திமுகவில் தலித் மாவட்டச் செயலாளர்களை அதிகரிக்க ஸ்டாலினுக்கு வாய்ப்பு!

Share

சில விஷயங்களை சரிசெய்வதற்கான வாய்ப்பை காலம் உருவாக்கிக் கொடுக்கும். அந்த வகையில் திமுகவுக்கு எதிரான மிக முக்கியமான குற்றச்சாட்டை நிவர்த்தி செய்ய அந்த இயக்கத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காலம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

 

திமுக தலித் விவகாரங்களில் முன்னைப்போல இல்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக ஒலித்து வருகிறது. திமுகவில் இருக்கிற தலித் மக்களோ, தலித் வகுப்பைச் சேர்ந்த நிர்வாகிகளோ கொள்கைரீதியாக இயக்கத்தோடு இணைந்து இயங்கினாலும், எதிரிகளின் குறி தலித் மக்களை திமுகவுக்கு எதிராக திருப்பும் வகையிலேயே இருக்கிறது.

 

இந்தத் தாக்குதல்களை திமுகவில் இருக்கும் சாதிய மனப்பான்மை கொண்ட நிர்வாகிகள் மிக எளிதாக கடந்து போகிறார்கள். திமுகவை தலித் மக்களுக்கு எதிரான இயக்கமாக சித்தரிப்பது பெரும்பான்மை சாதிக்காரர்களின் வாக்குகளை பெற்றுத்தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தலித் வாக்குகளை பணத்துக்கு வாங்கிவிட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் திமுகவுடன் இருந்தாலும், வேறு கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கட்சியினரின் வாக்குகள் திமுகவுக்கு மொத்தமாக கிடைக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

 

எது எப்படி இருந்தாலும், தலித்துகளுக்கான கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் உருவான பிறகு, தலித் மக்கள் பல கட்சிகளில் இருந்தாலும், தாங்கள் உறுப்பினராக இருக்கும் கட்சியோடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

 

ஆக திமுகவில் இருக்கிற உறுப்பினர்கள் மட்டுமே, விசிக திமுக அணியில் இருக்கும்போது திமுகவுக்கு வாக்களிப்பார்கள். விசிக வாக்குகள் விலை போகும் ஆபத்து இருக்கிறது என்பதே எதார்த்தமான உண்மை.

 

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். திமுகவில் காலம்காலமாக உறுப்பினர்களாக இருக்கிற தலித்துகளுக்கு உரிய வாய்ப்பு அளித்து அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது. திமுகவில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட 65 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்துக்கு மட்டுமே தலித் மாவட்டச் செயலாளர் இருப்பதாக தமிழ் இந்து செய்து குறிப்பிடுகிறது.

 

எப்படிப் பார்த்தாலும் இது தலித் மக்களை திருப்திபடுத்தாது. என்னதான் காரணம் சொன்னாலும் அது தலித் மக்கள் மத்தியில் எடுபடாது. இதைச் சரிசெய்யும் வாய்ப்பு இப்போது உருவாகி இருக்கிறது. திமுகவில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச்செயலாளர் என்று நியமிக்க தலைமை முடிவெடுத்திருக்கிறது.

 

அப்படிப்பட்ட நிலையில், ஒவ்வொரு மாவட்டத்தையும் மூன்று முதல் 4 மாவட்டம் வரை பிரிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பிரிக்கும்போது, மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு ஒரு தலித் செயலாளரை நியமிக்க முடியும். அப்படி இல்லாவிட்டாலும், பொதுவான எண்ணிக்கையில் தலித் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவாவது வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் தலித்துகள் மத்தியில் செல்வாக்குமிக்கவர்களை தேர்வு செய்து அவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிப்பதன்மூலம் தலித் வாக்காளர்களின் நம்பிக்கையை பெறமுடியும்.

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதைக் கவனத்தில் கொள்வார் என்று நம்புகிறோம்.

Leave A Reply