உதயசூரியனின் உலக சாதனையும், சிக்கி சீரழியும் இரட்டை இலையும்..! – உதயமுகம் இதழ் கவர் ஸ்டோரி

Share

அதிமுக என்னவோ நாகரிகத்தின் தொட்டில் போலவும், ஏதோ இந்தப் பொதுக்குழுவில்தான் அநாகரீகமான மோதல்கள் நிகழ்ந்தது போலவும் ஊடகங்கள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.

அதிமுகவையே ஒரு அநாகரீகமான இயக்கமாகத்தான் எம்ஜியார் உருவாக்கினார். காங்கிர ஸுக்கும் திமுகவுக்கும் அரசியல் ரீதியாக மோதல்கள் இருக்கும். ஆனால், அன்றைக்கு காங்கிரஸ் முதல்வர்களுடனும், மற்ற அமைச்சர்களுடனும் நாகரீகமான அணுகுமுறையை கடைப்பிடித்தார் அண்ணா.

ஆனால், திமுகவில் அப்பா இருந்தாலும், அப்பாவுடன் மகன் பேசுவதைக்கூட அனுமதிக் காதவர் எம்ஜியார். தனது கட்சித் தொண்டர்களும் அமைச்சர்களும் கட்சிச் சின்னத்தை பச்சை குத்திக்கொள்ளும்படி கூறியவர் எம்ஜியார். திமுகவு டன் பகை அரசியல் நடத்தியவர். உண்ணாவிரதம் இருந்தால் உண்ணும் விரதம் இருக்கும்படி கட்சிக்காரர்களை கேவலமான போராட்ட முறைகளுக்கு தள்ளியவர். அவருடைய வழியில்தான் ஜெயலலிதாவும் கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமல் மரியாதை இல்லாத அரசியலை நடத்தினார். யாரையும் மதிக்காத அவருடைய அரசியலை ஆளுமை என்று புகழும் நிலைதான் இன்றைக்கும் இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான், அதிமுக இப்போது அயோக்கியர்களின் பிடியில் சிக்கியிருப் பதாகவும், அமமுக விரைவில் அதிமுகவை கைப்பற்றும் என்றும் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

அதிமுக வரலாற்றில் எம்ஜியார் இருக்கும் போதும், ஜெயலலிதா இருக்கும்போதும் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுக்கள் நடைபெற்றதாக அவர் கூறியிருந்தார்.

அதிமுகவில் அராஜகம் தலைதூக்கிவிட்டது. சர்வாதிகாரம் புகுந்துவிட்டது என்றெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியிருக்கிறார். அதிமுகவுக்கு ஓபிஎஸ் துரோகம் செய்துவிட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதையெல்லாம் புதிதாக பார்க்கும் இந்தத் தலைமுறையினர், அதிமுகவில் இதற்குமுன் எல்லாம் ஒழுக்கமாக நடந்தது மாதிரியும், இப்போதுதான் இந்த குழப்பம் நிகழ்வது மாதிரியும் புரிந்துகொள்வார்கள். அதனால்தான், அதிமுகவின் கதையை கொஞ்சம் சொன்னேன்.

திமுக 1949ல் தொடங்கப்பட்டது. அண்ணா பொதுச்செயலாளர் ஆனார். 1957ல் நடைபெற்ற அந்தக் கட்சியின் மாநாட்டில், பொதுச்செயலாளர் பதவியை ஒருவரே வகிக்கக்கூடாது என்று நாவலர் நெடுஞ்செழியன் கூறினார். அதைத்தொடர்ந்து, அண்ணா போட்டியிடுவதை தவிர்த்து, நெடுஞ்செழியனை பொதுச்செயலாளர் ஆக தேர்வு செய்ய வழி அமைத்தார்.

தம்பி வா, தலைமை ஏற்க வா என்று தலைமைப் பொறுப்பை விட்டுத்தரும் பக்குவம் அண்ணாவுக்கு இருந்தது. திமுகவில் எதிர்க்கருத்துக்கும் மதிப்பளிக்கும் ஜனநாயகத்தன்மையை அண்ணா காப்பாற்ற விரும்பினார். அதன்படியே நடந்தார்.

ஆனால், 1961 வேலூர் மாநாடு திமுக வரலாற்றில் கறையை ஏற்படுத்தியது. ஆம், கட்சி வளர்ந்தது. கலைஞரைப் போன்ற பின்புல பலம் இல்லாத தலைவர்கள் புகழ்பெறுவதை ஈ.வி.கே.சம்பத், கண்ணதாசன் போன்ற தலைவர்கள் விரும்பவில்லை. திமுக வளருவதை விரும்பாத காங்கிரஸ் கட்சியோ சம்பத் போன்ற அதிருப்தியாளர்களை பயன்படுத்தி திமுகவை பிளக்கத் திட்டமிட்டது.

வேலூர் பொதுக்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரின் அதிகாரங்களை குறைத்து, அவைத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று சம்பத் வலியுறுத்தினார்.

இது பொதுக்குழுவில் கோபத்தை கிளறியது. அந்தத் தீர்மானத்தை நிராகரித்தது. இதையடுத்து சம்பத் அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் சம்பத்துக்கு எதிராக பொதுக்குழுவில் ஆவேசமான கருத்துகள் பரிமாறப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார்.

அதன்பிறகு திமுக முன்னைவிட பலம்பெற்றது. 1967ல் ஆட்சியையே பிடித்தது. 1969ல் அண்ணா மறைவுக்கு பிறகு முதல்வர் பொறுப்புக்கு போட்டி ஏற்பட்டது. இதில் சீனியர் என்ற வகையில் நெடுஞ்செழியன் முதல்வராக விரும்பினார். ஆனால், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கலைஞருக்கு ஆதரவாக இருந்தா ர்கள். அதைத்தொடர்ந்து கலைஞரை முதல்வராக தேர்வு செய்தனர். நாவலர் நெடுஞ்செழியன் கோபித்துக்கொண்டு கட்சியிலிருந்து ஒதுங்கினார்.

பிறகு நடந்த சமரச முயற்சியில் அமைச்சராக ஒப்புக்கொண்ட அவர், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கேட்டார். ஆனால், இரண்டு தலைமை ஆட்சியை நடத்த முட்டுக்கட்டையாகும் என்று கலைஞர் நினைத்தார். அதையடுத்து கட்சியின் தலைவராக கலைஞரும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும், பொருளாளராக எம்ஜியாரும் பொறுப்பேற்றார்கள்.

1971ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. திமுகவின் இந்த வெற்றி மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸுக்கும், தமிழகத்தில் இருந்த பார்ப்பனர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுகவின் பலத்தை சிதைக்க எம்ஜியாரை கட்சிக்கு எதிராக பயன்படுத்தினார்கள். 1972ல் எம்ஜியார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பொதுக்குழுவிலும், சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவில்லை.

ஆனால், திமுக கிளைக்கழகங்களுக்கு நிகராக எல்லா ஊர்களிலும் இருந்த எம்ஜியார் ரசிகர் மன்றங்களில் பெரும்பாலானவை அவருக்கு ஆதரவாக இருந்தன. எனவே, திமுகவுக்கு நிகராக ஒரு கட்சியை உருவாக்க அவரால் முடிந்தது.

இரண்டு கட்சிகளாக பிரிந்த பின்னர், திமுக உள்கட்சித் தேர்தலை முறையாக நடத்தியது. அந்தத் தேர்தலே பொதுத்தேர்தலுக்கு நிகராக பரபரப்பாக இருக்கும். அந்தத் தேர்தலில் சில இடங்களில் வெட்டுக்குத்துகூட நடந்தது.

அதிமுகவில், எம்ஜியார் வைத்ததுதான் சட்டம். திமுகவில் ஜனநாயகம் இல்லை என்று சொல்லி வெளியேறிய எம்ஜியார், தனது கட்சியில் தொண்டர்களே தலைவர்கள் என்று கூறினார். ஆனால், அவருக்கு எதிராக யாரும் போட்டியிடும் வாய்ப்பையே உருவாக்கவில்லை. அவர் சொன்னதுதான் நடந்தது.

ஆனால், அவர் இறந்தவுடன் அதிமுகவுக்குள் பயங்கரமான மோதல் உருவானது. ஜெயலலிதா அணிக்கும் எம்ஜியாரின் மனைவி ஜானகி தலைமையிலான அணிக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. சட்டமன்றத்திலேயே ரத்தக்களறி ஏற்பட்டது. கட்சி இரண்டு அணிகளானது. கட்சியின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

1989 தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணிகளும் தோல்வியடைந்தன. அதையடுத்து இரண்டு அணிகளும் இணைந்து, இரட்டை இலைச் சின்னம் மீட்கப்பட்டது.

அதன்பிறகு, 1993ல் திமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. எம்ஜியாரைக் காட்டிலும் பெரிய பிளவு. கட்சியிலிருந்த இளைஞர்களில் பெரும்பாலோரும், திமுகவின் மாவட்டச் செயலாளர்களில் பலரும், பொதுக்குழு உறுப்பினர்களில் பலரும் வைகோவுடன் இருந்தார்கள். பொதுக்குழுவில் பலப்பரீட்சை நடத்த ஏற்பாடு நடைபெற்றது. ஆனால், தலைமைக்கழகத்தால் அடையாள அட்டை பெற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க முடிந்தது. பத்திரிகையாளர்கள் பங்கேற்புடன் வீடியோ பதிவுடன் நடைபெற்ற முதல் பொதுக்குழு அதுதான்.

இவ்வளவு கட்டுப்பாட்டுடன் பொதுக்குழுவை நடத்தியதால், கட்சியின் பிளவையும், சின்னம் முடக்கப்படுவதையும் தடுத்தார் கலைஞர்.

அதேசமயம், 2016ல் ஜெயலலிதா இறந்த வுடன் அதிமுக மீண்டும் இரண்டு பிரிவுகளானது. இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, சசிகலா அணி என்று மூன்று பிரிவுகளானது. பின்னர் சசிகலா சிறைக்கு சென்றவுடன், ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்டார்கள். பொதுச்செயலாளர் பதவிக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளை ஏற்படுத்தினார்கள். முதல்வர், துணை முதல்வர் என்ற பதவிகளை உருவாக்கினார்கள்.

2021 தேர்தலில் அதிமுக தோற்றவுடன், கட்சிக்குள் அதிகாரப்போட்டி உருவானது. நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற நிலை தீவிரமடைந்தது. ஒற்றைத் தலைமைதான் கட்சிக்கு நல்லது என்ற கருத்து வலுப்பட்டது.
பொதுக்குழுவில் முடிவு செய்யலாம் என்றால், ஓபிஎஸ்சுக்கு ஆதரவில்லை என்பது உறுதியானது. எனவே பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று ஓபிஎஸ் புலம்பத் தொடங்கினார். நீதிமன்றத்தில் தடைபெற முயன்றார். இபிஎஸ்சுக்கு எதிரான கருத்துகளை வெளியிடத் தொடங்கினார். முடிவில் நீதிமன்ற அனுமதியுடன் பொதுக்குழு நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு வந்த ஓபிஎஸ்சுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.

ஒற்றைத்தலைமை குறித்து முடிவெடுக்க ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், தனது ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது என்று மீண்டும் தடைபெற முயற்சிக்கிறார் ஓபிஎஸ். அவருடைய நோக்கம் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாகத்தான் இருக்கிறது. தனக்கு ஆதரவில்லை என்பதை அவரே இதுபோன்ற அழுகுணி ஆட்டத்தின்மூலம் நிரூபிக்கிறார். எம்ஜியார் உருவாக்கிய கட்சியின் சின்னத்தை சீரழிப்பதையே அவரால் வளர்ந்தவர்கள் பிழைப்பாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், எத்தனை பிளவு ஏற்பட்டாலும், தலைவரே மறைந்தாலும், அடுத்த தலைவரை சுமுகமாக தேர்ந்தெடுத்து கட்சியையும் கட்சிச் சின்னத்தையும் தொடர்ந்து உறுதிப்படுத்தும் திமுகவை அழிக்கப்போவதாக கூச்சல் போடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இபிஎஸ் அணி அறிவித்துள்ள 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? ஓபிஎஸ் கட்சியை பிளப்பாரா? மீண்டும் மூன்றா வது முறையாக சின்னம் முடக்கப்படுமா? மத்தியி லிருக்கும் பாஜக அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான் கிளைமேக்ஸ். பொருத்திருந்து பார்ப்போம்… •

-ஆதனூர் சோழன்

Leave A Reply