இது மாதிரி பேட்டி கொடுக்க யாருக்காச்சும் தில் இருக்கா?

Share

1972-ம் ஆண்டு தந்தை பெரியார்

கலைமகள் இதழுக்கு  கொடுத்த பேட்டி

எழும்பூர் பெரியார் திடலிலுள்ள ‘விடுதலை அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ள இருக்கையில் பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்கள் கட்டிலில் அமர்ந்திருக்கிறார். ‘கலை மகள்‘ பற்றி அருகிலுள்ள ‘விடுதலை‘ நிருவாகி திரு. சம்பந்தத்திடம் விசாரித்தவாறு என்னை அன்புடன் வரவேற்று, உட்காருங்க’ என்றார். பனியனுக்குமேல் தமக்குப்பிடித்த கறுப்புச் சட்டை அணிந்திருக்கிறார். வெண்மையான முடியும், தாடியும் இவரது சிவந்த மேனிக்கு அளிக்கும் கம்பீர்யமே அலாதிதான். வட்டமான மூக்குக் கண்ணாடியின் வழியே ஊடுருவிப்பார்த்து, ‘என்ன கேக்கப்போறீங்க? கேளுங்க’ என்கிறார்.

‘நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்கிறேன்.

‘எட்டு, ஒன்பது வயசு வரைக்கும் ஈரோட்டிலே திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிச்சேன். அப்புறம் ஒரு ரூபாய் கொடுத்து அம்மை குத்திக்கொண்டு ‘மாடல் ஸ்கூல்’லே சேர்ந்து படிச்சேன். நாலாவது அதாவது போர்த் ஸ்டாண்டர்ட் வரைக்குந்தான் படிச்சேன். அதுக்கு மேலே படிக்கமுடியல்லே. கடைக்கு வந்துட்டேன்.’

‘உங்கள் தகப்பனாரின் கடையா?’

‘ஆமாம். கடையிலே மூட்டைக்கு விலாசம் போடறது முதலான எல்லா வேலை களையும் கவனிச்சுக்கிட்டிருந்தேன்.’

‘உங்கள் அண்ணா அதிகம் படித்தாரா?’

‘அவரு படிச்சாரு. லோயர் போர்த் பாரம் வரை படிச்சாரு. அந்தக் காலத்திலே

‘அப்பர் போர்தீ பாரம்‘ படிச்சிருந்தா தாசில்தார் பதவி வரைக்கும் போகலாம்.’ ‘தினமும் குளிப்பதில் உங்களுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்று சொல்கிறார்களே; அது மெய்தானா?’

‘குளிக்கவேணுங்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்லை. அதை ஒரு தொந்தரவாகவே நினைக்கிறேன். இப்ப நான் குளிச்சு ஆறுநாள் ஆச்சு. அந்தக் காலத்திலே, நான் சின்னப் பையனா இருந்தப்போ, எங்க வீட்டிலே எல்லாரும் தவறாமே குளிப்பாங்க. சந்தைக்குப் போய் வந்தா குளிப்பாங்க. போன இடத்திலே பல பேர் மேலே பட்டிருப்போமே, தீட்டா யிருக்குமே என்று குளிப்பாங்க. ஏன்? கக்கூஸ் போயிட்டு வந்தாக்கூடக் குளிப்பாங்க. ‘தீட்டு’ ‘தொடக்கூடாது’ என்பதிலெல்லாம் அவ்வளவா லட்சியமில்லை எனக்கு. வீட்டிலே என்னை அடக்கிப் பாத்தாங்க. முடியல்லை..’

‘ நீங்கள் எவ்வாறு நாத்திகரானீர்கள்?’

‘நான் அதுக்காகன்னு ஒண்ணுமே படிக்கல்லே; ஆராய்ச்சி பண்ணலே. பக்குவம் அடையல்லே. என் பகுத்தறிவுக்கு எட்டினதைச் சொல்றேன்.’

‘ கடவுள் இல்லை’ என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிற மாதிரி, ஆத்திகர்களுக்குக் ‘கடவுள் இருக்கிறார்’ என்று சொல்லவும் உரிமை உண்டல்லவா? பின் எதனால் கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி’ என்றெல்லாம் கூறுகிறீர்கள்?’

‘எதனாலே கடவுள் இருக்கிறார்னு நீங்க சொல்றீங்க? சம்பாதிச்சவன், லாபம் அடைஞ்சவன் எவனும் ‘எல்லாம் கடவுளாலே கிடைச்சுது’ன்னு சொல்றதில்லையே! தன்னுடைய திறமையாலே கிடைச்சுதுன்னுதானே நினைக்கிறான் ? கடவுளை நம்பி மேன்மை அடைஞ்சவன், ‘ இதெல்லாம் கடவுள் சக்தி’ன்னு சொல்லுறானா? திருட்டுப் போனால் போலீசுக்குத் தகவல் சொல்லுகிறோம். பணம் இருந்தால் பெட்டியிலே வச்சுப் பூட்டறோம். இதெல்லாம் கடவுள் செயலா? இதுக்கெல்லாம் கடவுள் எதுக்கு? கடவுள் இருக்காருன்னு சொல்ல உரிமை உண்டுங்கிறீங்க. சோறு திங்க உரிமை உண்டு; சாணி திங்க உரிமை உண்டான்னு கேட்கிறேன். இருக்கிறவரைக்கும் கடவுள், சாமின்று சொன்னவங்க என்ன சுகத்தைக் கண்டாங்க?’

‘கடவுள் உண்டா, இல்லையா என்ற வாதத்துக்கு முடிவேது? எனவே இதைத் தொடர்ந்து வாதிப்பது உசிதம் அல்ல என்று கருதி, இந்தப் பிரச்சினையை விடுத்து அடுத்த கேள்விக்கு வருகிறேன்.

‘ ஈரோட்டில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்கு நீங்கள் ‘டிரஸ்டி’ என்று சொல்கிறார்களே; அது உண்மைதானா?’

‘ஆமாம். அது முதலிலே பிள்ளையார் கோயிலா அமையலே. எனக்குக் குழந்தை இல்லையே என்று பெரியவங்க நாகப் பிரதிஷ்டை செய்தாங்க. 1898ஆம் வருஷம். அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கலியாணம் செய்து வச்சாங்க. குழந்தை பிறக்கல்லே. – அங்கே அப்புறந்தான் பிள்ளையார் வந்தது.’

‘உங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் யார் ?’

‘எல்லாருமே; என்னோடு நெருங்கிப் பழகிய எல்லாரும் எனக்கு நண்பர்கள். நண்பர்கள் கூட்டத் திலே நான் தலைவன். ராஜாஜியுடனும் நெருக்கம் அதிகம். அப்புறம் ஜஸ்டிஸ் கட்சியோடு தொடர்பு ஏற்பட்டது. அதிலே பலபேர் நண்பர்கள். குறிப்பிட்டு யாரைச் சொல்றது? நான் எல்லாருக்குமே நண்பன் தான்.’

‘சமீபத்திலே, கல்லூரிகளையெல்லாம் மூடிவிட வேண்டுமென்று சொன்னீர்கள் இல்லையா?

“ஆமாம். சொன்னேன்.’

‘நீங்களே லட்சக்கணக்கிலே பணம் உதவி, திருச்சியிலே ஒரு கல்லூரி ஏற்பட உதவி செய்தீர்கள். அதை எல்லாருமே ஒருமுகமாகப் பாராட்டுகிற நிலையிலே, கல்லூரிகளை மூடிவிடவேண்டுமென்று ஏன் சொன்னீர்கள் ?’

‘நான் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. படிச்சவனுக்கு வேலை கிடைக் கல்லியே! ஒரு பையன் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சா, உடல் உழைப்பிலே அவன் நம்பிக்கை இழக்கிறான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாயிடுத்து. உதாரணம் சொல்றேன். 1940-ல் கம்மானுக்கு 9 அணா, 10 அணா கூலி கொடுத்தேன். கொல்லத் துக்காரனுக்கு ஒரு நாள் சம்பளம் 12 அணா. பெண் பிள்ளைக்கு ஒரு அணாதான் கூலி. இன்னிக்கு எட்டு ரூபாய், 10 ரூபாய் கூலி கேட்கிறாங்க. காரணம், ஜனங்க எண்ணம் படிப்பிலே ஈடு பட்டது. கொஞ்சம் படிச்சவன் மண்வெட்டி கையிலே எடுக்கிறது கவுரவக் குறைச்சல்னு நினைக்கிறான். வேலைக்கு ஆள் இல்லை. இன்னொரு பக்கம் படிச்சவனுக்கு வேலை இல்லை; வேலையில்லாத் திண்டாட்டம். காலேஜ் இருந்து என்ன உபயோகம்?’ என்று உணர்ச்சி வசப்பட்டுக் கேட்கிறார் பெரியார்.

(அப்பொழுது எங்கள் இருவருக்கும் காபி வழங்கப்படுகிறது. ‘சாப்பிடுங்க’ என்கிறார் பெரியார்.)

“ நீங்கள் தினமும் எவ்வளவு தடவை காபி சாப்பிடுவீர்கள்? உங்களுடைய அன்றாட உணவுப் பழக்கம் எப்படி.’

“காலையிலே ‘ பெட்காபி’ சாப்பிடுவேன். ஆறரை மணிக்கு எழுந்திருப்பேன். யாராச்சும் வந்தாப் பேசிக்கிட்டு இருப்பேன் ; இல்லேன்னா படிப்பேன். அப்புறம் இரண்டு இட்லி சாப்பிடுவேன். ரெண்டு மலைப்பழம் சாப்பிடுவேன். காபி சாப்பிடமாட்டேன். மத்தியானம் புலால் உணவு; ஒரு கப் தயிர். இரண்டு வாழைப்பழம். மாலையிலே ஒரு கப் காபி சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு ரெண்டு வேளை காபி. அப்புறம் இரவிலே இரண்டு இட்லி ; மலைப்பழம். ஒரு நாளைக்கு ஆறு மலைப்பழம் சாப்பிடுவேன். கூட்டம் ஏதும் இல்லாதபோனா எட்டு எட்டரை மணிக்குப் படுப்பேன்.’

‘நீங்க எப்பொழுதுமே, எந்தக் கட்சி பதவிக்கு வருகிறதோ அதைத்தான் ஆதரிக்கிறதென்று ஒரு கொள்கை வைத்துக் கொண்டிருப்பதாகப் பலர் கருதுகிறார்கள். அது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’

‘ஆளும் கட்சியை நமக்கு வசப்படுத்தப் பார்ப்பேன். நம்ம கொள்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டால் தொடர்ந்து ஆதரிப்பேன். எதிர்த்தால் ஒழிக்க முயற்சி செய்வேன்.’ ஒளிவுமறைவின்றிக் கூறுகிறார்.

மதுவிலக்குக் கொள்கை பற்றி வினவுகிறேன். பளிச்சென்று பதில் வருகிறது திராவிடத் தந்தையிடமிருந்து.

‘குடிப்பது தவறில்லை. கள் குடிச்சுச் செத்தவங்க எவ்வளவு பேர், சொல்லுங்களேன்? நான் குடிக்கிறதில்லை. எப்படியோ அந்தப் பழக்கம் எனக்கு ஏற்படாமே இருந்திருக்கு. ஆனால் நண்பர்களுக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறேன். கள்ளுக்கடை எல்லாம் மூடி இருந்தாங்களே, அப்போ குடிக்காம இருந்தாங்கள்களா? குடிச்சுக்கிட்டுதான் இருந்தாங்க. ஒருத்தரும் அப்போ குடியைத் தடுக்கல்லே. வருமானம் குறைஞ்சது தான் மிச்சம். திருட் டுத்தனமாகக் குடிச்சாங்க. திருட்டுப் போறதைத்தான் நான் சொல்லுவேன். பிடித்துக் கொடுக்கிறது என் வேலையில்லையே! ஜனங்க சோம்பேறியாய் ஆனதற்குக் காரணமே மது ஒழிப்புத்தான். கூலி உயரக் காரணம் இதுதான். சினிமாவுக்குப் போறதைவிட இது நல்லதுதான்.’

‘வர தட்சிணைக் கொடுமை இப்போது எல்லாச் சாதியினரிடத்திலும் மிகவும் பரவியுள்ளதே, இதை ஒழிக்க நீங்கள் ஏன் பிரசாரம் செய்யக்கூடாது?’

‘படிச்சவன், படிக்காதவன் என்ற பேதம் உள்ளவரைக்கும் இந்த நிலை மாறாது. பெண் படிச் சவனை விரும்புகிறாள். ஆண் பிள்ளை படிச்ச பெண்ணைத் தேடறான். படிச்சவங்களுக்குக் கிராக்கி ஏற்பட்டுப் போச்சு. போட்டி உண்டாயிடுத்து. அதனாலே வரதட்சிணை வாங்குறது இயற்கையாயிடுத்து. பணம் வாங்கக் கூடாதுன்னா, முப்பது பவுன் நகை போடச் சொல்லுகிறான். நம்ம பொருளாதார அமைப்பு அப்படி ஆயிட்டுது. அப்போதெல்லாம் பார்ப்பனர்களுக்கு மட்டுந்தான் வரதட்சிணை கொடுக்க வசதி இருந்தது. இப்ப எல்லாரும் படிக்கிறாங்க. பெண்களும் இப்போ நிறையப் பேர் படிக்கிறாங்க. வேலைக்குப் போறாங்க. கொடுக்க வசதி இருக்கிறதாலே இது பரவலாயிடுச்சு. 22 வயசு வரைக்கும் பெண்களுக்குக் கலியாணம் செய்யாமல் இருந்தால் வரதட்சிணைக் கொடுமையும் குறைஞ்சு போயிடும். வயசு ஆயிட்டாப் பெண்களே புருஷனைத் தேடிப்பாங்க. வரதட்சிணை மறைஞ்சு போயிடும். முன்னெல்லாம் ரொம்பச் சின்ன வயசிலே பெண் களுக்குக் கலியாணம் செய்து வந்தசாலேதான் இது வளர்ந்து பெருகிப் போச்சு. பெண்கள் ஆண்களை நம்பித்தான் வாழணுங்கிற நிலைமை மாறணும். அப்போ இது சரியாயிடும். சட்டம் போட்டா மட்டும் போதாது. அதைக் கண்டிப்பாய் நிறைவேத்தணும். அமுலாக்க வேணும்.’

‘இன்றைய சமுதாயம் முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்பிருந்த நிலையி லிருந்து மாறுபட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. இளைஞர்களிடையே முற்போக்கான கொள்கைகள் பரவி வருகின்றன. சாதிவேறுபாடுகள் குறைந்து வருகின்றன. இருந்தும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை யே அவர்கள் பிராமணர்கள் என்ற காரணத்துக்காகத் ‘தமிழர் அல்லர்’ என்று சொல்லுகிறார்கள். கைபர் கணவாய் வழி வந்தவர்கள் ‘என்று கூடப் பேசுகிறார்களே! இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?’’

இதைக் கேட்ட பெரியார் சிரித்தவாறு, ‘ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே! என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னைத் தெலுங்கள்-நாயுடு என்றே நினைக்கிறாங்க. ஜஸ்டிஸ் பார்ட்டியை ஆரம்பிச்சது சுயமரியாதைக் கொள்கைக்குத்தானே? அதை ஆரம்பிச்சது யார்? சர். பி. டி. செட்டியார்-தெலுங்கர். டி. எம். நாயர்-மலையாளி. நான்-கன்னடக்காரன். தமிழன் யார் இதைச் செய்தான்?’ என்று கேட்கிறார்.

பெரியாருக்குத் தமிழ் தவிரக் கன்னடமும் தெலுங்கும் நன்றாகத் தெரிந்த மொழிகள். கன்னடமொழியில் பேச இவருக்கு அதிக வாய்ப்பில்லை. ‘ நான் தெலுங்கில் பிரசங்கம் செய்வேன். ஆனால் அந்த அளவுக்குத் தாய்மொழி கன்னடத்தில் பிரசங்கம் செய்ய முடிவதில்லை’ என்கிறார்.

‘விடுதலை’ இதழை நீங்கள் தானே துவக்கினீர்கள்? எந்த வருஷம்?

‘விடுதலை ஆரம்பித்து முப்பத்தஞ்சு வருஷம் ஆச்சு. 1936-ல் காலணா விலையில் ‘விடுதலை’யை ஆரம்பிச்சேன். அதற்கு முன்னால் திராவிடன்’ நானே நடத்தினேன் (1920). பிறகு, 1925-ல் ‘குடி அரசு’ ஆரம்பிச்சேன். ‘விடுதலை’ ஆரம்பிச்ச காலத்திலே பொப்பிலி ராஜா மாசம் ரூ. 250 கொடுத்துவந்தார். நஷ்டஈடு மாதிரி. மாதம் மாதம் செக் கொடுத்துவிடுவார். சில மாதங்களிலேயே பத்திரிக்கை நல்லா ஓடவும் அப்புறம் அது தேவைப்படலே.’

‘விடுதலை’ யை விடுதலை’ என்று நீங்கள் எழுதக் காரணம்…?

‘தமிழில் எழுத்துக்கள் அதிகம். ‘லை’, ‘னை’, ‘ணை’ இந்த மாதிரி பல எழுத்துகள் தேவையே இல்லாதவை. இதுமாதிரி எழுத்துக்கள் அதிகமா இருக்கிறதாலே தான் தமிழ் மற்ற மொழிகளைவிடக் கஷ்டமாயிருக்கு. இங்கிலீஷ்காரன் சமஸ்கிருத சுலோகங்ளைக்கூட ஒப்பிக்கிறான்; ஆனால் தமிழ்ப் பாட்டுகளை அவனாலே படிச்சு ஒப்பிக்க முடியல்லே. எனக்குத் தெரிந்த கலெக்டர் ஒருத்தர்- இங்கிலீஷ்காரர்-தெலுங்கு நல்லாப் பேசுவாரு. ஆனால் அதுமாதிரி அவராலே தமிழ் பேசமுடியாது. தமிழ் எழுத்துக்களில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். எழுத்துக்களின் எண்ணிக்கை கொறைஞ்சால் படிக்கிறது சுலபமாகும்.’

‘தமிழைக் ‘ காட்டுமிராண்டி பாஷை’ என்று நீங்கள் குறிப்பிட்டீர்களே…?’

“ ஆமாம், சொன்னேன். என்ன தப்பு? ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போட்டுக்கிட்டுத் தமிழிலே திட்டறானே …எப்படித் திட்டறான்? சண்டைக்காரனைமட்டுமா திட்டறான்? அவன் அம்மா, அக்கா, பொண்டாட்டி- எல்லாரையும்னா இழுக்கிறான்? (இந்த இடத்தில் சில நடைமுறைத் தமிழ் வசவுகளை உதாரணத்துக்குக் குறிப்பிடுகிறார் திரு. பெரியார். அவற்றை நான் எழுதாமலே வாசகர்கள் புரிந்து கொள்ளக் கூடுமே?) அதேமாதிரி சண்டைவந்து இங்கிலீஷ்லே திட்டினா ‘பூல்’னு திட்டலாம்; ‘இடியட்’னு திட்டலாம். தமிழிலே திட்டறமாதிரி அவ்வளவு கேவலமாகத் திட்டறதுண்டா? அதுவும், கிராமங்களிலே பெண்பிள்ளைங்க சண்டைபோட்டுக்கிறதைக் கேட்டா நான் சொல்லறது புரியும்‘ என்று பெரியார் கூறும்போது, அருகிலுள்ள திரு. என். என். சம்பந்தம், ‘ஏன் அய்யா! இங்கே சென்னையிலேமட்டும் என்ன வாழுது? அதைவிட மோசமாயிருக்கு!’ என்கிறார்.

பெரியார் தலையாட்டியவாறே, ‘உம்; அப்படியா? அப்போ நான் சொன்னதிலே என்ன தப்பு? இந்திமேலே இருந்த துவேஷம் தமிழ்மேலே அன்பா மாறித்து. அதுதான் உண்மை. குழந்தைகளெல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேசவேணும். அது நல்ல நாகரிகத்தையும் கொண்டுவரது. ஏன் ‘குறளை’ எடுத்துக்குங்க! நான் மட்டுந்தான் குறளைக் கண்டிக்கிறேன்.’

‘ஏன் கண்டிக்கிறீர்கள்?

‘குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றிவிடுமேன்னுதான். குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி மீட்டது. பெண் ஓழுக்கம் பற்றி எவ்வளவு சொல்லி இருக்கு ‘குறள் லே? ஆண் ஒழுக்கம்பத்தி….? ‘….தாம் வீழ்வார்’ ..என்ற குறளைப் பாருங்க அதுதான் மோட்சம் என்கிறார் வள்ளுவர். அந்தக் காலத்து நாகரிகம் அப்படி. இந்தக் காலத்துக்குக் குறள் கருத்துக்கள் எல்லாமே ஒத்துவர முடியுமா ? நான் குறள் மாநாடு நடத்தியதாலே சில பேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர்கூட ‘அதை (குறள்) ஒண்ணையாவது விட்டு விடக் கூடாதா’ன்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா…!’ தம் மனதுக்குச் சரியென்று படாத எந்தக் கருத்தையும் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளுவதில்லை பகுத்தறிவுத் தந்தை. கட்டுப் பாடுகளை அறவே வெறுப்பவர் திரு. ஈ. வெ. ரா.

அதுபற்றி அவர்கூறுகிறார்: ‘கட்டுப்பாடு எதுவுமே தேவை இல்லை என்பவன் நான். இளமையிலேயே நான் எதிலும் கட்டுப்பட்டதில்லை. திருடக்கூடா துன்னா, ஏன்? என்று யோசிப்பேன், அப்பவே. திருடறது ‘பாவம்‘னா ஒப்புக்கமாட்டேன், மதத்தின் பேராலே மக்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிச்சிருக்காங்க. அதனாலே ஜனங்கள் பிரீயாக (சுதந்திரமாக) இருக்கமுடியல்லே. என் வீட்டிலே வளர்ற இந்த சின்னப் பிள்ளைங்க, என்னை ‘அட்பா’ன்னு கூப்பிடறாங்க. அன்பா இருக்காங்க. நாளைக்கு இவங்க வளர்ந்து பெரியவங்க ஆனா, சாமி கும்பிடுவாங்களா? மாட்டாங்க! எந்தக் கட்டுப்பாடும் தேவை இல்லை. உணவுக் கட்டுப்பாடுந்தான்! உடம்புக்குக் கெடுதி செய்கிற தையும் திங்க வேண்டாம். ஆனா ஆடுதின்னறவன் மாடுதின்னக் கூடாதா? ஆடும் புல்தான் தின்னறது. மாடும் புல்தான் தின்னறது. மாடு தின்னாப் ‘பாவம்‘னு சொல்றாங்க. காரணம், மதக் கட்டுப்பாடுதானே ! மனித சமுதாயத்தின் மனத்தை மாத்தவேணும். திருடினாப் பாவம்னு சொன்னாப் போதாது. திருடவேண்டிய அவசியம் இல்லாத வகையிலே சமுதாய நிலையை மாத்தணும்.’ ஆழ்ந்து சிந்தித்துத் தெளிந்து அவர் கூறும் கருத்துக்கள் நம்மையும் சிந்தனையில் ஆழ்த்துகின்றன.

தமது சொற்பொழிவுகளில் அவர் ‘சாதியைக் குறிப்பிடுவதுண்டு. அதுபற்றிக் கேட்டதற்கு‘ மதம், கடவுள் எல்லாம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னே ஏற்பட்டது. அதையே பின்பற்றுவதால் இன்றைய உணர்ச்சி ஜனங்களுக்கு வரவில்லை. நாளடை விலே மக்கள் அதிகம் சிந்திப்பாங்க. அவங்க சீர்திருந்தவேண்டுமே என்பதுதான் என் நோக்கம். துவேஷம் இல்லை. துவேஷ அடிப்படையில் சொன்னால் தான் ஜனங்கள் சிந்திப்பாங்க; சீர்திருந்துவாங்க’ என்றார் பெரியார்.

‘இராஜாஜிபற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று வினவுகிறேன். இராஜாஜி அவர்கள் அமரர் ஆகிய மூன்றாவது நாள் நிகழ்ந்த பேட்டி இது.

“ நான் ‘விடுதலை’யிலே நேத்து தலையங்கம் எழுதி இருக்கேன். அதைப் பாருங் ளேன் ) என்று பெரியார் கூறுகிறார். விடுதலை நிருவாகி திரு. சம்பந்தம் 26-12-72 தேதியிட்ட ‘விடுதலை’ இதழ் ஒன்றினை என்னிடம் கொடுத்து ‘அய்யா கைப்பட எழுதிய தலையங்கம் இது’ என்கிறார்.

‘அந்தக் கையெழுத்துப் பிரதி இருக்கிறதா?’ என்று கேட்டு அதனையும் வாங்கிப் பெரியாரின் கையெழுத்தைப் பார்க்கிறேன். அமரர் இராஜாஜிபற்றிப் பெரியார் எழுதிய தலையங்கத்தின் கையெழுத்துப் பிரதியில் முதல் பக்கத்தை வாசகர்களின் பார்வைக்கு அப்படியே சமர்ப்பிக்கிறோம். அதனைப் படித்துப் புரிந்துகொண்டு அச்சுக் கோப்பது ‘விடுதலை’ அலுவலகத்தினருக்கு எளிது என்று கூறுகிறார் திரு. சம்பந்தம். ஆனால் நமது வாசகர்களுக்கு அப்படி இராதெனத் தோன்றுவதால் அதன் வாசகம் இதோ:

இராஜாஜியின் மறைவு: ‘தமிழ் நாட்டில் ஒப்பிலா மணியாய் வாழ்ந்து அரும்பெரும் காரியங்களைச் சாதித்த பெரியார் இராஜாஜி 95 ஆம் வயதில் முடிவெய்தி மறைந்துவிட்டார். அவரது பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு தெரிவிக்கவேண்டுமானால் இராஜாஜி இல்லாது இருந்திருந்தால் மகாதீமா காந்தியே இருந்திருக்கமாட்டார். இது மாத்திரமல்ல. இந்திய தேசிய காங்கிரசே இருந்திருக்க மாட்டாது.’

தலையங்கத்தின் இறுதியில் பெரியார் கையெழுத்திட்டுள்ளார். இது போன்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் அவரே கைப்பட எழுதுகிறாராம். நிரம்பப் படிப்பதும் உண்டாம்.

இராஜாஜி வயதில் பெரியவரா அல்லது நீங்களா? என்று பெரியாரைக் கேட்கிறேன். பலருக்கு இந்த அய்யம் உண்டல்லவா?

‘அவர்தாம் பெரியவர். அவர் கவர்னர் ஜெனரலா இருந்தபோது ஒரு சமயம் நான் அவருடைய வயதைக் கேட்டேன். அப்போ தெரிஞ்சுது அவர் தான் மூத்தவர்னு. அவர் டிசம்பர் 1878. நான் பிறந்தது 17-9-1879. கிட்டத்தட்ட ஒன்பது மாசம் அவர் என்னை விடப் பெரியவர்‘ என்று விளக்குகிறார் பெரியார். அமரர் இராஜாஜி ‘ பெரியவர்’; திரு. ஈ. வெ. ரா ‘ பெரியார்.’

விடைபெறுமுன் ‘ மக்களுக்கு நீங்கள் கூற விரும்பும் சேதி ஏதாகிலும் உண்டா!’ என்று கேட்கிறேன்.

‘இன உணர்ச்சி, காலித்தனம் கூடாது’ என்கிறார் பெரியார்.

பெரியாருடன் உரையாடுவது ஒரு சுகமான அனுபவம். என்ன கேள்வி கேட்டாலும் ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு’ என்ற வகையில் எதையும் பூசி மெழுகாமல் நறுக்குத் தறித்தாற்போல் பதிலிறக்கிறார். ‘சிந்தனைக்குத் தெளிவாகாத விஷயங்களை நம்புவதை நான் ஏற்க முடியாது’ என்று கூறும் இந்தப் பகுத்தறிவாளர், குழந்தை உள்ளம் படைத்தவர். தொண்ணூற்று நான்கு வயதிலும் தெளிவாக ஆழ்ந்து, சிந்தித்துத் தடுமாற்றமோ, குழப்பமோ இல்லாமல் கருத்துக்களை வெளியிடுகிறார். இப்படிச் சொன்னால் எதிராளி என்ன நினைப்பானோ என்று அவர் கவலைப்படுவதே இல்லை.

இவருடைய மேடைப் பேச்சுக்களில் அடிக்கடி ‘ வெங்காயம்‘ என்ற சொல் அடி படுவது வழக்கம். இந்தப் பேட்டியின் போது ஒருமுறைகூட அந்தச் சொல்லினை அவர் கையாளவில்லை. நூறு நிமிஷங்கள் ஓடினதே தெரியவில்லையே!

(27-12-1972-ல் திரு. பாணன் அவர்களின் பேட்டி-‘கலைமகள்’ பிப்ரவரி, 1973)

Leave A Reply