சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் – Tamil leaders – 2

Share

1916-ஆம் வருஷம் ஐரோப்பாவின் போர்க் களங்களிலே, மண்டைகள் அற்ற முண்டங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஜெர்மன் ‘‘ஹாவிட்ஸர்’’ பீரங்கிகள், பிரஞ்சு அரண்களைப் பொடியாக்கிக் கொண்டிருக்கின்றன. நேசக் கட்சியார் (பெல்ஜிய, பிரஞ்சு, ஆங்கிலேயர்கள்) மனமொடிந்து நிற்கிற சமயம். ‘‘ஒரு குதிரை, ஒரு குதிரைக்காக ராஜ்யம் (கொடுப்பேன்)’’ என்று மூன்றாவது ரிச்சர்டு அரசன் பரதபித்தது போல, ஒரு ஆள், சேனைக்கு ஒரு ஆள் என்று நேசக்கட்சியார் தவித்துக் கொண்டிருக்கிற ஆண்டு. காஞ்சிபுரத்திலே, தமிழ் மாகாண மகாநாடு கூடிற்று.

மகாநாட்டுக்குத் தலைவி, கவியரசி ஸ்ரீமதி சரோஜினி நாயுடு, அவருக்கு உபபலம் பெஸண்ட் அம்மையார். சேனைக்கு ஆள் சேர்த்துக் கொடுப்பதா இல்லையா என்பது யோசனை. ஆள் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது பெஸண்ட் அம்மையார் கொண்டுவந்த தீர்மானம்.

தீர்மானம் நிறைவேறுமா அல்லது தோற்குமா என்று நிச்சயமாய்ச் சொல்லக் கூடிய நிலையில், மகாநாட்டின் உள்ளம் இருக்கவில்லை. ஒரே குழப்பம்! பெஸண்ட் அம்மையாரும் ஸி. பி. ராமஸ்வாமி அய்யர் அவர்களும் தங்கள் பிரசங்கத் திறமை முழுமையும் காட்டிவிட்டார்கள்.

தீர்மானத்தை எதிர்த்தார் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி. அவருக்குப் பின்னால், ‘ஆபாச’த் தமிழில் – ஆனால் ஆற்றல் நிறைந்த அடக்கத்துடன் – சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சத்தியமூர்த்திக்குச் சாதகமாக, தீர்மானத்தை எதிர்த்துப் பேசினார். பேச்சு ‘‘பட்டை வாங்காத வைரம்’’ என்று ஒருவர் சொன்னது என் காதில் பட்டது. உண்மை. கன்னடப் பிராந்தியத்தை ஒட்டிய ஹொஸ்ஸீர் தமிழ். ஆச்சாரியாரின் தற்போதைய சுத்தத் தமிழ் ஆளை வெருட்டுகிறது! இது வேறு சங்கதி.

தீர்மானத்துக்குச் சாதகமாக 124 வோட்டுகள்; பாதகமாக 124 வோட்டுகள். சரோஜினிதேவி, மகாநாட்டுத் தலைவி என்ற முறையில், தமது இரண்டாவது வோட்டை பெஸண்டு அம்மையாருக்குச் சாதகமாகக் கொடுத்தார். தீர்மானம் காகிதத்தில் நிறைவேறியது. ஆனால் – ? புத்தன் பிறந்தவுடனே, இந்திரன் கொடி அற்று விழுந்தது என்பது பரம்பரைக்கூற்று. ஆச்சாரியார் தோன்றியதும், பெஸண்டு அம்மையாரின் சென்னை மாகாணச் செல்வாக்கு சீர்குலைந்து போய்விட்டது. அதே சமயத்தில் சர்க்காருக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும் தமிழர்கள் மனதில் பட்டது.

ஆச்சாரியாரின் தேசபக்தி பிறந்து வளர்ந்த கதை மிகவும் வினோதமானதாகும். 1897-ஆம் ஆண்டில், ஆச்சாரியார் சென்னை சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அந்த ஆண்டில், லோகமான்ய திலகர் காராக்கிரகப் பிரவேசம் செய்ய நேர்ந்தது. திலகரைப் பிடித்து சர்க்கார் சிறையில் தள்ளினது ரொம்ப நியாயமானதாகும் என்பது ஆச்சாரியாரின் அப்போதைய மனோபாவமாகும். சட்டத்தை மீறி, பொதுஜன அமைதியைக் குலைப்பவன் தேசத்துரோகியே யொழிய தேச பக்தனல்லவென்பது ஆச்சாரியாரின் அப்போதைய முடிவு. அதிகாரவர்க்கத்தினரைப் போல, எதையும் நோக்கிவந்த ஆச்சாரியார் அரிய தேசபக்தராய் மலர்ந்தது, சர்க்காரின் (அப) கீர்த்திக்கணக்கில் அழுத்தமாக எழுதப்படவேண்டிய சங்கதியாகும்.

பின்னர் பெஸண்டு அம்மையார், அருண்டேல், வாடியா மூவர்களும் அரசாங்கத்தாரின் தளைக்குள் சிறிது காலம் தங்கியிருந்து, விடுதலை பெற்றதும், சேலம் மார்க்கமாய்ச் சென்னைக்குச் சென்றார்கள். ஆச்சாரியார் அவர்களைப் பார்க்க, சேலம் ஸ்டேஷனுக்குச் சென்றார். பிளாட்பாரத்தில் பிரவேசிக்க அனுமதி கிடையாது என்றார் போலீசாரின் கையில் அகப்பட்டுத் தவித்த ஸ்டேஷன் மாஸ்டர். ஒரே உதை! இரும்புக் கிராதிகள் படபடவென்று முறிந்தன. ஆச்சாரியாரும் ஒரு பெரும் கூட்டமும் பிளாட்பாரத்துக்குள் போய் விட்டார்கள்.

போனதும், ஆச்சாரியார், ‘‘வாடியா அவர்களே! தங்களுடைய விடுதலைபற்றி ரொம்ப சந்தோஷம்’’ என்று சொல்லி, அவரை மட்டும் கைகுலுக்கிவிட்டுத் திரும்பி வந்துவிட்டார். வாடியா மட்டும் இந்தியர். மற்றைய இருவர்களும் வெள்ளைத் தோலை உடம்பில் போர்த்துக் கொண்டிருந்த குற்றம் ஆச்சாரியாரின் கண்களில் மிகவும் கொடுமையாகப்பட்டது. அப்பொழுது அப்படி! இப்பொழுது, உலக சகோதரத்துவம் பேசுகிறார் ஆச்சாரியார்.
காலத்தோடு, ஆச்சாரியார் வளர்ந்தாரேயொழிய, காலத்தைக் காந்தி எதிர்த்துப் போராடி முறியடித்ததைப் போல, ஆச்சாரியாரால் அவ்வளவாக முடியாது. அவ்வளவு தன்னம்பிக்கை, ஆச்சாரியாருக்கு இயற்கையாகக் கிடையாது. அதற்கு ஒரு தூண்டுகோல் வேண்டும். ஒரு சமயம் ஆச்சாரியாருக்குக் கடுஞ் சுரம். இது அரசியல் துறையில், அவர் பிரவேசிக்குமுன் நேர்ந்தது. காய்ச்சல்முற்றி ஜன்னி; சொந்த நினைவு வருவதும் மறைவதுமாயிருக்கிற சந்தர்ப்பம். கிழச்சிங்கமான விஜயராகவாச்சாரியார். ஆச்சாரியாரின் தேக நிலையைப் பற்றி வருத்தத்துடன் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க வந்தார்.

ஆச்சாரியார் படுத்த படுக்கையாகக் கிடந்தார். ‘‘ராஜ கோபாலாச்சாரி’’ என்றார் கிழவர். ஆச்சாரியார் கண் விழித்துப் பார்த்தார். ‘‘இது என்ன முட்டாள்தனம்! ஜன்னி வந்து சாவதற்கு, யாருக்கும் புத்தியும் தைரியமும் வேண்டியதில்லை. பிழைத்திருக்கத்தான் தைரியமும் திட சங்கல்பமும் வேண்டும், சந்தர்ப்பத்தைக் கைவிட்டு விடாதேயும்; சங்கற்பம் செய்துகொள்ளும்; உடம்பு நிச்சயமாய்ச் சரிப்பட்டுப் போய்விடும்’’ என்றார் கிழவர். சரியான மருந்து! சரியான நோயாளி! சரியான வைத்தியர். ஆச்சாரியார் ஜன்னியை உதறித் தள்ளிவிட்டார். கொஞ்சம் தூண்டுதல் போதும். தன் சக்தியை அறியாத ஹனுமானுக்கு ஜாம்பவான் உபதேசம் செய்யவில்லையா?

ஆச்சாரியார், உள்ளன்பு ஊற்று ஒட்டமில்லாத ஓர் இயந்திரம் என்று சிலர் பொய்ச் சூத்திரம் புனைந்து வைத்துக் கொண்டிருக்கிறார்க்ள. அது தவறு, ‘‘தொட்டால் சுருங்கி’’ என்ற பச்சிலையைப் பார்த்திருக்கிறீர்களா? அது கொடிகொடியாக ஓடியிருக்கும். அதைத் தொட்டால், இரண்டு பக்கங்களிலுமிருக்கிற இலைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்; அவ்வளவு நயமான உயிர், ‘‘தொட்டால் சுருங்கி’’க்கு. சங்கப் பலகைக்கு நீளுகிற, சுருங்குகிற சக்தி உண்டு. ஆனால், பெரும்பான்மைப் புலவர்களின் ‘‘அண்டிமாண்டுக்கு’’ச் சங்கப் பலகை, ஜவாப்புச் சொல்லுவதில்லை. குற்றம் யாருடையது? ஆச்சாரியார் பால்யத்திலிருந்தே ‘‘தொட்டால் சுருங்கி.’’ பழக்கம், சுபாவமாக மாறிவிட்டது போலும்! ஆனால் அவருடைய இயற்கை அதுவல்ல.

விசேஷ நாட்களில், ஆடம்பரமின்றி விழாக் கொண்டாடுவது சிலருக்குப் பிடித்த ஏற்பாடு. சாமானியர்களைப்போல் விழாவில், தாங்களும் கலந்துகொள்ளுவதா? முடியாத காரியம். ஆனால் கணப்புச் சட்டியைப் போல, கணகணவென்று தீ கனந்து கொண்டிருக்கும் உள்ளமுடையவர் ஆச்சாரியார். ‘‘ருசு?’’ என்பீர்கள். ருசு இல்லாமல் இந்தக் காலத்தில், எதுவும் ஏற்கப்படாதல்லவா? வரதராஜூலு நாயுடு அவர்களின் ராஜநிந்தனை கேஸ் மதுரையில் நடந்து கொண்டிருந்தது. ஆச்சாரியார் நாயுடுகாருக்கு வக்கீல். இரவில் நாயுடுகாரு, கவலையற்று, உறங்கி விடுவார்.

பாரிஸ்டர் ஜோஸப்பும் ஆச்சாரியாரும் நடுநிசி வரையிலும் அதற்குப் பின்னும் வழக்கைப்பற்றியே கவலையாயிருப்பார்கள். முடிவில், வழக்கை விசாரித்த நீதிபதி நற்குணம், நாயுடு அவர்களுக்குப் பதினைந்து மாதம் காவல் தண்டனை கொடுத்தார். தினந்தோறும் வழக்கமாக எங்களுடன் கோர்ட்டுக்கு வந்து கொண்டிருந்த நாயுடுகாரு அவர்கள் தீர்ப்புக்குப் பின், எங்களை விட்டுப் பிரிய நேர்ந்தது. வீட்டுக்குத் திரும்பினோம். ‘‘எத்தனை பேர் போனோம்; எத்தனை பேர் திரும்பி வருகிறோம்’’ என்று இரண்டு மூன்று பெரிய நீர்த்துளிகளைக் கண்களினின்றும் ஆச்சாரியார் உகுத்தார். திடீரென்று இதைப் பலவீனம் போல நினைத்து, ‘‘நாயுடுகாரு பாக்கியசாலி’’ என்று பேச்சை மாற்றினார் ஆச்சாரியார், ‘‘சரித்தான், நடவுங்கள்’’ என்றார் ஜோஸப்.
தியாகமில்லாமல் தேசத்தொண்டு செய்ய முடியாது என்பதைத் தமது வாழ்வின் மூலமாய், ஆச்சாரியார் தமிழர்களுக்கு விளக்கிக் காண்பித்துவிட்டார், ஆச்சாரியாரின் நாட்களுக்கு முன், தேசத்துக்காகத் தியானம் செய்வது என்பது இல்லையென்றே சொல்லலாம். ரௌலட் சட்டம் இந்திய சட்டசபையில் நிறைவேறிற்று. அதைக் கண்டித்து, நாடெங்கும் கிளர்ச்சி. இந்தக் கிளர்ச்சியில் ஆச்சாரியார் தலைகால் தெரியாமல் புகுந்த கொண்டார். அப்பொழுது அவர் சென்னைக்குக் குடியும் குடித்தனமுமாக வந்துவிட்டார். ஆனால் கோர்ட் சம்பந்தமாக கட்சிக்காரர்கள் ஆச்சாரியாரை விட்டபாடில்லை.

வக்கீல் தொழில் இனி வேண்டாம் என்று ஆச்சாரியார் யோசித்துக் கொண்டிருந்த காலம். ஒரு நாள் காலையில் ஒரு கட்சிக்காரர் மூன்றுநாள் ஆஜராவதற்கு மூவாயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார். ‘‘முடியாது; ஆஜராக முடியாது. இனி நான் தொழில் நடத்தப் போவதில்லை’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் ஆச்சாரியார். தேசத்துக்காக இவ்வளவு பணத்தியாகத்தை நான் முதன் முதலாகப் பார்த்தது அதுதான்.

1919 – ம் வருஷம் ரௌலட் சட்டம் சம்பந்தமாக, சத்தியாக்கிரக இயக்கத்தின் பொருட்டு, காந்தி சென்னை மாகாணத்துக்கு விஜயம் செய்தார். ஆச்சாரியாரின் இருப்பிடத்தில் மகாத்மாவுக்கு ஜாகை. சத்தியாக்கிரகத்துக்கு ரகஸியம் கிடையாது என்றார் காந்தி. எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். முடிவில், கூட்டம் கலையுமுன், ‘‘எல்லாவற்றையும் பிரசுரம் செய்யவேண்டாம். சத்தியாக்கிரகத்துக்கும் காலத்துக்கேற்ற உபாயமுண்டு’’ என்று காந்தி, பத்திரிகை நிருபர்களிடம் சொன்னார். ‘‘சத்தியாக்கிரகத்திலும் ராஜதந்திரம் இருக்கிறதாமே’’ என்று ஆச்சாரியார் புன்னகை பூத்தார். ஆச்சாரியாரின் ராஜ தந்திர மனப்போக்குக்கு காந்தியின் திருக்குறள் சூத்திரம் வாடிய பயிருக்கு மழை போல இருந்ததென்றே சொல்ல வேண்டும்.

காந்தி சகாப்தக் காலத்தில், நான்கு பேர்கள் தங்களது சிறந்த ராஜதந்திரத்தைக் காண்பித்தார்கள். ( 1 ) பண்டித மோதிலால் நேரு, ( 2 ) விட்டல் பாய் பட்டேல், ( 3 ) ராஜ கோபாலாச்சாரியார், ( 4 ) பணக்கால் ராஜா, மோதிலால் நேரு, இந்திய சட்ட சபையை அங்குமிங்கும் அப்படியுமிப்படியும் ஆட்டி வைத்துவிட்டார். மத்திய சட்டசபைத் தலைவர் என்ற முறையில் விட்டல்பாய், அதிகார வர்க்கத்தினருக்கு அரை நிமிஷம்கூட ஓய்வு கொடுக்கவில்லை. சுவாச, காச நோயால் இரவில் தூக்கமின்றி வருந்திய ஆச்சாரியார், சுயராஜ்யக் கட்சியாரைப் படுத்தினபாடு சொல்லமுடியாது. சென்னைச் சட்ட சபையைப் பணக்கால் ராஜா ஆண்டு வந்துது போல, இனி யாராலும் ஆளமுடியாது என்றே தோன்றுகிறது. இந்த நான்கு பேர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர். அயர்லாந்து தேசத்திலே, சார்லஸ் ஸ்டீவர்ட் பார்னல் என்ற தலைவர் ஒருவர் இருந்தார். ஆங்கில பார்லிமெண்டு மகாசபையில் அவர் ஒரு மெம்பர். அவர், மகா சாதுர்ய புத்தியை உடையவர். பார்லிமெண்டு மகா சபையில் எந்த வேலையும் நடைபெறாமல் முட்டுக்கட்டைபோடும் உபாயத்தில் அவர் கை தேர்ந்தவர், இணையற்றவர். கொடிய மௌனத்தைக் கைக்கொண்டவர். ஆங்கிலேயர்களுக்குப் பயத்தையும் அயர்லாந்துக்குத் தைரியத்தையும் பலவகைகளிலும் உண்டாக்கியவர் பார்னல். ஆச்சாரியாரைப் பார்னலுக்கு ஒருவாறு ஒப்பிடலாம். தெளிந்த அறிவிலும் தர்க்க வாதத்திலும் முட்டுக்கட்டை உபாயத்திலும், நமது தமிழ்நாட்டில் – இந்தியாவிலே கூட – யாரையும், ஆச்சாரியாருக்கு இணையாகச் சொல்ல முடியாது.

ஆச்சாரியாரின் வேதாரண்ய உப்பு சத்தியாக்கிரக யாத்திரை, புராணம் போல ஆகிவிட்டது. பொய்யாய், பழையதாய்ப் போய்விட்டது என்று அர்த்தமில்லை. தஞ்சை ஜில்லா கலெக்டரின் உத்தரவுக்கு ஆச்சாரியாரின் யாத்திரை தக்க பதிலாகும். கலெக்டரின் உத்தரவினால் ஏற்பட்ட கேவலமான, வெறுக்கத்தக்க அச்சத்தை, ஆச்சாரியார் ஜனங்களிடமிருந்து ஒட்டியதை ஜாலவித்தை என்று தான் சொல்லவேண்டும். என்ன அமரிக்கை! என்ன சாதுர்யம்! எத்தகைய அழகான கிராமியப்பேச்சு! என்ன நகைச்சுவை! எத்தகைய உருக்கம்! என்ன ரம்மியமான உபமானங்கள், உபகதைகள்! இவை யாவையும், ஆச்சாரியாரின் உப்புச் சத்தியாக்கிரக யாத்திரைப் பிரசங்கங்களில் கண்டு வியந்தவர்களைக் கேட்டால்தான் மற்றவர்களுக்கு அது தெரியும்.

தமிழர்களின் மானத்தை ஓரளவு காப்பாற்றியவர் ஆச்சாரியார். வட இந்தியாவிலே யாருக்கேனும் அறிவிலே அஜீரணம் ஏற்பட்டால், அவர்கள் உடனே தலைவர்களாய் மலர்ந்துவிடுவார்கள். தங்கள் மலர்ச்சியைச் சோதிக்கும் பொருட்டு, தென்னாட்டுக்கு, சிறப்பாக தமிழ்நாட்டுக்கு, உபதேசம் செய்ய, யாத்திரை புறப்பட்டு விடுவார்கள், தமிழர்கள் என்ன பாவம் செய்தார்களோ இந்த நிரந்தரத் தண்டனையை அனுபவிக்க! வட நாட்டார் பிரசங்கம் செய்வதும், தமிழர்கள் பிரசங்கம் கேட்பதும் பாகபத்திர மாமூல் ஷரத்தாக, வெகுகாலமாக, ஆட்சேபணையின்றி நடைபெற்று வந்தது, அந்த ஷரத்தை அடியோடு ரத்து செய்தவர் ஆச்சாரியார். வட இந்தியாவுக்கு ஆச்சாரியார் போய், மூலை முடுக்குகளிலெல்லாம் பிரசங்க மழை பொழிந்த பின்னர்தான், எனக்கும் என்னைப் போன்ற தமிழர்களுக்கும் மன அமைதி ஏற்பட்டது எனலாம்,

ஆச்சாரியாரை ‘சின்ன காந்தி’ என்கிறார்கள், இதைப் போல அநியாயம் வேறு எதுவுமே இல்லை, காந்தி மேதாவி; ஆச்சாரியார் மகா புத்திசாலி, காந்தியின் மூளை வேறு ரகம்; ஆச்சாரியாரின் மூளை வேறு வகை. மேதை வேறு; புத்தி வேறு. காந்திக்குத் தமது சொந்த சக்தியில் ‘‘மலையை நகரச்செய்யும்’’ நம்பிக்கை உண்டு; பிறர் சக்தியிலும் காந்திக்கு அளவற்ற நம்பிக்கை. ஆச்சாரியாருக்கோ, தம்மிடத்தில் சிறிது சந்தேகம்; பிறரிடத்தில் எல்லையற்ற சந்தேகம். காந்தி, தம்மையே தாம் மூன்று தரம் சுற்றிவந்து, தெய்வ யானையை இந்திரனிடமிருந்து அதிகாரத்துடன் கேட்ட கணபதியை யொத்த மேதாவி; ஆச்சாரியாரோ, வியர்க்க வியர்க்க வாகனத்தில் ஏறி, ஓடிக் களைத்து, அலுத்து, தெய்வ யானையைப் பெறாத தேவதையைப் போல, காந்தி சாஸ்திரம், ஆச்சாரியார் சாஸ்திரி, சாஸ்திரம் காலத்துக்குக் கட்டுப்பட்டதல்ல; சாஸ்திரம் வளரும்; சாஸ்திரியோ சாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். சாஸ்திரிக்கு – சாஸ்திரம்தான் பிரதானம். காந்தி உலகத்தின் மனச்சாட்சி; ஆச்சாரியார் மனச்சாட்சியின் மெய்க்காப்பாளர்.

பாகிஸ்தான் பிரச்சனையில், அஹிம்சைக் கொள்கையில், ஆச்சாரியார், காந்தியை விட்டுப் பிரிந்துவிட்டார். ஆச்சாரியாரை, சின்னக் காந்தி என்று அழைத்ததே தவறு என்று நான் குறிப்பிட்டிருந்தது காலத்தால் ருசுவாகி விட்டது. ஆச்சாரியார் காந்தியின் நட்பை இழக்கவில்லை. ஆனால் காங்கிரஸை விட்டு விலக நேர்ந்தது. இது, நாட்டின் துர்பாக்கியமே.

காந்தியின் உள்ளத்துக்கு உரைகல்லைப்போல இருந்த ஆச்சாரியார், காங்கிரசைவிட்டு விலகிப் போவதென்றால், அவருக்கு எவ்வளவு துக்கம் இருந்திருக்க வேண்டும்! மனச்சாட்சியின் மெய்க்காப்பாளரான ஆச்சாரியார் இந்தத் துக்கத்தைப் பெரிதுபடுத்துப வரல்லர். தான் எதை நினைத்தாலும், அதன்படி நடக்கும் துணிவும் ஆற்றலும் உண்டு என்பதை ஆச்சாரியார் இந்தச் சம்பவத்தின் மூலமாக வெளிக்காண்பித்து விட்டார்.

காந்தியின் வலது கை என்ற கீர்த்தியில் மிதந்துகிடந்து ஆச்சாரியாரின் ‘ஜிப்பா’வைக் கிழிப்பது, அவர் பேரில் கல் எரிவது, தார் ஊற்றுவது என்ற நிலைமை அவருக்கு ஏற்பட்டது மிகவும் துக்கக்கரமானது, எனினும், தான் கொண்ட கருத்துக்களுக்காக, எதையும் எத்தகைய அவதூறையும் மேற்கொள்ள முடியும் என்பதை ஆச்சாரியார் தெளிவாகக் காண்பித்து விட்டார்,

ஆச்சாரியாருக்கும் நமக்கும் எவ்வளவோ அபிப்பிராய பேதம் இருக்கலாம், அவர் சிற்சில விஷயங்களில் பிற்போக்காளர் என்பது என் கருத்து, என்றாலும், ஆச்சாரியார், முதல் தமிழன், உயர்ந்த மனிதன், அற்புதமான நிர்வாகி, தீர்க்காலோசனைக்காரர் என்ற வகைகளில், அவருக்கு நாம் மரியாதை காண்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம், ஆச்சாரியார் போன்றவர்கள் அடுத்து அடுத்து மிலவாகப் பிறக்கக்கூடிய பிறவிகள் அல்ல. அதற்காக நாம் மரியாதை செலுத்தவேண்டும்.

Leave A Reply