25 ஆண்டுகளில் 3 கோடி மக்களை கொன்ற தொற்று நோய்களின் சகாப்தம் நமக்கு சொல்வது என்ன?

Share

1896 முதல் 1921 ஆம் ஆண்டு வரை சுமார் 25 ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தொற்று நோய்களுக்கு இரையாகினர் என்று பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தின் வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.

1900மாவது ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி, இப்போது ஜம்மு காஷ்மீர் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள பனிஹால் சாலையில் பயணி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டார். அங்கேயே அவர் இறந்துவிட்டார். அவருடைய மரணத்துக்கான காரணத்தை அறிய விரும்பாமல் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். ஆனால், அந்த பயணியைத் தொற்றிய நோய், தொழிலாளர்களையும் தொற்றியது. இதில் 176 பேர் அடுத்த மூன்று நாட்களில் பலியாகினர்.

இந்த தொடர் மரணத்தால் பீதியடைந்த மற்ற தொழிலாளர்கள்,  தப்பிப்பிழைத்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் தங்களுடைய வீடுகளுக்கு தொற்றுநோயை சுமந்துகொண்டு திரும்பினர்.  இதற்கிடையில், அமர்நாத் குகைக்கு பல்லாயிரக்கணக்கான இந்து யாத்ரீகர்கள் வந்தனர். அவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத கிராமங்கள் வழியாக பயணத்தை தொடர்ந்தனர்.  அவர்கள் வழியாக இந்த நோய் விரைவாக பரவியது. அக்டோபர் மாதத்துக்குள், 4 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இறப்பு விகிதம் 56 சதவீதமாகியது. கட்டுப்பாடற்ற, ஒருவேளை நோயைப் பற்றி அறியாத ஒரு நோயாளி, காஷ்மீர் சமவெளி முழுவதும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தினார். அவர் பஞ்சாப்பிலிருந்து காலரா பாக்டீரியாவை சுமந்து சென்றிருக்கிறார். அந்த நோய் 1897 முதல் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்தில் 1896 முதல் 1921 ஆம் ஆண்டுவரை 3 கோடிப் பேர் தொற்றுநோய்களுக்கு இரையானதாக ஆய்வுகள் கூறுகின்றன. புபோனிக் பிளேக், காலரா, மலேரியா, பெரியம்மை மற்றும் காய்ச்சல் ஆகிய தொற்று நோய்களால் இவர்கள் பலியாகினர். இறந்தவர்களில் சுமார் 1கோடிப் பேர் பஞ்சாப், வடமேற்கு மாகாணங்கள் மற்றும் பம்பாயைச் சேர்ந்தவர்கள்.

காலரா மற்றும் பிளேக் நோய்களின் மையமாக பஞ்சாப் இருந்தது.  1896 மற்றும் 1921 க்கு இடையில், பிரிட்டிஷ் இந்திய மாகாணத்தில் 12 பெரிய காலரா நோய் பலிகள் பதிவாகியுள்ளன, இதனால் இரண்டரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த பலி எண்ணிக்கையில் மலேரியா, பெரியம்மை, பிளேக் மற்றும் இன்ஃபுளுவன்ஸா ஆகிய நோய்களால் இறந்தவர்களும் அடங்குவர்.

இருப்பினும், பம்பாயில் 1896 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிளேக்தான் அனைத்திலும் மிகக்கொடியது என நிரூபித்தது. பிளேக் நோய் மற்ற மாகாணங்களுக்கும் பரவியதால், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1 கோடியே 20 லட்சம் மக்கள் அழிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து,  கடுமையான சமூக ஒழுங்கின்மை உருவாகியது. இப்படிப்பட்ட பேரழிவு காரணமாக, தொற்று நோய்களை எதிர்த்து போராடுவதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுக்கும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டம், 1897, ஒரு தொன்மையான நினைவூட்டலாக இன்றும் நீடிக்கிறது.

இந்த சட்டத்தைத் தொடர்ந்து நோய் தாக்கியவர்களைக் கண்டறிந்து புகார்செய்ய ஒற்றர்கள் நியமிக்கப்பட்டனர். நோயாளிகள் என்று சந்தேகப்படுவோர் வீடுகளில் சோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்க கிராம அதிகாரிகள் பொறுப்பேற்றனர். ஜம்மு-காஷ்மீர் மகாராஜா ஒரு சுவாரஸ்யமான கொள்கையை ஏற்படுத்தினார். அதாவது நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் தனது அரசு எல்லைக்குள் வந்ததாக புகாரளித்தவர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி, நோய்த் தொற்றை மறைப்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இருப்பினும், அரசு நடவடிக்கைகள் மட்டுமே தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த போதுமானது அல்ல. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இது சாத்தியம். பிரிட்டிஷ் அரசு மற்றும் அப்போதிருந்த முடியாட்சிகளும் முக்கியமான விஷயங்களில் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டியிருந்தது. வெகுஜன ஏழ்மைநிலை, முதன்மையான மருத்துவ உள்கட்டமைப்பு, மோசமான சுகாதார வசதி, சுத்தமான குடிநீர் பற்றாக்குறை, பின்தங்கிய கல்வி நிலை போன்றவற்றில் அரசுகள் நெருக்கமாக செயல்பட வேண்டியிருந்தது. அதேசமயம், பிரிட்டிஷ் நிர்வாகம் இந்திய மக்களை ‘இழிந்தவர்களாகவும்’, ‘புத்தியற்றவர்களாகவும்’, ‘காட்டுமிராண்டிகளாகவும்’ கருதும் மனப்பான்மையும் நீடித்தது.

அன்றைய காலகட்டத்தில் உழைப்புக்காக வெளியில் செல்வதை தடுக்க முடியாது. பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதிக்கப்படாத பகுதிகளுக்கு இடையே இந்த தொழிலாளர் இயக்கம் இருந்தது. முழுமையான ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. அப்படி அறிவித்தால் பிரிட்டிஷ் அரசுக்கு நிறைய செலவாகும் என கருதப்பட்டது. எனவே, தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அதிகரித்தன. உண்மையில், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு வழிமுறைகள் வளர்ந்திருந்தன. இதன் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1888 மற்றும் 1900 க்கு இடையில், மூன்று பெரிய தொற்றுநோய்கள் இப்பகுதியைத் தாக்கின. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகள் நிகழ்ந்தன. (1888 இல் 10,000; 1892 இல் 11,712; 1900 இல் 4,256 பேர் பலியாகினர்). 1888 ஆம் ஆண்டு தொற்றுநோய் ஜம்முவில் இருந்து மகாராஜாவின் முகாமால் ‘இறக்குமதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் 1900மாவது ஆண்டு தொற்றுநோய் பஞ்சாபிலிருந்து ஜம்முவுக்கு வந்தது.

நோய் தொற்றால் அதிகப்படியான உயிரிழப்புக்கு மிக முக்கியமான காரணமாக, மக்கள் தங்களுடைய நோயை மறைத்ததே ஆகும் என்கிறார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில், அதிகாரிகள் தங்கள் உடலை சோதனை செய்வதிலிருந்து தவிர்க்கவும், மேற்கத்திய சுகாதார மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை எதிர்க்கவுமே மக்கள் தங்களுடைய நோயை மறைத்தார்கள் என்று டேவிட் ஆர்னால்டு, ஐரா க்ளெய்ன் ஆகியோர் கூறுகிறார்கள்.

நோய்த் தொற்று இருப்பவர்களை அதிகாரிகள் கட்டாயமாக இழுத்துச் சென்று தனிமைப்படுத்தினார்கள். தொற்றுநோய் இருக்கிறது என்று சொன்னால் அவர்களை சுற்றி இருப்பவர்கள் தங்கள் பகுதியின் களங்கமாகக் கருதினார்கள். இதனால்தான், நோய்த்தொற்று இருந்தாலும் தங்கள் உறவினர்களை வீடுகளின் பல பகுதிகளில் ரகசியமாக ஒளித்து வைத்தார்கள். இந் மனப்பான்மை இப்போதும் நமது சமூகத்தில் இருக்கிறது.

தொற்றுநோய்கள் பாவத்தின் தண்டனையாக கருதும் போக்கும் இந்தியர்கள் மத்தியில் நிலவியது. பிற்போக்கு முஸ்லிம்கள் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சரணடைவதை விரும்பவில்லை. பிராமணர்கள் தங்களை யாரும் தீண்டுவதை அனுமதிப்பதில்லை. ரஜபுத்திரர்களும், முஸ்லிம்களும் தங்கள் பெண்களை பர்தா இல்லாமல் அனுமதிப்பதில்லை. சமணர்களோ பிளேக் நோயை ஒழிக்க எலிகளை கொல்வதை அனுமதிக்காதவர்கள். இப்படி இந்தியர்கள் தங்கள் நம்பிக்கைகளுக்காக கோடிக்கணக்கான உயிர்களை பலிகொடுத்தார்கள்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் நோயால் இறந்தவர்களின் உடல்களையும் பிரிட்டிஷ் ராணுவத்தினர் எப்படி கையாண்டார்கள் என்பது மிக முக்கியமான அம்சமாக இருந்தது. கட்டாய சோதனையில் சிக்கிய நோயாளிகள் கட்டாயமாக தனிமைப்படுத்தப் பட்டனர். நீண்டகாலம் அவர்கள் உறவினர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டனர். அப்படி தனிமைப்படுத்தப் படுகிறவர்களின் பாலியல் சக்தி அழிக்கப்படுவதாகவும், அதன்மூலம் அவர்களை பிரிட்டிஷ் அரசு அடிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. நோய் பாதிக்கப்பட்ட குருதாஸ்பூர், பாட்டியாலா, சியால்கோட் போன்ற இடங்களில் 1901 ஆம் ஆண்டு கட்டாய மருத்துவ சோதனைக்கும், தனிமைப்படுத்தலுக்கும் மறுத்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

பயண வராலாறையும், தனிமைப்படுத்தலையும் மறைத்துவிட்டு, அல்லது தவிர்த்துவிட்டு தொற்றுநோய் பாதிப்புகளை எப்படி கணக்கிட முடியும்? காஷ்மீரிலிருந்து நோய் பரவியதையும் பஞ்சாபிலிருந்து ஒரு பயணி நோயைப் பரப்பியதையும் மறுக்க முடியுமா? நாம் வரலாற்றிலிருந்த பாடம் கற்க விரும்புகிறோமா? வரலாற்றுபூர்வ ஆதாரமும், தற்போதைய உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியிலிருந்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இதுதான். அதாவது நமக்குத் தேவை நல்ல மருத்துவ உள்கட்டமைப்பு மட்டுமல்ல. சட்டபூர்வமான சாதனங்கள் மட்டுமல்ல. நமக்குத் தேவை சிறப்புத் தன்மையுடன்கூடிய கல்வித் திட்டம். அந்தக் கல்வித்திட்டம், தொற்றுநோய் நெருக்கடிக் காலத்தில் அறிவாற்றலைச் சார்ந்து மக்கள் செயல்படும் தன்மையை உருவாக்கும் வகையில் அமைய வேண்டும்.

Leave A Reply