ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரானது எப்படி? – Fazil Freeman Ali

Share
இங்கிலாந்து ஒரு சுவார‌ஸ்ய‌மான‌ அர‌சிய‌ல் சூழ‌லில் த‌வ‌ழ்ந்து கொண்டிருக்கிற‌து…
ம‌த‌ அடையாள‌த்தோடு ம‌ட்டுமே ம‌னித‌ர்க‌ளை இன‌ம் காண்ப‌வ‌ர்க‌ளின் பார்வையில் சொல்வ‌தென்றால், “ஒரு இஸ்லாமிய‌ர் சாதிக் கான் (Sadiq Khan) ல‌ண்ட‌னின் மேய‌ராக‌ இருக்க‌, ரிஷி சுன‌க் (Rishi Sunak) என்ற‌ இந்து இங்கிலாந்தின் பிர‌த‌ம‌ அமைச்ச‌ராகிறார்” (ப‌ட‌த்தில் இவ்விருவ‌ரும்)
பெரும்பான்மை கிருஸ்த‌வ‌ர்க‌ள் அதுவும் வெள்ளைக்கார‌ கிருஸ்த‌வ‌ர்க‌ள் வாழும் நாட்டில் இது எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து..?
ப‌தில் மிக‌ எளிமையான‌து; இங்குள்ள‌ ம‌க்க‌ளில் பெரும்பாலானோர் ம‌த‌த்தை ஒருவ‌ருடைய‌ த‌னிப்ப‌ட்ட‌ விருப்ப‌மாக‌, ந‌ம்பிக்கையாக‌ ம‌ட்டுமே பார்க்கிறார்க‌ள். பொதுவாழ்க்கை ம‌ற்றும் ச‌மூக‌ வாழ்க்கை என்று வ‌ரும்போது, ஒருவ‌ருடைய‌ த‌குதி, திற‌மை, நேர்மை, நாண‌ய‌ம் ம‌ட்டுமே க‌ருத்தில் கொள்ள‌ப்ப‌டுகிற‌து.
யார் இந்த‌ ரிஷி சுன‌க்..? எப்ப‌டி இவ‌ர் இவ்வ‌ள‌வு பெரிய‌ ப‌த‌வியை அடைந்தார்..?
கிழ‌க்காப்பிரிக்காவில் இருந்து 1960-க‌ளில் இங்கிலாந்துக்கு புல‌ம்பெய‌ர்ந்த‌ ப‌ஞ்சாபை பூர்வீக‌மாக‌க்கொண்ட‌ த‌ம்ப‌திய‌ருக்கு 12 மே 1980-ல் சவுத்தாம்ட‌ன் (Sothampton) என்ற‌ இங்கிலாந்தின் தென்மேற்கு ப‌குதியில் பிற‌ந்த‌வ‌ர்தான் ரிஷி சுன‌க்.
வின்ச‌ஸ்ட‌ர் (Winchester) க‌ல்லூரியில் இள‌ங்க‌லையும் ஆக்ஸ்ப‌ர்டின் (Lincoln College in Oxford) லிங்க‌ன் க‌ல்லூரியில் அர‌சிய‌லும் ப‌டித்த‌பின் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் (Stanford) க‌ல்லூரியில் MBA ப‌டித்தார் ரிஷி. இங்குதான் த‌ன் ம‌னைவி அக்ஷ‌யமூர்த்தியை முத‌லில் ச‌ந்தித்தார். இன்று இந்த‌ தம்ப‌தியின‌ர் £730 மில்லிய‌ன் சொத்து ம‌திப்போடு இங்கிலாத்தின் 222-வ‌து பெரிய‌ ப‌ண‌க்கார‌ர்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌ர்.
இன்ஃபோசிஸ் நிறுவ‌ன‌ரின் ம‌க‌ளான‌ அக்ஷ‌ய‌மூர்த்தி ச‌மீபத்தில் சுமார் £20 மில்லிய‌ன் வ‌ருமான‌ வ‌ரி ஏய்ப்பு செய்த‌து கண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌போது அந்த‌ வ‌ரியை அப‌ராத‌த்தோடு க‌ட்டிய‌வ‌ர்.
ரிஷியின் அர‌சிய‌ல் வாழ்க்கை சூடுபிடித்த‌து 2014-ல் அவ‌ர் ரிச்ம‌ண்ட் (Richmond of York) தொகுதியின் எம்பி வேட்பாள‌ராக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து என்று சொல்ல‌லாம். நூறு ஆண்டுக‌ளாக‌ ப‌ழ‌மைவாத‌ க‌ட்சி (Conservative Party) தொட‌ர்ந்து வென்றுகொண்டிருக்கும் தொகுதியில் ஒரு இந்திய‌ வ‌ம்சாவ‌ளியை சார்ந்த‌வ‌ர் வேட்பாள‌ராக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து அப்போது சில‌ர‌து புருவ‌த்தை உய‌ர்த்த‌வே செய்த‌து.
2015-ல் தேர்த‌லில் வென்ற‌பின் Head of the Black and Minority Ethnic (BME) கருப்பு மற்றும் சிறுபான்மை இனத்தின் த‌லைவ‌ராக‌ ரிஷி நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌து அவ‌ருக்கு ஒரு ந‌ல்ல‌ முக‌வ‌ரியை இங்கிலாந்து அர‌சிய‌லில் கொடுத்த‌து. மேலும் The Environment, Food and Rural Affairs Select Committee சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் தேர்வுக் குழுவிலும் இட‌ம்பெற்று திற‌ம்ப‌ட‌ ப‌ணியாற்றினார் ரிஷி.
2016-ல் இங்கிலாந்து ஐரோப்பிய‌ ஒன்றிய‌த்தில் தொட‌ர்வ‌தா வெளியேறுவ‌தா என்ற‌ வாக்கெடுப்பு (Referendum) ந‌ட‌ந்த‌போது ஒட்டுமொத்த‌ நாடும் இர‌ண்டாக‌ பிரிந்து நின்ற‌து. அப்போதைய‌ பிர‌த‌ம‌ர் டேவிட் கேம‌ரூன் ஒன்றிய‌த்தோடு இணைந்திருக்க‌ பிர‌ச்சார‌ம் செய்ய‌, அதே க‌ட்சியின் போரிஸ் ஜான்ச‌ன் வெளியேற‌வேண்டும் என்று பிர‌ச்சார‌ம் செய்தார். க‌ட்சி பாகுபாடு க‌ட‌ந்து “ஐரோப்பிய‌ ஒன்றிய‌த்தில் தொட‌ர்வ‌தா வெளியேறுவ‌தா” என்ற‌ நிலைப்பாட்டின் அடிப்ப‌டையில் நாட்டு ம‌க்க‌ளும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளும் இருதுருவ‌ங்க‌ளாக‌ பிரிந்து நின்ற‌ன‌ர். அப்போது ரிஷி போரிஸோடு இணைந்து தீவிர‌மாக‌ ப‌ணியாற்றினார்.
த‌ன் நிலைப்பாட்டை ம‌க்க‌ள் நிராக‌ரித்த‌தால் ப‌த‌வியை ராஜினாமா செய்த‌ டேவிட் சொன்ன‌ ஒரு அறிக்கையின் அர்த்த‌ம் அப்போது ப‌ல‌ருக்கும் புரிய‌வில்லை. டேவிட் காம‌ரூன் சொன்னார், “இங்கிலாந்துக்கு ஒரு இந்து பிர‌த‌ம‌ராவாரேயானால், அவ‌ர் நிச்ச‌ய‌ம் ப‌ழ‌மைவாத‌ க‌ட்சியிலிருந்துதான் வ‌ருவார்” என்று. த‌ன்னை தோற்க‌டிக்க‌ ப‌ம்ப‌ர‌மாய் சுழ‌ன்று வேலைசெய்த‌ ரிஷியை ம‌ன‌தில் வைத்துத்தான் பேசியிருக்கிறார் என்று இப்போதுதான் புரிகிற‌து.
த‌ன் வெற்றிக்கு உழைத்த‌ ரிஷிக்கு க‌ருவூல‌த்த‌லைவ‌ராக‌ (Chancellor of the Exchequer) ப‌த‌விய‌ளித்து க‌வுர‌வித்தார் போரிஸ். ரிஷியின் அர‌சிய‌ல் ஏறுமுக‌ம் அன்றுமுத‌ல் உச்ச‌ப‌ட்ச‌ வேக‌த்தை அடைந்த‌து.
தொட‌ர்ந்து உருவான‌ கோவிட் பிர‌ச்சினைக‌ளின்போது அர‌சும் நிதிய‌மைச்ச‌க‌மும் மிக‌ச்ச‌வாலான‌ கால‌க‌ட்ட‌த்தில் ப‌ய‌ணித்த‌து. சில‌ ந‌ல்ல‌ முடிவுக‌ளும் சில‌ த‌வ‌றான‌ முடிவுக‌ளும் உல‌கெங்கும் எடுக்க‌ப்ப‌ட்ட‌ கால‌க‌ட்ட‌ம் அது. இங்கிலாந்தும் இத‌ற்கு விதிவில‌க்க‌ல்ல‌.
தொட‌ர்ந்து போரிஸின் செல்ல‌ப்பிள்ளையாக‌ இருந்த‌ ரிஷி ஒருக‌ட்ட‌த்தில் போரிஸுக்கு எதிராக திரும்பினார், த‌ன் ப‌த‌வியை ராஜினாமா செய்து அவ‌ருக்கும் அர‌சுக்கும் க‌டும் நெருக்க‌டியை உருவாக்கினார். சில‌ மாத‌ங்க‌ளுக்குமுன் போரிஸ் ப‌த‌வியிழ‌ப்புக்கு முக‌வுரை எழுதிய‌து ரிஷி என்றால் அது மிகையில்லை.
ரிஷி, தான் ஒரு இந்து என்ப‌தை எப்போதும் ம‌றைத்த‌தில்லை. சென்ற‌ ஆண்டு கையில் காவி க‌யிறு ம‌ற்றும் தோளில் காவி துண்டுட‌ன் கோமாதா பூசை செய்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் வெளியான‌போது, “இது என் த‌னிப்ப‌ட்ட‌ ம‌த‌ ந‌ம்பிக்கை அதேபோல் ஒவ்வொருவ‌ரின் த‌னிப்ப‌ட்ட‌ ந‌ம்பிக்கை ம‌ற்றும் உண‌வு ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌த்தை நான் முற்றிலும் ம‌திக்கிறேன்” என்று ப‌தில்கூறி க‌ட‌ந்தார். ஒருவேளை ம‌தவாத‌ பாசிச‌ம் இங்கிலாந்தில் ஒருக‌ட்ட‌த்தில் எடுப‌ட்டால்கூட‌ அது சிறுபான்மையின‌ரான‌ இஸ்லாமிய‌ அல்ல‌து இந்துத்துவ‌ பாசிமாக‌ இருக்க‌முடியாது.
ம‌ட்டும‌ல்ல, ம‌த‌வாத‌ க‌ருத்திய‌லே இந்த‌ நாட்டில் எடுப‌டாது. அத‌னால்தான் சாதிக் கான் ல‌ண்ட‌னின் மேய‌ராக‌ இருக்க‌முடிகிற‌து; ரிஷி சுன‌க் இங்கிலாந்து பிர‌த‌ம‌ராக‌ முடிகிற‌து. இது ந‌ட‌ப்ப‌து கிருஸ்த‌வ‌ இங்கிலாந்தில் எனும்போது நீங்க‌ள் இம்ம‌க்க‌ளின் ம‌த‌ம்க‌ட‌ந்த‌ வாழ்விய‌லை புரிந்துகொள்ள‌லாம்.
நேற்று ம‌திய‌ம் ரிஷி அடுத்த‌ பிர‌த‌ம‌ர் என்ப‌து முடிவான‌தும் இங்குள்ள‌ ஒரு உள்ளூர் ந‌ண்ப‌ர் என‌க்கு, “என்ன‌டா ம‌ச்சான் ந‌ட‌க்குது எங்க‌ நாட்ல‌..? நாங்க‌ இங்க‌ வாழ்ற‌துக்கே இனி விசா வேண்டிவ‌ருமோ..?” என்று வேடிக்கையாக‌ குறுஞ்செய்தி அனுப்பினார்.
செய்தி வேடிக்கையாக‌ இருந்தாலும் அதில் உள்ளோடிய‌ மெல்லிய‌ எரிச்ச‌ல் பொதும‌க்க‌ள் ம‌த்தியில் இருக்க‌த்தான் செய்கிற‌து. ஆனாலும் இதை ரிஷி எளிதில் கையாண்டுவிடுவார் என்று நான் ந‌ம்புகிறேன். கார‌ண‌ம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பொதுவெளியில் த‌ன் இன‌/ம‌த‌ அடையாள‌த்திலிருந்து மிக‌ வில‌கியே நின்றிருக்கிறார் இவ‌ர்.
இவ‌ர் முன்னிருக்கும் முக்கிய‌மான‌ பிர‌ச்சினை ச‌ரிந்து வ‌ரும் பொருளாதார‌மும் தொட‌ரும் எரிபொருள் நெருக்க‌டியும். இதை கையாள‌க்கூடிய‌ அறிவும், ஆற்ற‌லும், க‌ட்சியின‌ரின் ஒத்துழைப்பும் இவ‌ருக்கு இருக்குமா என்ப‌தே பிர‌தான‌ கேள்வி.
ஏற்க‌வே இர‌ண்டு வெள்ளைக்கார‌ பிர‌த‌ம‌ர்க‌ள் ப‌த‌வியிழ‌க்க‌ கார‌ண‌மாக‌ இருந்த‌வ‌ருக்கு குழிப‌றிப்பு வேலைக‌ள் எப்ப‌டி ந‌ட‌க்கும், அதை எதிர்கொள்வ‌தும் த‌டுப்ப‌தும் எப்ப‌டி என்று ந‌ன்கு தெரிந்திருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
ஒருவேளை இவ‌ரும் தோற்றால் பொதுத்தேர்த‌ல் ஏற்ப‌டுவ‌தும் உழைப்பாள‌ர் க‌ட்சி (Labour Party) அதில் வென்று ஆட்சிய‌மைப்ப‌தும் த‌விற்க‌முடியாதாகிவிட‌க்கூடும்.
இங்கிலாந்து உண்மையிலேயே ஒரு சுவார‌ஸ்ய‌மான‌ அர‌சிய‌ல் சூழ‌லில்தான் த‌வ‌ழ்ந்துகொண்டிருக்கிற‌து…

Leave A Reply