சோத்துக்கு என்னடா பண்றீங்க? – தோழர் பாவெல் சக்தி

Share
படம் பாக்குறதும், அதப்பத்தி சிலாகிச்சு பேசுறதும் மட்டுமே மிகப்பெரிய இன்டலக்சுவல் நடவடிக்கையா மாறிப்போன இந்த சமயத்துல சில விஷயங்களைப் பத்தி பேசுறதே பொருத்தமில்லாத ஒண்ணாதான் இருக்கும். ஆனா வேற வழி இல்ல.
சோழ மன்னர்கள் ஏதோ அறத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் போலவும், அவுங்க ஆட்சில பாலும் தேனும் பாய்ஞ்சு ஓடி, எல்லோரும் சரிசமமா சாதி பேதம் இல்லாம வாழ்ந்த மாதிரியும் யாரோ ஒருத்தர் கற்பனையா எழுதி வச்சிருக்கதும், அதை யாரோ நாலு பேரு படமா எடுத்து வச்சுருக்கதும் வரைக்கும் ஓகேதான். இதுல கல்கியை வண்டை வண்டையா திட்டிட்டு படம், பணம்னு வந்த உடனே இலக்கிய கோட்பாடாவது ஹேராவதுன்னு பழைய பதிவெல்லாம் தூக்கி கடாசுன ஜெயமோகன் வரைக்கும் கூலிக்கு மாரடிச்ச ஒரு ஆளுதான். அது ஒண்ணும் தப்பு இல்ல. அவங்க தொழில்.
ஆனா இங்க இருபத்துநாலு மணிநேரமும் புரட்சி, போராட்டம்னு பொங்கிட்டு இருந்த பயலுக பூரா திடீர்னு பார்த்தா திரிஷா பின்னாடியும், மணிசார் திறமைக்கு பின்னாடியும், கலை இயக்குனர்களுக்கே தெரியாத சில கலை நுணுக்கங்களை பற்றியும், சோழ ஆட்சியின் அருமை பெருமைகளை பற்றியும் சிலாகிச்சு யார் யாருக்கோ பின்னாடி அலையுற அரைவேக்காடுகளா மாறிப் போனதப் பாத்தாதான் சிரிப்ப அடக்க முடியல.
இந்த நேரத்துல எந்த இயக்கங்கள் தடை செய்யப்பட்டா என்ன? எந்த பேரணிக்கு எவன் அனுமதி கொடுத்தா என்ன? எந்த அமைச்சர் யாரப் பத்தி தரக்குறைவா பேசுனா என்ன? நீ ரசத்த ஊத்து மொமன்ட்தான். ஒருவேளை இந்தப்படம் இப்ப மட்டும் ரிலீஸ் ஆகலைனா இவனுக பொங்கலே வேற மாதிரி இருந்திருக்கும்ங்குறது வேற விஷயம்.
இதையெல்லாம்விட நாலு நாளைக்கு முன்னாடிதான் மனுநீதி பத்தி க்ளாஸ் எல்லாம் எடுத்தானுக. ஏன் சோழ ஆட்சில நடந்தது மனுநீதியோட ஆட்சினு இவனுகளுக்கு தெரியாதா என்ன? எல்லாம் தெரியும்தான். ஆனா இந்த சந்தர்ப்பத்தை விட்டா, இன்டலக்சுவல் 🐛🔥 பட்டம் வேற எப்ப கிடைக்கும்ங்குற பரிதவிப்புதான் அதுக்கு காரணம்.
போர்கள்ல தோற்றுப்போன நாட்டோட பெண்களையும், குழந்தைகளையும் சோழ மன்னர்கள் அடிமையா கொண்டு வந்து சாவடிச்சதையும், சொந்த நாட்டு மக்களையே கோவிலுக்கு மட்டும் இல்லாம தனிநபர்களுக்கே அடிமையா விக்கப்பட்டதையும் அதுக்கு சாட்சி கையெழுத்து வரை இருக்குற “ஆளோலை” பற்றியும், நிலத்தோட அடிமைகளையும் விற்கும் பழக்கமும், ஒரு அடிமை செத்துபோனா அவன் பொண்டாட்டி பிள்ளைகளும் அடிமை ஆகுற முறை, சிற்றரசர்களின் மனைவிமார்கள் சீதனமாக அடிமைகளை கொண்டு வந்தது, பணம் கொடுத்து குழந்தைகளை விலைக்கு வாங்கும் முறை, இதப்பத்தியெல்லாம் கல்வெட்டுகள்ல, பெரிய புராணத்தில இருக்குற குறிப்புகள், சான்றுகள்… சோழ ஆட்சி என்பது மிக மிக கேவலமான ஒரு ஆட்சினுதான் சொல்லாம சொல்லுது.
ஒரு அந்தணர் இன்னொரு அந்தணருக்கு அடிமையாகலாம்னு மனுநீதி சொல்லுது. ஆனா சோழ ஆட்சி அந்தணர்களை அப்படி அடிமையாக்க முடியாதுனு அவர்களை பாதுகாக்குது. சூத்திரர்கள் சூத்திரர்களை அடிமையாக வைத்துக்கொள்ளலாம்னு சொல்ற மனுநீதிக்கு எதிரா, அப்படி வச்சா எங்க அவங்க பொருளாதரத்தில தன்னிலை பெற்று விடுவாங்களோனு அப்படி வைக்ககூடாதுனு சொல்லுது. இந்த தடை வாயிலாத்தான் அவங்க உற்பத்தி செய்யுற பொருட்கள் உபரி ஆகாம பார்த்துக்கொள்ளப்பட்டது. உபரி ஆனாதான சமூக மேம்பாடு?
சோழர்கால கோவில்களும், ஆட்சியும் ஒருபோதும் நம் பெருமை கிடையாது. அது நம் இழிவு. அங்கு கொட்டிக்கிடந்தது நகைகளும் சொத்துக்களும் மட்டும் இல்ல; அடிமைகளும், உழைக்கும் மக்களும், அவங்களோட துயரமும்தான். உடன்கட்டை ஏறுதல்ல இருந்து குழந்தைகளை நரபலி கொடுப்பதுவரை எல்லா சாதிய, தீண்டாமைக் கொடுமைகளும் கொட்டிக்கிடந்த அந்த அசிங்கத்தைதான் இப்ப நம்முன்ன கொண்டுவந்து வேறமாதிரி பளபளப்பாக காட்டுறாங்க.
கொழுத்துப்போன மடங்கள் இருந்த அந்த ஆட்சியில்தான் பஞ்சம் காரணமா மக்கள் தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்ட கொடுமையும் நடந்துச்சு. ரோம் போல அடிமைகளுக்கு முத்திரை இடப்படும் வழக்கமும் சோழர் ஆட்சியில் உண்டு. தேவரடியார்களும் பாதங்களில் சூலச்சின்னம் பொறிக்கப்பட்டது பற்றி குறிப்புகள் இருக்கு. கொடுமைகள் தாங்க முடியாம ஓடிப்போன அடிமைகளைக் கொடூரமாக தண்டித்த குறிப்பும் இருக்கு. பரம்பரை பரம்பரையா அடிமைகளாக வாழ்ந்த மக்களைப் பற்றியும் குறிப்புகள் இருக்கு.
சோழ ஆட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமும் ஒவ்வொரு ஆண்டும் செலுத்திய தங்கமும், நெல்லின் அளவும் நீங்கள் கற்பனை செய்ய முடியாதவை. வடநாட்டிலிருந்து இங்கு அழைத்து வரப்பட்டு பிரமணர்களுக்கு வரியின்றி கொடுக்கப்பட்ட நிலத்திற்கும், கிராமத்திற்கும் சாதாரண மக்கள்தான் அவதிப்பட்டனர். வடமொழி கல்வி நிலையங்களுக்குதான் சோழர்களும் மானியங்கள் கொடுத்தனர். பொன்னும் நெல்லும் மூட்டை மூட்டையாக வழங்கப்பட்டன. சோழ மன்னர்களுக்கு வட இந்திய பிராமணர்கள்தான் குருக்களாக இருந்தனர். ஒவ்வொரு கிராமத்தின் சிவில் கட்டுப்பாடே அவர்கள் கையில்தான் இருந்துச்சு. தமிழ் வழிக்கல்வி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டது.
இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா சதாசிவப் பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி முதற்கொண்டு ஆ.சிவசுப்ரமணியன், பொ.வேல்சாமி வரை கொஞ்ச பேர படிக்கணும். ஈசியா புரிஞ்சிரும்.
கல்கியோ, ஜெயமோகனோ வரலாறை தங்களுக்கு ஏத்த மாதிரி எப்படி வளைக்கிறதுனு வேணா உங்களுக்கு சொல்லித் தருவாங்க, மன்னர்களை எப்படி புகழ்வதுன்னு பாடம் நடத்துவாங்க, மட்டுமில்லாம மன்னர்கள் உருவாக்கியதுபோல இல்லாட்டாலும் இவங்களும் உங்களை வேறுவகையில் சிறந்த அடிமையாத்தான் உருவாக்குவாங்க.
அப்புறம் என்ன, அவங்க சொல்றதையும், எழுதுறதையும் படிச்சிட்டும், கேட்டுட்டும் வந்து அதுகள மாதிரியே அருண்மொழிவர்மன், ஆமணுக்கு வாயன்னு இங்க ஊளை போட்டுட்டு ஒன்றையணா மேப்பையும், துண்டு பேப்பரையும் தூக்கிட்டு வந்து அலைய வேண்டியதுதான்.
பின்குறிப்பு: அப்புறம் தினமும் இந்த மாதிரி ஒண்ணுக்கும் உதவாத படங்களையும், விஷயங்களையும் வச்சே நிமிசத்துக்கு நூறு பதிவா போட்டு தள்ளுற குரூப்ட்ட கேக்க ஒரே ஒரு கேள்வி இருக்கு.
சோத்துக்கு என்னடா பண்றீங்க?

Leave A Reply