வணக்கத்திற்குரியவர்களே..! – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

Share

வணக்கத்திற்கு உரியவர்கள் நிஜமாகவே அதற்கான தகுதியை பெற்றிருக்கிறார்கள். பெண்களிடம் பொறுப்புகளைக் கொடுங்கள் என்று தந்தை பெரியார் தொடர்ந்து அவர்களுக்காக போராடினார்.

அவர் எதையெல்லாம் பெண்கள் அடைய வேண்டும் என்று விரும்பினாரோ அதையெல்லாம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு மேலேயே பெண்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பெண் விடுதலை குறித்து யாருமே யோசிக்காத வகையில் அவர்களுடைய அத்தனை பிரச்சனைகளுக்கும் தந்தை பெரியார் வழிகளை கண்டறிந்து சொன்னார்.

அன்று அவரைக் கேலி செய்தார்கள். சாத்தியமே இல்லையென்றார்கள். பெண்களை அடுப்படிக்குள் இருந்து வெளியே கொண்டுவர அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார்.

இப்போதுதான் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கல்வி கற்கச் செல்கிறார்கள். சொல்லப்போனால், ஆண்களைக் காட்டிலும் கூடுதலாகவே கல்வி கற்கிறார்கள். ஆனால், பெண்களுக்கான பணியிட ஒதுக்கீடு என்பது கலைஞர் காலத்தில் 30 சதவீதமாக்கப்பட்டது. இதோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 40 சதவீதமாக உயர்த்தப் பட்டிருக்கிறது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடம் முழுவதும் பெண்களுக்கே என்று ஆக்கியவரும் தலைவர் கலைஞர்தான்.

உள்ளாட்சித் தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட்ட போது, பெண்களுக்கு முதன்முதலில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தவர் கலைஞர்தான். அதை 50 சதவீதமாக்கியவர் ஜெயலலிதா என்றாலும், அவசர கோலத்தில் அறிவித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு இறந்தார்.

ஆனால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய நிலப்பரப்பாக கருதப்படும் அளவுக்கான் இடங்களில் இன்றைக்கு பெண்கள் உள்ளாட்சி பொறுப்புகளில் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், இதையெல்லாம் ஒரு பகுதியினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 10 வயதில் புருஷனை இழந்தாலும் மொட்டையடித்து மூலையில் அமரவைக்கப்பட்ட அந்த பகுதியினர் எப்போதுமே அப்படித்தான். தந்தை பெரியார்தான், மூலையில் முடக்கப்பட்டிருந்த அந்த பெண்களின் வாழ்க்கையில் புதிய வெளிச்சத்திற்கு வழி அமைத்தவர் என்பதை மறைத்துவிட்டு பேசுகிறார்கள். ஆனால், வரலாறு படித்த அவர்களில் பெரும்பான்மையோர் பெரியாரை வணங்கத்தான் செய்கிறார்கள்.

அதுபோலத்தான், இன்றைக்கு தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சியின் மேயராகவும், அதையொட்டிய தாம்பரம் மாநகராட்சியின் மேயராகவும் தலித் பெண்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இதைக்கூட தாங்க முடியாமல் பலர் அடிவயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள்.

உயர்ஜாதியினர்கூட அமைதியாக இருக்கிறார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த சில சுயசாதி அரிப்பெடுத்தவர்கள்தான் அளவுக்கு அதிகமாக விமர்சனம் செய்கிறார்கள்.

சென்னை என்பது பெரும்பறச்சேரி. இதன் பூர்வீக மக்களிடம் பொறுப்பை கொடுக்காமல் தெலுங்கு பேசும் அருந்ததியினப் பெண்ணிடம் எப்படி கொடுக்கலாம் என்று குரூப் கிளம்பியது.

இன்னொரு குரூப்போ, ப்ரியா தலித் பெண்ணே அல்ல என்று, யாரோ ஒரு கிறிஸ்தவ பெண்ணின் திருமண போட்டோவைப் போட்டு பரப்பத் தொடங்கியது.

தலித் மக்களுக்குள் இப்படியென்றால், உயர்சாதியினரில் ஒரே ஒரு பெண் கவுன்சிலராகி இருக்கும் நிலையில், அவர், ஒரு தலித் பெண்ணை மாண்புமிகு என்றோ, வணக்கத்திற்குரிய என்றோ எப்படி அழைக்கலாம் என்ற கவலை குடையத் தொடங்கியிருக்கிறது.

அவர்கள் திரு அல்லது திருமதி மேயர் அவர்களே என்று ஏன் அழைக்கக்கூடாது என்று விவாதம் நடத்துகிறார்கள்.

சென்னை மேயர் ப்ரியா திமுகவின் பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்த பெண். திமுக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் பேத்தி.

ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்தான். இவருக்கு சரியாக பேசத் தெரியவில்லை என்று கிண்டலடித்தார்கள்.

தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியின் கணவர் குவாரியில் கல்உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்கிறார். பதவியேற்புக்கே தனது கணவரின் ஸ்கூட்டரில்தான் வந்தார். இப்போ இப்படித்தான் வருவார்கள். பிறகு காரில் வருவார்கள் என்று கிண்டலடித்தார்கள்.

இவர்கள் யார் தெரியுமா?

பெண்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடுப்படியை விட்டு வெளியே வரவிடாமல் பூட்டி வைத்திருந்தார்கள். கற்பின் புனிதம் கெட்டு விடாமல் இருக்க விவரம் தெரியா வயதிலேயே விவரம் தெரியா சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். கல்வி வாசனை எட்டாமலே செய்தார்கள்.

இதோ சில பத்தாண்டுகளில்தான், திராவிட இயக்கத்தின் முன்னெடுப்பில் அவர்கள் பட்டங்கள் பெறவும், சட்டங்கள் செய்யவும் தகுதி பெற்றுவருகிறார்கள்.

அரசியலையே ஆண்களுக்கானது என்று பெண்களை நுழையவிடாமல் வைத்திருந்த இவர்கள்தான் பேசத் தெரியவில்லை என்று கிண்டல் செய்கிறார்கள்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் வழக்கறிஞர்களை நீதிபதிகளாகவும், கிளார்க்குகளை அதிகாரிகளாகவும் நியமிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னபோதும் இப்படித்தான் கேலி செய்தார்கள். நீதிபதி பொறுப்பென்பது ஏதோ, யோக்கியவான்களுக்கே உரியதுபோல பேசினார்கள்.

ஒரு வழக்கறிஞர் பொய் சொல்லாமல் வழக்காடியிருக்கிறாரா? பொய்களை மூலதனமாக போட்டு ஜெயித்த வழக்குகளின் அடிப்படையில் நீதிபதிகள் ஆகிறவர்கள் எப்படி யோக்கியவான்களாக இருக்க முடியும் என்று தந்தை பெரியார் கேட்டார்.

பெண்களுக்கு எதிராக பல சந்துகளில் ஒளிந்து களமாடும் இதுபோன்ற நபர்களுக்கு ஒன்றைச் செல்லலாம். ஆம், இந்த நாட்டையே ஒரு செருப்புதான் 14 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டலாம்.

செருப்பைக் காட்டிலும் பெண்கள் கேவலமாகி விட்டார்களா என்று அவர்கள் மூஞ்சியிலேயே அடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் வருகிறது.

நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளில் மொத்தமாக 649 இருக்கிறது. அதில் 350 இடங்களில் மகளிர் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது பெரிய சிறப்பு. இதுதான் ‘திராவிட மாடல்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக சொல்லியிருக்கிறார்.

இதைத்தான் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால் பெண்கள் தங்களுக்கான தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை நிறைவேற்றுவார்கள்.

அதற்கு உதாரணமாகத்தான், கோவை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள கல்பனா தனது பதவியேற்பில் மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டிருக்கிறார்.

-ஆதனூர் சோழன்

Leave A Reply