மக்கள் பிரதிநிதிகளா சமூக ஊடகங்கள்? – உதயமுகம் வார இதழ் தலையங்கம்!

Share

எல்லாக் காலத்திலுமே பத்திரிகைகள் தங்களுக் கென்று ஒரு கருத்தை வைத்தே செயல்படுவது வழக்கம்தான்.

செய்திகளை முந்தித் தருவது, உண்மைச் செய்தியை தருவது என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், பத்திரிகைகள் எப்போதும் முதலாளிகளின் விருப்பப்படியே இயங்கின. இப்போதும் இயங்குகின்றன.

ஆனால், மக்கள் கருத்துக்கு செவிசாய்த்து, மக்களின் எண்ணத்தை அரசுக்கு பிரதிபலிப்பதையும் அவை கடமையாகக் கொண்டிருந்தன.

நெருக்கடிநிலைக் காலத்திலும், 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதாவின் காட்டாட்சிக் காலத்திலும் பத்திரிகைகள் மக்கள் எதிர்ப்பையும், கோபத்தையும் பிரதிபலித்தன.

இத்தனைக்கும் அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருந்தது. அதையும் மீறித்தான் அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்தன.

எல்லாப் பத்திரிகைகளும் இப்படி செயல்பட் டனவா என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால், சமீப ஆண்டுகளில் சமூக வலைத்தளங்கள் பெருகிய பிறகு, பரபரப்புக்காக என்ற பெயரில் யார் என்ன பொய் சொன்னாலும், ஆதாரமற்ற எத்தகைய கட்டுக்கதைகளை பரப்பினாலும் அதை அப்படியே வீடியோவாகவும், செய்தியாகவும் பிரசுரிப்பது அதிகரித்துள்ளது.

சமீபத்தில் ஜூனியர் விகடன் ஊழியர்கள் ஜிஸ்கொயர் நிறுவனத்தை மாதம் 50 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்த விவகாரத்தில் பல விஷயங்கள் பொதிந்துள்ளன.

ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் எந்தத் தவறு செய்தாலும் அது முதலாளியை பாதிக்காது என்றால், எப்படிப்பட்ட செய்தியையும் ஊழியர்கள் பிரசுரிக்க அனுமதிக்கும் அவருக்கு என்னதான் பொறுப்பு?

ஊழியர்களின் தவறுக்கு நிர்வாகமும் பொறுப்பு என்று வரைமுறைகளை திருத்த அரசு யோசிக்க வேண்டும்.

பத்திரிகையாளர்கள் ஒருவரை பேட்டி எடுக்கும் போது அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு, புகார்களுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கப் பழக வேண்டும்.

சமூக வலைத்தங்களை பின் தொடருவதை தவிர்த்து, மக்கள் கருத்தறியவும், சமூக வலைத்தளங்களின் இயக்கத்தை வரைமுறைக்கு உட்படுத்தவும் அரசு முன்வர வேண்டும்.

இல்லையென்றால், யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை அதிகரிக்கும். பிளாக் மெயில்கள் என்ற பெயரில் நவீன கொள்ளைகள் அதிகரிக்கும். •

-ஆதனூர் சோழன்

Leave A Reply