பெரியார் திடலில் ஒரு பெரியார் தொண்டரின் அனுபவம்!

Share

ஜூலை 8.
எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.

1998 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் பெரியார் திடலுக்கு பணியாளராக வந்தேன்.

23ஆண்டுகள் உருண்டோடி விட்டன…

43 ஆண்டுகளில் 23 ஆண்டுகள் திடலில் கடந்துள்ளேன்.

ஆசிரியரின் சுற்றுப்பயணத்தில் உதவிக்கு செல்லும் தோழர்களில் ஒருவனாக பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் சில நாட்கள் பணியாற்ற அன்றைய துணை பொதுச்செயலாளர் சாமிதுரை அவர்களிடம் தோழர் சா.பகுத்தறிவாளன் வழியாக அணுகினேன்.

அவர் அப்போது அதற்கு வாய்ப்பில்லை என்றும், திடலில் வேறு பணிகள் இருந்தால் சொல்லி அனுப்புவதாகவும் கூறி அனுப்பிவிட்டார்…

பின்னர் ஒரு மாதம் கழித்து

பெரியார் பயிலகத்தின் உதவியாளராக 08.07.1998 அன்று முதல் பணியாற்றத் தொடங்கினேன். 2012 வரை பெரியார் பயிலகத்திலும் பின்னர் வெளியீட்டுப் பிரிவிலும் பணியாற்றினாலும் திடலின் பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகளை ஆற்றும் வாய்ப்பு கிடைத்தது…

பின்னர் இயக்கத்தின் புத்தக பணிகள் இதழ் பணிகள், கழக அமைப்பு பணிகள், விழாக்குழு பணிகள் அனைத்திலும் பணியாற்றும் அரிய வாய்ப்புகளை பெற்று பெருமகிழ்வுடன் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கிறேன்…

இந்த காலகட்டம் ஏராளமான அனுபவங்களை எனக்கு வழங்கியுள்ளது.
ஒரு கல்வி நிறுவனத்தில் ,
ஒரு பத்திரிகையில்,
ஒரு தொண்டு நிறுவனத்தில்,
ஒரு அமைப்பின் தலைமை நிலையத்தில்,
ஒரு பதிப்பகத்தில்,
ஒரு கலை பண்பாட்டு நிறுவனத்தில்,
சில நேரங்களில் நூலகத்தில்,
என்று பல நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கிடைத்துள்ளது .

உல்லியக்குடி என்னும் ஒரு குக்கிராமத்தில் ஓட்டு போட மட்டுமே பள்ளிக்கு சென்று வரும் பெற்றோரின் பிள்ளையாக பிறந்து, சென்னைக்கு வந்து திடலில் பணியாற்றி திராவிடர் கழக பொறுப்பாளர்களின், தலைவரின் அன்பை பெற்றதோடு இல்லாமல், எளியவனான என்னிடம் மிகப்பெரும் பணிகளை ஒப்படைக்கும் அளவிற்கு நம்பிக்கையையும் பெற்றதை பெரும் வாய்ப்பாக கருதுகிறேன்…

பெரியார் திடல் என்னும் பெரும் குடும்பத்தின் பிள்ளையாய் என் பணியைத் தொடர்கிறேன்…
அதிலும் எதிர்காலத்தில் இயக்கத்தின் வரலாறாக ஆவணங்களாக விளங்கும் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது எனக்கு வரலாறு தந்த வாய்ப்பாகும்…

எனது இத்தகைய வாய்ப்பிற்கு முக்கிய காரணமாக விளங்கிய எனது பெரியாரியல் பேராசான்கள் பெரியார் பேருரையாளர் இறையனார் மற்றும் பெரியார் பயிலக இயக்குனர் மு.நீ.சிவராசன் ஆகியோரை நினைக்கும்போதே நெகிழ்ச்சியாக உள்ளது உணர்வு நரம்புகள் கண்களை குளமாக்குகின்றன…

பெரியார் பிஞ்சு ஏட்டில் துணுக்கு எழுதத் தூண்டி, தொடர்கள் வரை (உலக நாடுகள் வரிசை சுமார் 3 ஆண்டுகள்) எழுத ஊக்குவித்த எனது பாசத்திற்குரிய அண்ணன் பெரியார் சாக்ரட்டிஸ் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்…

என்னை பெறாத பிள்ளையாக உணவூட்டி உணர்வூட்டி வளர்த்த மறைந்த சுயமரியாதை மூதாட்டிகள் திருமகள் இறையன், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், இன்றுவரை மிகுந்த பாசத்தை காட்டிவரும் வாழும் வீராங்கனைகள் க.பார்வதி அம்மா, சி.வெற்றிச் செல்வி, த.அமுதவள்ளி, கு.தங்கமணி, அண்ணி செந்தில்குமாரி உள்ளிட்ட அனைவரின் எல்லையில்லா பாசம் அனைத்தையும் மறக்க வைக்கிறது…

தொடர்ந்து என் பணிகளை ஊக்குவித்து பிழைகளைத் திருத்தி வழிநடத்தி வரும் தலைவர், துணைத் தலைவர் பொதுச்செயலாளர்கள், அமைப்பாளர் அமைப்புச்செயலாளர்கள், சென்னை மண்டல மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியுடையவனாவேன்.

எனக்கு மருத்துவ மற்றும் வாழ்வின் அனைத்துத் தேவைகளையும் அறிந்து எல்லா வகையிலும் உதவிடும் பொதுச்செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ் அவர்களுக்கும்,
திடலில் எங்களின் (தங்கி பணியாற்றும் தோழர்களின்) பாதுகாவலராக எல்லா வகையிலும் உதவி வரும் பொது மேலாளர் சீதாராமன் அவர்களுக்கும், துறை சார்ந்து ஊக்கத்தையும் உதவிகளையும் அளித்துவரும் பதிப்பக மற்றும் அச்சக மேலாளர் க.சரவணன் அவர்களுக்கும், அறிமுகமான நாள் முதல் இன்றுவரை அன்பை காட்டிவரும் ஒளிப்படக் கலைஞர் பா.சிவக்குமார் உள்ளிட்ட ஏனையப் பணித்தோழர்களுக்கும் நன்றி!

என் வாழ்வின் எல்லா உணர்வுகளிலும் இணைந்து இன்ப துன்ப நிகழ்வுகளில் பயணிக்கும் தமக்கையாய், (இறையனார் திருமகள் வழியில்) தாயாய், வழிகாட்டியாய் எல்லாமும் ஆன என் அன்பு சகோதரி இறைவி அவர்களுக்கும், எனது ஒவ்வொரு அசைவையும் விசையாய் இயக்கும் உயிர் தோழர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் மற்றும் உடுமலை வடிவேல், என் அன்பு தங்கைகள் மரகதமணி, பவானி அன்புத்தம்பிகள் கலைமணி, சுரேஷ், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சில் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உதவியோர் பட்டியலை பல்லாயிரம் சொல்லிக்கொண்டே போகலாம்…
ஒருவேளை சுயசரிதை எழுதினால் கூட அனைத்தையும் எழுதி முடிக்க முடியாத அளவிற்கு இந்த இயக்கத்தவர்களும் அன்பை உதவிகளைப் பெற்று வாழ்ந்து வருகிறேன்..

எவர் ஒருவர் செய்த உதவிகளையும் திருப்பி செய்துவிடமுடியாது என்று நினைக்கும் அளவிற்கு இந்த இயக்கத்தவரின் அன்பை உதவிகளை பெற்றவனாய் பயணிக்கிறேன்…

எல்லோருக்கும் பதில் உதவி நன்றி செலுத்தும் விதமாய் இந்த இயக்கத்தில் இறுதி மூச்சு உள்ளவரை பணியாற்றுவேன் என்பதையும் எனக்கென்று சொந்த லட்சியத்தில் எப்போதும் இல்லை இயக்கத்தின் லட்சியமே எனது லட்சியம் என்பதையும் உயிர்ப்பு மிக்க உறுதிமொழிகளாக அளித்து தொடர்கிறேன்..
நன்றி!

-வை.கலையரசன்

Leave A Reply