முதல்வர் ஸ்டாலினின் கவசமாகிறாரா தினேஷ்? – அங்குஸ்தான்

Share

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வர் பதவியேற்றதில் இருந்து கோட்டையைக் கலக்கிக் கொண்டிருக்கும் கேள்வி இதுதான். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்தில் தமிழக மக்களின் பாராட்டுகளைப் பெற்றார் முதல்வர் ஸ்டாலின்.

அதேசமயம், தனக்கான முதன்மை தனிச் செயலாளராக தினேஷ் என்ற 31 வயது இளைஞரை நியமித்ததை யாரும் பெரிதா எடுத்துக்கொள்ளவில்லை. இது கிட்டத்தட்ட, கலைஞருக்கு சண்முகநாதன் அவர்கள் இருந்ததுபோன்ற பொறுப்பு ஆகும்.

சண்முகநாதனுடன் இதுபோன்ற ஆட்களை ஒப்பிடுவதே தவறு. இருந்தாலும், பொறுப்பின் முக்கியத்துவத்துக்கு ஏற்ற ஆளை முதல்வர் நியமித்திருக்கிறாரா என்பதை விளக்கவே இந்த ஒப்பீடு தேவைப்பட்டது.

முதல்வரின் ஒவ்வொரு அசைவையும் இவர்தான் தீர்மானிக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கே யோசனை சொல்லும் அளவுக்கு இவர் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார் என்று அதிகாரிகள் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். கொரோனா காலம் என்பதால் இந்த விஷயம் இன்னும் பூதாகரமாக வெடிக்காமல் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

கலைஞரின் உதவியாளராக பணியாற்றினாலும், சண்முகநாதன் அவர்கள் அதிகாரிகளுக்கு யோசனை சொல்லும் அளவுக்கெல்லாம் போனதில்லை. அதை கலைஞரும் விரும்பமாட்டார் என்பது எல்லோருக்குமே தெரியும்.

தினேஷுக்கு மட்டும் எப்படி இவ்வளவு துணிச்சல் என்று பார்த்தால், அவர் தினேஷ் அல்ல… முதல்வரின் மருமகனின் தேர்வு என்பது தெரியவரும். முதல்வரின் தேர்தல் வியூகங்கள் அனைத்தையும் தீர்மானித்ததில் அவருடைய மருமகனுக்கு முக்கியப் பங்கு இருந்ததை யாரும் மறுக்கமாட்டார்கள்.

தேர்தலுக்கு முன்பிருந்தே, ஸ்டாலினிடம் அவருடைய மருமகனின் கை ஓங்கியிருந்தது. அவர் இல்லாமல் யாரும் ஸ்டாலினை நெருங்கமுடியாது என்ற நிலைமை உருவாகியது. அவருடைய அருளைப் பெறுவதற்காக அடிபணியும் நிலையைத் தவிர்க்கவே, உதயநிதி ஸ்டாலினை மூத்த நிர்வாகிகள் முன்னிறுத்தினார்கள்.

அவர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப்பெரிய சக்தியாக உதயநிதி உருவாகி நிற்பது அவர்களுக்கு பெருமையாக இருந்தாலும், இப்போது, உதயநிதி ஒரு அதிகார மையமாகவும், சபரீசன் இன்னொரு அதிகார மையமாகவும் மாறிக் கொண்டிருப்பது கட்சியை நேசிக்கும் மூத்த முன்னோடிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தனது குடும்பத்தினரின் செல்வாக்கு தன்னை கட்டுப்படுத்தாது என்று காட்டிக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் மிகவும் மெனக்கெடுகிறார். ஆனால், ஒரு இடத்திலிருந்து கிளம்பும் நேரத்தைக் கூட தினேஷ் மூலமாக கட்டுப்படுத்துகிறார்கள் என்ற செய்தி தலைமைச் செயலகத்தில் பரபரப்பில்லாம் பரவிக்கொண்டிருக்கிறது.

தினேஷின் அத்துமீறல்களால், ஸ்டாலினை யாரும் எளிதில் சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை என்ற குறைபாடுகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

முதல்வர் ஸ்டாலின் தனது அரசாங்கத்தை ஒரு முன்மாதிரி அரசாங்கமாக நிரூபிக்க கடுமையாக முயற்சி செய்கிறார். ஆனால், ஒரு மாதம் நிறைவடைவதற்குள்ளேயே அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் பின்னிருந்து இயக்கப்படுவதான தோற்றம் உருவாக்கப்படுகிறது.

இது அவருக்குத் தெரியுமா? அவரைச் சுற்றி நடப்பவை முதலில் அவருக்கு தெரிந்து நடக்கின்றனவா? இதெல்லாம் அவருக்குத் தெரியாவிட்டாலும், உதயநிதிக்காவது தெரியுமா என்றெல்லாம் கட்சிக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

Leave A Reply