நீதிக்கட்சி முதல்வர்களையும் நினைத்துப் பார்ப்பாரா முதல்வர் ஸ்டாலின்? உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

Share

கலைஞர் பிறந்த ஜூன் 3 ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும், அவருடைய கம்பீரமான சிலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தபோது பலத்த ஆரவாரம் ஏற்பட்டது.

செய்தியாளர் பகுதியில் இருந்து ஒருவர் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாராஜனை கவனித்துவிட்டு,

“இப்போ, அவரு தனது தாத்தாவுக்கு எப்போ அரசு மரியாதை அறிவிக்கப்படும்னு நெனச்சிருப்பாரு’ என்றார்.

அவர் அப்படி நினைத்திருப்பாரா தெரியாது. ஆனால், முன்னாள் முதல்வர் என்று வந்துவிட்டால், நீதிக்கட்சி ஆட்சியில் முதல்வர்களாக இருந்தவர்களையும் கணக்கில் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்றே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

வருங்காலத் தலைமுறையினருக்கு நம் முன்னோரின் ஒப்பற்ற பணிகளை நினைவூட்டும் வகையில் அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை நிறுவுவதும், நினைவுநாளைக் கொண்டாடுவதும் இந்தத் தலைமுறையின் கடமை.

எனவேதான், நாட்டுக்கு தொண்டாற்றிய தலைவர்களுக்கும், சான்றோர்களுக்கும் சிலைகளும் மணிமண்டபங்களும் அமைக்கப்படுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அவர்கள் பிறந்தநாள் அரசு விழாக்களாக கொண்டாடப்படுகிறது.

நமக்கு திருக்குறள் கிடைத்ததே தவிர அதை எழுதிய திருவள்ளுவரின் உருவம் கிடைக்கவில்லை. அவரது முகம் கூட நமக்கு தெரியாது. தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் எவரும் அவருக்கு சிலை கூட வடிக்கவில்லை.

உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர்கள் புரட்சி கவிஞர் பாரதிதாசனும் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவும்தான்.

அவர்கள் உருவாக்கிய ஓவியத்தை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், கண்ணதாசன் என பலரும் பார்த்து அங்கீகரித்தனர். அதன்பின்னர், 1964ஆம் ஆண்டு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் சென்னை சட்டசபையில் திறந்துவைத்தார். அந்த ஓவியம்தான் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டது.

அண்ணா முதல்வராக பதவியேற்றபின் நடத்திய உலகத்தமிழ் மாநாட்டின்போது திருவள்ளுவர், அவ்வையார், கம்பர் தொடங்கி தமிழ் சான்றோர்கள் அனைவருக்கும் சிலை நிறுவப்பட்டது.

கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் சென்னையில் வள்ளுவருக்கு கோட்டம், கன்னியாகுமரியில் வானளாவிய சிலை, காமராஜருக்கு சிலை, மணிமண்டபம், முத்துராமலிங்கத் தேவருக்கு, ரெட்டமலை சினிவாசனுக்கு சிலை நாட்டுக்கு தொண்டாற்றிய தலைவர்களுக்கு நினைவு மண்டபங்கள் மற்றும் சிலைகளை நிறுவினார்.

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி தனது கொள்கை எதிரிகளுக்கு “கவுன்ட்டர்” கொடுத்தவர் கலைஞர்.

அந்த வரிசையில் கலைஞரின் அடையாளங்களால் நிரம்பி வழியும் தமிழ்நாட்டில், கலைஞர் உருவாக்கிய கட்டுமானங்களுக்கு எம்ஜியார், ஜெயலலிதா பெயர்கள் சூட்டப்பட்ட நிலையில், இரவும் பகலும் அவர் பார்த்துப்பார்த்து கட்டிய புதிய தலைமைச் செயலகத்துக்கும் சட்டப்பேரவை வளாகத்துக்கும் அவருடைய பெயர் சூட்டப்படுவதே பொருத்தமாக இருக்கும். பேரவை வளாகத்தில் அவருடைய சிலையை அமைப்பதே அவருக்கு பெருமை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

அண்ணா சாலையில் தினமலர் அலுவலகத்துக்கு எதிரே தந்தை பெரியாரால் அனுமதி பெறப்பட்டு, திராவிடர் கழகத்தால் திறந்துவைக்கப்பட்ட கலைஞர் சிலையை எம்ஜியார் மரணத்தைச் சாக்காக வைத்து உடைத்து எறிந்தனர். அந்த இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் மீண்டும் கலைஞர் சிலையை நிறுவியே தீர வேண்டும் என்பதே திமுகவினரின் ஆசை. இதையும் முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் நலனுக்கும் சமூகநீதிக்கும் நினைவுகூரத்தக்க பல பணிகளை ஆற்றிய முன்னாள் முதல்வர்கள் சிலருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. திமுக அரசுதான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என்று சட்டசபை வளாகத்தில் பலரும் பேசிக்கொண்டதைக் கேட்க முடிந்தது.

நீதிக்கட்சி ஆட்சியின் குறிப்பிடத்தக்க முதல்வர் களாக செயல்பட்ட சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா, பி.டி.ராஜன் கூர்ம வெங்கட் ரெட்டி நாயுடு உள்ளிட்டோருக்கும் சிலை நிறுவ வேண்டும் என்று பேரவையில் இடம்பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் ஒரு பேச்சு உள்ளது.

நீதிக்கட்சி ஆட்சி பல முன்னோடி சட்டங்களை இயற்றியதால்தான் இன்று தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்றைய சட்டப்பேரவையின் பலமே நீதிக்கட்சி அரசு அமைத்த பலமான அடித்தளம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

பனகல் அரசருக்கு சென்னை தியாகராய நகரில் அவர் பெயரில் பனகல் பூங்காவும், உள்ளே சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

பி.டி.இராஜனுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே நிறுவப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்துக்கு தனது நிலத்தை கொடையாக அளித்ததால், அவருடைய நினைவைப் போற்றும் வகையில் அவருடைய சிலை நிறுவப்பட்டது. அனைத்துத் தரப்பு மக்களும் அங்கு செல்லவோ, அவருடைய சிலையைப் பார்க்கவோ வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தை போலல இங்கும் வளாகத்திற்குள் செல்ல கட்டுப்பாடுகள் வரலாம்.

குறுகிய காலமே முதல்வராக பதவி வகித்தாலும் பல முன்னோடி சட்டங்களை இயற்றியவர் பி.டி.ராஜன். அவரது சிலையை பொதுஇடத்தில் நிறுவுவதால் அவர் குறித்து பலரும் அறிண்டு கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

அவரது பேரன் தற்போதையை நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இந்தத் தருணத்தில் அவரது தாத்தாவுக்கு சிலை அமைத்து அவரது புகழை மேலும் உலகறிய செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

பிடிஆரின் குடும்ப வரலாறு தெரியாத எச்.ராஜா போன்ற சங்கிகளின் தலைவர்களுக்கு நினைவில் பதியுமளவுக்கு ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும். அதற்கான முயற்சியை பிடிஆர் எடுப்பார். முதலமைச்சரிடம் அவர் கேட்க சங்கடப்பட்டாலும், இந்தச் சமயத்தில் பி.டி.ராஜனுக்கு உரிய முக்கியத்துவத்தை முதலமைச்சர் நிச்சயமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

கலைஞர் அவர்களைப் போல அரசியல் வேறுபாடு இன்றி கடந்தகால முதல்வர்கள் அனைவருடைய பிறந்தநாட்களையும் அரசு விழாவாக கொண்டாடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இது அவருக்கு வரலாற்று புகழை பெற்றுத்தரும். •

uthayamugam 15th issue single

-ஆதனூர் சோழன்

Leave A Reply