சென்ற தாய் மற்றும் மகள் உயிரிழந்தமையைத் தொடர்ந்து, மழைநீர் வடிகால்வாயை உடனே மூட வேண்டும் என அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து தாய் கரோலினா, அவரது மகள் இவாலின் ஆகிய இருவரும் உயிரிழந்த கொடூரமான நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.

திறந்தவெளி மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட 2018ம் ஆண்டிலேயே போடப்பட்ட திட்டத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரகம் அனுமதி அளிக்கவில்லை.

மத்திய அரசிடம் அதிமுக அரசும் வலியுறுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இரு அரசுகளின் தோல்வியினால், ஏற்கனவே தந்தையை இழந்து துயரத்தில் இருந்த குடும்பத்தில் தாயும் மகளும் அரசின் அலட்சியத்திற்குப் பலியாகியுள்ளார்கள்.

தாயையும் அக்காளையும் இழந்துள்ள இவாஞ்சலினுக்கு பெயரளவுக்கு நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக- அவரை முழுமையாகக் காப்பாற்றிட அரசு போதிய நிதியுதவி செய்ய முன்வர வேண்டும்.

அந்தப் பைபாஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடும் ரூ.16 கோடி மதிப்புள்ள திட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய,மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Leave A Reply