நாடாளுமன்றத்திற்கு ஒரு குட்டிக் கதை – சு. வெங்கடேசன் எம்.பி

Share

மதுரை மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் இந்தக் கதையை பதிவு செய்திருக்கிறார்… அதில் அவர் கூறியிருப்பது…

17 ஆவது நாடாளுமன்றத்தின் 9 ஆவது கூட்டத்தொடருக்காக மதுரையில் இருந்து புறப்பட்டேன். இத்தொடரில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட சொற்களை உள்ளடக்கிய கதையொன்றை சொல்லி இந்தக் கூட்டதொடருக்கான பணியினை துவக்குகிறேன்.

இனி கதைக்கு வருவோம்…

ஒரு கழுதை தனது கஷ்டங்களை நினைத்து கண்ணீரோடு சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தது. அதைப்பார்த்த அரசு அதிகாரி ஒருவர் “இந்த கழுதையின் மீது வழக்கு போடுங்கள்” என்று கூறினார்.

“ நான் எந்த தவறும் செய்ய வில்லையே, என் மீது ஏன் வழக்கு போடுகிறீர்கள்?,” என கழுதை கேட்டது.

அதற்கு அந்த அதிகாரி “ நீ அரசுக்கும் அரசருக்கும் எதிரான செயலில் ஈடுபட்டாய்” என்று கூறினார்.

“இல்லை, நான் நமது அரசர் செய்த ஊழலை பற்றியோ, அவரது மோசடிகளைப் பற்றியோ, நாட்டில் கிரிமினல் பேர்வழிகள் அதிகமாகிவிட்டார்கள் என்றோ, ரவுடித்தனம் செய்யும் குண்டர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்றோ, அரசரைச் சுற்றி இரட்டைவேடம் போடும் துதிபாடிகள் நிறைந்திருக்கிறார்கள் என்றோ எதுவும் சொல்லவில்லை, என்னை போய் அரசுக்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக எப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்டது.

“உன் மீது வழக்கு போட்டாகிவிட்டது. இனி நீ எது சொல்வதாக இருந்தாலும் நீதிமன்றத்தில் வந்து சொல்” என்று சொல்லி கழுதையை கைது செய்தனர்.

மறுநாள் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. கழுதையின் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.

அதைக்கேட்டு பதட்டமான கழுதையின் தரப்பு வழக்கறிஞர் கழுதையை பார்த்து கேட்டார்

“ நீ நமது அரசரை சகுணி என்றோ சர்வாதிகாரி என்றோ தவறாக பேசினாயா?”

“இல்லை”

“நாடகக்காரர் என்றோ பெருமை பீற்றிக் கொள்பவர் என்றோ உண்மையை பேசித்தொலைத்தாயா?”

“இல்லை”

“ நாசசக்தி என்றோ, ரத்தம் குடிப்பவர் என்றோ குற்றம் சாட்டினாயா!”

“இல்லை…., எனது வாழ்கை கஷ்டத்தை நினைத்து கண்ணீர் வடித்தபடி நடந்து கொண்டிருந்தேன். நான் வேறெதுவும் செய்யவில்லை” என்றது கழுதை.

“அரசுக்கு எதிராக எதையும் செய்யாத எனது கட்சிக்காரரைப் பார்த்து எப்படி தேசத்துரோகி என்கிறீர்கள்?” எனக்கேட்டார் வழக்கறிஞர்.

“நமது அரசர் ஆட்சியில் கண்ணீர் வடிப்பதென்பது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்று உங்களுக்குத் தெரியாதா?” என கேட்டார் அரசு வழக்கறிஞர்.

அப்படியொரு சட்டம் இருப்பது அப்பொழுதுதான் கழுதைக்கு நினைவுக்கு வந்ததது.

அதை மறந்து பொதுவெளியில் கண்ணீர் வடித்து விட்டோமே என யோசித்த கழுதை, சட்டென சுதாரித்து “ நான் உண்மையாக கண்ணீர் வடிக்கவில்லை, போலியாக முதலைகண்ணீர் தான் வடித்தேன்.” என நீதிபதியைப் பார்த்து சொன்னது.

“கண்ணீர் வடிப்பதை விட பெரிய குற்றம் முதலைக்கண்ணீர் வடிப்பது” என்று கூறி சட்டபிரிவை எடுத்து காட்டினார் அரசு வழக்கறிஞர்.

கழுதையின் வழக்கறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.

கண் கலங்கி ஆனால் கண்ணீர் சிந்த முடியாமல் பாவமாய் நின்ற கழுதையின் முகத்தைப் பார்த்தார் நீதிபதி.

சட்டத்தை மீறி கண்ணீர் வடித்த பிரிவில் வழக்குப்போட்டால் சில மாதங்கள் தான் தண்டனை. ஆனால் தேசத்துரோக வழக்கில் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியிருக்குமே என இரக்கப்பட்ட நீதிபதி அரசு வழக்கறிஞரை பார்த்து, “இந்தக் குற்றத்துக்கு ஏன் தேச துரோக வழக்கு போட்டீர்கள்?” எனக்கேட்டார்.

அதற்கு அரசு வழக்கறிஞர். கூண்டில் நின்று கொண்டிருந்த கழுதையை பார்த்து “நீ யார்? “ எனக்கேட்டார்.

கண்ணீரையும் துக்கத்தையும் அடக்கிக்கொண்டு சொன்னது “நான் ஒரு கழுதை” என்று.

“கழுதை என்பது இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட சொல், அதனை நாடாளுமன்றத்திலேயே பயன்படுத்தக் கூடாது. இவரோ அதனை நீதிமன்றத்தில் பயன்படுத்துகிறார். அதனையே தனது பெயர் எனச்சொல்லும் ஒருவர் மீது தேசதுரோக வழக்கு போடாமல் வேறு என்ன வழக்கு போடுவது மை லாட்?” எனக்கேட்டார் அரசு வழக்கறிஞர்.

#Parliament #Removed #Words #story #suveWrites

Leave A Reply