ஒரே பார்வையில் எதிரிகளுக்கு ஸ்டாலின் சொன்ன பதில் – அசோக்.R

Share

முதல்வர் பதவியேற்பில் ஒருநொடி நிமிர்ந்து பார்த்த அந்தப் பார்வை இருக்கிறதே அந்தப் பார்வைக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது…

அண்ணா முதல்வர் ஆவதற்கு முன்பே அரசியலுக்கு வந்தவர் ஸ்டாலின். கலைஞர் காலத்திலும் உழைத்தார் உழைத்தார் உழைத்தாரே தவிர உயரமோ வெகு லேட்டாகத்தான் வந்தது. என்ன செய்வது? அப்பா என்ன முலாயம் சிங் மாதிரியா? கலைஞர் அல்லவா!!! மேயர், துணை முதல்வர் என படிப்படியாக வளர்ந்து வளர்ந்து ‘சோ’ போன்ற பரம்பரை அரசியல் எதிரிகளால் கூட “ஸ்டாலினை எல்லாம் வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது” எனச் சொல்ல வைத்தார்.

கலைஞர் ஓய்விற்குபின், அந்த ஓய்வை ஒட்டி பாஜகவும்/அதிமுகவும் செய்த அரசியல் அநாகரீகங்களை எல்லாம் கடமையுணர்ச்சி மிக்க ஒரு மகனாய், பொறுப்புணர்ச்சி மிக்க ஒரு தலைவனாய் நின்று சமாளித்து தன் தந்தையை சாவிலும் வெல்ல வைத்த ஸ்டாலின் இருக்கும்போதே, ஐம்பதாண்டு காலமாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் இருக்கும்போதே கொஞ்சமும் கூச்சப்படாமல், நாக்கில் நரம்பில்லாமல்,
“தமிழ்நாட்டில் தலைவருக்கான வெற்றிடம் இருக்கிறது” என்று கூவுகூவென்று கூவினார்கள். சூப்பர் ஸ்டாரில் இருந்து நண்டுசிண்டுவரை எல்லோரும் கூவினார்கள்.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

வட இந்திய தலைவர்கள் எல்லாம் கூட்டணிக் கணக்கில் தோற்றார்கள். சுயநலத்தால் வீழ்ந்தார்கள். தென்னாட்டில் இருந்து ஸ்டாலின், “ஒற்றுமையாக இல்லையென்றால் பாஜகவுக்கே பலம்” என்றார். யாரும் கேட்கவில்லை. ஆனால் ஸ்டாலின் முடிவுசெய்தார். பிரதமர் வேட்பாளர் என ஒருவரை நிறுத்தவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் குழம்புவார்கள் என்பதால் காங்கிரஸே கூட அறிவிக்கும் முன் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். அதிகப்பிரசங்கித்தனம் என்றார்கள். அவசரப்படுகிறார் ஸ்டாலின் என்றார்கள்.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்தது. 39 இடங்களில் மாபெரும் வெற்றி. திமுகவுக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் எம்பிக்களை தேத்த முடியாமல் கஷ்டப்பட்ட காங்கிரசுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் கூட எம்.பிக்களை பெற்றுத்தந்தார். ஆனாலும் நாங்கள் தலைவர் என ஒப்புக்கொள்வாமா? அவ்வளவு ஈசியா? அதிமுக என்றால் ஐஸ் பக்கெட் சேலஞ்ச், திமுக என்றால் ஃபயர் பக்கெட் சேலஞ்ச் அல்லவா? மீண்டும் சொன்னார்கள், தமிழகத்தில் வெற்றிடம் உண்டு உண்டு உண்டு என்று.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

திமுக தலைவரான முதல் நாளே சொன்னார் “எனக்கு கலைஞரை போல் பேச தெரியாது. ஆனால் எனக்கு உழைக்கத் தெரியும். என் சக்திக்கு மீறி உழைக்கிறேன்” என்றார். தன் பலம் எது என அறிந்திருந்தார். ஆனால் திமுக என்றால் குயில் கர்ஜிக்க வேண்டும், சிங்கம் பாட வேண்டும் என எதிர்பார்க்கும் உலகம் அல்லவா? பேசவே வரவில்லை, உளறுகிறார், தத்தி என என்னென்னவோ சொன்னார்கள். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், மூளைச்சலவை செய்யப்பட்ட சூத்திரர்கள் பார்ப்பனர்களோடு சேர்ந்துகொண்டு, சுடலை என்பது நம் காவல் தெய்வம் என அறியாமல் அதை கேலி வார்த்தையாகப் பயன்படுத்தினார்கள். இலவு காத்த கிளி என்றார்கள். “கலைஞரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் “ஸ்டாலின்” எனச் சொன்னால் போதும்” என்றார் கமல். அந்த அளவுக்கு ஒரே நோக்கத்தோடு வேலை செய்தார்கள் எதிரிகள். ராகுலை பப்பு என வட இந்திய மக்கள் மனதில் பதிய வைத்ததைப் போல, தமிழ்நாட்டில் ஸ்டாலினைப் பதிய வைத்துவிட மாட்டோமா எனத் துடித்தார்கள். அதற்காகவே வேலை செய்தார்கள்.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

இதெல்லாம் பத்தாதென்று சைக்கலாஜிக்கல் ஆயுதம் ஒன்றை கையில் எடுத்தார்கள். ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் யோகம் இல்லை என்பதுதான் அது!!! எச்.ராஜா, எஸ்.வீ.சேகர், குட்கா விஜயபாஸ்கர், எடுபிடி எடப்பாடி என அத்தனைப் பேரும் மீண்டும் மீண்டும் இதைச் சொன்னார்கள். இதனால் கலங்கிப் போன ஜோசிய நம்பிக்கையுள்ள திமுகவினர் பலரை எனக்குத் தெரியும்.

இதை நம்பி மமதையில் ஆடிய அதிமுகவினர் பலரையும் எனக்குத் தெரியும்.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

கொரோனா வந்தது. ஆளுக்கு முன் உதவக் கிளம்பினார். நாங்களெல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பதைத்தோம். “அவரை எங்கயும் போக சொல்லாதீங்க ப்ளீஸ்,” என உரிமையோடு உதயநிதி வரை சொல்லிப்பார்த்தோம். ஆனால் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற பெயரில் உதவுவதற்காகவே ஒரு நிழல் அரசாங்கதை நடத்தினார். தன் உயிருக்கு உயிரான களத்தளபதியை பலிகொடுத்து உள்ளம் உடைந்தார். ஆட்சியும் அதிகாரமும் இருந்தும் யாருக்கும் உதவாத உதவாக்கரைகள் ஏளனம் செய்தன. பழிபோட்டன. வன்மம் கக்கின.

ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை.

தேர்தல் வந்தது. உழைத்தார். உழைத்தார். உழைத்தார். திட்டம் தீட்டினார். கூட்டணி பிரித்தார். தொகுதி வகுத்தார். கணக்குப் போட்டார். “நம்மை எளிதாக ஜெயிக்க விட மாட்டார்கள்” எனத் தொண்டர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்தார். எதிலும் உதாசீனம் இல்லை. எதையும் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருநொடியும் ஓய்வில்லை. இளைஞர்களே வெட்கப்படும் அளவிற்கு உழைத்தார். தேர்தல் முடிந்தது. முடிவு வந்தது.

ஸ்டாலின் பதில் சொன்னார்,

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்….”

சொல்லிவிட்டு ஒருநொடி நிமிர்ந்து பார்த்தார். சிலர் பதில்களைச் சொல்லிக்காட்டுவதில்லை. செய்துகாட்டுகிறார்கள்!

வாழ்க எங்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். வாழ்க எங்கள் தமிழ்நாடு.

Leave A Reply